மதுரை சித்திரை திருவிழாவிற்கு வைகை அணையில் ஏப்ரல் 30ல் தண்ணீர் திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஏப் 2023 04:04
ஆண்டிபட்டி: மதுரை சித்திரை திருவிழா கள்ளழகர் எதிர்சேவை நிகழ்ச்சிக்காக வைகை அணையில் இருந்து ஏப்ரல் 30 மாலை ஆற்றின் வழியாக தண்ணீர் திறக்கப்படும் என்று பொதுப்பணி துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த சில மாதமாக வைகை அணையில் இருந்து நீர் திறப்பு இல்லை. கோடை துவங்கியதால் மழை குறைந்து அணைக்கான நீர் வரத்தும் இல்லை. பெரியாறு அணையில் திறக்கப்படும் நீரில் குறைந்த அளவு மட்டும் வைகை அணையில் சேர்கிறது. மதுரை சித்திரை திருவிழாவிற்காக ஒவ்வொரு ஆண்டும் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். இந்த ஆண்டு அணையில் நீர் இருப்பு போதுமான அளவு இருப்பதால் ஏப்ரல் 30 மாலை அணையில் இருந்து வினாடிக்கு 750 கன அடி வீதம் தண்ணீர் திறக்க பொதுப்பணி துறையினர் திட்டமிட்டுள்ளனர். திறக்கப்படும் நீர் இரு நாட்களுக்குப் பின் வினாடிக்கு 500 கனஅடியாக குறைக்கப்பட்டு நான்கு நாட்களுக்குப் பின் நிறுத்தப்படும். நேற்று வைகை அணை நீர்மட்டம் 53.97 அடியாக இருந்தது. அணை உயரம் 71 அடி. அணைக்கான நீர் வரத்து வினாடிக்கு 107கன அடியாகவும், அணையில் இருந்து மதுரை, தேனி, ஆண்டிபட்டி - சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 72 கனஅடியும் வெளியேறுகிறது.