பதிவு செய்த நாள்
24
ஏப்
2023
03:04
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் திருப்பணிகள் செய்த, காமாட்சி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் விழா நடந்தது.
மேட்டுப்பாளையம் மேதர் பிள்ளையார் கோவில் வீதியில் காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கோபுரம் அமைத்தல், விநாயகர், முருகர் ஆகிய சன்னதிகள் அமைத்து திருப்பணிகள் செய்யப்பட்டன. கும்பாபிஷேக விழா வாஸ்து சாந்தி வழிபாடுடன் துவங்கியது. முதல் கால வேள்வி பூஜையும், எண் வகை மருந்து சாத்துதலும், திருவுருவ மேனி அமைக்கப்பட்டன. இன்று காலை இரண்டாம் கால வேள்வி பூஜை நடந்தது. பின்பு தீர்த்த குடங்களை கோவிலில் சுற்றி எடுத்து வந்து, 9:40 மணிக்கு காமாட்சி அம்மன் மற்றும் பரிவார் தெய்வங்களுக்கு, வாகீசர் மடம் அவிநாசி ஆதினம் காமாட்சி தாச சுவாமிகள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினார். விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில், அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
சிறுமுகை பழத்தோட்டத்தில், ஆயிரம் ஆண்டுகள் பழமையான, பாலசுப்பிரமணியர் கோவில் உள்ளது. இங்கு கருவறை, விமானம், மகா மண்டபம் ஆகியவை சீரமைக்கப்பட்டது. மூன்று நிலை ராஜகோபுரம், கற்பக விநாயகர் புதிதாக அமைக்கப்பட்டது. இதன் கும்பாபிஷேகம் இன்று காலை, 6:30 லிருந்து, 7:15 மணி வரை பரிவார் தெய்வங்களுக்கும், 9:15 லிருந்து, 10:15 வரை மணி வரை ராஜகோபுரம், கருவறை மூலவருக்கு, புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். அதைத் தொடர்ந்து மதியம் சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டி செய்திருந்தனர்.