பதிவு செய்த நாள்
25
ஏப்
2023
11:04
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள காலடியில் கடவுள் பக்தி கொண்ட சிவகுரு, ஆர்யாம்பாள் என்ற தம்பதிக்கு தெய்வீகக் குழந்தையாக இந்த பூமியில் அவதரித்தவர் ஆதி சங்கரர். 32 ஆண்டுகள் பூமியில் வாழ்ந்தார். 8 வயதில் வேதமும், 12 வயதில் சாஸ்திரமும், 16 வயதில் பாஷ்யமும் முழுவதையும் கற்றுத் தேர்ந்தார். சங்கரர் சனதான தர்மத்தை, அத்வைதம், வேதத்தை நமக்கு போதித்தார்.
பக்திதான் பட்டிதொட்டி எங்கும் ஊடுருவி, ஆன்மிகத்தை அணு அணுவாகப் பரப்பி, தேசத்தையே செழிப்பாக்கி இருக்கிறது. ஆதி சங்கரர், ஸ்ரீமத் ராமானுஜர், ஸ்ரீமத்வர் போன்ற மகான்கள் பல்வேறு காலகட்டங்களில் அவதரித்து, பக்தி தழைத்தோங்க வலுவான உரமிட்டார்கள்; விருட்சமாக வளர்த்தார்கள். ஆன்மிகத்தை, அடித்தட்டில் இருக்கிற பாமரனிடமும் கொண்டு போய்ச் சேர்க்க மடங்களும், ஆதீனங்களும் பெரிதும் பாடுபடுகின்றன. அவற்றுள் ஆதி சங்கரரால் ஸ்தாபிக்கப்பட்ட காஞ்சி காமகோடி பீடமும் குறிப்பிடத்தக்க ஒன்று.
கயிலாயத்தில் சிவபெருமானிடம் இருந்து ஆதிசங்கரர் பெற்ற பஞ்ச லிங்கங்களுள் ஒன்றான சந்திர மவுலீஸ்வரர் தான் காஞ்சி பீடத்தின் முக்கிய வழிபட்டு விக்கிரகம். காஞ்சி காமகோடி பீடத்தின் ஆச்சார்யாக்கள் இதற்கு பூஜைகள் செய்ய வேண்டும். அதைத் தரிசிக்க பக்தர்கள் நாள்கணக்கில் மடத்திலேயே தங்குவது உண்டு. 2,500 ஆண்டுகளைக் கடந்தும் இந்த
பூஜை, ஸ்ரீமடத்தில் நடந்து வருகிறது. ஆதி சங்கரரையே முதன்மை ஆச்சார்யராகக் கொண்ட காஞ்சி காமகோடி பீடம் இதுவரை 70 ஆச்சார்யாக்களைக் கண்டுள்ளது. 68-வது
ஆச்சார்யராக இருந்த ‘ மகாபெரியவர் ’ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் காலத்தில் காஞ்சி காமகோடி பீடத்தின் பெருமை உலகெங்கும் பரவியது. அடுத்து 69-வது ஆச்சார்யராக இருந்த புதுப்பெரியவர் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள். ‘மகா பெரியவர் மனதில் எழுகிற எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுத்து, சமூகப் பணிகளில் மடத்தின் பங்கை மகத்தானதாக மாற்றினார். இவர்கள் இருவரும் காஞ்சிபுரத்தில் பேருந்து நிலையம் அருகே சாலைத் தெருவில் அமைந்துள்ள காஞ்சி காமகோடி பீடத்திலேயே திருச்சமாதி கொண்டுள்ளனர்.
இந்த பீடத்தின் 70-வது ஆச்சார்யராகத் தற்போது காஞ்சி ஸ்ரீகாமகோடி பீடத்தை அலங்கரித்துக் கொண்டிருப்பவர் ‘பால பெரியவா’என்று அழைக்கப்படும் ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள். ஸ்ரீவிஜயேந்திரர் காஞ்சி காமகோடி பீடத்தின் முழுப் பொறுப்பையும் ஏற்று நடத்தி வருகிறார். இன்று ஆதி சங்கரர் ஜெயந்திகாஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
சென்னை, மாங்காட்டில் அமைந்துள்ள காமாட்சி அம்மன் கோவிலில், அம்பாள் தவம் புரிந்த இடத்தில், ஆதிசங்கரர், அஷ்ட கந்தம் எனும் எட்டு மூலிகைகளால் ஆன, அர்த்தமேரு ஸ்ரீ சக்கரத்தை பிரதிஷ்டை செய்தார். அதுவே, இக்கோவிலின் பிரதானமாக கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், ஆதிசங்கரர் ஜெயந்தி, இக்கோவிலில் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் படி, ஆதி சங்கரர் ஜெயந்தியான இன்று (25ம் தேதி) காலை கோவில் மகா மண்டபத்தில் அமைந்துள்ள ஆதிசங்கரர் சுவாமிக்கு, சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.
திருப்பதியில் முகாமிட்டுள்ள பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் ஆதி சங்கரர் ஜெயந்தி முன்னிட்டு, ஆதி சங்கராச்சாரியாருக்கு அபிஷேகம், அர்ச்சனை மற்றும் பூஜைகள் செய்தார். முன்னதாக, ஆச்சார்யாள் உற்சவமூர்த்தி ஸ்ரீமடத்திலிருந்து (திருப்பதி முகாம்) கபிலேஸ்வர சுவாமி கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு கபிலதீர்த்தத்தில் விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை மற்றும் பூஜைகள் செய்து வழிபட்டார்.
ஆதி சங்கரர் ஜெயந்தியை முன்னிட்டு காஞ்சிபுரம், காலடி, பசுபதிநாத் மந்திர், காத்மாண்டு, நேபால், வாரணாசி, உத்தரபிரதேசம், குவஹாத்தி, அசாம்- பாலாஜி மந்திர், மா காமாக்யா, ஷங்கர்தேவ் நேத்ராலயா, காஞ்சனேஷ்வர் மகாதேவ் மந்திர், ராணிபூல், சிக்கிம் சங்கர் மடம், பூரி, ஒடிசா, புது தில்லி, அமிர்தசரஸ், பஞ்சாப், சண்டிகர், கோவா, புனே, மகாராஷ்டிரா, காஷ்மீர், கன்னியாகுமரியில் உள்ள ஸ்ரீமடங்களில் ஆதிசங்கரருக்கு விசேஷ அபிஷேகம் மற்றும் தீபாராதனை, ஆதி சங்கரர் அவதார கட்ட பாராயணம், மகாபிஷேகம், ரிக் சம்ஹிதா ஹோமம், ரிக் வேதம், யஜுர் வேத க்ரம பாராயணம் ஆகியவை நடைபெற்றது.
மேலும் தகவலுக்கு : https://www.kamakoti.org/