Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பொருநராற்றுப்படை- அறிமுகம்
முதல் பக்கம் » பொருநராற்றுப்படை
பொருநராற்றுப்படை
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

26 செப்
2012
03:09

அறாஅ யாணரகன் றலைப் பேரூர்ச்
சாறுகழி வழிநாட் சோறுநசை யுறாது
வேறுபுல முன்னிய விரகறி பொருந  
குளப்புவழி யன்ன கவடுபடு பத்தல்
விளக்கழ லுருவின் விசியுறு பச்சை.  5

எய்யா விளஞ்சூற் செய்யோ ளவ்வயிற்
றைதுமயி ரொழுகிய தோற்றம் போலப்
பொல்லம் பொத்திய பொதியுறு போர்வை
அளைவா ழலவன் கண்கண் டன்ன
துளைவாய் தூர்ந்த துரப்பமை யாணி..  10

எண்ணாட் டிங்கள் வடிவிற் றாகி
அண்ணா வில்லா அமைவரு வறுவாய்ப்
பாம்பணந் தன்ன வோங்கிரு மருப்பின்
மாயோள் முன்கை ஆய்தொடி கடுக்கும்
கண்கூ டிருக்கைத் திண்பிணித் திவவின்.  15

ஆய்தினை யரிசி யவைய லன்ன
வேய்வை போகிய விரலுளர் நரம்பின்
கேள்வி போகிய நீள்விசித் தொடையல்
மணங்கமழ் மாதரை மண்ணி யன்ன
அணங்குமெய்ந் நின்ற அமைவரு காட்சி.  20

ஆறலை கள்வர் படைவிட அருளின்
மாறுதலை பெயர்க்கு மருவுஇன் பாலை  
வாரியும் வடித்தும் உந்தியு முறழ்ந்தும்
சீருடை நன்மொழி நீரொடு சிதறி  
அறல்போற் கூந்தல் பிறைபோல் திருநுதற்  25

கொலைவிற் புருவத்துக் கொழுங்கடை மழைக்கண்
இலவிதழ் புரையும் இன்மொழித் துவர்வாய்ப்
பலஉறு முத்திற் பழிதீர் வெண்பல்
மயிர்குறை கருவி மாண்கடை யன்ன
பூங்குழை ஊசற் பொறைசால் காதின்  30

நாண்அடச் சாய்ந்த நலங்கிள ரெருத்தின்
ஆடமைப் பணைத்தோ ளரிமயிர் முன்கை
நெடுவரை மிசைஇய காந்தள் மெல்விரற்
கிளிவா யொப்பி னொளிவிடு வள்ளுகிர்
அணங்கென உருத்த சுணங்கணி யாகத்  35

தீர்க்கிடை போகா ஏரிள வனமுலை
நீர்ப்பெயற் சுழியி னிறைந்த கொப்பூழ்
உண்டென வுணரா உயவும் நடுவின்
வண்டிருப் பன்ன பல்காழ் அல்குல்
இரும்பிடித் தடக்கையிற் செறிந்துதிரள் குறங்கின் 40

பொருந்துமயி ரொழுகிய திருந்துதாட் கொப்ப
வருந்துநாய் நாவிற் பெருந்தகு சீறடி
அரக்குருக் கன்ன செந்நில னொதுங்கலிற்
பரற்பகை யுழந்த நோயொடு சிவணி
மரற்பழுத் தன்ன மறுகுநீர் மொக்குள்  45

நன்பக லந்தி நடையிடை விலங்கலிற்
பெடைமயி லுருவிற் பெருந்தகு பாடினி  
பாடின பாணிக் கேற்ப நாடொறும்
களிறு வழங்கதர்க் கானத் தல்கி
இலைஇல் மராஅத்த எவ்வந் தாங்கி  50

வலைவலந் தன்ன மென்னிழன் மருங்கிற்
காடுறை கடவுட்கடன் கழிப்பிய பின்றைப்  
பீடுகெழு திருவிற் பெரும்பெயர் நோன்றாள்
முரசுமுழங்கு தானை மூவருங் கூடி
அரசவை யிருந்த தோற்றம் போலப்  55

பாடல் பற்றிய பயனுடை எழாஅற்
கோடியர் தலைவ கொண்ட தறிந
அறியா மையி னெறிதிரிந் தொராஅ
தாற்றெதிர்ப் படுதலு நோற்றதன் பயனே
போற்றிக் கேண்மதி புகழ்மேம் படுந  60

ஆடுபசி யுழந்தநின் இரும்பே ரொக்கலொடு
நீடுபசி யொராஅல் வேண்டி னீடின்
றெழுமதி வாழி ஏழின் கிழவ
பழுமர முள்ளிய பறவையின் யானுமவன்
இழுமென் சும்மை யிடனுடை வரைப்பின்  65

நசையுநர்த் தடையா நன்பெரு வாயில்
இசையேன் புக்கென் இடும்பை தீர
எய்த்த மெய்யே னெய்யே னாகிப்
பைத்த பாம்பின் துத்தி யேய்ப்பக்
கைக்கச டிருந்தவென் கண்ணகன் தடாரி  70

இருசீர்ப் பாணிக் கேற்ப விரிகதிர்
வெள்ளி முளைத்த நள்ளிருள் விடியல்
ஓன்றியான் பெட்டா அளவையி னொன்றிய  
கேளிர் போலக் கேள்கொளல் வேண்டி
வேளாண் வாயில் வேட்பக் கூறிக்  75

கண்ணிற் காண நண்ணுவழி இரீஇப்
பருகு அன்ன அருகா நோக்கமொடு
உருகு பவைபோ லென்பு குளிர்கொளீஇ
ஈரும் பேனும் இருந்திறை கூடி
வேரொடு நனைந்து வேற்றிழை நுழைந்த  80

துன்னற் சிதாஅர் துவர நீக்கி
நோக்குநுழை கல்லா நுண்மைய பூக்கனிந்து
அரவுரி யன்ன அறுவை நல்கி
மழையென மருளும் மகிழ்செய் மாடத்து
இழையணி வனப்பி னின்னகை மகளிர்  85

போக்கில் பொலங்கல நிறையப் பல்கால்
வாக்குபு தரத்தர வருத்தம் வீட
ஆர வுண்டு பேரஞர் போக்கிச்
செருக்கொடு நின்ற காலை  
திருக்கிளர் கோயி லொருசிறைத் தங்கித்  90

தவஞ்செய் மாக்கள் தம்முடம் பிடாஅ
ததன்பய மெய்திய வளவை மான
ஆறுசெல் வருத்தம் அகல நீக்கி
அனந்தர் நடுக்க மல்ல தியாவதும்
மனங்கவல் பின்றி மாழாந் தெழுந்து  95

மாலை யன்னதோர் புன்மையுங் காலைக்
கண்டோட் மருளும் வண்டுசூழ் நிலையும்
கனவென மருண்டவென் னெஞ்சே மாப்ப
வல்லஞர் பொத்திய மனம்மகிழ் சிறப்பக்
கல்லா இளைஞர் சொல்லிக் காட்டக்.  100

கதுமெனக் கரைந்து வம்மெனக் கூஉய்
அதன்முறை கழிப்பிய பின்றைப் பதனறிந்து  
துராஅய் துற்றிய துருவையம் புழுக்கின்
பராஅரை வேவை பருகெனத் தண்டிக்
காழிற் சுட்ட கோழூன் கொழூங்குறை  105

ஊழின் ஊழின் வாய்வெய் தொற்றி
அவையவை முனிகுவ மெனினே சுவைய
வேறுபல் லுருவின் விரகுதந் திரீஇ
மண்ணமை முழவின் பண்ணமை சீறியாழ்
ஒண்ணுதல் விறலியர் பாணி தூங்க  110

மகிழ்ப்பதம் பன்னாட் கழிப்பி யொருநாள்
அவிழ்ப்பதங் கொள்கென் றிரப்ப முகிழ்த்தகை
முரவை போகிய முரியா அரிசி
விரலென நிமிர்ந்த நிரலமை புழுக்கல்
பரல்வறைக் கருனை காடியின் மிதப்ப.  115

அயின்ற காலைப் பயின்றினி திருந்து
கொல்லை உழுகொழு ஏய்ப்பப் பல்லே
எல்லையு மிரவும் ஊன்றின்று மழுங்கி
உயிர்ப்பிடம் பெறாஅ தூண்முனிந்  
செயிர்த்தெழு தெவ்வர் திறைதுறை போகிய  120

செல்வ சேறுமெந் தொல்பதிர் பெயர்ந்தென
மெல்லெனக் கிளந்தன மாக  
அகறி ரொவெம் ஆயம் விட்டென
சிரறிய வன்போற் செயிர்த்த நோக்கமொடு
துடியடி யன்ன தூங்குநடைக் குழவியொடு  125

பிடிபுணர் வேழம் பெட்டவை கொள்கெனத்
தன்னறி யளவையின் தரத்தர யானும்
என்னறி யளவையின் வேண்டுவ முகந்துகொண்டு
இன்மை தீர வந்தனென்  
உருவப் பஃறேர் இளையோன் சிறுவன்  130

முருகற் சீற்றத் துருகெழு குருசில்
தாய்வயிற் றிருந்து தாய மெய்தி
எய்யாத் தெவ்வர் ஏவல் கேட்பச்
செய்யார் தேஎம் தெருமரல் கலிப்பப்
பவ்வ மீமிசைப் பகற்கதிர் பரப்பி  135

வெல்வெஞ் செல்வன் விசும்புபடர்ந் தாங்குப்
பிறந்துதவழ் கற்றதற் றொட்டுச் சிறந்தநன்
னாடுசெகிற் கொண்டு நாடொறும் வளர்ப்ப  
ஆளி நன்மான் அணங்குடைக் குருளை
மீளி மொய்ம்பின் மிகுவலி செருக்கி  140

முலைக்கோள் விடாஅ மாத்திரை ஞெரேரெனத்
தலைக்கோள் வேட்டங் களிறட் டாஅங்கு
இரும்பனம் போந்தைத் தோடுங் கருஞ்சினை
அரவாய் வேம்பின் அங்குழைத் தெரியலும்
ஒங்கிருஞ் சென்னி மேம்பட மிலைந்த  145

இருபெரு வேந்தரு மொருகளத் தவிய
வெண்ணித் தாக்கிய வெருவரு நோன்றாட்
கண்ணார் கண்ணிக் கரிகால் வளவன்
தாணிழல் மருங்கி னணுகுபு குறுகித்
தொழுதுமுன் னிற்குவி ராயிற்   150

றீற்றா விருப்பிற் போற்றுபு நோக்கிநும்
கையது கேளா அளவை ஒய்யெனப்
பாசி வேரின் மாசொடு குறைந்த
துன்னற் சிதாஅர் நீக்கித் தூய
கொட்டைக் கரைய பட்டுடை நல்கிப்  155

பெறலருங் கலத்திற் பெட்டாங் குண்கெனப்
பூக்கமழ் தேறல் வாக்குபு தரத்தர
வைகல் வைகல் கைகவி பருகி
எரியகைந் தன்ன வேடில் தாமரை
சுரியிரும் பித்தை பொலியச் சூட்டி.  160

நூலின் வலவா நுணங்கரில் மாலை
வாலொளி முத்தமொடு பாடினி யணியக்
கோட்டிற் செய்த கொடுஞ்சி நெடுந்தேர்
ஊட்டுளை துயல்வர வோரி நுடங்கப்
பால்புரை புரவி நால்குடன் பூட்டிக்  165

காலி னேழடிப் பின்சென்று கோலின்
தாறுகளைந் தேறென் றேற்றி வீறுபெறு
பேரியாழ் முறையுழிக் கழிப்பி நீர்வாய்த்
தண்பணை தழீஇய தளரா விருக்கை
நன்பல் லூர நாட்டொடு நன்பல்.   170

வெரூஉப்பறை நுவலும் பரூஉப்பெருந் தடக்கை
வெருவரு செலவின் வெகுளி வேழம்
தரவிடைத் தங்கலோ விலனே வரவிடைப்
பெற்றவை பிறர்பிறர்க் கார்த்தித் தெற்றெனச்
செலவுகடைக் கூட்டுதி ராயிற் பலபுலந்து  175

நில்லா வுலகத்து நிலைமை தூக்கிச்
செல்கென விடுக்குவ னல்ல  
திரை பிறழிய விரும் பெளவத்துக்
கரை சூழ்ந்த அகன் கிடக்கை
மா மாவின் வயின் வயினெற்.   180

றாழ் தாழைத் தண் டண்டலைக்
கூடு கெழீஇய குடி வயினாற்
செஞ் சோற்ற பலி மாங்திய
கருங் காக்கை கவவு முனையின்
மனை நொச்சி நிழலாங் கண்   185

ஈற்றி யாமைதன் பார்ப்பு ஓம்பவும்
இளையோர் வண்ட லயரவும் முதியோர்
அவைபுகு பொழுதிற்றம் பகைமுரண் சொலவும்
முடக் காஞ்சிச் செம் மருதின்
மடக் கண்ண மயில் ஆலப்   190

பைம் பாகற் பழந் துணரிய
செஞ் சுளைய கனி மாந்தி
அறைக் கரும்பி னரி நெல்லின்
இனக் களமர் இசை பெருக
வற ளடும்பி னிவர் பகன்றைத்   195

தளிர்ப் புன்கின் றாழ் காவின்
நனை ஞாழலொடு மரங் குழீஇய
அவண் முனையி னகன்று மாறி
அவிழ் தளவி னகன் தோன்றி
நகு முல்லை யுகுதேறு வீப்  200

பொற் கொன்றை மணிக் காயா
நற் புறவி னடை முனையிற்
சுற வழங்கும் இரும் பெளவத்
திற வருந்திய இன நாரை
பூம் புன்னைச் சினைச் சேப்பின்  205

ஒங்கு திரை யொலிவெரீ இத்
தீம் பெண்ணை மடற் சேப்பவும்
கோட் டெங்கின் குலை வாழைக்
கொழுங் காந்தண் மலர் நாகத்துத்
துடிக் குடிஞைக் குடிப் பாக்கத்துக்.  210

யாழ் வண்டின் கொளைக் கேற்பக்
கலவம் விரித்த மட மஞ்ஞை
நில வெக்கர்ப் பல பெயரத்  
தேனெய் யொடு கிழங்கு மாறியோர்
மீனெய் யொடு நறவு மறுகவும்   215

தீங் கரும்போ டவல் வகுத்தோர்
மான் குறையொடு மது மறுகவும்
குறிஞ்சி பரதவர் பாட நெய்தல்
நறும்பூங் கண்ணி குறவர் சூடக்
கானவர் மருதம் பாட அகவர்   220

நீனிற முல்லைப் பஃறிணை நுவலக்
கானக் கோழி கதிர் குத்த
மனைக் கோழி தினைக் கவர
வரை மந்தி கழி மூழ்க
கழி நாரை வரை யிறுப்பத்   225

தண் வைப்பினா னாடு குழீஇ
மண் மருங்கினான் மறு வின்றி
ஒரு குடையா னென்று கூறப்
பெரி தாண்ட பெருங் கேண்மை
அறனொடு புணர்ந்த திறனறி செங்கோல்  230

அன்னோன் வாழி வென்வேற் குருசில்  
மன்னர் நடுங்கத் தோன்றிப் பன்மாண்
எல்லை தருநன் பல்கதிர் பரப்பிக்
குல்லை கரியவுங் கோடெரி நைப்பவும்
அருவி மாமலை நிழத்தவு மற்றக்  235

கருவி வானங் கடற்கோள் மறப்பவும்
பெருவற னாகிய பண்பில் காலையும்
நறையும் நரந்தமு மகிலு மாரமும்
துறைதுறை தோறும் பொறையுயிர்த் தொழுகி
நுரைத்தலைக் குரைப்புனல் வரைப்பகம் புகுதொறும். 240

புனலாடு மகளிர் கதுமெனக் குடையக்  
கூனிக் குயத்தின் வாய்நெல் லரிந்து
சூடுகோ டாகப் பிறக்கி நாடொறும்
குன்றெனக் குவைஇய குன்றாக் குப்பை
கடுந்தெற்று மூடையின் இடங்கெடக் கிடக்கும்  245

சாலி நெல்லின் சிறைகொள் வேலி
ஆயிரம் விளையுட் டாகக்
காவிரி புரக்கு நாடுகிழ வோனே.  

திணை : பாடாண்.  துறை : ஆற்றுப்படை

1. அறாஅ யாணர் என்பது தொடங்கி, 59-நோற்ற தன் பயனே என்னுந் துணையும் ஒரு தொடர்: இதன்கண், முடியுடைவேந்தர் மூவருள்ளும் தொடி விளங்கு தடக்கைச் சோழர் குலத்துதித்த வேந்தன் கரிகாற்பெருவளத்தான்பாற் பரிசில் பெற்றுவருவான் ஒரு பொருநன், வழியிற் பரிசிலை விரும்பிவருகின்ற பொருநனைக் கண்டு உசாவுமுகத்தான் அப்பொருநன் நிலை, யாழின் தன்மை, பாடினியின் தன்மை அவர்கள் வழியிடை இருக்கும் இயல்பு முதலியன கூறப்படும்.

1-முதல் 3 வரை பரிசில் பெற்ற பொருநன் எதிர்வந்த பொருநனை விளித்து முன்னிலையாக்கல் கூறப்படுகிறது.

1-3 : அறாஅ யாணர் ............... பொருந

பொருள் : அறாஅ யாணர் அகன்றலைப் பேரூர் - இடையறாத செல்வ வருவாயினையுடைய அகன்ற இடத்தை யுடைய பெரிய ஊர்களிடத்து, சாறு கழி வழிநாள் சோறு நசை உறாது - விழாக்கழிந்த பின்னாளில் ஆண்டுப் பெறுகின்ற சோற்றை விரும்புதல் செய்யாது, வேறுபுலம் முன்னிய விரகு அறி பொருந - வேற்றுப்புலத்தை எய்த நினைத்த விரகை அறிந்த பொருநனே!

கருத்துரை : இடையறாத செல்வ வருவாயினையுடைய பெரிய ஊர்களிலே நிகழும் விழா முடிந்த பின்னாளிலே, ஆண்டுப்பெறும் சோற்றையும் விரும்பாமல் அயலிடம் செல்லுதலைக் கருதிப் புறம்போந்த பொருநனே! என்பதாம்.

அகலவுரை : யாணர் - புதுவருவாய்; புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (உரி - 81) என்பது தொல்காப்பியச் சூத்திரம். மக்கள் வாழ்வதற்கு வேண்டிய அகலிடமுடையதும், நெல் முதலிய பொருள் வருவாய் மிக்கதும், குடிவளம் பெருகியதும் ஆகிய ஊர் என்பார், அறாஅ யாணர் அகன்றலைப் பேரூர் என்றார்.

சாறு-விழா. சாறுகழி வழிநாள் என்றது விழா முடிவுற்ற நாளின் மறுநாள் என்றவாறு. விழாமுடிந்த மறுநாள் ஊர்வாழ் மாந்தர் எளியோர்க்கு உண்டிவழங்குதல் மரபு. திருக்கோயில்களிலும் விழாமுடிவுற்றபின்னர்ச் சோறு வழங்குதலுண்டு. இதனை,

சாறயர்ந் தன்ன மிடாச் சொன்றி
வருநர்க்கு வரையா வளநகர்  (குறிஞ். 201-2)

என்னும் குறிஞ்சிப்பாட்டானும் அறிக. சாறுகழி வழிநாள் வருநர்க்கு வரையாது வழங்கும் அடிசில் மிகவும் சுவைபடச் சமைத்து வழங்கப்படும் என்பது, நசையுறாது என்ற குறிப்பாற் பெறுதும்; என்னை? விரும்புதற்குரிய சுவையுடையடிசில் உனக்குக் கிடைப்பதாகவும் அதனையும் விரும்பாமல் இங்ஙனம் வந்த பொருநனே! எனப் பரிசில் பெற்றோன் விளித்தானாகலின் என்க.

