சிங்கம்புணரி: சங்க இலக்கிய பாடல் பெற்ற பிரான்மலையில் குயிலமுதாம்பிகை அம்பாள் திருக்கொடுங்குன்றநாதர் திருக்கல்யாணம் நடந்தது.
பாண்டியநாட்டு 14 திருத்தலங்களில் 5வது சிறப்புக்குரிய இக்கோயிலின் சித்திரை திருவிழா ஏப். 24 ல் துவங்கியது. 5 ம் திருவிழாவான இன்று திருக்கல்யாணம் நடந்தது. இதையொட்டி காலை 9:00 மணிக்கு திருக்கல்யாண மண்டபத்தில் குயிலமுதாம்பிகை அம்பாள் திருக்கொடுங்குன்றநாதர் எழுந்தருளினர். சுவாமிக்கும் அம்பாளுக்கும் காப்பு கட்டப்பட்டு பூணூல் போடும் வைபவம் நடந்தது. உமாபதி சிவாச்சாரியார் தலைமையில் யாக பூஜைகள் நடத்தப்பட்டது. இதன் பிறகு தாரை வார்த்தலைத் தொடர்ந்து சுவாமி அம்பாளுக்கு மாலை மாற்றும் வைபவம் திருக்கல்யாணம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று திருக்கல்யாணத்தை கண்டுகளித்தனர். அனைவருக்கும் மஞ்சள், குங்குமம், மாங்கல்ய கயிறு பிரசாதமாக வழங்கப்பட்டது. திருக்கல்யாணம் நடந்து முடிந்ததும் சுமங்கலி பெண்கள் தங்கள் கழுத்தில் மாங்கல்ய கயிறை புதிதாக அணிந்துகொண்டனர். திருக்கல்யாணத்திற்கு வந்திருந்த பக்தர்கள் மொய் எழுதிச்சென்றனர். திருவிழாவின் 9-ம் திருநாளான மே 2 ல் திருத்தேரோட்டம் நடக்கிறது.