பதிவு செய்த நாள்
28
ஏப்
2023
04:04
அவிநாசி: அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழாவுக்கு தேர் வெகு ஜோராக தயாராகி வருகின்றது .
கொங்கேழு சிவாலயங்களில் முதன்மையானதும்,காசிக்கு நிகரான தலமாக போற்றப்படுவதும்,சுந்தரமூர்த்தி நாயனாரால் முதலை உண்ட பாலகனை உயிரோடு மீட்டு அதிசயம் நிகழ்த்திய தலமான அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் மே 2, மே 3 மற்றும் மே 4ல் நடைபெறும் சித்திரை திருவிழாவிற்காக பெரிய தேர்,அம்மன் தேர் மற்றும் ஸ்ரீ சண்டிகேஸ்வரர் தேருக்கு ரூ.4.5 லட்சம் மதிப்பில் புதியதாக அலங்கார துணிகள் ஸ்ரீ செந்தில் ஆண்டவர் சஷ்டி அன்பர்கள் குழு சார்பில் நன்கொடையாக வாங்கப்பட்டுள்ளது. தற்போது அலங்கார துணிகள், தொம்பை,கொடி, மகுட அலங்காரம்,கலசம் உள்ளிட்டவைகள் தேரில் பொருத்தப்பட்டு தேர் அலங்கரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இதுகுறித்து,ஸ்ரீ செந்தில் ஆண்டவர் சஷ்டி அன்பர்கள் குழுவினர் தெரிவித்த போது,தேர் அலங்கார துணிகள் பிரத்யோகமாக மதுரையில் உள்ள புகழ் பெற்ற கைவினை பொருட்கள் தயார் செய்யும் நிறுவனத்தில் ஆர்டர் கொடுக்கப்பட்டு,12 ஊழியர்கள் சேர்ந்து இரண்டு மாத கடின உழைப்பில் தயாராகி உள்ளது என்றனர்.