பொருநர், ஏர்க்களம் பாடுவோர் போர்க்களம் பாடுவோர் பரணி பாடுவோர் எனப் பலதிறப்படுவர். இவர்கள் பேரூர்களில் விழவுக் களந்தோறும் சென்று பாடுதலும் ஆவ்வூர் மக்களாற் போற்றி உண்டி முதலிய வழங்கப்படுதலும் உடையார் என்பதும் இதனாற் பெறுதும் விழவுக்களங்களில் விரும்பற்குரிய சுவையுடைய சோறு கிடைக்கப் பெறினும், அதனால் தன்பால் நிலையுற்ற நல்குரவு அகற்றப்படாமையின், நல்குரவு முற்றும் ஒழித்தலைக் கருதி அங்ஙனம் மிக்கு வழங்கும் வள்ளலை நாடி வேறுபுல முன்னினான் ஆகலின், விரகறி பொருந என்று விளித்தான் என்க. விரகறிதல் என்றது, இன்னது செய்து இன்னிலை எய்துவல் என்று ஆராய்ந்து அதற்குரிய நெறியைத் தெரிந்து கோடல் எனவே உபாயம் அறிதல் என்க. என்னை?

செம்பகை ஆர்ப்பே கூடம் அதிர்வே
வெம்பகை நீக்கும் விரகுளி அறிந்து  (சிலப்.வேனி-29-30)

என்னும் சிலப்பதிகாரத்தும் விரகு இப்பொருட்டாதலான் என்க. நசை-விருப்பம். வறுமைக்கு முதலாவது நசையே ஆகலின், வறுமை மிக்கோன் என்பது தோன்ற நசை என்றான். நசையுற்று ஆண்டுத் தங்குதலே நின் வறுமைக்கு ஏற்றதாகவும், அங்ஙனமின்றி வந்தோய் என்பது கருத்து. இனி- 4, குளப்புவழியன்ன என்பது தொடங்கி 22 - மருவின் பாலை என்னுந்துணையும் யாழ்வருணனை என்க.

4-22 : குளப்புவழி .................. மருவின்பாலை

பொருள் : குளப்புவழி அன்ன கவடுபடு பத்தல் - மானினது குளம்பு பதிந்த இடத்தைப்போன்று இரண்டுமருங்கும் தாழ்ந்து நடுவுயர்ந்த பத்தலினையும், விளக்கு அழல் உருவின் விசியுறு பச்சை - விளக்கினது பிழம்பின் நிறத்தை ஒத்த நிறமுடையதும் விசித்துப் போர்க்கப்பட்டதுமாகிய தோலையும், எய்யா இளஞ்சூழ் செய்யோள் அவ்வயிற்று ஐது மயிர் ஒழுகிய தோற்றம் போல-பிறரான் நன்கறியப்படாத இளைய கருவினையுடைய சிவந்த நிறமுடையவளின் அழகிய வயிற்றின்மேல் ஐதாகிய மயிர் ஒழுங்குபடக் கிடந்த தோற்றத்தைப்போல பொல்லம் பொத்திய பொதிஉறு போர்வை-இரண்டு தலைப்பையும் கூட்டித் தைத்த மரத்தைத் தன் அகத்தே பொதிதலுறும் போர்வையினையும், அளைவாழ் அலவன் கண்கண்டன்ன துளைவாய் தூர்ந்த துரப்பமை ஆணி - வளையிலே வாழ்கின்ற நண்டின் கண்ணைக் கண்டாற்போன்ற பத்தலிரண்டும் சேர்த்தற்குத் திறந்த துளைகளின் வாய் மறைதற்குக் காரணமாகிய முடுக்குதலமைந்த ஆணியினையும், எண்ணாள் திங்கள் வடிவிற்றாகி அண்ணா இல்லா அமைவரு வறு வாய்-உவாவிற்கு எட்டாநாள் தோன்றும் திங்களினது வடிவை உடைத்தாய் உண்ணாக்கில்லாத பொருந்துதல் வந்த வறிய வாயினையும், பாம்பு அணந்தன்ன ஓங்கு இரு மருப்பின்-பாம்பு தலை எடுத்தாற் போன்ற ஓங்கு தலையுடைய கரிய தண்டினையும், மாயோள் முன்கை ஆய்தொடி கடுக்கும் கண்கூடு இருக்கைத் திண்பிணித் திவவின் - கரிய நிறத்தையுடையவளின் முன்கையில் அணியப்பட்ட அழகிய வளையலை ஒத்ததும் ஒன்றோடொன்று நெருங்கின இருப்பினையுடையதும் திண்ணிய பிணிப்பையுடையதுமாகிய வார்க்கட்டினையும், ஆய்தினை அரிசி அவையல் அன்ன வேய்வை போகிய விரல் உளர் நரம்பின் கேள்வி போகிய நீள்விசித் தொடையல்-அழகினையுடைய தினையரிசியில் குத்தலரிசியை ஒத்த குற்றம் போகிய விரலாலசைக்கும் நரம்பினையுடைய இசை முற்றுப் பெற்ற நீண்ட விசித்தலையுடைய தொடர்ச்சியினையும், மணங்கமழ் மாதரை மண்ணியன்ன அணங்கு மெய்ந்நின்ற அமைவரு காட்சி - புதுமணக் கோலம் பொலிவுபெற்ற மாதரை ஒப்பனை செய்துகண்டாலொத்து யாழ்க்குரிய தெய்வம் தன்னிடத்தே நிலைத்துநின்ற கண்ணிமைத்துக் காண்டலும் அரிதாகிய அழகினையும் உடைய, ஆறு அலை கள்வர் படைவிட அருளின் மாறுதலை பெயர்க்கும் மருவுஇன் பாலை - வழியை அலைக்கின்ற கள்வர் தம் கையிற் படைக்கலங்களைக் கைவிடும்படி செய்து அருளின் மாறாகிய மறப்பண்பினை அவரிடத்து நின்று அகற்றுகின்ற மருவுதல் இனிய பாலை யாழை;

கருத்துரை : மானினது குளம்பு பதிந்த இடம்போன்று இருபுறமும் தாழ்ந்து நடுவிடம் உயர்ந்த பத்தலினையும், விளக்குச் சுடரின் நிறமமைந்தலும் நன்கு விசித்துப் போர்க்கப்பட்டதுமாகிய தோலினையும், சிவந்த நிறமமைந்த இளமகளின் இளஞ்சூலமைந்த வயிற்றின் நடுவே மெல்லிதாக ஒழுங்குபட்டுள்ள மயிரினது தோற்றம்போன்ற இரண்டு தலைப்பையும் இணைத்துத் தைத்த மரத்தை மூடுதற்கமைந்த உறையினையும், நண்டின் கண்ணை ஒத்த பத்தரை இணைத்தற்குத் திறந்த துளை மறைய முடுக்கின ஆணிகளையும், எட்டாநாள் தோன்றும் திங்களின் வடிவை ஒத்துத் தோன்றுகின்ற வாயினையும், பாம்பு தலை எடுத்தாற் போன்ற கரிய தண்டினையும், கரிய நிறமுடைய மகளின் முன்கையின் கண் அணியப்பட்ட வளையலை ஒத்து நன்கு இறுக்கிய பிணிப்பினையுடைய வார்க்கட்டினையும், குத்திய தினையரிசியை ஒத்த குற்றமற்ற நரம்பினையுடைய இசையின்பம் முற்றிய நரம்பினது விசித்துக் கட்டப்பட்ட தொடர்ச்சியினையும், மணமகளை ஒப்பனை செய்தாலொத்து யாழ்த்தெய்வம் நிலைபெற்று அழகியதாய தோற்றத்தினையும், ஆறலைப்போரும் தம் கொலைப்படையை எறிந்து தம் மறத்தொழிலை விடும்படி பண்படுத்த வல்ல பண்பினையும் உடையதாய் மருவுதற்கு இனிதாகிய பாலை யாழினை என்பதாம்.

அகலவுரை : பத்தலினையும், தோலினையும், போர்வையினையும், ஆணியினையும், வாயினையும், தண்டினையும், வார்க்கட்டினையும், நரம்புத் தொடர்ச்சியினையும், அழகினையும், பெயர்த்தலையும் உடைய மருவுதற்கினிய பாலையாழினை என அணுக இயைத்துக் காண்க. இனி, யாழும் நால்வகைப்படும். அவையாவன: பேரியாழ், மகரயாழ், சகோடயாழ், செங்கோட்டியாழ் என்பன; இவை பெரும்பான்மைய, சிறுபான்மையான் வருவன பிறவும் உள.

இவையிற்றை,

பேரியாழ் பின்னு மகரம் சகோடமுடன்
சீர்பொலியும் செங்கோடு செப்பினார் - தார்பொலிந்து
மன்னுந் திருமார்ப வண்கூடற் கோமானே
பின்னு முளவே பிற  (சிலப்.அரங்-உரை)

என்னும் வெண்பாவானும் அறிக. இந் நால்வகை யாழ்களில், பேரியாழுக்கு இருபத்தொரு நரம்பும், மகரயாழிற்குப் பத்தொன்பது நரம்பும், சகோடயாழிற்குப் பதினான்கு நரம்பும், செங்கோட்டி யாழுக்கு ஏழு நரம்பும் கொள்ளப்படும் என்ப. இதனை,

ஒன்று மிருபதும் ஒன்பதும் பத்துடனே
நின்றபதி னான்கும் பின்னேழும் - குன்றாத
நால்வகை யாழிற்கு நன்னரம்பு சொன்முறையே
மேல்வகை நூலோர் விதி  (சிலப்.அரங்-உரை)

என்னும் வெண்பாவான் அறியலாம். இனி, இவ்வியாழ் உறப்புக்கள் கோடே பத்தர் ஆணி நரம்பே, மாடகம் எனவரும் வகையின தாகும். என்பவற்றுள் ஈண்டு மாடகம் ஒழிந்தன கூறப்பட்டன. கோட்டின தமைதியும் கொளுவிய ஆணியும், ஆட்டிய பத்தரின் வகையும் ஆடகமும் தந்திரி யமைதியும் சாற்றிய பிறவும், முந்திய நூலின் முடிந்தவகை (சிலப்.அரங்.உரை) என்பர் ஆசிரியர் அடியார்க்கு நல்லார்.

குளம்பு வழி - குளப்புவழி என வேற்றுமைப் புணர்ச்சியில் வன்றொடராயிற்று. பத்தல்-யாழின்கண் குடம்போன் றமைந்த ஓர் உறுப்பு. இதன் மேற்பகுதி இருமருங்கும் தாழ்ந்தும் நடுவிடம் உயர்ந்தும் இருக்கும்படி இரு பிளவுகளை இணைத்திருத்தலால், மான் குளம்பு பதிந்த சுவடு உவமையாயிற்று. கவடு - பிளவு. பச்சை - யாழின் பத்தரின்மேல் போர்க்கப்பட்ட தோல். விளக்கின் சுடர் இத்தோலின் நிறத்திற்கு உவமை. விசியுறு - இழுத்துக் கட்டுதலுடைய. பொல்லம் பொத்துதல்-இரண்டு தலைப்பினையும் இணைத்து மூட்டுதல். தோலினை இழுத்துப் பத்தரின் நடுவிடத்தே தைத்திருத்தற்குச் சிவந்த நிறமுடையாளின் இளஞ்சூல் பொருந்திய வயிற்றின் நடுவிடத்தே விளங்கித் தோன்றும் தையல் ஆகலின் சிவந்த நிறமுடையாளின் இளஞ்சூல் வயிறென்றார். ஐது-மென்மை. அயிலுருப் பனைய வாகி ஐதுநடந்து (சிறுபாண்-7) ஐதுவீழ் இகுபெயல் (சிறுபாண். 13) என்னும் சிறுபாணாற்றுப்படையினும் ஐது, அப்பொருட்டாதலறிக. பத்தரின் நடுவிடம் சிறிதே உயர்ந்திருத்தலின் எய்யா இளஞ்சூல் அவ்வயிறு என்றார். எய்யா-அறியப்படாத; பிறரால் இவள் சூல் வாய்த்தவள் என நன்கு அறியப்படாத என்றவாறு. எய்யாமையே அறியாமையே என்பது தொல்காப்பியச் சூத்திரம். பொதியுறுதல்-தன்னகத்திட்டு மூடுதல். அளை-வளை. அலவன் - நண்டு. நண்டின் கண்கள், பத்தரின் இருமருங்கும் முடுக்கப்பட்ட ஆணிகட்கு உவமை. எண்ணாட்டிங்கள் அரைவட்டமாக இருத்தலின், அரை வட்டவடிவிற்றாய வறுவாய்க்கு உவமை கூறினார். வறுவாய்-அகத்தே வறிதாகக் கிடக்கும் வாய். வாய் போறலின் வாய் என்றார். வாய் என்றமைக்கு ஏற்ப அண்ணாவில்லா என்றார் என்க. அண்ணா-உண்ணாக்கு. சுனை வறந்தன்ன இருள் தூங்கு வறுவாய் (பெரும்பாண்.10) என்றார் பிறரும். யாழின் கருநிறமைந்த தண்டிற்குத் தலையெடுத்துயர்ந்த கரும்பாம்புவமை. அணத்தல்-மேனோக்குதல். இரு மருப்பு என்ற தன்கண் இருமை கருமை என்னும் நிறப்பண்பு குறித்து நின்றது கருமை என்னும் இப்பொருளின்கட் கிடந்த அடையைப் பாம்புடனும் கூட்டிக் கரும்பாம்பு எனக் கொள்க. விளக்கழல் நிறத்தினையுடைய தோலின் இணைப்பிற்குச் செய்யோள் இளஞ்சூல் என உவமை தேர்ந்து கூறியாங்கு, ஈண்டுக் கரிய தண்டின்கட் சுற்றப்பட்ட வார்க்கட்டிற்குக்கரிய நிறமுடையாளது கையின்கண் அணிந்த தொடி என நுண்ணிதின் உவமை எடுத்தோதும் அழகினை உணர்க.

மாயோள்-கருநிறமுடையவள். ஆய் தொடி - அழகிய வளையல். ஆராய்தற்குரிய நுணுக்கமான தொழிற்றிறனமைந்த வளையல் எனினுமாம். கண்கூடு இருக்கை என்றது, ஒன்றனோடொன்று இடையீடின்றிச் செறிந்து அமைத்தலையுடைய இருக்கை என்றவாறு. திண்பிணி-உறுதியான இணைப்பு. நரம்பு துவக்கும் இடமாகலின், அவை தளராதவாறு திண்ணிதிற் பிணிக்கப்பட்ட வார்க்கட்டு என்றவாறு. ஆய்தினை அரிசி - நுணுகிய தினையரிசி எனினுமாம். என்னை? ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய், ஆவயின் நான்கும் உள்ளதன் நுணக்கம் (தொல்-உரி-32) என்பதோத்தாகலின் என்க. நன்கு குத்திய தினை அரிசி நரம்பிற்கு உருவுவமை என்க. அவையல் - குத்துதல். ஈண்டுக் குத்தப்பட்ட அரிசிக்குப் பெயராய் நின்றது. வேய்வை - குற்றம். ஈண்டு நரம்பின் குற்றம் என்க. உளர் நரம்பின் : வினைத்தொகை கேள்வி-இசைக்கு ஆகுபெயர். கேள்வி போகிய என்றது, இசை இன்பம் முற்றிய என்றவாறு. நீள் விசித் தொடையல்-நீளியவாய் இழுத்துக்கட்டப்பட்ட நரம்பினது தொடர்ச்சி. மணங் கமழ் மாதர் என்றது. மணம் புகும் மகள் என்றவாறு. மண்ணுதல்-ஈண்டு ஒப்பனை செய்தல் என்னும் பொருட்டு. நன்கு ஒப்பனை செய்யப்பட்ட மணமகள் யாழின் முழுத் தோற்றத்திற்கும் உவமை. இங்ஙனமே இளங்கோவடிகளாரும்,

சித்திரப் படத்துட் புக்குச் செழுங்கோட்டின் மலர்புனைந்து
மைத்தடங்கண் மணமகளிர் கோலம்போல் வனப்பெய்தி   (சிலப். கானல்வரி-1-2)

எனப் புதுமணக்கோலப் பொலிவுடைய மகளை யாழ்க்கு உவமை கூறுதல் காண்க.

அணங்கு - யாழ்க்குரிய கலைத்தெய்வம். இத்தெய்வம் மாதங்கி என்பர் ஆசிரியர் நச்சினார்க்கினியர் (சீவக-411 உரை).

ஆறு அலை கள்வர் படைவிட அருளின்
மாறுதலை பெயர்க்கும் மருவின் பாலை

என்னும் இரண்டடியானும் இசைப்பயன் நுண்ணிதிற் றெரித்தோதியவாறுணர்க. என்னை? இசை தன்னைக் கேட்டோர் உளத்தே இன்பம் விளைத்தலோடு, அவ்வுள்ளத்தைப் பண்படுத்தித் தூய்மை செய்து வீட்டின்பம் எய்தத் தகுதியுடையதாக்கும். இத்தகைய பெரும்பயன் உண்மையானன்றோ சான்றோர் அதனைப் பெரிதும் போற்றி வளர்ப்பாராயினர் என்க. ஈண்டு, ஆசிரியர் முடத்தாமக் கண்ணியார் இவ்விரண்டு அடிகளானும் இசைப்பயனைத் தெள்ளிதின் விரித்தோதுவார், மறமே செய்து திரியும் வேடரையும் அம் மறத்தொழிலை விடுத்து அருள் நெறியிற் சேர்க்கும் பெற்றிமையுடைய யாழ் என்னுமாற்றால் விளக்குதல் காண்க. மேலைநாட்டு நல்லிசைப் புலவராய ஷேக்ஸ்பியர் என்பாரும், இளைக்கிளகாதான் கொலை செய்யவும் துணிவான் என, இக்கருத்தை எதிர்மறைமுகத்தான் நன்குவிளக்கிப் போந்தனர். அவர் கருத்தையும் இதனோடு ஒப்புக் காண்க.

ஆறலை கள்வர், தம் கொலைத்தொழிற்குரிய படைக்கலன்களைக் கைவிட்டு அருள்நெறியின் மறுதலையாகிய மறநெறியினின்றும் அருள்நெறிப் படருமாறு செய்யும் பெரும் பயனுடைய யாழ் என்றவாறு. ஆறலை கள்வரும் எனற்பாலது செய்யுள் விகாரத்தால் உம்மை தொக்கு, ஆறலைகள்வர் என நின்றது, ஆறலைகள்வரையும் அருள்நெறிப்படுத்தும் எனவே, ஏனையோர் எளிதிற் பெரும்பயன் பெறற்குரியது யாழிசை என்றாராயிற்று. இத்தகைய பேரின்பம் இம்மை மறுமை இரண்டினும் எய்துவிக்கும் சிறப்புடைய இனிய யாழினை இறக்கவிட்ட இடைக்கால மதுகையிலாத் தமிழர் அளியரோ! அளியர்! மருவின் பாலை என்றது, கேட்குந் தோறும் பயிலுந்தோறும் வெறாஅது இனிமை மிகுதற்கியன்ற பாலையாழ் என்றவாறு. மருவுதல், கேட்டற் பொருட்டும் பயிலற்பொருட்டும் அடிக்கடி அதனை எய்துதல்.

நவில்தொறும் நூனயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு  (குறள் - 783)

என்று தேவர் இயம்பியாங்கு இனிமைப் பண்புடைய யாழை மருவுங் கால் ஒருகாலைக்கொருகால் இன்பமிகுதற் கேதுவாகலின் அங்ஙனம் கூறினார். பாலை: ஆகுபெயர். இனி, ஆசிரியர் நச்சினார்க்கினியர், கொன்றை கருங்காலி குமிழ்முருக்குத் தனக்கே என்பதனால் கோட்டிற்கு மரம் கொன்றையும் கருங்காலியுமாம் பத்தற்கு மரம் குமிழும் முருக்கும் தணக்குமாம் என்று உரை விரிப்பர். இவ்வாறு யாழின் இயல் கூறி, இனி, அதனை இயக்கும் முறையினை ஓதுகின்றார்.

