பதிவு செய்த நாள்
23
ஏப்
2023
01:04
தஞ்சாவூர்,- அட்சய திருதியை முன்னிட்டு, கும்பகோணம் பெரிய கடைவீதியில் ஒரே இடத்தில், 14 வைணவ தலங்களில் இருந்தும் தனித்தனி கருட வாகனங்களில் உற்சவ பெருமாள்கள் ஒரு சேர, ஒரே பந்தலில் எழுந்தருளி பக்தர்களுக்கு ஒன்றாக சேவை சாதித்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாவது திதியான அட்சய திருதியை தினத்தில், கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள 14 வைணவ தலங்களில் இருந்து 14 தனித்தனி கருட வாகனங்களில் உற்சவ பெருமாள்கள் புறப்பட்டு பெரிய தெருவில் அமைக்கப்பெறும் பெரிய பந்தலில் கீழ் ஒரே சமயத்தில் பொது மக்களுக்கு 14 பெருமாள்களும் நண்பகல் வரை சேவை சாதிப்பர். இப்படி 14 பெருமாள்களையும் ஒரு சேர ஒரே இடத்தில் கருட வாகனத்தில் அதுவும் அட்சய திருதியை நாளில் தரிசனம் செய்வது மிகவும் முக்கியமானது. திதிகளில் சிறப்பானது அட்சய திருதியை. இந்த திதியில் எந்த செயலை செய்தாலும் வெற்றி கிட்டும். இன்று செய்யும் செயல்கள் என்றென்றும் தொடரும். எட்டு வகை லட்சுமிகளையும் இல்லத்திற்கு வரவழைக்கும் நாள் என்பதும் வரலாறு. குசேலன் குபேரன் ஆனதும் இந்நன்னாளில் தான்.
எனவே அட்சய திருதியை தினத்தில் தங்கம், வீடு, மனை, துணி மணிகள் என எது வாங்கினாலும் அது இல்லத்தில் தங்கும் என்பது பொது மக்களிடையே சமீப காலமாக அசைக்க முடியாத ஒரு நம்பிக்கையாக உள்ளது. இவ்வாண்டும் அட்சய திருதியை யொட்டி, கும்பகோணம் பெரிய தெருவில், அமைக்கப்பட்ட மிகப்பெரிய பந்தலின் கீழ் சாரங்கபாணிசுவாமி, சக்ரபாணிசுவாமி, ஆதிவராகபெருமாள், இராமசுவாமி, இராஜகோபாலசுவாமி, அகோபில மடம் லட்சுமி நரசிம்மபெருமாள், சீனிவாசப்பெருமாள், கொட்டையூர் நவநீதகிருஷ்ணன், வேணுகோபாலசுவாமி, பாட்ராச்சாரியார் தெரு நவநீதகிருஷ்ணன், சோலைப்பன்தெரு இராமசாமி, மேலக்காவேரி வரதராஜபெருமாள், பிர்மன்கோயில் வேதநாராயண பெருமாள், பிர்மன்கோயில் வரதராஜ பெருமாள் என 14 பெருமாள்களிலும் தனித்தனி கருட வாகனங்களில் ஒருசேர ஒரே இடத்தில் மிகப்பெரிய பந்தலின் கீழ் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.