கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள்: 5 மணி நேரம் ஆய்வு செய்த எஸ்.பி.,
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01மே 2023 05:05
உளுந்தூர்பேட்டை: கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எஸ்.பி., மோகன்ராஜ் 5 மணி நேரம் ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கினார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா கடந்த 18ம் தேதி சாகை வார்த்தல் திருவிழாவுடன் விழா துவங்கியது. நேற்று காலை அரவான்பலி, கூத்தாண்டவர் சுவாமிக்கு பாலாலயம் நடந்தது. இன்று(1ம் தேதி) மாலை கம்பம் நிறுத்துதல், 2ம் தேதி இரவு சுவாமி திருக்கண் திறத்தல், திருநங்கைகள், பக்தர்கள் திருமாங்கல்யம் ஏற்றுக் கொள்ளுதல் (தாலி கட்டுதல்) நிகழ்ச்சி நடக்கிறது. 3ம் தேதி காலை 6.30 மணியளவில் தேரோட்டம் நடக்கிறது. மாலை பந்தலடி பாரதம் படைத்தல், இரவு காளி கோவிலில் உயிர் பெறுதல், 4ம் தேதி விடையாத்தி, 5ம் தேதி தர்மர் பட்டாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது. முக்கிய திருவிழா ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கள்ளக்குறிச்சி எஸ்.பி. மோகன்ராஜ் நேற்று காலை 11 மணியளவில் நேரில் ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கினார். அப்போது தடுப்புகள் அமைத்தல், கூட்ட நெரிசலை தடுப்பதற்கான ஏற்பாடுகள் குறித்தும், வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் குறித்து நேற்று மாலை 4 மணி வரை ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கினார். அப்போது உளுந்தூர்பேட்டை டி.எஸ்.பி., மகேஷ் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.