23-24 : வாரியும் ................ ........... சிதறி

பொருள் : வாரியும் - நரம்புகளைக் கூடத் தழுவியும், வடித்தும் - நரம்பினை உருவியும், உந்தியும் - நரம்பினைத் தெறித்தும், உறழ்ந்தும் - ஒன்றைவிட்டொன்றைத் தெறித்தும், சீருடை நன்மொழி நீரொடு சிதறி - சீரை உடைத்தாகிய தேவபாணிகளை நீர்மையுடன் பரப்பி;

கருத்துரை : (அவ்வியாழினை) நரம்புகள் கூடுமாறு தழுவியும், உருவியும், தெறித்தும் ஒன்றைவிட்டொன்றைத் தெறித்தும் சீர்களையுடைய பண்ணை நீர்மையோடே பரப்பி, என்பதாம்.

அகலவுரை : சீருடை நன்மொழி நீரொடு சிதறி என்றதன்கண் சிதறி என்னும் எச்சம் 48 ஆம் அடிக்கண் பாடின பாணிக்கு என இயையும். சுருங்கக் கூறல் கருதி வாரியும் வடித்தும் உந்தியும் உறழ்ந்தும் எனச் கூறினராதலின் ஒருமொழி ஒழிதன் னினங்கொளற்குரித்தே என்னும் விதியானே,

வார்தல் வடித்தல் உந்தல் உறழ்தல்
சீருடன் உருட்டல் தெருட்டல் தள்ளல்
ஏருடைப் பட்டடையென இசையோர் வகுத்த
எட்டு வகையின் இசைக்கர ணத்துப்
பட்டவகை  (சிலப்.கானல்.12-16)

என ஆசிரியர் இளங்கோவடிகளார் விரித்தோதிய எண்வகை இசைக்கரணமும் கொள்க. அவையாவன : வார்தல் என்றது சுட்டுவிரற் செய்தொழில்; வடித்தல் என்றது, சுட்டுவிரலும் பெருவிரலும் கூட்டி நரம்பை அகமும் புறமும் ஆராய்தல்; உந்தல் என்றது, நரம்புகளை உந்தி வலிவிற்பட்டதும், மெலிவிற்பட்டதும், நிரல்பட்டதும், நிரலிழிபட்டதும் என்றறிதல்; உறழ்தல் என்றது, ஒன்றிடையிட்டும் இரண்டிடையிட்டும் ஆராய்தல், உருட்டல் என்றது, இடக்கைச் சுட்டுவிரல் தானே உருட்டலும், வலக்கைச் சுட்டுவிரல் தானே உருட்டலும், சுட்டொடு பெருவிரற் கூட்டியுருட்டலும், இருபெருவிரலும் இயைந்துடன் உருட்டலும் என வரும். தெருட்டலென்றது செப்புங்காலை, உருட்டி வருவதொன்றே மற்ற ஒன்றன் பாட்டு மடை ஒன்ற நோக்கின் வல்லோர் ஆய்ந்த நூலே யாயினும் வல்லோர் பயிற்றும் கட்டுரை யாயினும் பாட்டொழிந் துலகினில் ஒழிந்த செய்கையும், வேட்டது கொண்டு விதியுற நாடி என வரும். இவை சிலப்பதிகார அரும்பதவுரையிற் கண்டவை.

இனி, சீருடை நன்மொழி என்றது, நடையினும் ஒலியினும் எழுத்தினும் நோக்கித் தொடையமைந் தொழுகும் இசைப்பாட்டிற்கோதிய, சீரும் சொல்லும் நன்கமைந்த பண் என்றவாறு. எழுத்து அசை சீர் தளை அடி முதலியன முத்தமிழ்க்கும் ஒத்தலின் அங்ஙனம் கூறினார் என்க. இனி, இசைப்பாட்டு தெய்வஞ் சுட்டியனவும், மக்கட் சுட்டியனவும் என இருதிறப்படும் என்க. நீர்-இசைக்குரிய இனிமைப்பண்பு. சிதறி என்றது ஆரோசை அமரோசைகளால் பரந்துபடச் செய்து என்றவாறு. இனி, 25 - அறல்போற் கூந்தல் என்பது தொடங்கி, 47 பாடினி என்னுந்துணையும் பாடினியின் நலம்புனைந்துரைத்தல்.

25-47. அறல்போல் ........................ பாடினி

பொருள் : அறல்போல் கூந்தல் - யாற்றின் அறல்போலும் கூந்தலினையும், பிறைபோல் திருநுதல்-பிறைபோல அழகினையுடைய நுதலினையும், கொலை வில் புருவத்து-கொலைத்தொழிலையுடைய விற்போலும் புருவத்தினையும், கொழுங் கடை மழைக் கண் அழகிய கடையினையுடைய குளிர்ச்சியை உடைய கண்ணினையும், இலவு இதழ் புரையும் இன்மொழித் துவர்வாய் - இலவினது இதலையொக்கும் இனிய சொல்லையுடைய சிவந்த வாயினையும், பல உறு முத்தின் பழிதீர் வெண்பல்-பலவுஞ் சேர்ந்த முத்துக்கள்போற் குற்றந்தீர்ந்த வெள்ளிய பல்லினையும், மயிர் குறை கருவி மாண்கடை யன்ன பூங்குழை ஊசற் பொறை சால் காதின்-மயிரை வெட்டுகின்ற கத்தரிகையினுடைய மாட்சிமைப்பட்ட குழைச்சை ஒத்ததும் பொலிவினையுடைய மகரக்குழையின் அசைவினைப் பொறுத்தலமைந்ததுமாகிய காதினையும், நாண் அடச் சாய்ந்த நலங்கிளர் எருத்தின்-நாணம் வருத்தலாற் பிறரை நோக்காது கவிழ்ந்த நன்மை விளங்குகின்ற கழுத்தினையும், ஆடு அமை பணைத்தோள்-அசைகின்ற மூங்கில்போலும் பெருத்தலையுடைய தோளினையும், அரிமயிர் முன்கை-ஐம்மை மயிரினையுடைய முன்கையினையும், நெடுவரை மிசைய காந்தள் மெல்விரல்-நெடிய மலையின் உச்சியிடத்தனவாகிய காந்தள் போலும் மெல்லிதாகிய விரலினையும், கிளிவாய் ஒப்பின் ஒளிவிடுகள் உகிர் - கிளியினது வாயோடு ஒப்பினையுடைய ஒளிவிடுகின்ற பெருமையை உடைத்தாகிய உகிரினையும், அணங்கென உருத்த சுணங்கணி ஆகத்து ஈர்க்கு இடைபோகா ஏர் இள வனமுலை-பிறர்க்கு வருத்தம் எனத் தோற்றின சுணங்கணிந்த மார்பிடத்தவாய் ஈர்க்கும் நடுவே போகாத எழுச்சியையும் இளமையையும் உடைய அழகிய முலையினையும், நீர்ப்பெயர் சுழியின் நிறைந்த கொப்பூழ் - நீரிடத்துப் பெயர்தலையுடைய சுழி போலச் சிறந்த இலக்கணமமைந்த கொப்பூழினையும், உண்டென உணரா உயவும் நடுவின்-உண்டென்று பிறரான் உணரப்படாத வருந்துகின்றயிடையினையும், வண்டு இருப்பன்ன பல்காழ் அல்குல் - பல்வண்டினங்களின் இருப்பை ஒத்த பலமணி கோத்த வடங்களை யுடைய மேகலை அணிந்த அல்குலையும், இரும்பிடித் தடக்கையின் செறிந்து திரள் குறங்கின் - பெரிய பிடி யானையின் பெருமையை யுடைய கைபோல ஒழுக வந்து மெல்லிதாகத் தம்மில் நெருங்கி ஒன்றித் திரண்ட துடையினையும், பொருந்து மயிர் ஒழுகிய திருந்து தாட்கு ஒப்ப - கணைக்காற்கு இலக்கணமென்றற்குப் பொருந்தின மயிர் ஒழுங்குபட்ட ஏனை இலக்கணங்கள் திருந்தின கணைக்காலுக்குப் பொருந்த அமைந்த, வருந்து நாய் நாவில் பெருந்தகு சீறடி-ஓடியிளைத்த நாயினது நாப்போன்ற பெருமை தக்கிருக்கும் சிறிய அடியினையும் உடைய, அரக்கு உருக்கன்ன செந்நிலன் ஒதுங்கலின்-சாதிலிங்கத்தை உருக்கின தன்மையை ஒத்த செய்யநிலத்தே நடக்கையினாலே, பரல் பகை உழந்த நோயொடு சிவணி - சுக்கான்கல்லாகிய பகையாலே வருந்தின நோயோடே பொருந்தி, மரல் பழுத்தன்ன மறுகுநீர் மொக்குள்-மரல் பழுத்தாற்போன்ற துளும்பு நீரையுடைய கொப்புளம், நன்பகல் அந்தி நடை இடைவிலக்கலின் - நன்றாகிய உச்சிக்காலமான சன்னதியிலே நடத்தலை நடுவே தவிர்த்தலாலே, பெடைமயில் உருவின் பெருந்தகு பாடினி - பெடைமயிலின் அருகுநின்ற மயில் போலும் சாயலினையுடைய கல்விப்பெருமை தக்கிருக்கின்ற பாடினி;

கருத்துரை : யாற்றின் அறல்போலும் கூந்தலினையும், பிறை போன்ற நுதலினையும், விற்போன்ற புருவத்தினையும், அழகிய கடையினையுடைய குளிர்ந்த கண்ணினையும், இலவிதழ்போன்ற இன்மொழி பேசும் வாயினையும், முத்துக்கள் போன்ற குற்றந்தீர்ந்த பற்களையும், கத்தரிகையின் குழைச்சை ஒத்து, அழகிய மகரக்குழை கிடந்தசையும் காதினையும், நாணத்தாலே கவிழ்ந்த கழுத்தினையும், அசைகின்ற மூங்கிலை ஒத்துப்பருத்த தோளையும், மெல்லிய மயிரினை உடைய முன்கையினையும், காந்தள் போன்ற மெல்விரலினையும், கிளியின் வாயை ஒத்த உகிரினையும், சுணங்கணிந்த முலையினையும், நீரின்கட் சுழி போன்ற உயரிய இலக்கணம் நிறைந்த கொப்பூழினையும், பிறரால் உண்டென்று காட்சி யளவையான் உணரப்படாத நுண்ணிடையையும், நிரலாக வண்டுகள் இருந்தாற்போன்று மணிகள் கோக்கப்பட்ட மேகலை அணிந்த அல்குலையும், கணைக்காலுக்கோதிய இலக்கணம் பொருந்திய திருத்தமுடைய கணைக்காலினையும், கணைக்காலுக்குப் பொருந்த அமைந்த நாயின் நாக்கை ஒத்த சிற்றடியினையும், அரக்குருக்கினாற் போன்ற சிவந்த நிலத்தே நடக்கையாலே பரல்கள் வருத்த மரலினது பழம்போன்ற கொப்புளங்கள் உச்சிப்போதின்கண் நடத்தலைத் தவிர்த்தலாலே பெடைமயிலின் அருகுநின்ற மயில்போலும் சாயலினையும் உடைய கல்விப்பெருமை மிக்க பாடினி என்பதாம்.

அகலவுரை : பாடின பாடின பாணி என இயையும். கூந்தலினையும், நுதலினையும், புருவத்தினையும், கண்ணினையும், வாயினையும், பல்லினையும், காதினையும், எருத்தினையும், தோளினையும், கையினையும், விரலினையும், உகிரினையும், முலையினையும், கொப்பூழினையும், நடுவினையும், அல்குலினையும், குறங்கினையும், சீறடியினையும், உருவினையும் உடைய பாடினி எனக் கூட்டுக. இது பாடினியின் நலம்புனைந்து முடிமுதல் அடிகாறும் நிரல்பட உரைத்தவாறாம். இங்ஙனம் கூறுதலைக் கேசாதிபாத வருணனை என்ப அணிநூலோர்.

அறல்-யாற்றின்கண் நீரோட்டத்தால் வரிவரியாக அமைந்த நுண்ணிய கருமணல். இது கூந்தலுக்கு, நெறிப்புக்கும் நிறத்திற்கும் உவமை. கதுப்பு விரித்தன்ன காழக நுணங்கறல் (அடி-6) என்றார் சிறுபாணாற்றுப்படையினும். பிறைபோற் றிருநுதல் என்றது பிறைபோல அழகினையுடைய நுதல் எனப் பொதுத்தன்மையை விரித்தோதியவாறு. திரு - அழகு. கொலைவில் புருவம்-கொலைத்தொழிலையுடைய வில்போன்று, கொலைத்தொழிலையும் வளைந்த வடிவினையும் உடைய புருவம் என்க. கொழுமை என்னும் பண்புச்சொல் அழகு, இளமை, செழுமை, நிறம் என்னும் பண்புகட்குப் பொதுவாகிய ஒரு சொல். எனவே, கொழுங்கண் என்றற்கு அழகும் இளமையும் செழிப்பும் நிறமுமுடைய கண் என அச்சொல்லாற் குறிக்கும் பண்புகள் அனைத்தும் கொள்க. மழை, கண்ணிற் குளிர்ச்சிக்கு உவமை. இலவு: மலர்க்கு ஆகுபெயர். இன்மொழி - ஓசையானும் பொருளானும் கேட்டோர்க்கு இன்பந்தருஞ் சொல். துவர்-செந்நிறம். பலவுறு முத்தின் பழிதீர் வெண்பல் என்றது. பலவாகிய முத்துக்களை நிரல் பட வைத்தாற் போன்ற குற்றமற்ற வெண்மைமிக்க பல்வரிசை என்றவாறு. முத்திருத்தியவ் விருந்தனைய மொய்ந்நகை (கம்ப,விராத-செய்-2) என்றார் பிறரும். மயிர்குறை கருவி - கத்தரிகை. தன்பால் அமர்ந்து மகரக்குழை பலகாலும் ஊசலாடுதலை வெறாதே பொறுத்துக்கொள்ளும் காதென்பார் பொறைசால் காது என்றார். இது காதின் மென்மையும் குழையின் பெருமையும் கூறியவாறு. மகளிர்க்கு இயல்பாகிய நாணம் அடிக்கடி தோன்றுதலால் கவிழ்ந்த தன்மை நிலைபெற்ற கழுத்தென்பார், நாணடச் சாய்ந்த எருத்தென்றார். நாணுடைமையே மகளிர்க்குப் பெரிதும் அழகு செய்தலின், அதன் மிகுதி கூறுவார் நாண் அடச்சாய்ந்த என்றார். கண்ணகியாரின் நலம் பாராட்டிய கோவலனும் பொன்னே கொடியே புனைபூங் கோதாய், நாணின் பாவாய் (சிலப்.கொலைக்-89-90) எனப் பாராட்டுதல் காண்க.

அமை - மூங்கில். பணைத்தோள் - பருத்த தோள். அரிமயிர்-ஐம்மைமயிர்: ஐம்மையாவது. மென்மை. மென்மைமிக்க மயிரினையுடைய முன்கை என்றவாறு. அரிமயிர்த் திரள் முன்கை வாலிழை மட மங்கையர் (புறம்.11:1-2) என்றார் பிறரும். உயரிய மலையுச்சிக்கண் மலர்ந்துள்ள காந்தள்மலர், கதிரவன் ஒளியை மிகவும் ஏற்றுச் செழிப்பும் நிறமும் மிக்கவாக இருத்தலின், நெடுவரை மிசைய காந்தள் மெல்விரல் என்றார். கிளியின் வாயை உகிர்க்கு உவமை கூறுதலை கிள்ளை வாயி னன்ன வள்ளுகிர், (4:7-42) என்னும் பெருங்கதையானும் அறிக. அணங்கு - வருத்தம்; நோய், பிறரை நோய் செய்யும் முலை என்றவாறு. சுணங்கு - தேமல், பொன்னிறத் தேமல் படர்ந்து அழகுறுத்திய மார்பென்பார், சுணங்கணி ஆகம் என்றார். சுணங்கு பிதிர்ந்து... பூணகத் தொடுங்கிய வெம்முலை (24 - 26) எனச் சிறுபாணாற்றுப்படையினும், சுணங்கணி வனமுலை (60-1) எனக் கலியினும் வருதல் காண்க. ஈர்க்கு-தெங்கு பனை முதலியவற்றின் ஓலையின் நடுவணமைந்த ஓருறுப்பு. தோடே மடலே ஓலை என்றா, ஏடே யிதழே பாளை என்றா, ஈர்க்கே குலை என நேர்ந்த பிறவும், புல்லொடு வருமெனச் சொல்லினர் புலவர் (தொல்.மர - 86) என்பது தொல்காப்பியம். ஈர்க்கும் இடை போகா எனற்பாலது. செய்யுள் விகாரத்தால் சிறப்பும்மை தொக்கு ஈர்க்கிடை போகா என நின்றது. ஏர் இள வனமுலை என்றது எழுச்சியும் இளமையும் அழகும் உடைய முலை என்றவாறு.

நீர்ப்பெயர் - நீரின்கண் இயங்குதலுடைய என ஏழாவதன் உருபு விரித்துரைத்துக் கொள்க. பெயர்தல்-இயங்குதல். புனற்சுழியலைத்துப் பொருந்திய கொப்பூழ் (பெருங்கதை 2.15:68) என்றார் பிறரும். நிறைந்த கொப்பூழ் என்றது, கொப்பூழிற்குரிய எல்லா நன்மையும் நிறைந்த கொப்பூழ் என்றவாறு. கருதலளவையானன்றிக் காட்சி யளவையான் உண்டென அறிதற்கியலாத நுண்ணிய இடை என்க. பல்லிய னெறியிற் பார்க்கும் பரம் பொருள் என்ன யார்க்கும், இல்லையுண் டென்ன நின்ற இடையினுக் கிடுக்கண் செய்தார் (கம்ப-கோலங்-12) எனக் கம்பரும் ஓதுதல் காண்க. உயவு - வருத்தம். உயவின் என்று பாடமாயின், வருந்தலையுடைய என்க என ஆசிரியர் நச்சினார்க்கினியர் பாடபேதமுண்மை காட்டுவர். நிரல்படக்கோத்த மேகலை மணிகட்கு, நிரல்பட இருந்த வண்டின் ஒழுங்கு உவமை. காழ்-வடம்; ஆகுபெயர். இரும்பிடித் தடக்கையின் செறிந்துதிரள் குறங்கின் என்றதனோடு இரும்பிடித் தடக்கையிற் சேர்ந்துடன் திரண்ட குறங்கின் (19-20) என்னும் சிறுபாணாற்றுப் படையினையும், சிறுபிடித் தடக்கையிற் செறிவொடு புணர்ந்து, மென்மையி னியன்று செம்மைய வாகி, நண்புவீற் றிருந்த நலத்தகு குறங்கினள் (3.5: 12-4) என்னும் பெருங் கதையினையும் ஒப்புக் காண்க. திருந்துதாள் - இலக்கணங்கள் திருந்திய கணைக்கால் என்க. வருந்து நாய்நா என்றது, ஓடியிளைத்துத் தூங்கவிட்ட நாயின் நாக்கு என்றவாறு; இது பாடினியின் உள்ளடிக்கு நிறம் மென்மைகட்கு உவமை. இங்ஙனமே உயங்குநாய் நாவின் நல்லெழில் அசைஇ, வயங்கிழை உலறிய அடி (17-8) எனச் சிறுபாணாற்றுப் படையினும் மதந்தபு ஞமலி நாவி னன்ன துளங்கியன் மெலிந்த கல்பொரு சீறடி (42-3), என மலைபடுகடாத்தினும், முயல்வேட் டெழுந்த முடுகு விசைக் கதநாய் நன்னாப் புரையுஞ் சீறடி என நற்றிணையினும், நாற் நாச்சீறடி (2694) எனச் சிந்தாமணியினும், இளைப்புறு ஞமலி நலத்தகு நாவிற் .......... சேவடி. (2-19: 716-85) எனக் கதையினும் பிறசான்றோரும் மகளிர் சீறடிக்கு நாயின் நாவினை உவமை கூறுதல் காண்க. அரங்கு - சாதிலிங்கம்; இது செந்நிலத்திற்கு உவமை. வெப்ப மிகுதி கூறுவார் உருக்கிய அரக்கென்றார்;

வல்ல ரக்கரின் மால்வரை போய்விழுந்
தல்ல ரக்கி னுருக்கழல் காட்டயற்
கல்ல ரக்குங் கடுமைய வல்லநின்
சில்ல ரக்குண்ட சேவடிப் போதென்றான்  (கம்ப-நகர்-225)

என, இராமாவதாரத்தும், அரக்கு விரித்தன்ன செந்நிலம் (507) என, மலைபடு கடாத்தும், அரக்கத்தன்ன நுண்மணற் கோடு கொண்டு (30-27) எனப் பதிற்றுப் பத்தினும் அரக்கத் தன்ன செந்நிலப் பெருவழி (அகநா-14-1) என அகத்தினும் வருதல் காண்க. மரல்- அரலை என்னும் ஒரு புதல். இதனை இக்காலத்தே மருள் என்று வழங்குப. இதன் பழம் கொப்புளத்திற்கு உவமை.

