பதிவு செய்த நாள்
29
ஏப்
2023
03:04
மானாமதுரை: மானாமதுரையில் கர்நாடக இசை கலைஞர்களின் குருவாக போற்றப்படும் ஸத்குரு சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை விழா துவங்கியது. ஏராளமான கர்நாடக இசைக் கலைஞர்கள் கலந்து கொண்டு இசை அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கர்நாடக இசைக் கலைஞர்களின் குருவாக போற்றப்படும் ஸத்குரு சதாசிவ பிரம்மேந்திராள் சன்னதி மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோவிலில் அமைந்துள்ள நிலையில் இங்கு வருடம் தோறும் சித்திரை மாதம் ஆராதனை விழா நடைபெறுவது வழக்கம்.இந்தாண்டிற்கான ஆராதனை விழா இன்று காலை 8:30 மணிக்கு மானாமதுரை புது பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள திருமண மஹாலில் ஸத்குரு சதாசிவ பிரம்மேந்திராள் உருவப்படத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஆராதனை விழா துவங்கியது.பின்னர் நடைபெற்ற வேதபாராயணம், உஞ்சவ்விருத்தி, தீபாராதனை மற்றும் வாய்ப்பாட்டு, புல்லாங்குழல், பாட்டு, வீணை, வயலின் போன்ற இசை கச்சேரிகளை முன்னணி கர்நாடக இசைக் கலைஞர்கள் நடத்தினர். இதனைத் தொடர்ந்து மாலை இசைக் கலைஞர்களுக்கு ஆராதனை கமிட்டி சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. நாளை காலை 7:00 மணி முதல் ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் உள்ள சதாசிவ பிரம்மேந்திராள் சன்னதியில் பூஜை, உஞ்சவ் விருத்தி, குரு அஞ்சலி, கோஷ்டி கானம், விக்னேஸ்வர பூஜை, வடுக பூஜை உள்ளிட்ட ஏராளமான பூஜைகள் நடைபெற உள்ளன. விழாவிற்கான ஏற்பாடுகளை சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை கமிட்டியினர் செய்து வருகின்றனர்.