பதிவு செய்த நாள்
28
ஏப்
2023
03:04
அம்பாசமுத்திரம்: பிரம்மதேசம் கைலாசநாத சுவாமி கோயிலில் ராஜகோபுரங்கள் மற்றும் விமானங்கள் பாலாலயம் நடந்தது.
அம்பாசமுத்திரத்தை அடுத்த பிரம்மதேசம் கிராமத்தில், பிரம்மாவின் பேரன் ரோமச முனிவர் வழிபட்ட பழமை வாய்ந்த பிரஹந்த நாயகி சமேத கைலாசநாத சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த 2004ம் ஆண்டு ஏப்., 11ம் தேதி கும்பாபிஷேகம் நடந்துள்ளது. இதையடுத்து, இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, ராஜ கோபுரங்கள் மற்றும் விமானங்களுக்கான பாலாலய விழா நேற்று முன்தினம் காலை விக்னேஷ்வர பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து கணபதி ஹோமம், சுவாமி அம்பாளுக்கு கும்பபூஜை, அபிஷேகம் நடந்தது. மாலையில் முதல் கால யாகசாலை பூஜை நடந்தது. நேற்று காலை, இரண்டாவது கால யாகசாலை பூஜை நடந்தது. பின்பு, கிழக்கு வாசல் ராஜகோபுரம், மேற்கு வாசல் கோபுரம், சால கோபுரம், விநாயகர், முருகர், கைலாசநாதர், பிரஹந்தநாயகி, காசிவிஸ்வநாதர், அண்ணாமலையார், மீனாட்சி, சுந்தரேஸ்வரர், இலந்தையடி நாதர், பாலசுப்பிரமணியர், நலாயிரத்தம்மன், சரஸ்வதி சன்னதி விமானங்களுக்கு பாலாலயம் நடந்தது. பின்பு, கும்பத்தில் இருந்து ராஜகோபுரம், விமானங்களின் சக்தியேற்றப்பட்ட அத்திமர கட்டைகளால் செய்யப்பட்ட ராஜகோபுரங்கள், விமானங்களுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இதனை, பிள்ளையார்பட்டி பிச்சைகுருக்கள் ஆலோசனைப்படி , நெல்லையப்பர் கோமதி சங்கர பட்டர் தலைமையில் 40க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் நடத்தினர். நிகழ்ச்சிகளில் , கோயில் செயல் அலுவலர் கணேஷ்குமார், கணக்கர் சுகன்யாமற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், ஆன்மிக அன்பர்கள், ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.