நெருப்புற்ற போல நிலமோந்துழிச் செய்ய வாகிப்
பருக்கென்ற கோல மரற்பல்பழம் போன்று கொப்புள்
வருத்தம் மிழற்றிப் பசும்பொற்சிலம் போசை செய்யச்
செருக்கற்ற பஞ்சி மலர்ச்சீறடி நோவச் சென்றார்  (சிந்தா-2339)

என்புழிச் சிந்தாமணியினும் கொப்புளத்திற்கு மரற்பழம் உவமையாதல் காண்க. பரற்பகை-பரலாகிய பகை எனப் பண்புருபு கொடுத்து விரித்திடுக. மொக்குள் -கொப்புளம். பெருந்தகு பாடினி என்றது. இசைக் கல்வியின் பெருமை முழுதிற்கும் தகுதி வாய்ந்த பாடினி என்றவாறு.

48-52 : பாடின ............... பின்றை

பொருள் : பாடின பாணிக்கு ஏற்ப - பாடின தாளத்திற்குப் பொருந்த, நாள்தோறும் களிறு வழங்கு அதர்க் கானத்து அல்கி - நாள்தோறும் யானை உலாவரும் வழியை உடைய காட்டிடத்தே தங்கி, எவ்வந் தாங்கி-ஆறுசெல் வருத்தந் தாங்கி, இலையில் மராத்த வலை வலந்தன்ன மென்னிழல் மருங்கில்-இலையில்லாத மரத்தின் அடியிலுள்ளவாகிய வலையை மேலே கட்டினாலொத்த மெல்லிய நிழலினிடத்தே, காடு உறை கடவுள் கடன் கழிப்பிய பின்றை - காட்டின் கண்ணே தங்குகின்ற தெய்வத்திற்கு மனமகிழ்ச்சியாகச் செய்யும் முறைமைகளைச் செய்து விட்ட பின்பு;

கருத்துரை : (பாடினி) பாடின தாளத்திற்குப் பொருந்துமாறு நாள் தோறும் ஆறுசெல் வருத்தந் தாங்கி, இலைகள் உதிர்ந்து விட்டமையால் மேலே வலைகட்டினாற் போன்ற வரிநிழலிடத்தே தங்கிக் காட்டகத்தே உறையும் தெய்வங்கள் மனமகிழும்படி, அவற்றிற்குச் செய்யும் முறைமைகளைச் செய்து விட்டபின்னர் என்பதாம்.

அகலவுரை : பாடின பாணிக் கேற்பக் கடவுட் கடன் கழித்த பின்னர் என இயைத்துக் கொள்க. காடுறை கடவுள் ஆவன, காளி கூளி முதலியன. அவற்றிற்குப் பலியீந்து வாழ்த்திப் பாடுதல் செய்தென்பார், காடுறை கடவுட்கடன் கழிப்பிய என்றார். காட்டகத்தே ஆரஞர் செய்யும் தெய்வங்கள் உள என்பதை,

இடைநெறிக் கிடந்த இயவுகொள் மருங்கின்
புடைநெறிப் போயோர் பொய்கையிற் சென்று
நீர்நசை வேட்கையின் நெடுந்துறை நிற்பக்
கானுறை தெய்வம் காதலிற் சென்று  (சிலப்-காடு-168-71)

என வரும் சிலப்பதிகாரத்தானும் கடவுள் ஓங்கிய காடேசு கவலை என்னும் மலைபடு கடாத்தானும் உணர்க.

காடுறை கடவுட்குப் பலிக் கடனீதலை,

கோட்டமிலென் குலமைந்தன் திண்ணன் எங்கள்
குலத்தலைமை யான்கொடுப்பக் கொண்டு பூண்டு
பூட்டுறுவெஞ் சிலைவேடர் தம்மைக் காக்கும்
பொருப்புரிமை புகுகின்றான் அவனுக் கென்றும்
வேட்டைவினை எனக்குமே லாக வாய்த்து
வேறுபுலங் கவர்வென்றி மேவு மாறு
காட்டிலுறை தெய்வங்கள் விரும்பி யுண்ணக்
காடுபலி யூட்டென்றான் கவலை யில்லான்  (பெரியபு-கண்ணப்-50)

என்னுந் திருத்தொண்டர் வரலாற்றானும் உணர்க. கடன் கழித்தல் - தடாரியை வாசித்தல் என்பர் ஆசிரியர் நச்சினார்க்கினியர். பாணி-தாளம். களிறு வழங்கு அதர் என்றது, ஆற்றின் தீமை கூறியவாறு. அதர்-வழி. இலையில் மரா அத்த வலைவலந்தன்ன மென்னிழல் எனக் கூட்டுக. எவ்வந் தாங்கி என்றதனை, ஞாயிற்றின் வெம்மையாலுற்ற வருத்தத்தைத் தாங்குதலானே இலையிலவாய் நின்ற மராம் என ஏதுவாக்கினும் அமையும். எவ்வம்-வருத்தம்.

53-59 : பீடுகெழு .............. பயனே

பொருள் : பீடு கெழு திருவிற் பெரும் பெயர் - பெருமை பொருந்தின செல்வத்தையும் பெரிய பெயர்களையும், நோன்தாள்-வலிய முயற்சியினையும். முரசுமுழங்கு தானை-வெற்றி முரசு முழங்கும் படையினையுமுடைய, மூவரும் கூடி அரசவை இருந்த தோற்றம் போல-சேர சோழ பாண்டியர்கள் தம்மிற் பகைமை நீங்கிச் சேர்ந்து திருவோலக்க மண்டபத்தே அரசு வீற்றிருக்கக் கண்டாலொத்த தோற்றரவுபோல, பாடல் பற்றிய பயனுடை எழால் - பல்வேறு வகைப் பாடல்களையும் பற்றித் தோன்றும் இசைப்பயனையுடைய யாழைத் தன்னிடத்தே உடைய, கோடியர் தலைவ-கூத்தர்கட்குத் தலைவனே, கொண்டது அறிந-பிறர் மனத்துக் கொண்டதனைக் குறிப்பால் அறிய வல்லாய், அறியாமையின் நெறி திரிந்து ஓராஅது - வழியறியாமையாலே இவ்வழியைத் தப்பி வேறொரு வழியிற் போகாதே, ஆற்றெதிர்ப்படுதலும் நோற்றதன் பயனே-இவ்வழிக்கண் என்னைக் காண்டலும் நீ முற்பிறப்பிற் செய்த நல்வினைப் பயன்காண்;

கருத்துரை : பெருமை மிக்க செல்வத்தையும் புகழையும் வலிய முயற்சியினையும் முரசு முழங்கும் பெரும்படையினையுமுடைய சேர சோழ பாண்டியர் என்னும் மூன்று முடிமன்னரும் ஒருங்கே அரசு வீற்றிருந்தால் தோன்றும் பெருஞ் சிறப்பை ஒத்த சிறப்பினையுடைய பாடற்பயனைத் தன்பாற் கொண்ட யாழினையுடைய கூத்தர்கட்கெல்லாம் தலைவனாகிய கூத்தனே! பிறர் உளக் கருத்தைக் குறிப்பால் அறிய வல்லோனே நீ வழியறியாமையானே வேறு வழிபற்றிப் போகாமல் இவ்வழியே வந்து என்னை இவ்வழியிடத்தே காண்டலும் நீ முற்பிறப்பிற் செய்த நல்வினையின் பயனே காண் என்பதாம்.

அகலவுரை : பீடு-பெருமை. ஏறுபோற் பீடுநடை (59) என்னும் குறட்பகுதியானும் பீடுகெழு சிறப்பிற் பெரியோர் (இந்திரவிழ:75) என்னும் சிலப்பதிகாரப் பகுதியானும் அஃதிப் பொருட்டாதல் அறிக. பீடுகெழு திரு என்றது, செங்கோன்மையிற் பிறழாது நின் றீட்டிய பெருமையுடைய பொருள் என்றவாறு. பெரும் பெயர் உலகறிந்த புகழ். தாள்-முயற்சி. மூவர் என்னும் தொகைக் குறிப்புச் சொல் சேர சோழ பாண்டியரைக் குறித்தலை, வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு (தொல்-செய்-79) என்பதனானும் உணர்க. மூவரும் கூடி அரசவை இருந்தகாலை உண்டாகும் காட்சி இன்பம் யாழின் எழும் பண்ணின்பத்திற்கு உவமையாகக் கொள்க.

இனி ஆசிரியர் நச்சினார்க்கினியர் தோற்றம்போல என்னும் (54 ஆம் அடிக்கட் கிடந்த) இதனை (129 ஆம் அடிக்கட் கிடந்த) இன்மை தீர வந்தனன் என்பதனோடு இணைப்பர். மேலும் இனி அரசவை இருந்த தோற்றம் போல வலிவும் மெலிவும் சமனுமாகப் பாடுதலைப் பற்றியவென்று பாட்டின் மேலேற்றிப் பொருள் கூறின், குலமும் செல்வமும் வீரமும் முதலியவற்றால் தம்மில் ஒத்தாரை உவமித்தலின், அவர்க்கும் வலிவும் மெலிவும் சமனும் என்னும் குணங்கள் எய்துமாகலின், அங்ஙனம் கூறல் பொருந்தாமை உணர்க; அன்றியும் பயனே ஈண்டு உவமை என்றுணர்க என்றும், இனிப் பாட்டு நிருத்த கீத வாச்சியத்தை யுடைமையின் அரசரோடுவ மித்தார் என்பாரும் உளர் என்றும் கூறிப்போந்தார். ஈண்டு மூவரும் கூடியிருந்த காட்சிச் சிறப்பு, இசைச் சிறப்பிற்கு உவமை என்னுந் துணையே பொதுத்தன்மை கொள்ளற்பாற்று. இக்கருத்தான் அன்றே தொல்காப்பியத்துள் உவமவியலில் பேராசிரியர்,

சிறப்பே நலனே காதல் வலியோ
டந்நாற் பண்பு நிலைக்கள னென்ப  (தொல்-உவம-4)

என்னும் நூற்பாவிற்கு முரசு முழங்கு .......... அறிந என்னும் இப்பகுதியையே எடுத்துக் காட்டி இது சிறப்பினாற் பெற்ற உவமமாகலின் சிறப்பு நிலைக்களனாகப் பிறந்ததென ஓதிப் போந்ததூஉம் என்க. இப்பொருநன், போர்க்களம் பாடுவோன் ஆதலானும் கூத்தரில் இவனிற் சிறந்த கூத்தர் இன்மையானும் கோடியர் தலைவ என்றார். பொருநரும் ஏர்க்களம் பாடுநரும், போர்க்களம் பாடுநரும், பரணி பாடுநரும் எனப் பலராம் (தொல்.புறத்திணை. 36) என்ப.

கூறாமை நோக்கிக் குறிப்புறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக் கணி              (குறள்-701)

என்ப வாகலின், கொண்டதறிந எனப் புகழ்ந்தான் : அரசவையிற் பயில்வார்க்குக் குறிப்பறிதல் இன்றியமையாதாகலின். ஒருவற்குப் பெறற்கருஞ் செல்வம் நல்வினை கடைக்கூட்டிய வழியன்றி எய்துதலில்லை யாகலின். ஆற்றெதிர் தன்னை எதிர்ப்பட்டமை நீ முற்பிறப்பிற் செய்த நல்வினைப் பயன் என்பான், ஆற்றெதிர்ப் படுதலும் நோற்றதன் பயனே என்றான். இனி 1-முதல் 59ஆம் அடிகாறும் அகன்று கிடந்த பொருளை அணுகிய நிலையிற் கொண்டு கூட்டுமாறு பேரூர்ச் சாறுகழி வழிநாள் சோறு நசையுறாது வேறு புலம் முன்னிய பொருந, பத்தரினையும் பச்சையினையும், போர்வையினையும், ஆணியினையும், வாயினையும், மருப்பினையும், திவவினையும், நரம்பினையும், காட்சியினையும் உடைய பாலை யாழினை, வாரியும் வடித்தும் உந்தியும் உறழ்ந்தும் நன்மொழி நீரொடு சிதறிக் கூந்தல் முதலியவற்றையுடைய பாடினி பாடின பாணிக் கேற்ப அல்கிக் கடவுட்கடன் கழித்த பின்றை தலைவ அறிந ஓராஅது எதிர்ப்படுதலும் நோற்றதன் பயனே என்பதாம்.

இனி, 60-முதல் 129-வரை ஒரு தொடர். இதன்கண்: பரிசில் பெற்று வந்த பொருநன் தான் கரிகால் வளவனைச் சென்று கண்டமையும், கரிகால் வளவன் தன்னை முகமன் கூறி வரவேற்றுச் செய்த சிறப்பும், அவ்வள்ளலின் அரண்மனைக்கண் தான் நுகர்ந்த இன்பமும், தனக்கு அவ்வள்ளல் பரிசில் நல்கி விடுத்த சிறப்பும், பிறவும் ஆற்றெதிர்ப்பட்ட பொருநனுக்குக் கூறுகின்றனன்.

60-63 : போற்றி .................... ஏழின் கிழவ

பொருள் : போற்றிக் கேண்மதி புகழ் மேம்படுந - யான் கூறுகின்றவற்றை விரும்பிக் கேட்பாயாக புறத்தார் புகழை அரசவைகளிலே மேம்படுத்த வல்லோய், ஆடு பசி உழந்த நின் இரும் பேரொக்கலொடு நீடு பசி ஓரால் வேண்டின் - அடுகின்ற பசியாலே வருந்தின நின்னுடைய கரிய பெரிய சுற்றத்தோடே தொன்று தொட்டு வந்த பசி நின்னைக் கைவிடுதல் விரும்புவையாயின், நீடுஇன்று எழுமதி வாழி ஏழின் கிழவ-கால நீட்டித்தலின்றி எழுந்திருப்பாயாக நீ வாழ்வாயாக குரல் துத்தம் கைக்கிளை உழை இளி விளரி தாரம் என்னும் நரம்பு ஏழின் கண்ணும் உரிமை உடையோய்;

கருத்துரை : யான் கூறுவதனை விரும்பிக் கேட்கக் கடவாய்! புறத்தார் புகழை அரசவைகளிலே மேம்படுத்தவல்லோய்! அடுகின்ற பசியாலே வருந்தின நினது சுற்றத்தோடே தொன்று தொட்டு வந்த பசி நின்னைக் கைவிடுதல் வேண்டின் ஈண்டுக் காலந்தாழ்த்திராதே முன்னே புறப்படுதி; பண் ஏழிற்கும் உரிமையுடையோய்! நீ நெடிது வாழ்வாயாக என்பதாம்.

அகலவுரை : யான் கூறுவதனைக் கேட்பின் நின் நல்குரவொழிந்து இன்புறுதல் உறுதியாகலின், கூர்ந்து கேள் என்பான் போற்றிக்கேண்மதி என்றான். மதி: முன்னிலைக்கண் வரும் அசைச்சொல். மியாயிக மோமதி இகும் சின் என்னும், ஆவயின் ஆறும் முன்னிலை யசைச்சொல் (தொல்.சொல்-இடை-26) என்பது தொல்காப்பியச் சூத்திரம்; புகழ் மேம்படுத்தலாவது, ஒருவனது புகழை இசைப்பாட்டின்கணமைத்து யாண்டும் பாடி உலகறியச் செய்தல். படுத்தந எனற்பாலது படுந எனத் தன்வினையாய் நின்றது. அடுபசி-ஆடு பசி என முதனீண்டது. அடுதல் - கொல்லுதல். என்னை?

குடிப்பிறப் பழிக்கும் விழுப்பங் கொல்லும்
பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம்
நாணணி களையு மாணெழில் சிதைக்கும்
பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்
பசிப்பிணி என்னும் பாவி  (மணி-பாத்திரம் பெற் - 76-80)

என்பவாகலின்,

நீடுபசி என்றது, நெடிது காலமாக நிலைநின்று வருத்தா நின்ற பசிப்பிணி என்றவாறு. ஒரால் - ஒருவுதல், விட்டொழிதல்; நீடுபசி ஒராஅல் என்றது, இனி என்றும் நின்னை வருத்தாமல் என்னும் பொருளை யாப்புறுத்தி நின்றது. ஏழ் என்னும் தொகைக் குறிப்புச்சொல் ஈண்டு ஏழிசையைக் குறிப்பானுணர்த்திற்று. கிழவன்-உரிமையுடையோன். கிழவ:விளி. நீடு இன்று-காலம் நீட்டித்தலின்றி: இன்றி என்னும் வினையெஞ்சிகரம் செய்யுளில் இன்றென உகரமாய் வந்தது. எழுமதி என்றதன்கண், மதி : முன்னிலையசை. எழுதியாயின் சிறந்த பரிசில் பெற்று இன்ப வாழ்வெய்துதல் உறுதி என்பான், வாழி என வாழ்த்துவானாயினன். என்னை? புதிதாக நல்வாழ்வெய்துவாரைச் சான்றோர் வாழ்த்துதல் மரபாகலின்.  இனி, பொருநன் தான் பரிசில் பெற்ற வரலாறு கூறுகின்றான்.

