பதிவு செய்த நாள்
23
ஏப்
2023
03:04
வில்லியனுார், : புதுச்சேரியில் முதன் முறையாக திருக்காஞ்சி சங்கராபரணி ஆற்றில் ஆதி புஷ்கரணி விழா நேற்று துவங்கியது.
புதுச்சேரி மாநிலம், வில்லியனுார் அடுத்துள்ள திருக்காஞ்சியில், காசியிலும் வீசம் பெற்ற கெங்கைவராக நதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் அருகே உள்ள சங்கராபரணி ஆற்றில், முதல் முறையாக ஆதி புஷ்கரணி விழா நேற்று துவங்கியது. வரும் மே 3ம் தேதி வரை, விழா வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. மகா விஷ்ணுவின் மூன்றாவது அவதாரமான வராக அவதாரத்தின் போது தோன்றிய சங்கராபரணி நதியில், புஷ்கர விழாவின் போது நட்சத்திரத்தின் படி நீராடினால் மூன்று கோடி தீர்த்தத்தில் நீராடிய பலன் கிட்டும் என்பது நம்பிக்கை.
புஷ்கர விழாவையொட்டி, நேற்று முன்தினம் கணபதி ஹோமம் நடந்தது. நேற்று காலை 10:00 மணிக்கு வேளாண் அமைச்சர் தேனீ ஜெயக்குமார் முன்னிலையில் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்யாநானா பரமச்சாரியா தரிசனங்கள் சுவாமி தலைமையில், சிவாச்சாரியர்கள் வேதமந்திரங்கள் முழங்க, கங்கை உள்ளிட்ட பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை சங்கராபரணி ஆற்றில் கலந்தனர். காலை 11:00 மணிக்கு சிறப்பு யாகம் செய்து, கோவில் உள்பிரகாரத்தில் கலசம் புறப்பாடாகி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கரிக்கப்பட்ட உற்சவருக்கு மகா தீபாராதனை நடந்தது. பகல் 12:00 மணி முதல் 1:00 மணி வரை சங்கராபரணி ஆற்றங்கரையில் அலங்கரிக்கப்பட்ட உற்சவ சுவாமி தீர்த்தவாரி நடந்தது. நிகழ்ச்சியில் கவர்னர் தமிழிசை, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், தேனீ ஜெயக்குமார், எம்.எல்.ஏ.,க்கள் சிவசங்கர், அசோக்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாலை 6:00 மணிக்கு கங்கா ஆரத்தி நடந்தது. முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமி நாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.