பதிவு செய்த நாள்
25
ஏப்
2023
11:04
தஞ்சாவூர், திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் சப்தஸ்தான பெருவிழாவானது இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில், தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஐயாறப்பர் கோவில் உள்ளது. இக்கோவிலில், சித்திரை பெருவிழா முன்னிட்டு இன்று காலை(25ம் தேதி), ஸ்ரீ தர்மசம்வர்த்தனி அம்மாள், ஐயாறப்பர் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரத்தின் முன்பாக எழுந்தருளினர். பின்னர், கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்யபட்டு கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து விழா, அடுத்த மாதம்(மே 7ம் தேதி) வரை 13 நாட்கள் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து 29ம் தேதி மாலை தன்னைத்தான பூஜித்தல் வைபவம் நடைபெறுகிறது. அன்று ஆறு ஊர்களில் இருந்து சுவாமிகள் கோவிலுக்கு வந்து சன்னதிக்கு முன்பு சைவர்களுக்கு மகேஸ்வர பூஜையும், மே.3-ம் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சப்தஸ்தான பெருவிழா 6ம் தேதி நடக்கிறது. இவ்விழாவை முன்னிட்டு, காலை 5:00 மணிக்கு ஐயாறப்பர் அறம் வளர்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும், நந்திகேஸ்வர் சுயசுவாம்பிகையுடன் வெட்டிவேர் பல்லக்கிலும் புறப்பட்டு திருப்பழனம், திருசோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி ஆகிய ஊர்களுக்கு சென்று அன்று இரவு காவிரி ஆற்றில் ஆறு ஊர் பல்லக்குகளும் தில்லைஸ்தானத்தில் சங்கமிக்கிறது. 7ம் தேதி பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் வழிகாட்டுதலின்படி தேவஸ்தான டிரஸ்டி கார்ப்பார் சொக்கநாத தம்பிரான் சுவாமிகள் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.