64-73 : பழுமரம் ............... அளவையின்

பொருள் : பழுமரம் உள்ளிய பறவையின் - பழுத்த மரத்தை நினைத்துச் செல்கின்ற புள்ளினைப்போல, யானும் அவன் இழும் என் சும்மை இடனுடை வரைப்பின் நசையுநர்த் தடையா நன்பெரு வாயில் இசையேன் புக்கு-பரிசில் பெற்று வருகின்ற யானும் முன்னர் அவனுடைய இழுமென்றெழும் ஓசையினையுடைய அகலமுடைத்தாகிய மதிலில் நச்சி வந்தார்க்குத் தடையில்லாத நன்றாகிய பெரிய கோபுர வாயிலின் கண்ணே வாயிலோனுக்குக் கூறாமற் புகுந்து, என் இடும்பை தீர-என்னுடைய நல்குரவு தீர்தல் காரணமாக, எய்த்த மெய்யேன் எய்யேனாகி - முன்பு இளைத்த உடம்பையுடைய யான் அவ்வாயிற்குள்ளே சென்ற உவகையாலே பின்பு இளைப்புத் தீர்ந்து, பைத்த பாம்பின் துத்தி ஏய்ப்பக் கைக்கசடு இருந்த என் கண் அகல் தடாரி -படம் விரித்த பாம்பினது பொறியை ஒப்பக் கையினது வடுப்பட்டுக் கிடந்த எனது கண்ணகன்ற உடுக்கையில் தோற்றுவித்த, இரு சீர்ப்பாணிக்கு ஏற்ப-இரட்டைத் தாளத்திற்குப் பொருந்த, விரிகதிர் வெள்ளி முளைத்த நள்ளிருள் விடியல் - விரிகின்ற ஒளிக் கதிர்களை யுடைய வெள்ளி எழுந்த செறிந்த இருளையுடைய விடியற்காலத்தே ஒன்று யான் பெட்டா அளவையின்-ஒரு பாட்டினை யான் பேணிப்பாடுதற்கு முன்னே;

கருத்துரை : பழுத்த மரத்தினை நினைத்துச் செல்லும் பறவைபோல யானும் முன்னர் அவனுடைய இழுமென்னும் ஓசையறாத அகன்ற மதிலின் கண்ணதாகிய விரும்பி வந்தோர்க்குத் தடையேதுமில்லாத பெரிய கோபுரவாயிலின் கண்ணே என் நல்குரவு தீர்தல் காரணமாக வாயிலோனுக்கும் அறிவியாமல் புகுந்தேனாகப் புக்க உவகையால் முன்னர் வறுமையான் இளைத்திருந்த என்னுடல் மகிழ்ச்சியானே தளிர்த்திடப் பாம்பின் படத்தின் கண்ணுள்ள பொறிபோன்று கைவடுப்பட்டுக் கிடந்த எனது கண்ணகன்ற உடுக்கையில் தோற்றுவித்த இரட்டைத்தாளத்திற்கு ஏற்ப வெள்ளி எழா நின்ற இருள் செறிந்த விடியற்காலத்தே ஒரு பாட்டினை யான் பேணிப் பாடுதற்கு முன்னர் என்பதாம்.

அகலவுரை : பழுமரம் : வினைத்தொகை; பழுத்த மரம் என ஈண்டு இறந்த காலப் பொருட்டாய் நின்றது; தோய்தயிர் என்றாற் போன்று. பழுமரம்-புரவலர்க்கும், பறவை பரிசிலர்க்கும் உவமை. பயன் மரம் உள்ளூர்ப் பழுத்தற்றாற் செல்வம், நயனுடை யான்கட் படின் (குறள் - 216) என வள்ளுவனாரும் வண்மையுடையோரைப் பழுமரத்தோடுவமித்தல் காண்க. பழுமரந் தேரும் பறவை போல (20) எனப் பெரும்பாணாற்றுப்படையினும், பழந்தேர் வாழ்க்கைப் பறவைபோல (576) என மதுரைக் காஞ்சியினும், பழுமரத் தீண்டிய பறவையின் எழும் (மணி-14-24-6) என மணிமேகலையினும் பிறரும் கூறுதல் உணர்க. உள்ளுதல் நினைவு கூர்தல் யானும் என்ற வும்மை. நீயிரேயன்றி யானும் என்றும், இப்போது பெரும் பரிசில் பெற்று வருகின்ற யானும் என்றும் இருவகைப் பொருளும் பயந்து நிற்றல் உணர்க.

அவன் என்றது, உலகறிந்த பெரும் புகழாளனாகிய அக் கண்ணார் கண்ணிக் கரிகால் வளவனுடைய என்றவாறு. இழும்:ஒலிக் குறிப்பு. சும்மை - ஒலி. அரண்மனைக்கண் எப்பொழுதும் இசைக்கருவிகளின் ஒலியும் ஆடல் பாடல்களும் நிகழ்தலுண்மையின் இழுமென்னொலியுடையதாயிற்று. வரைப்பு - மதில். இடன் - அகலம், மதிற்குரிய அமைதி நான்கனுள் ஒன்றாகிய அகலம் கூறியமையான் இனஞ்செப்பி உயர்வு அகலம் திண்மை அருமை என்னும் நான்கும் உடைய மதில் என்க; என்னை?

உயர்வகலந் திண்மை அருமையிந் நான்கின்
அமைவரண் என்றுரைக்கும் நூல்  (குறள் - 743) என்பவாகலின்,

நசையுநர் - வேட்கையுற்றோர், தடையா-தடையில்லாத அஃதாவது: பொருநர்க் காயினும் புலவர்க் காயினும் அருமறை நாவின் அந்தணர்க்காயினும், கடவுண் மால்வரை கண்விடுத் தன்ன, அடையாவாயில் (சிறுபாண்-203-206) என்றவாறு. நூலோர் ஓதிய இலக்கணங்கள் நிறைந்த பெருமையுடைய வாயில் என்பான் நற்பெருவாயில் என்றான். அரண்மனையிற் புகுவோர் காவலனுக்குக் கூறி அவன் உடன்பாடு பெற்றுப் புகுதலே முறைமையாகவும் எனது நல்குரவிடும்பை தீர்தல் கருதி எங்ஙனமாயினும் அவ்வள்ளற் பெருமானைக் காண்குவல் என்னும் மேற்கோளோடே வாயிலோனுக்கு அறிவியாமலே புகுந்தேன் என்பான் இசையேன் புக்கு என்றான். என்னை?

நீரினும் நுண்ணிது நெய்யென்பர் நெய்யினும்
யாரும் அறிவர் புகைநுட்பம் - தேரின்
இரப்பிடும்பை யாளன் புகுமே புகையும்
புகற்கரிய பூழை நுழைந்து    (நாலடி-282)

என்பவாகலின், எய்த்த மெய்-இளைத்த வுடல், இனி அவ்வள்ளலை எவ்வாற்றானும் காண்டல் கூடும் என்னும் நம்பிக்கையால் புத்துயிர்பெற்று உடல் தளிர்க்கப்பெற்றென்பான், எய்யே னாகி என்றான். பைத்த - படம் விரித்த : பெயரெச்சம். துத்தி - பாம்பினது படத்தின்கண் அமைந்த கவர்த்த கருங்கோடு; இஃது உடுக்கையின்கட் கைவடுவழுந்திய இடத்திற்கு உவமை என்க. கண்-உடுக்கையின் ஒலி யெழுமிடம். உடுக்கையின் இடை சிறுத்து இருகண்ணும் அகன்றிருத்தலால், கண்ணகன் றடாரி என்றார். துடியின் இடக்கண் அனையம் யாம் ஊரற்கதனால் வலக்கண் அனையார்க் குரை (நாலடி-388) என்பதனானும் உடுக்கையின் பக்கத்தைக் கண் என்னும் வழக்குண்மை யறிக. தடாரி - உடுக்கை.

இருசீர்ப்பாணி-இரட்டைத்தாளம்; தாளம் சச்சபுட முதலான பஞ்சதாளமும் அரைமாத்திரையுடைய ஏகதாளமுதலாகப் பதினாறு மாத்திரையுடைய பார்வதிலோசனமீறாகச் சொன்ன நாற்பத்தொரு தாளமும் ஆறன் மட்டம் எட்டன் மட்டம் என்பனவும் தாளவொரியல் தனிநிலை ஒரியல் என்பனவும் ஒன்றன்பாணி முதலாக எண் கூத்துப் பாணி இறுதியாகக் கிடந்த பதினொரு பாணி விகற்பங்களும் முதனடைவாரம் முதலாயினவும் (சிலப் அரங்கேற்-16-உரை) என்பர் சிலப்பதிகார அரும்பத உரையாசிரியர். பொருநர் விடியற் காலத்தே சென்று தடாரிகொட்டிப் பாடுதலும் வண்மையாளர் அவருக்குப் பரிசில் நல்குதலும் பண்டைக்கால வழக்கம். இதனை,

வெள்ளி முளைத்த விடியல் வயல்யாமை
அள்ளகட் டன்ன அரிக்கிணை - வள்ளியோன்
முன்கடை தட்டிப் பகடுவாழ் கென்னாமுன்
என்கடை நீங்கிற் றிடர்  (புறப்பொருள் வெண்பா - 206)

என்பதனானும் அறிக. வானமீன்களுள் வெள்ளி மிகுந்த ஒளியுடைத்தாகலின் விரிகதிர் வெள்ளி என்றார். விளக்குறு வெள்ளி முளைத்துமுன் றோன்ற (பெருங்கதை-1. 53: 81) என்றார் பிறரும். ஒன்று யான் என்னும் சொற்கள் புணருங்கால் ஒன்றியான் எனக் குற்றுகரம் இகரமாயிற்று. நள்ளிருள் - செறிந்த இருள். நளியென் கிளவி செறிவு மாகும் (உரியியல்-25) என்பது தொல்காப்பியம். பெட்பு-பேணுதல். பிணையும் பேணும் பெட்பின் பொருள (தொல்.உரி-40) என்பர் தொல்காப்பியனார். இனி, கரிகால் வளவன் தன்னைப் போற்றிய முறையைப் புகல்கின்றான்.

73-78 : ஒன்றிய ............ குளிர்கொளீஇ

பொருள் : ஒன்றிய கேளிர்போலக் கேள் கொள வேண்டி -முன்பே தன்னொடு பொருந்திய நட்டாரைப்போல என்னுடன் உறவுகொள்ளுதலை விரும்பி, வேளாண் வாயில் வேட்பக் கூறி-தான் வேளாண்மை செய்தற்கு வாயிலாக இரப்பினையே யான் எப்பொழுதும் விரும்புமாறு முகமன் மொழிந்து, கண்ணிற் காண நண்ணுவழி இரீஇ - தன் கண்ணிலே காணும்படி தனக்கு அண்ணிதாய இடத்திலே என்னை இருத்தி, பருகு அன்ன அருகா நோக்கமொடு - என்னைக் கண்ணாற் பருகுந் தன்மை ஒத்த கெடாத பார்வையாலே, உருகுபவைபோல் என்பு குளிர் கொளீஇ-உருகும் வெண்ணெய் முதலியனபோன்று என்புநெகிழும்படி குளிர்ச்சியைக் கொளுத்தி;

கருத்துரை : முன்னரே தன்னோடு நட்டாரைப் போன்று என்னுடன் கேண்மை கொள்ளுதலை விரும்பியவனாய், யான் எப்பொழுதும் இரத்தலையே பெரிதும் விரும்புமாறு இனிய முகமன் மொழிகள் பல பேசித் தன் கண்ணிற் காணத்தகும் அணித்தாகிய இடத்தே என்னை இருக்கச்செய்து என்னைத் தன் கண்ணாற் பருகுவானைப் போன்று அருட்பார்வையாலே நன்கு நோக்கி அத்தகைய குளிர்ந்த நோக்கத்தாலே என் என்பு வெண்ணெய் முதலியன போன்று உருகும்படி செய்து என்பதாம்..

அகலவுரை : ஒன்றிய கேளிர் - உணர்ச்சி ஒன்றுபட்ட நண்பர். என்னை? கெழுதகை நண்பிற்குக் காரணம் உணர்ச்சி ஒன்றுபடுதலே ஆகலின்.

புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதா
னட்பாம் கிழமை தரும்  (குறள்-785)

என்றார் திருவள்ளுவனாரும்.

செல்வுழிக் கண்ணொருநாட் காணினும் சான்றவர்
தொல்வழிக் கேண்மையின் தோன்றப் புரிந்தியாப்பர்
நல்வரை நாட சிலநா ளடிப்படிற்
கல்வரையு முண்டா நெறி  (நாலடி - 154)

என்பவாகலின், முதன்முதலாகக் கண்டானேனும் பலநாளும் பழகிய தன் நட்டாரைக் கண்டாற்போன்று கேண்மை கொள்ளும் பேரருளுடைய மேன்மகன் கரிகால் வளவன் என்பான், ஒன்றிய கேளிர் போலக் கேள்கொள வேண்டி யென்றான். கேள்கொள வேண்டலாவது, இரவலரைக் காண்டலும் தன் அகத்தின்கண் எழுந்த உவகை முகத்தின்கண் தோன்ற அமர்ந்தினிது நோக்குதல். என்னை?

முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்  (குறள் - 93)

என்பவாகலானும் விருந்தினரைக் கண்டபொழுதே பிணித்துக் கோடற் சிறப்புடைமையானும் அவ்விருப்பமுண்மையை முன்னர்க் கூறினான். வேளாண் - உபகாரம். வேளாண்மை செய்தற்குக் காரணம் இரப்போர் உண்மையாகலின் இரவினை வாயில் என்றார். என்னை?

இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்
மரப்பாவை சென்றுவந் தற்று  (குறள் - 1058)

என்னும் திருக்குறளால் தேவரும் இவ்வுலகில் வேளாண்மை செய்து புகழும் புண்ணியமும் ஈட்டுதற்கு இரவுண்மையே வாயில் என்றாராகலின், இனி, ஈவாரும் கொள்வாரும் இல்லாத வானத்து வாழ்வாரே வன்கணவர் என்னும் பரிமேலழகர் உரையானும் அறிக. இனி, கரத்தல் கனவினும் தேற்றாதார் மாட்டு இரத்தலும் விரும்பத்தக்கதொரு செயலே ஆதல்பற்றி, யான் மேலும் இரத்தல் தொழிலை விரும்பி மேற்கொள்ளும்படி என்னைப் போற்றினன் என்பான் வேளாண் வாயில் வேட்பக்கூறி என்றான்.

இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
கனவிலுந் தேற்றாதார் மாட்டு  (குறள் - 1054)

என்றும்,

இகழ்ந் தெள்ளா தீவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்
உள்ளு ளுவப்ப துடைத்து  (குறள் - 1057)

என்றும்,

இருநில மருங்கிற் பொருநரைப் பெறாஅச்
செருவெங் காதலிற் றிருமா வளவன்
வாளுங் குடையும் மயிர்க்கண் முரசும்
நாளொடு பெயர்த்து நண்ணார்ப் பெறுகவிம்
மண்ணக மருங்கினென் வலிகெழு தோளெனப்
புண்ணியத் திசைமுகம் போகிய அந்நாள்
அசைவி லூக்கத்து நசைபிறக் கொழிய
பகைவிலக் கியதிப் பயங்கெழு மலையென
இமையவ ருறையும் சிமையப் பிடர்த்தலைக்
கொடுவரி ஒற்றிக் கொள்கையிற் பெயர்வோன்  (சிலப்-5: 89-98)

எனச் சான்றோராற் புகழப்படும் தன் பெருந்தகைமையையும் இரவலனாகிய என் சிறுமையையும் தூக்காது தன்பால் அணுக வைத்தென்பான், கண்ணிற் காண நண்ணுவழி இரீஇ என்றான். இரீஇ - இருக்கச் செய்து, நீர் வேட்கை மிக்கான் ஒருவன் நீரினைப் பெற்றவிடத்து ஆராவேட்கை யோடே அந்நீரினை நுகருமாப் போன்று விருந்து போற்றுதலின்கண் வேணவாவுடையனாய் என்னை ஆராவிருப்பத்தோடு கூர்ந்து நோக்கினான் என்பான், பருகு: அன்ன அருகா நோக்கமோடு உருகுபவைபோல என்புகுளிர் கொளீஇ என்றான். இங்ஙனம் நோக்கும் அருள் நோக்கிற் கிலக்கானார், மகிழ்ந்துள்ளு ளுவத்தல் இயல்பாகலின், என்பு குளிர் கொளீஇ என அம் மகிழ்ச்சியினை அதன் காரியத்தின் மேலேற்றிக் கூறினான். இங்ஙனமே பருகுவன்ன காதலுள்ளமொடு (அகநா-399:4) பருகு காதலிற் பாடி யாடினார்  (சீவக-1765) பருகுவன்ன நோக்கமொடு (பெருங்-3. 7:80), பருகுவனன்ன ஆர்வத்தனாகி (நன்-40) எனப் பிறசான்றோரும் கூறுதல் காண்க. இதனால் கரிகால்வளவனின் காதன்மிகுதி கூறப்பட்டது.

அருகாநோக்கம் - கெடாத பார்வை. இதுகாறும் அவ்வள்ளலைக் கண்டமையும், அவன் கண்டுழிச் செய்தமையும் கூறி, இனி, அவ் வள்ளல் ஆடை முதலியவற்றை ஈந்து போற்றிய செயலை இயம்புகின்றான்.

ஆடைச்சிறப்பு

79-83 : ஈரும்பேனும் ............... நல்கி

பொருள் : ஈரும்பேனும் இருந்து இறைகூடி - ஈரும்பேனும் கூடி இருந்து அரசாண்டு, வேரொடு நனைந்து வேற்றிழை நுழைந்த துன்னல் சிதார் துவர நீக்கி - வேர்வையாலே நனைந்து பிறசரடுகள் உள்ளே ஓடுதற்குக் காரணமாகிய தைத்தற்றொழிலை யுடையனவாகிய சீரையை என்னிடத்தினின்றும் முழுதும் போக்கி, நோக்கு நுழைகல்லா நுண்மைய பூக் கனிந்து அரவு உரியன்ன அறுவை நல்கி - கண்ணிற் பார்வை இஃது இழை போன வழியென்று குறித்துப் பார்க்கவியலாத நுண்மையை உடையவாய்ப் பூத்தொழில் முற்றுப்பெற்ற மென்மையாற் பாம்பினது தோலை யொத்த துகிலை நல்கி;

கருத்துரை : ஈரும் பேனும் மிக்கனவும், வேர்ப்பினால் நனைந்தனவும் வேற்று நூலால் தைக்கப்பட்டனவும் ஆகிய என் கந்தையாடைகளை முழுதும் அகற்றி, இழை சென்றவழி தெரிதலில்லாத நுண்மையை யுடையனவும் பூத்தொழில் முற்றுப் பெற்றனவும் பாம்பின் தோலை ஒத்தனவும் ஆகிய சிறந்த ஆடைகளை அருளி உடுக்குமாறு செய்து என்பதாம்.

அகலவுரை : இரவலனின் நல்கூர் நிலையினைப் பிறரறியத் தூற்றுவனவும், செல்வமுடையாரிற் றன்னைப் பெரிதும் வேறுபடுத்திக் காட்டுவனவும் கந்தலாடைகளே ஆதலின், அவற்றைப் போக்கிச் சிறந்த ஆடைகளை உடுக்கச் செய்தவழி இரவலன் தன் கேளிரோடு கேளிராய் நாணமின்றிப் பழக ஏதுவாதலான் இரவலனின் ஏழ்மை உணர்ச்சியை மாற்றப் பண்புடைய வள்ளல்கள் முதன்முதலாக இச் செயலைச் செய்தலைப் பல இலக்கியங்களினும் காணலாம். அவற்றுட் சில வருமாறு :

நீ சில மொழியா அளவை மாசில்
காம்புசொலித் தன்ன அறுவை உடீஇ  (சிறுபா - 235-236)

எனவும்,

அந்நிலை அணுகல் வேண்டி நின்னரைப்
பாசி யன்ன சிதர்வை நீக்கி
ஆவி யன்ன அவிர்நூற் கலிங்கம்
இரும்பேர் ஒக்கலொடு ஒருங்குடன் உடீஇ  (பெரும்பா-467-470)

எனவும்,

உவந்த உள்ளமொடு அமர்ந்தினிது நோக்கி
இழைமருங் கறியா நுழைநூற் கலிங்கம்
எள்ளறு சிறப்பின் வெள்ளரைக் கொளீஇ  (மலைபடு-560-62)

எனவும் வருதல் காண்க.

