பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதர் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஏப் 2023 03:04
பிரான்மலை: பிரான்மலை குயிலமுதாம்பிகை உடனாய திருக்கொடுங்குன்றநாதர் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருக்கயிலாய பரம்பரைத் திருவண்ணாமலை ஆதீனம் ஐந்து கோயில் தேவஸ்தானத்துக்கு உட்பட்ட இக்கோயிலின் சித்திரைத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 9:00 மணிக்கு உமாபதி சிவாச்சாரியார் உள்ளிட்ட சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கோயில் கொடி மரத்தில் ரிஷபக் கொடியேற்றினர். தொடர்ந்து சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அம்பாள் காட்சியளித்தனர். கேடக வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளல் நடைபெற்றது. 10 நாள் மண்டகப்படியாக நடக்கும் இத்திருவிழாவின் 5ம் நாளான ஏப். 28ஆம் தேதி காலை 9:00 மணிக்கு திருக்கல்யாணமும் இரவு 9:00 மணிக்கு சமணர்களுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்வும் நடக்கிறது. ஏப். 30ஆம் தேதி வள்ளல் பாரி விழா ஆராதனையும், மே 1ஆம் தேதி கூத்த பெருமானுக்கு திருமுழுக்காட்டும் நடக்கிறது. மே 2ம் தேதி அதிகாலை 5:30 மணி முதல் திருத்தேரோட்டம் நடக்கிறது. மே 3ஆம் தேதி தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.