பதிவு செய்த நாள்
25
ஏப்
2023
09:04
கி.பி. 7ம் நூற்றாண்டில், கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள காலடியில் கடவுள் பக்தி கொண்ட சிவகுரு, ஆர்யாம்பாள் என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். அவர்கள் தங்களது புத்திர பாக்கியத்திற்காக திருச்சூர் வடக்குநாதரை வேண்டி கடுமையான விரதங்களை மேற்கொண்டனர். ஒருநாள் சிவகுருவின் கனவில் தோன்றிய சிவன், குறைந்த ஆயுளுடன் எல்லா நற்குணங்களும் ஞானமும் கொண்ட புத்திசாலிப் பிள்ளை வேண்டுமா அல்லது நீண்ட ஆயுளை உடைய சாதாரண மகன் வேண்டுமா? என்று கேட்டார். அதற்கு சிவகுரு, புத்திசாலி குழந்தைதான் வேண்டும் என்றார். சிவகுருவின் கனவைக் கேட்ட ஆர்யாம்பாள் மனமகிழ்ந்து ஒரு ஞானக்குழந்தை தன் மகனாகப் பிறப்பான் என்று எண்ணி ஆனந்தம் அடைந்தாள். வைகாசி மாதம் பஞ்சமியன்று சூரியன், செவ்வாய், சனி, குரு ஆகிய நான்கு கிரஹங்கள் உச்சத்தில் இருக்கும் சுபவேளையில் இறைவனின் அருளால் தெய்வீகக் குழந்தை இந்த பூமியில் அவதரித்தது. பிள்ளையில்லா தசரதனுக்கு மகாவிஷ்ணுவே ராமராக அவதரித்தது போல, சிவகுரு-ஆர்யாம்பாள் தம்பதியினருக்கு ஈசுவரனே குழந்தையாகப் பிறந்தது பெரும் பாக்கியமே. பிள்ளை பிறந்த மகிழ்ச்சியில் சிவகுரு தான தருமங்கள் செய்து சான்றோர்களுக்கு விருந்தளித்து கொண்டாடினார்.
காலடியில் ஒரு ஏழை நம்பூதிரி இல்லத்துப் பெண்மணி, சங்கரர் பிச்சை எடுக்க வந்தபோது அவருக்குக் கொடுக்க தன்னிடம் எதுவும் இல்லையே என்று மனம் வருந்தினாள். அந்த வருத்தமே அவளுடைய மமகாரத்தை அழித்தது. அவளுடைய உள் மனதிலிருந்த என்னுடைய இல்லம்; இவருக்கு கொடுக்க ஏதாவது என்னிடம் இருக்கவேண்டும் என்ற எண்ணத்தை அவளை அறியாமலேயே அழித்தது. உலக மாதாவாகிய லட்சுமிதேவியை ஆவிர்பவித்து, தங்கமயமான நெல்லிக்கனிகளைப் பொழியச் செய்து, அந்த ஏழைப்பெண் குடும்பத்தை உயர்த்திவைத்தார் சங்கரர்.
கடவுளை எங்கும் எப்பொருளிலும் காண்பேத அகங்காரம் அடங்க வழி. தர்மத்தில் கடைசி நிலை இதுவே. மனைவி, மக்கள், சுற்றத்தார். அயலார் எல்லாரும் கடவுளின் அம்சமே. இந்த எண்ணத்துடன்தான் அவர்களுக்கு சேவை செய்யவேண்டும். சங்கரர் தன் தாயாராகிய ஆர்யாம்பாளை தன்னைப் பெற்ற தாய் என்று மட்டும் கருதாமல், ஜகன் மாதா ஸ்ரீசாரதா தேவியாகவே கருதினார். தன் மாதா மரணப்படுக்கையில் இருந்தபோது, சங்கரர் அருகில் அமர்ந்து துதித்த சிவ, விஷ்ணு துதிகளை ஆராய்ந்து பார்த்ததால், அவருடைய தாயார் சிவ, விஷ்ணுக்களின் அம்சமே என்பது புலனாகிறது. சிவ, விஷ்ணு ஸ்வரூபம் பிரும்ம ஸ்வருபத்தினின்றும் வேறல்ல என்பதை அறியமுடிகிறது.
இந்திரன் தன்னிடம் அனுமதி கேட்காமல் பணிபுரியச் சென்றதற்காக வஜ்ராயுதத்தை அசுவினி தேவதைகள்மீது பிரயோகித்தான். சங்கரர் தன் தவவலிமையால் அது அவர்களை நெருங்காதவாறு செய்தார். வஜ்ராயுதத்தின் தோல்வி தனது தோல்வியே என்று கருதிய தேவராஜன் தன் விருதாகிய இந்திரன் என்பதை சங்கரருக்கு அளித்தான். இவ்வாறு பாரத நாட்டில் சனாதன தர்மத்தை ஆழ வேரூன்றச் செய்ததுடன், அவதார காரியமும் முழுமை பெற்றுவிட்டது. தற்சமயம் எக்காலத்தையும் விட காலடி சங்கரர் என்ற தீபப்பிரகாசம் சுடரொளி பரவச் செய்கிறது. பூர்ண நதிக்கரையில் சுடர்விட்டுப் பிரகாசிக்கும் ஜோதியே பிறகு நர்மதா நதிக்கரையில் ஒளிவீசி, அதன்பின் கங்கையின் சமவெளிப் பிரதேசத்திலும், ஹிமாலயத்திலும் பரவி, நான்கு பீடங்குகளையும் ஜோதி வெள்ளத்தில் மூழ்கச் செய்கின்றது. அவ்வொளி உலகத்தையும், நம் ஆத்மாவையும் பிரகாசிக்கச் செய்யட்டும்.