ஈர்-பேன்முட்டை; குஞ்சுமாம். உடுக்க வியலாதபடி நைந்து போன பழங்கந்தைகளில் ஈரும் பேனும் உண்டாதல் இயல்பு. மிகவும் கந்தல் என்பான், அவையிற்றின் மிகுதி கூறினான். இறை-அரசாட்சி. ஈரும் பேனும் இறைகூடி என்றது, அவையிற்றைப் போக்க வியலாதபடி மிக்கிருத்தற்குக் காரணமான அழுக்குடைய கந்தை என்றவாறு. வேர்-வியர்வை. வேறு இழை என்றது, நிறம் வேறுபட்ட நூல் என்றவாறு. துன்னல்-தையல். சிதாஅர் - பீறற்றுணி. துவர - முற்றாக.

துப்புர வில்லார் துவரத் துறவாமை
உப்பிற்கும் காடிக்குங் கூற்று  (குறள். 1050)

என்புழியும் துவர என்பது அப் பொருட்டாதல் காண்க. இதனைப் பிரித்து நல்கி என்பதனோடு கூட்டுவர் நச்சினார்க்கினியர். நோக்கு - கட்பார்வை, காட்சிப் புலனாகாத நுணுக்கமுடைய ஆடை என்றவாறு. இழை மருங்கறியா நுழைநூற் கலிங்கம், (மலைபடு.561) என்றார் பிறரும். பூக் கனிந்து-பூத் தொழில் நிறையப் பெற்று. அரவுரி - பாம்புரித்த தோல்; இது மென்மைக்கும், நிறத்திற்கும் ஆடைக்குவமை. பாப்புரி யன்ன மீக்கோ டானை (பெருங்-1.42; 244) எனப் பிறரும் கூறுதல் காண்க. அறுவை-ஆடை. அறுக்கப்படுவது என்பது பொருள். கண்ணுழை கல்லா நுண்ணூற் கைவினை வண்ண அறுவையர் (மணி 28; 54-54) என்றார் மணிமேகலையினும். இனி, மகளிர் கள்ளுணத் தந் துபசரித்தமை கூறுகின்றான்.

84-89 : மழை ....................... நின்றகாலை

பொருள் : மழையென மருளும் - கூந்தலின் கருமையால் இவை முகில்களோ என்று கண்டோர் மருளுதற்குக் காரணமான கூந்தலையுடையாரும், மகிழ் செய் மாடத்து - மகிழ்ச்சியை விளைவிக்கும் மேனிலை மாடத்துறைவாருமாகிய, இழையணி வனப்பின் இன் நகை மகளிர்-இழைகளை அணிந்த இனிய நகையினையுடைய ஏவற் சிலதியராகிய மகளிர்கள், போக்கு இல் பொலங்கலம் நிறைய - கள்ளை ஓட்டற்ற பொன்னாற்செய்த வட்டில் நிறையும்படி, பல்கால் வாக்குபு தரத்தர-பலகாலும் வார்த்துத் தருந்தோறும் தருந்தோறும், வருத்தம் வீட ஆரவுண்டு பேரஞர் போக்கி-வழிபோன வருத்தம் போம்படி நிறையப் பருகிக் கள்ளுண்ணப் பெறுகிலேமே என முன்னர் நெஞ்சிற் கிடந்த பெரிய வருத்தத்தையும் போக்கி, செருக்கோடு நின்ற காலை - மகிழ்ச்சியுடனே யான் நின்ற அந்திப்பொழுதிலே;

கருத்துரை : கூந்தலின் கருமையால் இவை முகிலோ எனக் கண்டோர் மருளுதற்குக் காரணமான கூந்தலையுடையாரும், மகிழ்ச்சி தரும் மேனிலைமாடத்தே உறைவாரும், இழையணிந்தவர்களும், இனிய முறுவல் பூப்பவரும் ஆகிய ஏவன் மகளிர் குற்றமற்ற பொன்னாற் செய்த வட்டில் நிறையும்படி கள்ளினைப் பல்காலும் வார்த்துத் தருந்தோறும், வழிநடை வருத்தம் போம்படி நிறையப் பருகி முன்னர்க் கள்ளுண்ணப் பெறுகிலேமே எனக் கிடந்த மனவருத்தமும் போகப் பெற்று யான் இருந்த அந்தப் பொழுதிலே என்பதாம்.

அகலவுரை : மழை - முகில். மழையென என்ற உவமைக்குத் தகுதியாற் கூந்தல் வருவித்துரைக்கப்பட்டது. மேனிலை மாடத்தின் கண் உலாவும் இம் மகளிர் கூந்தலைக் கீழ்நின்று கண்டோர் இவை முகிலோ என மருளும் கூந்தல் என்க. மருள் செய்யும் மகிழ் மழை என எனக் கொண்டுகூட்டி, உண்டார் மயங்குதலைச் செய்யும் மழை யென்னும்படி வார்த்து எனப் பொருள் கூறுவர் நச்சினார்க்கினியர். கலத்தினின்றும் வட்டிலே வாக்கும் கள்ளிற்கு மழை உவமையாதல் யாண்டையதென்க. மழையென மருளும் என்றதற்கு மேகமண்டலம் என மருளுதற்குக் காரணமான மாடம் என்றாருமுளர். மகிழ் என்பதனை நச்சினார்க்கினியர், ஆகுபெயராகக் கொண்டு கள் என்பர். இழை - அணிகலன் ஆடை இரண்டிற்கும் பொதுவாய காரணப் பெயர் ஆகலான், இரண்டானும் ஒப்பனை செய்துகொண்ட மகளிர் என்பார் இழையணி வனப்பின் மகளிர் என்றார். ஏவற் சிலதியராகலின் ஒப்பனைச் சிறப்பை விதந்தோதினார். இம்மகளிர் அரசன்பால் வந்த விருந்தினரை அரசன் கருதியபடி உபசரிக்கும் ஏவன் மகளிர் என்க. உபசரிக்கும் தொழிற்கு இன்றியமையாமைபற்றி இன்னகை மகளிர் என எடுத்தோதினர். எனவே இவர்கள் அன்பாலே முகமலர்ந்து விருந்தினரை உபசரிப்பவர் என்பது குறிப்பாம். விருந்தினரை வரவேற்று உபசரித்து அவர்க்கு மகிழ்ச்சி செய்விக்கும் இடமாதல்பற்றி மகிழ்செய் மாடம் என்றார். மகிழ்-மகிழ்ச்சி. போக்கு-குற்றம். பொலம்-பொன். கலம்-வட்டில். நிறையப் பல்கால் வாக்குபு தரத்தர என்றது, விருந்தோம்பற் சிறப்புரைத்தவாறு. வருத்தம்-வழிநடையானும் பசியானும் உண்டாய துன்பம் என்க. ஆர-நிறைய. கள்ளுண்ணப்பெறாமையால் நெஞ்சிற் கிடந்த ஏக்கம் பெரிதாகலின் அதனைப் பேரஞர் என்றான். செருக்கு - மகிழ்ச்சி.

இலங்கிழை மகளிர் பொலங்கலத் தேந்திய
மணங்கமழ் தேறல் மடுப்ப நாளும்
மகிழ்ந்தினி துறைமதி!  (மதுரைக் - 779.81)

என்றும்,

தண்கமழ் தேறல்
பொன்செய் பொலங்கலத் தேந்தி நாளும்
ஒண்டொடி மகளிர் மடுப்ப மகிழ்சிறந்து  (புறம்-56)

என்றும் பிற சான்றோரும் கூறுதலறிக.

இனி, பொருநன் கரிகாற் பெருவளத்தான்றன் விருந்தோம்பும் மாடத்தே இரவினை இன்புறக் கழித்தமை இயம்புகின்றான்.

இன்றுயில் இன்பம்

89-95 : மற்றவன் ............. மாழாந்தெழுந்து

பொருள் : மற்றவன் திருக்கிளர் கோயில் ஒருசிறைத்தங்கி-பின்னர் அம் மன்னனுடைய செல்வம் விளங்குகின்ற அரண்மனையினகத்தே ஒரு பக்கத்தே கிடந்து, தவம் செய் மாக்கள் தம் உடம்பு இடா அது அதன் பயம் எய்திய அளவை மான - மிக்க தவத்தைச் செய்த மக்கள் தம்முடைய தவஞ்செய்த உடம்பைப் போகடாதே இருந்தே அத்தவத்தாற் பெறும் பயனைப் பெற்ற தன்மையை ஒப்ப, ஆறுசெல் வருத்தம் அகலநீக்கி-வழிபோன வருத்தத்தை என்னிடத்துச் சிறிதும் நில்லாமல் போக்கி, அனந்தர் நடுக்கம் அல்லது யாவதும் மனங் கவல்பு இன்றி - கள்ளின் செருக்காலுண்டான மெய்ந்நடுக்கமல்லது வேறு மனக்கவர்ச்சி ஒரு சிறிதும் இல்லாமல், மாழாந்து எழுந்து - துயின்று பின்னர் உணர்ந்து எழுந்து;

கருத்துரை : பின்னர் அக் கரிகாற் பெருவளத்தானுடைய செல்வம் திகழும் அரண்மனையின்கண் துயிலுதற்கேற்ற ஒருபுறத்தே கிடந்து, தவம் செய்வோர் தம்முடைய தவஞ்செய்த இம்மையுடம்போடே அத்தவத்தின் பயனைப் பெற்றாற் போன்று, வழிநடந்த வருத்தத்தை என்னிடத்தே நின்றும் துவரப் போக்கிப் பருகிய கள்ளின் களிப்பாலே உண்டாகும் மெய்ந்நடுக்கமே யன்றி மெய்ந்நடுக்கத்திற்குக் காரணமான மனக்கவலை ஒரு சிறிதுமின்றி நன்கு துயில்கொண்டு இரவின் கடையாமத்தே துயிலுணர்ந்து எழுந்து என்பதாம்.

அகலவுரை : அவன் - அவ்வள்ளற் பெருமானாகிய கரிகாற் பெருவளத்தான். அவன் : பண்டறிசுட்டு. கோயில் - அரண்மனை. அரண்மனைக்குரிய செல்வங்கள் அனைத்தானும் நிறைந்து திகழும் அரண்மனை என்பார், திருக்கிளர் கோயில் என்றார். ஆண்டுச் செல்வோர் இன்புற்றுறைதற்குரிய இடங்கள் பற்பலவாகவும் அவற்றுள் ஒன்றிலே இருந்தென்பான் ஒருசிறைத் தங்கி என்றான். துயிலுதற்குரிய அவ்வறைதானும் அதற்கு வேண்டிய எல்லாப் பொருளானும் நிறைந்து ஆண்டுறை வோர்க்குப் பேரின்பம் நல்குதலான், ஆண்டுறையும் இன்பத்தைத் துறக்கவின்பத்தோடு ஒப்பித்தான். ஈண்டுச் செய் நல்வினைக்கு ஆண்டு நுகர்ச்சி கூடுமாயினும், தவம் முதலியன செய்தார் இம்மை நீங்கிச் சென்று நுகரும் துறக்கத்தேயாம். இதன் பொருட்டு ஈண்டு இவ்வின்பம் நுகர்தல் பெற்றேம் என அறியாமையின், இவ்வின்பம் அத்துறக்கவின்பத்தினும் சிறந்த தென்பான், தவம் செய்தார் தம்முடம்போடே நின்று துறக்கவின்பத்தை நுகர்ந்தாற் போலும் என்றான். தன்முயற்சி சிறிதுமின்றி நுகர்ச்சிகள் தனக்கு வேண்டிய வேண்டியாங்குக் கிடைக்கப் பெறுதலின், அங்ஙனம் நல்வினையே இன்பத்தை வலிந்தூட்டும் துறக்கம் உவமையாயிற் றென்க. இங்ஙனமே கம்பநாடரும் மிதிலைவேந்தன் திருக்கிளர் கோயிலில் விருந்தினராய்ச் சென்ற தசரதன் முதலியோரைப் போற்றிய வழி.

இடம்படு புகழ்ச்சனகர் கோனினிது பேணக்
கடம்படு களிற்றரச ராதியிடை கண்டோர்
தடம்படு புயத்தசிறு தம்பியர்கள் காறும்
உடம்பொடு துறக்கநகர் உற்றவரை ஒத்தார்

எனக் கூறுதல் காண்க. கல்வியிற் பெரிய கம்பநாடர் நம் பழைய இலக்கியக் கருவூலமாகிய இப்பாட்டினின்றே இவ்வழகிய உவமையைப் பெற்றுத் தம் காவியத்தையும் அழகுபடுத்தினார் என்னின் அஃது அவர்க்குப் புகழாதலே யன்றிப் பழியாகா தென்க. தவஞ்செய் மாக்கள் என்றதற்கு மக்கள் என்னாது மாக்கள் என்றார், வீடுபேறு குறியாது செல்வத்தைக் குறித்தலின் என நச்சினார்க்கினியர் கூறிய நயமுணர்க வழிநடை வருத்தம் நன்கு துயின்று அமைதிகொள்ளுதலாலே துவரப்போதல் இயல்பாதலால் ஆறு செல்வருத்தம் அகல நீக்கி என்றான். இன்னகை மகளிர் போக்கில் பொலங் கலம்நிறையப் பல்கால் வாக்குபு தரத்தரப் பகற்போதில் உண்ட கள் மயக்கமே யன்றிப் பிறிதோர் மயக்கமில்லை என்றவழி, அக் கள் மயக்கம் கவலை மயக்கம் போலாது பெரிதும் இன்பமே யாதல் குறித்தான். கவல்பு கவலை என்னும் பெயர்ப் பொருட்டு; எச்சமன்று. அனந்தர் - கள் மயக்கம்; களிப்பு. துழந்தடு கள்ளின் றோப்பியுண் டயர்ந்து பழஞ் செருக் கற்ற அனந்தர்ப் பாணியும் (7:71-2) என்றார் மணிமேகலையினும்.

மாழாந்து-மயங்கி என்னும் பொருட்டு; ஈண்டுப் பொறிகள் மயங்குதற்குக் காரணமான துயிலை ஆகுபெயரான் உணர்த்தி நின்றது. எழுந்து-பின்னர் வைகறையாமத்தே துயிலுணர்ந்து எழுந்து என்றவாறு. எழுந்து என்னும் இவ்வெச்சம், 102-கழிப்பிய பின்றை என்னும் வினை கொண்டது. இனி, இங்ஙனம் கரிகாற் பெருவளத்தானைக் கண்ட பொருநன் அவ்வள்ளலைக் காணாத முதல்நாள் தானிருந்த நிலைமையும் கண்ட பின்னர்த் தான் எய்திய நிலைமையும் சீர்தூக்கி வியப்புற்றதனைக் கூறுகின்றான் என்க.

கனவென மருளும் கழிபெரு மாற்றம்

96-102 : மாலை .............. கழிப்பிய பின்றை

பொருள் : மாலை அன்னதோர் புன்மையும் - அவ்வள்ளலைக் காண்டற்கு முன்னாளின் மாலைக்காலத்தே என்னிடத்தில் நின்ற சொல்லிற் கெட்டாத மிடியையும், காலைக்கண்டோர் மருளும் வண்டு சூழ் நிலையும் - அவனைக் கண்ட மற்றைநாட்காலத்தே என்னைக் கண்டோர் நெருநல் வந்தவனல்லன் என்று மருளுதற்குக் காரணமான வண்டுகள் இடையறாது மொய்க்கின்ற புதிய நிலையினையும், கனவென மருண்ட என னெஞ்சு ஏமாப்ப - இது கனவாயிருக்கும் என்று கலங்கிய என்னுடைய நெஞ்சு நனவென்று துணியும்படியும், எண்ணி வல்லஞர் பொத்திய மனம் மகிழ் சிறப்பக் கல்லா இளைஞர் சொல்லிக்காட்ட - வலிய மிடியாலுண்டாகிய வருத்தம் பொதிந்த என் உள்ளம் உள்ளுள்ளே உவக்கும்படியும் தம் தொழிலையன்றி உலகியல் கல்லாத என் பின்னின்ற இளைஞர் எடுத்துக் கூறாநிற்ப, கதுமெனக் கரைந்து - விரைந்து அழையுங்கோள் என வாயிலோர்க்குக் கூறி, வம்மெனக் கூஉய் - யாங்கள் சென்றபின் எம்மைச் சேய்மைக்கண் கண்டபொழுதே வருக! வருக! என அழைத்தமையாலே, அதன் முறை கழிப்பிய பின்றை-யாங்களும் அரசனைக் கண்டுழிச் செய்யக் கடவ முறைகளைச் செய்து முடித்த பின்னர்;

கருத்துரை : யான் அவ்வள்ளலைக் காண்டற்கு முன்னாள் மாலையிலே என்னிடத்தே நின்ற சொல்லவொண்ணாத மிடியையும், அவ்வள்ளலை யான் கண்ட பின்னர்த்தாகிய மறுநாட் காலையிலேயே அம்மிடிமை முழுதும் மாறி இவன் நெருநல் வந்தவனல்லன் எனக் கண்டோர் மருளுதற்குக் காரணமான வண்டுகள் இடையறாது மொய்க்கப்பெற்ற புதிது பொருந்திய செல்வநிலையினையும் கண்டு ஒருகால் இது கனவாக இருக்குமோ என்றெண்ணிக் கலங்கிய என் மனம், இது கனவன்று நனவே எனத் தெளிந்து கொள்ளும்படியும், பண்டு என் நெஞ்சைப் பொதிந்து கொண்டிருந்த இன்மையின் இன்னாமை இன்மையாயொழிய, என் நெஞ்சம் உள்ளுள்ளே உவக்கும்படியும் என் பின்னின்ற இளைஞர் இது கனவல்லாமைக்குரிய ஏதுக்களை எடுத்துக் காட்டா நிற்கும் பொழுதே அவ்வள்ளல் தன் வாயிலோர்க்கு எம்மை விரைந்தழைக்கும் படி கட்டளையிட்டமையாலே அவர் அழைக்க யாங்கள் சென்றேமாக; அங்ஙனம் செல்கின்ற எம்மைச் சேய்மைக்கண்ணே கண்டபொழுதே வருக! வருக! என ஆர்வத்தோடே கூவுதலாலே யாங்களும் போய் அவ்விடத்தே யாங்கள் செய்யக்கடவ முறைமைப்படி செய்து முடித்த பின்னர் என்பதாம்.

அகலவுரை : மாலை என்றது, அவ்வள்ளலைக் காணும் முன்னாள் மாலைக்காலத்தை. அன்னதென்று சுட்டினான் சுட்டிக் காட்டலன்றிச் சொல்லிக் காட்டவியலாத இன்னாமையுடைய தன் நல்குரவு நிலையினை. நல்குரவின் துன்பத்தை வேறு உவமை முதலியவற்றால் கூறொணாது என்பதனை,

இன்மையி னின்னாத தியாதெனின் இன்மையி
னின்மையே இன்னா தது  (குறள் - 1041)

என்றும், அதன் கொடுமையை,

நெருப்பினுள் துஞ்சலு மாகும் நிரப்பினுள்
யாதொன்றுங் கண்பா டரிது  (குறள் - 1048)

என்றும் எழுந்த தமிழ்மறையானும் உணர்க. அன்னது : பண்டறி சுட்டு. இப்பொழுது தன்னிடத்தே அஃதின்மையான் சேய்மைச் சுட்டாற் சுட்டினான் என்க. அதன் வருத்தத்தைத் தான் நிகழ்காலத்தே எய்தி நிற்றலின், சுட்டின அளவானே ஆற்றுப்படுத்தப்படும் பொருநன் உணரும் ஆகலின், சுட்டானே கூறினான் எனினுமாம். புன்மை : வறுமைக்கு ஆகுபெயர் என்க.

