பதிவு செய்த நாள்
23
ஏப்
2023
07:04
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே வழிமறிச்சான் கிராமத்தில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த விநாயகர் சிற்பத்தை தென்னக வரலாற்று மைய ஆர்வலர்கள் கண்டெடுத்துள்ளனர்.
வழிமறிச்சான் கிராமத்தில் பழங்கால கட்டிட கட்டுமானத்தில் விநாயகர் இருந்துள்ளது. இங்கு தென்னக வரலாற்று மைய ஆர்வலர்களான மீனாட்சி சுந்தரம், வழி மறிச்சான் சிவா, ராமர், ஹரிஹரன், முனைவர் தங்கமுத்து ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது இச்சிற்பம் கி.பி. 12-13 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம், என்றனர். மேலும் கூறியதாவது: இந்த விநாயகர் சிற்பம் பிற்கால பாண்டியர்களின் கலை நயத்தில் செதுக்கப்பட்டுள்ளது. 800 ஆண்டுகள் பழமையான இதில் லளிதாசனக்கோலத்தில் பீடத்தின் மீது அமர்ந்த நிலையில் உள்ளது. தலையில் கரண்ட மகுடம் தரித்தும், அகன்ற இரண்டு காதுகளுடன் அழகாக உள்ளது. மூன்று அடி உயரம் ஒன்றரை அடி அகலம் கொண்ட கல்லினால் ஆனது. தோள் மாலை, தோள் வளை, கடக வளை காணப்படுகிறது. நான்கு கரங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ள நிலையில், வலது கரத்தில் அங்குசம், பின் இடது கரத்தில் பாசக்கயிறு, முன் வலது கரத்தில் தந்தத்தை பிடித்தவாறு அரிதானதாக உள்ளது. முன் இடது கரத்தில் மோதகத்தை வைத்தபடியும், அதை தனது தும்பிக்கையால் எடுப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் அருகில் சர்பம் சிலை ஒன்றும் காணப்படுகிறது. இப்பகுதியில் சிதறி கிடந்த சிற்பங்களை பிற்காலத்தில் இங்குள்ள மக்கள் கல் மண்டபத்தில் வைத்து வழிபட்டு வருகின்றனர், என்றனர்.