பதிவு செய்த நாள்
29
ஏப்
2023
06:04
திருச்சி : திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில், இறைவனே தாயாக அவதரித்து, செட்டிப் பெண்ணுக்கு அவதரித்து, செட்டிப் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த வைபவம் சிறப்பாக நடந்தது.
காவிரிபூம்பட்டினம் எனப்படும் பூம்புகாரில் வசித்த பெருவணிகர் ரத்தின குப்தன். சிவநெறியில் நின்ற இவரது மகள் ரத்தினாவதியை, திருச்சி மலைக்கோட்டை தெற்கு வீதியில் இருந்த தனகுப்தன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர். மலைக்கோட்டையில் வீற்றிருந்த மட்டுவார் குழலம்மை உடனுறை செவ்வந்திநாதர் வழிபாட்டால், ரத்தின கருவுற்றார். ரத்தினாவதிக்கு பிரசவம் பார்க்க, அவரது தாய், பூம்புகாரில் இருந்து திருச்சிக்கு கிளம்பினார். காய மருந்து, மருந்து எண்ணெய் உள்ளிட்ட பொருட்களுடன் மகளைப் பார்க்க, ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்தார். அப்போது, காவிரியில் பெருவெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், அந்த தாய், காவிரியை கடக்க முடியாமல் தவித்தார். இதற்கிடையே, தாயை எதிர்பார்த்து காத்திருந்த ரத்தினாவதி, பிரசவ வலியால் துடித்ததோடு, செவ்வந்திநாதரை இடைவிடாது துதித்தார். அவரது பிரார்த்தனைக்கு மனமிறங்கிய இறைவன், நரைத்த முடி, தளர்ந்த நடை, கையில் மூங்கில் தடியுடன், மருந்துப் பொருட்களும், எண்ணெய் கலயமும், துணிகளுடன் ரத்தினாவதியின் தாயாக உருவெடுத்தார். ரத்தினாவதிக்கு பிரசவம் பார்த்து, மருந்து, எண்ணெய் கொடுத்தார். பேறு காலப் பணிகள் அனைத்தையும் இறைவனே ரத்தினாவதிக்கு தவறாமல் செய்தார். காவிரி வெள்ளம் வடிந்தவுடன், ரத்தினாவதியின் தாய் வீடு வந்து சேர்ந்தார். அப்போது, இறைவன் - இறைவியுடன், ரத்தினாவதி, தனகுப்தன், ரத்தினாவதியின் தாய் ஆகியோருக்கு அருள் காட்சியளித்தார்.
அன்று முதல் இத்தலத்தின் இறைவன் தாயுமானவர் என்றழைக்கப்படுகிறார். ஆண்டுதோறும் சித்திரை மாதம் நடக்கும் வசந்த பெருவிழாவின், ஐந்தாம் நாள், "செட்டிப் பெண் மருத்துவ வைபவம் நடக்கிறது. இன்று காலை கோவிலில், "செட்டிப் பெண் மருத்துவ வைபவம் சிறப்பாக நடந்தது. செட்டிப் பெண் கருத்தரித்து இருத்தல், வெள்ளத்தால் தாயின் வரவு தடைபடுதல், பார்வதி, கங்கையுடன் ஈசன் தாயாக வருதல், மகப்பேறு பார்த்தல் போன்ற காட்சிகள் அரங்கேற்றப்பட்டன. குழந்தைப்பேறு மற்றும் சுகப்பிரசவம் நடக்க வேண்டுதல் செய்தவர்கள், சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்தும், வாழைத்தார் வழங்கியும் வழிபட்டனர். விழாவில் செட்டிப் பெண்ணிற்கு பிரசவம் பார்க்கும் கோலத்தில் எழுந்தருளிய தாயுமாணவர் சாமி அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.