ஆண்டுப் பலவாகிய மணப் பொருள்களானே உபசரிக்கப் பட்டமையின் அந் நறுமணத்தை நச்சி, வண்டுகள் சூழாநின்ற செல்வநிலை என்பான், வண்டு சூழ்நிலை என்றான். உளமகிழ்ச்சியால் உடல் தளிர்த்து மகிழ்ச்சிக்குரிய மெய்ப்பாடுகள் தோன்றப் பெற்றமையானும், முன்னாள் ஈரும் பேனும் இருந்திறை கூடி வேரொடு நனைந்து வேற்றிழை நுழைந்த துன்னற் சிதாஅர் இன்றி இப்பொழுது, நோக்கு நுழைகல்லா நுண்மைய பூக்கனிந்து, அரவுரியன்ன அறுவை உடுத்துள்ளமையானும், நெடுநற் கண்டோர் இன்று கண்டக்கால் மருளுதற்குக் காரணமாக மாறுபாடுற்ற புதிய நிலை என்பான், கண்டோர் மருளும் நிலை என்றான் என்க. இனி இத்துணை விரைவிலே தன் மிடிநிலை யகன்று செல்வநிலை வந்துற்றமையைத் தானே அயிர்ப்பானாய், ஒருகால் இந்நிலை நனவுபோற்றோன்றுமொரு கனவுதானோ என்று கருதியவழி, அந்தோ இது தான் கனவாகக் கழியுமேல், அக்கொன்றது போலும் நிரப்பு வந்துறுமே என் செய்கோ, இங்ஙனம் நனவே போன்ற கனவும் உளதாங்கொல் என, அச்சமும் வியப்பும் தோன்றுமாறு தன் நெஞ்சம் கலங்கிய தென்பான் கனவென மருண்ட என் னெஞ்சு என்றான்.

ஏமாப்ப-தெளிய. மகிழ்சிறப்ப-தெளியுந்தோறும் மகிழ்ச்சி பொங்கி எழ. இங்ஙனம் தான் கனவென மருளுதல் கண்டு இது கனவன்று நனவே காண் என என் பின்னின்ற இளைஞர்கள் ஏதுக்களால் விளக்க விளக்க என் நெஞ்சம், கனவன்று நனவே எனத் தெளிந்த தென்றும் இங்ஙனம் தெளியுந்தோறும் மனம் பெரிதும் மகிழ்ச்சியால் நிறைந்த தென்றுங் கூறுவான். மருண்ட நெஞ்சு ஏமாப்ப மனம் மகிழ்சிறப்ப என்றான். இங்ஙனம் மகிழ்சிறத்தற்கு அம்மனம் பண்டு மிடியிருளாற் சூழப்பட்ட தன்றோ என ஏதுக்காட்டுவான் வல்லஞர் பொத்திய மனம் என்றான். வல்லஞர்-அகற்றற்கரிய வன்மையுடைய மிடித்துன்பம். கற்றுமுதிர்ந்த யான் இளைஞராற் றேற்றப்பட்டேன் என்றற்குக் கல்லா இளைஞர் எனக் கல்லாமையை விதந்தோதினான். இனி, நச்சினார்க்கினியர், கல்லா என்பதனைச் செய்யாவென்னும் உடன்பாட்டெச்சமாக்கி, அவர்க்குரிய புகழ்களை முற்றக்கற்று என் பின்னின்ற இளைஞர் அவற்றைச் சொல்லிக்காட்ட என்று கூறி, மேலும், இனித் தத்தம் சிறுதொழிலன்றி வேறொன்றுங் கல்லாத இளைஞர் நெருநல் வந்தவன் இவன் என்று அரசனுக்குச் சொல்லிக் காட்ட வென்றுமாம்; என்றது இவன் வேறுபாடு கூறிற்றாம், என்றனர். கதும் : விரைவுக் குறிப்பு. சேய்மைக்கண் கண்டபொழுதே வருக! வருக ! என்று ஆர்வத்தோடு வரவேற்றென்பான் கூஉய் என்றான். என்னை? கூவுதல் சேய்மையின் நிற்பாரையே யாகலின். வம் - வருவீர் என்னும் பொருட்டு. அதன்முறை என்றது, அங்ஙனம் நிகழ்ந்த பொழுது யாம் செய்ய வேண்டிய முறைகளை என்றவாறு. இதனை,

தொன்றொழுகு மரபிற் றம்மியல்பு வழாஅ
தருந்திறற் கடவுட் பழிச்சிய பின்றை
விருந்திற் பாணி கழிப்பிய நீண்மொழி
......... ............ ............... ..... ......... .........
கொடைக்கடன் இறுத்த செம்மலோய் என    (537-43)

எனவரும் மலைபடு கடாத்தானும் உணர்க. இனி, 102-பதனறிந்து என்பது முதல் 119-ஊன்முனிந்து என்னுந்துணையும் கரிகாற்பெருவளத்தான் தன்னை உணவுமுதலியன தந்துபோற்றினமை கூறுகின்றான்.

விருந்தோம்பற் சிறப்பு

ஊன் புழுக்கும், சூட்டும் ஊட்டினமை

102-107 : பதனறிந்து .......... முனிகுவமெனினே

பொருள் : பதன் அறிந்து - காலமறிந்து, துராஅய் துற்றிய துருவையம் புழக்கின் பராரை வேவை பருகு எனத் தண்டி-அறுகம் புல்லால் திரித்த பழுதையைத் தின்ற செம்மறிக்கிடாயினது அழகினையுடைய புழுக்கப்பட்ட பெரிய மேற்குறங்கு நெகிழ வெந்ததனை விழுங்கென்று பலகா லலைத்தலானும், காழில் சுட்ட கோழ்ஊன் கொழுங்குறை (கண்டி) - இரும்பு நாராசத்திலே கோத்துச் சுடப்பட்ட கொழுத்த இறைச்சிகளாகிய பெரிய தசைத் துண்டங்களைப் பலகாலும் தின்னென்று அலைத்தலானும், ஊழின் ஊழின் வாய் வெய்து ஒற்றி - முறையே முறையே வாயினது இடத்தினும் வலத்தினும் அத்தசைகளின் வெம்மையைச் சேர்த்தி ஆற்றித்தின்று, அவை அவை முனிகுவம் எனினே-புழுக்கினவும் சுட்டனவுமாகிய அவையிற்றை அவையிற்றை யாங்கள் இனி வேண்டாம் என்கையினாலே;

கருத்துரை : உண்ணுதற்குரிய காலமறிந்து எம்மை யழைத்து அறுகம்புற் பழுதையைத் தின்று கொழுத்த செம்மறியாட்டின் அழகிய புழுக்காகிய பருத்த மேற்றொடையின் வெந்த இறைச்சியினையும், இரும்பு நாராசத்தே கோத்துச் சுடப்பட்ட கொழுத்த இறைச்சியாகிய பரியதசைத் துண்டத்தினையும் தின்னுங்கோள்! தின்னுங்கோள்! எனப் பன்முறையும் எம்மை வற்புறுத்திக் கொடுத்தலானே யாங்கள் அவையிற்றின் வெப்பத்தை ஆற்றுதற்பொருட்டு, வாயின் இடப்பக்கத்தும் வலப்பக்கத்தும் மாற்றிமாற்றிச் சேர்த்தி ஆற்றித்தின்று, இனி இவை எமக்கு வேண்டாம் வேண்டாம் என்னலால் என்பதாம்.

அகலவுரை : துராஅய் -பழுதை. அறுகம்புல்லால் திரித்த பழுதையைக் கொடுத்து வளர்த்தலாலே கொழுப்பேறிய கிடாய் என்பார், துராஅய் துற்றிய துருவை என்றார். துற்றிய-ஊட்டிய. துருவை - செம்மறிக் கிடாய். அப்புழுக்கு என்றது பதனழியாதே காட்சிக்கும் இனிதாய் நிறமுடையதாய்ப் புழுக்கப்பட்ட இறைச்சி என்றவாறு. புழுக்கின் வேவை என்க. புழுக்கினை யுடைய வேவை. வேவை-வேக வைக்கப்பட்ட தசை என்க. பருஅரை-பராரை எனப்புணர்ந்து அளபெடுத்துப் பராஅரை என்றாயிற்று; பரிய அடி என்னும் பொருட்டு. எனவே, யாட்டின் பரிய மேற்றொடை இறைச்சி என்றவாறு. பருகு என்னும் வினைச்சொல் ஈண்டுத் தின்னுக என்னும் பொருளில் வந்தது. இதனை மரபுவழுவமைதியாகக் கொள்க. தண்டி-வற்புறுத்தி. தண்டம் என்னும் வடசொல் அடியாகப் பிறந்த எச்சம். தண்டித்தல்-ஈண்டு வற்புறுத்தல் என்னும் பொருட்டாய் நின்றது. தடியும் கிழங்கும் தண்டினர் தரீஇ, ஓம்புநர் அல்லது உடற்றுந ரில்லை (425-26) என்றார் மலைபடுகடாத்தினும். காழ்-இரும்பு நாராசம். கோழூன்-கொழுத்த இறைச்சி. கொழுங்குறை என்றதன்கண், கொழுமை, பருமை குறித்து நின்றது. குறை - துண்டம்; தசைத்துண்டம் என்க.

பருகெனத்தண்டி என்றதனைக் கொழுங்குறை என்பதனோடும் இயைத்துக்கொள்க. தண்டி என்னும் செய்தென்னெச்சத்தைத் தண்டவெனத் திரித்து ஏதுப்பொருட்டாக்குக. ஊழ்-முறை. ஈண்டு முறை முறையாக வலமும் இடமும் மாறி என்க. அவை ஆறிச் சுவை கெடாதவாறு சூட்டோடே கொடுத்தலால் என, உணவின் பதனழியாதே ஊட்டுஞ் சிறப்பினைக்காட்டி நின்றமை காண்க. பன்முறையும் வற்புறுத்திக் கொடுத்தல் தோன்ற அவை அவை என அடுக்கி நின்றது. முனிதல்-வெறுத்தல்.

பண்ணியாரங்களும், கள்ளும், கூத்து விருந்தும்

107-111: சுவைய .............. கழிப்பி

பொருள் : சுவைய வேறு பல் உருவின் விரகு தந்து இரீஇ - இனிமையுடையவாய் வெவ்வேறாகிய பல வடிவினையுடைய பண்ணியாரங்களைக் கொணர்ந்து அவற்றைத் தின்னும்படி எங்களை இருத்தி, மண் அமை முழவின் பண் அமை சீறியாழ் ஒண்ணுதல் விறலியர் பாணி தூங்க - மார்ச்சனை அமைந்த முழவினோடே பண்ணாலே பொருந்திய சிறிய யாழையுடைய ஒள்ளிய நெற்றியையுடைய விறல்பட ஆடும் மகளிர் தாளத்திற்கேற்ப ஆடாநிற்ப, மகிழ்பதம் பன்னாட் கழிப்பி - இவ்வாறாக நுகர்ச்சியானே மகிழ்கின்ற செவ்வியைப் பலநாளும் பெற்றுக் கழித்து;

கருத்துரை : இனிய சுவையுடையனவும் பலவேறு வடிவங்களை யுடையனவுமாகிய தின்பண்டங்களைக் கொணர்ந்து அவற்றைத் தின்னும்படி எம்மை இருத்தி, மேலும், மார்ச்சனை பொருந்திய முழவிசையோடே பொருந்திய பண்ணையுடைய சீறியாழினோடும் ஒளிபொருந்திய நெற்றியையுடைய விறலியர் தாளத்திற்கு ஏற்பப் பாடி ஆடாநிற்பவும், இவையிற்றை உண்டும் கண்டும் கேட்டும் மகிழ்கின்ற செவ்விகள் வாய்ந்த நாள்கள் பலவற்றையும் இவ்வாறே இனிது நுகர்ந்து கழித்து என்பதாம்.

அகலவுரை : சுவைய - மிக்க இனிமையுடையனவாகிய பண்ணியாரங்கள் பல்வேறு வடிவுடையன ஆதலின், வேறு பல்லுருவின் விரகு என்றார். விரகு - பண்ணியாரம்; விரகு - உபாயம் என்னும் பொருட்டு-உபாயங்களால் பண்ணுதலான் பண்ணியாரத்தை ஆகுபெயரான் விரகென்றார். இரீஇ - இருக்கச்செய்து. மண்-மத்தளத்திற்கிடும் மார்ச்சனை. முழவு - மத்தளம். முழவின் பண்ணோடு இயைந்த யாழ் என்க. தலைமைபற்றி முழவும் யாழும் கூறினரேனும் எடுத்த மொழியின் இனஞ் செப்புமாற்றால் குழல் முதலிய ஏனை இன்னிசைக் கருவிகளோடும் என்க. என்னை?

கூடிய குயிலுவக் கருவிக ளெல்லாங்
குழல்வழி நின்ற தியாழே யாழ்வழித்
தண்ணுமை நின்றது தகவே தண்ணுமைப்
பின்வழி நின்றது முழவே முழவொடு
கூடிநின் றிசைத்த தாமந் திரிகை  (சிலப்.3: 138-42)

என்றோதுபவாகலான். சீறியாழ்-சிறிய யாழ். பேரியாழ், மகரயாழ், சகோடயாழ், செங்கோட்டியாழ் என்ற நால்வகை யாழ்களுள் பேரியாழ் அல்லாதன மூன்றும் சீறியாழ்கள் என்க. பொன்வார்ந் தன்ன புரி அடங்கு நரம்பின் இன்குரற் சீறியாழ் (34-5) எனச் சிறுபாணாற்றுப்படையினும் வருதல் காண்க. ஆடல் பாடல் அழகெனும் நாடக மகளிர்க்கு நயந்தன மூன்றனுள் அழகே தலைசிறந்ததாகலின் அவர் அழகை எடுத்தோதுவார் ஒண்ணுதல் விறலியர் என்றார். ஒண்ணுதல்-ஒளியுடைய நெற்றி. விறலியர் -விறல்பட ஆடும் மகளிர். இவ் விறலியர் இப் பொருநனுடைய விறலியர் என்க. பாணி-தாளம். தூங்க - ஆட. மகிழப்பதம்-மகிழ்தற்குரிய செவ்விகள். இனிய விருந்துண்டு இன்னிசையும் கூத்தும் கண்டும் கேட்டும் நுகர்கின்ற செவ்விகளை அவற்றின் காரியத்தின் மேலேற்றி மகிழ்ப்பதம் என்றான். மகிழ்ப்பதம் - மகிழ்ச்சியை யுடைய கள், என்பர் நச்சினார்க்கினியர். பன்னாட் கழிப்பி என்றது, இவ்வாறாக இனிதே பல நாட்களைக் கழித்தபின்னர் என்றவாறு.

இன்சோற்றுணா

111-119 : ஒருநாள் .............. ஊண்முனிந்து

பொருள் : ஒருநாள் அவிழ்ப்பதம் கொள்கென் றிரப்ப - ஒருநாள் சோறாகிய உணவையும் கொள்வாயாகவென்று வேண்டிக் கொள்கையினாலே, முகிழ்த்தகை முரவை போகிய முரியா அரிசி விரல் என நிமிர்ந்த நிரல் அமை புழுக்கல்-முல்லை அரும்பின் தன்மையினையுடைய வரியற்ற இடையறியாத அரிசி விரல் என்னும்படி நெடுகின அளவொப்புமையமைந்த சோற்றையும், பரல் வறைக் கருனை - பருக்கைக் கற்கள்போன்று நெகிழ்தற்றன்மையின்றி நன்கு பொரிக்கப்பட்ட பொரிக்கறிகளையும், காடியின் மிதப்ப அயின்றகாலை - கழுத்திடத்தே வந்து நிரம்பும் படி உண்டபொழுதின், பயின்று இனிது இருந்து - அவ்வள்ளலை அகலாதே இனிதாக உடனுறைந்து, கொல்லை உழுகொழு ஏய்ப்ப பல்லே எல்லையும் இரவும் ஊன்தின்று மழுங்கி-கொல்லை நிலத்தே யுழுத கொழுப் போன்று எம் பற்கள் பகலும் இரவும் இறைச்சியைத் தின்று தின்று முனை மழுங்கி, உயிர்ப்பு இடம் பெறாஅது - மூச்சுவிடுதற்கும் இடம்பெறாமையாலே, ஊண் முனிந்து - இவ்வுணவுகளை வெறுத்து;

கருத்துரை : ஒருநாள் அவ்வள்ளற்பெருமான், நீயிர் சோற்றுணவும் உண்ணுமின் என எம்மை வேண்டிக்கொண்டமையாலே, முல்லைமுகை போன்று வரியற்ற இடைமுரியாத அரிசியால், விரல்போன்று நெடுகின அளவொத்த சோற்றையும், அதற்கு வெஞ்சனமாகிய பருக்கைக்கற்கள் போன்று நன்கு பொரிக்கப்பட்ட பொரிக்கறிகளையும் பிறவற்றையும் கழுத்துவரையில் வந்து நிரம்புமாறு உண்டபொழுது எம்மை உடனிருந்தூட்டுகின்ற அம் மன்னனோடே பெரிதும் உடனுறைந்து இனிதாக இருந்து, கொல்லைநிலத்தே உழுத கொழுவைப் போன்று இரவும் பகலும் இறைச்சியை மென்று மென்று எம் பற்கள் முனை மழுங்கிவிட்டமையான் இவ்வுணவுகளை வெறுத்து என்பதாம் (122-மெல்லெனக் கிளந்தனமாக என்று இயையும்.)

அகலவுரை : இங்ஙனம் மகிழ்ப்பதம் பன்னாட் கழிப்பிய பின்னர் ஒருநாளிலே என்க. ஒருநாள் கொள்கென என இரப்ப என்க. அவிழ்-சோற்றுப் பருக்கை. பதம் - உண்டி. வள்ளல் இரந்ததற்குத்தாம் உடன்பட்டமையைக் கூறாமலே அமையும் என்று கூறிற்றிலன் என்க. இரப்ப என்னும் சொல், அவ்வள்ளலின் அன்பு மிகுதியைக் காட்டி நின்றது. இரந்து பொருள் பெறுதலே இயல்பாகவும் இரந்து பொருள் வழங்குதலின் வள்ளன்மைச் சிறப்பை அச்சொல் காட்டுதல் காண்க.

ஈயென இரத்தல் இழிந்தன் றதனெதிர்
ஈயே னென்ற லதனினும் இழிந்தன்று
கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று  (புறம்-204)

என்னும் புறப்பாட்டின்கண் கொள்ளென இரந்து கொடுக்கும் வள்ளன்மையின் உயர்வு கூறியவாறு காண்க. இரவலர் கன்றாக ஈவோர் ஆவாக, விரகிற் சுரப்பதாம் வண்மை (நாலடி-279) என்றார் பிறரும். முகில்-அரும்பு: ஈண்டு முல்லை யரும்பு என்க. இது சோற்றுப் பருக்கைக்கு உவமை. முரவை-வரி; ஈண்டு அரிசியின்கண் உள்ள தவிட்டுவரி என்க. தவிட்டுவரியின்றி நன்கு குத்துதல்மாண்பமைந்த அரிசி என்றவாறு. இருங்கா ழுலக்கை இரும்புமுகந் தேய்த்த, அவைப்புமாணரிசி (193-4) என்றார், சிறுபாணினும். விரல் சோற்றின் நெடுமைக்கு உவமை. நிமிர்தல் - நெடியாதல். நிரல் - ஈண்டு எல்லாப் பருக்கைகளும் ஓரின அரிசியாற் சமைக்கப்படலின் அளவானே நிரல் உடையனவாதல் என்க. கலப்பரிசியாயின் சோறு நிரல்படாது சிறியவும் பெரியவும் ஆம் அன்றே, அங்ஙனமின்றி என்றவாறு. நிரல்அமை என்றதற்கு நச்சினார்க்கினியர். ஒன்றோடொன்று சேராத எனப் பொருள் கூறினர்.

புழுக்கல்-சோறு. புழுக்கப்பட்டதென்னும் பொருட்டு. பரல் - பருக்கைக் கற்கள். இது பொரிக்கறிக்கு உவமை. நெகிழ்ப்பின்றி முறுகப்பொரித்த பொரிக்கறி என்றவாறு. இனி, பரலைப் பொரித்தென்னும் நச்சினார்க்கினியர் உரையுங் கொள்க. ஈண்டுப் பரல் என்றது பலா, அல்லது அவரை முதலியவற்றின் விதையை என்க. காடி-கழுத்து காடியிழந்து கவந்தமதாய் (கந்த - சூரபன்மன்வதை. 136) என்புழியும் அஃதப் பொருட்டாதல் காண்க.

இனிக் காடி, புளிங்காடி என்பார் உரையும் பொருந்தும். புளிங்காடி-புளிங்கறி. இப்பொருட்கு மிதப்ப என்றதற்கு - நிரம்ப எனப் பொருள் கூறிக்கொள்க. அயிலுதல்-உண்ணல். பயின்று - இடையறாது பழகி. அரசன் காட்சிக் கெளியன் ஆதலால், இடையறாது பயின்றென்றான். இனிது இருந்தென்றான், அரசன் பண்புடைமையின் சிறப்புத் தோன்ற; என்னை?

நவிறொறு நூனயம் போலும் பயிறொறும்
பண்புடை யாளர் தொடர்பு  (குறள் - 783)

என்றோதுபவாகலான். இறைச்சி தின்றமையால் கொல்லையுழு கொழுப்போல எம்பற்கள் மழுங்கின என்றதன்கண் நகைச்சுவை தோன்றுதல் அறிக. ஈண்டுக் கொல்லை என்றான், வன்னிலத்தை. ஏய்ப்ப: உவம உருபு. எல்லை-பகல். வயிறு நிறைய உண்டக்கால் நன்கு உயிர்த்தல் கூடாமை இயல்பு. உயரிய உண்டியாயினும் பலநாளும் நிறைய உண்டக்கால் உவர்த்தல் இயல்பாகலின், ஊண் முனிந்து என்றான். ஊன்-உண்டி. இறைச்சியும் தின்பண்டமும் சோறும் பிறவும் ஊண் ஆகலின், ஊண் எனப் பொதுச்சொற் பெய்து கூறினான். இனி, 102 - பதனறிந்து, என்பது தொடங்கி 119 - ஊண் முனிந்து என்னுந் துணையும், பதனறிந்து வேவை பருகெனத் தண்ட கொழுங்குறை வாய் ஒற்றி முனிகுவம் என, விரகு தந்து இரீஇ விறலியர் பாணி தூங்கப் பதம் பன்னாட் கழிப்பி, ஒருநாள் இரப்ப அயின்றகாலை இருந்து, பெறாது முனிந்து 122 - கிளந்தனம் என இயைத்துக்கொள்க. இனி, அப் பொருநன் விடைகொண்டமையும் பிரிவாற்றாமையால் அவ்வள்ளல் வருந்தினமையும் அவன் நல்கிய பரிசிற் சிறப்பும் (119-129) கூறுகின்றான்.

கரிகாலன் பரிசில் நல்கும் சிறப்பு

119-129 : ஒருநாள் .................... வந்தனன்

பொருள் : ஒருநாள் - இங்ஙனம் நிகழ்ந்த நாள்களிலே செவ்விபெற்ற ஒருநாளில், செயிர்த்து எழு தெவ்வர் திறை துறை போகிய செல்வ-குற்றத்தைச் செய்து எழுந்த பகைவர்பால் திறைகொள்ளும் கூறுபாடுகள் எல்லாம் முடியப்போன செல்வனே! சேறும் எம் தொல்பதிப் பெயர்ந்து என மெல்லெனக் கிளந்தனமாக - யாங்கள் செல்வேம் எம்முடைய பழைய ஊரிடத்தே இவண்விட்டு என்று மெத்தெனச் சொன்னேமாக, வல்லே அகறிரோ எம் ஆயம் விட்டு எனச் சிரறியவன்போற் செயிர்த்த நோக்கமொடு - அதுகேட்டு விரைந்து எம் திரளை விட்டுப் போகின்றீரோ என்று கூறி வெகுண்டவனைப்போன்று எமக்கு வருத்தத்தைச் செய்த பார்வையுடனே, துடிஅடி அன்ன தூங்கு நடைக் குழவியொடு பிடிபுணர் வேழம் பெட்டாங்கு கொள்கென - துடிபோலும் அடிகளையும் அசைந்த நடையினையுமுடைய கன்றுகளுடனே பிடிகளோடு கூடின களிற்றியானைகளையும் நீவிர் விரும்பிய ஏனைப்பொருள்களையும் கைக்கொள்வீராக என்று சொல்லி, தன் அறி யளவையில் தரத்தர - மேலும் ஊர்திகள் ஆடைகள் அணிகலன்கள் முதலியவற்றைத் தான் அறிந்த அளவாலே தருந்தோறும், யானும் என்னறி யளவையின் வேண்டுவ முகந்துகொண்டு - யானும் என்னுடைய குறைகளை யான் அறிந்த அளவாலே எனக்கு வேண்டுவனவற்றை வாரிக் கொண்டு, இன்மைதீர வந்தனென் - இனி நல்குரவு எக்காலமும் என்னை அணுகாதொழியும்படி வந்தேன்;

கருத்துரை : இவ்வாறு அவ் வள்ளலோடே இனிதுறையும் நாட்களிலே ஒருநாள், யாங்கள் அவ்வள்ளலை நோக்கிப் பகைவர்பால் திறைகொள்ளும் துறைகளெல்லாம் முடியப்போன செல்வனே! யாங்கள் எங்கள் பழைய ஊருக்கு மீண்டும் செல்ல எண்ணுகின்றேம் என மெல்லக் கூறினேமாக, அதுகேட்டு நீயிர் விரைவில் எம் கூட்டத்தை விட்டுப் போகின்றீரோ? எனக் கூறி எம்மை வெகுண்டான் போன்று வருந்தும்படி பார்த்து உடுக்கைக் கண்போன்ற அடியையுடைய கன்றுகளோடே பிடியானைகளையும் களிற்றியானைகளையும் நீவிர் விரும்பிய ஆடை அணிகலன்களையும் கொள்வீராக என்று தான் அறியும் அளவாலே தருந்தோறும், யானும் என் குறையை யான் அறியும் அளவாலே யான் விரும்பியவற்றையெல்லாம் வாரிக்கொண்டு இனி எக்காலமும் எனக்கு நல்குரவு இல்லையாம்படி வந்தேன்காண் என்பதாம்.

அகலவுரை : அவ் வள்ளற்பெருமானின்பால் விடைகொள்ளின் அவன் அன்புள்ளம் வருந்தும் என்று விடைகொள்ளத் துணியேமாய்ப் பன்னாள் அழுங்கிப் பின்னர் ஒருவாறு துணிந்து அதற்கேற்ற செவ்வி அரிதிற் கிடைக்கப்பட்டதொரு நாளிலே என்பான், அயின்றகாலைப் பயின்று இனிதிருந்து ஊண்முனிந்து ஒருநாள் என்றான். செயிற் - குற்றம். செயிர்த்து - குற்றம் செய்தென்க. செயிர்த்து - சினந்து எனின் ஈண்டுச் சிறவாமையுணர்க. திறைதுறை - திறை கோடற்குரிய கூறுபாடுகள் - அவை: பகைமன்னரின் தகுதிகளை அறிந்து பொருந்துமாற்றால் கோடலும் இன்னின்ன அரசர்பால் இன்னின்ன பொருள் கோடற்பாற்றெனத் தெளிதலும் பிறவும் என்க.

சேறும் - செல்வேம். தொல்பதி - பழைய ஊர். இச்சொல் அவ்வள்ளல் உளத்தை வருத்தும் என யாங்கள் அறிந்தோமாகலின் அதனைக் கூறும்பொழுதும் மெத்தெனக் கூறினேம் என்பான் மெல்லெனக் கிளந்தனம் என்றான். அகறிரோ - அகல்வீரோ. ஆயம்-திரள். சிரறுதல் - வெகுளல். செயிர்த்த நோக்கம் - வருத்தத்தைச் செய்யும் பார்வை எம் பிரிவாலே அவ்வள்ளல் உள்ளம் வருந்துவதனை அவன் கண்கள் காட்டுமாற்றால் அம் மெய்ப்பாடு எம்மையும் வருத்தியது என்றவாறு. துடியடி யன்ன என்ற தொடரை, துடி அன்ன அடி என மாறிக் கூட்டுக. துடி-உடுக்கை. உடுக்கையின் கண் யானைக்கன்றின் அடிக்கு உவமை என்க. துடியடிக் கயந்தலை (கலி-11:8) துடியடிக் குழவிய (புறம் - 69: 26) எனப் பிறரும் கூறுதல் அறிக.

குழவி - யானைக் கன்று; குஞ்சரம் பெறுமே குழவிப் பெயர்க் கொடை (தொல்-மரபி-19) என்பது ஓத்தாகலின் யானைக் கன்றினைக் குழவி என்றார். பிடி - பெண்யானை. வேழம் - ஈண்டுக் களிற்றி யானை என்க. பெட்டவை - விரும்பிய பொருள்: அவை ஆடை அணிகலன் முதலிய பிற பொருள்கள். இவற்றையும் கொள்ளுங்கோள்! கொள்ளுங்கோள்! என ஆர்வத்துடன் கூறி என்பான், கொள்கெனத் தரத்தர என்றான். தரத்தர என்னும் அடுக்குமொழி அவ்வள்ளல் எத்துணை ஈந்தும் அவன் உள்ளம் ஆராமையுடையதாதலை யாப்புறுத்தி நின்றது. என்னை? வள்ளலாவார்க்கு இத்தகைய ஆராமை இயல்பாயுளதென்பதனை,

............................ புகழுநர்க்கு
அரசுமுழுது கொடுப்பினும் அமரா நோக்கமொடு
தூத்துளி பொழிந்த பொய்யா வானின்
வியாது சுரக்கும் அவன் நாண்மகிழ் இருக்கையும்

எனவரும் மலைபடுகடாஅத்தானும் அறிக. இனிப் பண்டை நாளில் புரவலராகிய தமிழ்வேந்தர்கள், இரவலராகிய கலைவாணர்கட்கு இத்தகைய பெரும் பரிசில்கள் வழங்கியதனை,

விளங்குமணிக் கொடும்பூண் ஆஅய் நின்னாட்டு
இளம்பிடி ஒருசூல் பத்தீ னும்மோ
நின்னும் நின்மலையும் பாடி வருநர்க்கு
இன்முகங் கரவா துவந்துநீ அளித்த
அண்ணல் யானை எண்ணிற் கொங்கர்க்
குடகடல் ஓட்டிய ஞான்றைத்
தலைப்பெயர்த் திட்ட வேலினும் பலவே  (புறம்-130)

எனவரும் செய்யுளானும் புறப்பாட்டிற் பிறாண்டும் வரும் பல செய்யுளானும் உணர்க.

அவ்வள்ளல் தன் தகுதிக்கேற்பவற்றை வழங்கினான் அல்லது, என் நல்கூர்நிலையை அறிந்து இவனுக்கு இத்துணைப் போதியவாம் என்று நல்கினானில்லை என்பான், தன்னறியளவையின் தரத்தர என்றான். அவன் தரும் பரிசிலனைத்தும் கோடல் அரிதாகலின் யானும் என் குறையை அறிந்த அளவானே எனக்குப் போதியவற்றைப் பெற்று வந்தேன் என்பான், என்னறியளவையின் முகந்துகொண்டு வந்தனென் என்றான். முகந்து கொண்டென்றது. வரையாது நல்கும் அவன் வள்ளற் சிறப்புணர்த்தி நின்ற தென்க. பரிசிலின் அளவு யாம் முகந்து கொள்ளும் அளவாதல் அல்லது அவன் வழங்கும் அளவிற்றன்று; அவன் வழங்குவன அளவிறந்தனவாகும் என்றவாறு. இன்மை தீர என்றது, இனி எக்காலமும் என்பால் நல்குரவு இல்லையாம்படி என்றவாறு. இனி, 64-யானும் என்பது தொடங்கி, 129-இன்மை தீர வந்தனென் என்னுந் துணையும் கிடந்த இத்தொடர்ப் பொருளை :-

யானும் அவன் வரைப்பின் வாயில் புக்கு, என் இடும்பை தீர எய்யேனாகி, விடியல் பாணிக்கு ஏற்ப ஒன்று பெட்டா அளவையின், கேள் கொளல் வேண்டி, வேட்பக் கூறி. இரீஇ, நோக்கமொடு குளிர் கொளீஇச் சிதார் துவர நீக்கி, அறுவை நல்கி மாடத்து மகளிர் கலம் நிறைய (மதுவை) வாக்குபு தரத்தர உண்டு அஞர் போக்கி நின்ற காலை, தங்கி, நீக்கி, மாழாந்து, எழுந்து, மருண்டநெஞ்சு ஏமாப்ப, இளைஞர் சொல்லிக்காட்ட, மகிழ் சிறப்ப, கூவ கழிப்பிய பின்றை, தண்டி விரகு தந்து இரீஇ தூங்கக் கழிப்பி இரப்ப அயின்ற காலை இருந்து முனிந்து ஒருநாள் சேறுமென, செயிர்த்த நோக்கமொடு, குழவியொடு பிடிபுணர்வேழம் பெட்டவை கொள்கெனத் தரத்தர, யானும் முகந்து கொண்டு இன்மை தீர வந்தனென் என வினைமுடிவு கொள்க. இனி, 129- வென்வேல் என்பது தொடங்கி, 150 - தொழுது முன்னிற்குவிராயின் என்னும் வரையில் பரிசில் பெற்று வருவோன் தான் இனி எதிர்வந்த பொருநனைக் கரிகாற் பெருவளத்தான்பாற் சென்மின் என ஆற்றுப்படுத்துவான் முன்னர் அவ்வள்ளலின் சிறப்பினை எடுத்தோதுகின்றான் என்க.

கரிகாற் பெருவளத்தானின் கழிபெருஞ் சிறப்பு

129-138 : வென்வேல் .................. செகிற் கொண்டு

பொருள் : வென்வேல் உருவப் பஃறேர் இளையோன் சிறுவன்-வென்ற வேலினையும் அழகினையும் பலவாகிய தேர்களையுமுடைய இளஞ்சேட் சென்னியின் திருமகனான, முருகன் சீற்றத்து உருகெழு குரிசில் - முருகனது சீற்றம் போலும் சீற்றத்தை யுடைய உட்குதல் பொருந்திய தலைவனான அக் கரிகாற் பெருவளத்தான், தாய் வயிற்று இருந்து தாயம் எய்தி - தன் தாயினது வயிற்றில் தான் கருவாக இருந்த பொழுதே அரசவுரிமை பெற்றுப் பிறந்து, எய்யாத் தெவ்வர் ஏவல்கேட்ப - முன்பு தன் வலியறியாத பகைவர் பின்பு தன் வலியினை யறிந்து ஏவின தொழிலைச் செய்ய, செய்யார் தேஎம் தெருமரல் கலிப்ப - ஏவல் செய்யாத பகைவர் நாடு மனக்கவற்சி பெருக, பவ்வம் மீமிசைப் பகற்கதிர் பரப்பி வெவ்வெம் செல்வன் விசும்பு படர்ந்தாங்கு - கடலின் மீதே பகலைச் செய்யும் தன் கதிர்களைப் பரப்பி எழுந்து எல்லோராலும் விரும்பப்படும் வெம்மையையுடைய ஞாயிறு பின்னர் விண்ணிடத்தே மெல்லச் சென்றாற் போன்று, பிறந்து தவழ் கற்றதன் தொட்டு - பிறந்து தவழ்தலைக் கற்ற நாள் தொடங்கி, சிறந்த நன்னாடு செகிற்கொண்டு - ஏனையோர் நாட்டிற் சிறந்த நல்ல நாட்டைத் தன் தோளிலே வைத்துக்கொண்டு;

கருத்துரை : வென்ற வேலினையும், அழகினையும் பலவாகிய தேர்களையும் உடைய இளஞ்சேட் சென்னியின் திருமகனான முருகனை ஒத்த சீற்றத்தையுடைய உட்குப் பொருந்திய தலைவன் கரிகாற்பெருவளத்தான் எத்தகையனோ எனில்? தன் தாய் வயிற்றில் கருவாயிருக்கும் காலத்திலேயே அரசவுரிமை எய்திப் பிறந்து, தன் வலியறியாத பகைவர் பின்னர்த் தன் வலியை அறிந்து ஏவின தொழிலைச் செய்யவும், அங்ஙனம் அறிந்து செய்யாத பகைவர் நாடு அச்சத்தாலே மனக் கவற்சி பெருகவும், கடலின்மீதே தனது சுடர்களைப் பரப்பித் தோன்றிப் பின்னர் மெல்ல விண்ணிடத்தே ஞாயிறு சென்றாற் போன்று பிறந்து தவழ்தலைக் கற்ற நாள் தொடங்கிச் சிறந்த நல்ல நாட்டைத் தன் தோளிலே சுமந்து கொண்டு.

அகலவுரை : உருவம் - அழகு; இதனைத் தேரினுக்கேற்றினுமாம். இளஞ்சேட் சென்னி, கரிகாலன் தந்தை என்க. சோழ மன்னரில் இப்பெயர் இரண்டரசர்க்குண்மையான் அவரை இடைதெரிந்துணர்தற் பொருட்டு இவன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி என அடைபுணர்த்தழைக்கப்பட்டான். (ஏனையரசன் நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி என்க.) உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னியின் தேர் பெரிதும் சிறப்புடைத் தென்பதனை, நீயே, அலங்குளைப் பரீஇ இவுளிப் பொலந் தேர்மிசைப் பொலிவு தோன்றி மாக்கடல் நிவந்து எழுதரும் செஞ்ஞாயிற்றுக் கவினை மாதோ எனவரும் புறப்பாட்டான் அறிக. இம் மன்னனின் ஏனைச் சிறப்புக்களைப் பரணர் பாடிய செய்யுளானும் (புறம் - 4) பெருங்குன்றூர்க்கிழார் பாடிய செய்யுளானும் (புறம்-266) உணர்க. இவன் நாங்கூர் வேளிடை மகட் கொண்டான் எனத் தொல்காப்பிய உரையில் நச்சினார்க்கினியர் கூறியுள்ளார். முருகக் கடவுள் சீறிய துணையானே பகைவர் அழிதலின், அத் தெய்வச் சீற்றத்தை இவன் சீற்றத்திற்கு உவமை கொண்டார். உரு - உட்கு; அச்சம். உருவுட் காகும் (தொல்-உரி-4) என்பது சூத்திரம். குரிசில் - தலைவன்.

தாய் வயிற்றிருந்து தாயம் எய்தி என்றது, இவன் தன் தாய்வயிற்றிற் கருவாயிருக்கும் பொழுதே தந்தை இறந்து விட்டமையால் அரசவுரிமை எய்தப்பெற்று என்றவாறு. இங்ஙனம் கொள்வதே பொருந்துவதாம். இனி, நச்சினார்க்கினியர், தான் பிறக்கின்ற காலத்துப் பிறவாதே நல்ல முகூர்த்தம் வருமளவும் தாயுடைய வயிற்றிலேயிருந்து பிறக்கையினாலே அரசவுரிமையைப் பெற்றுப் பிறந்தென்றார் என்று கூறியுள்ளார். பொருந்துமேல் இதுவும் கொள்க. எய்யா - அறியாத; எய்யாமையே அறியாமையே (உரி-44) என்பர் தொல்காப்பியர். செய்யார் - ஏவல் செய்யாத பகைவர். பல்வம் - கடல்; வடசொல். பகற் கதிர் -பகலைச் செய்யும் கதிர் என்க. வெவ்வெஞ் செல்வன் என்றதன்கண்ணுள்ள வெம்மையிரண்டனுள் ஒன்றை, விருப்பமாகவும் ஒன்றை வெப்பமாகவும் கொள்க. வெம்மை வேண்டல் என்பர் தொல்காப்பியனார், கதிரவன் வெப்பமுடையனாதலும் எல்லாரானும் விரும்பப்படுத லுடையனாதலும் அறிக. உலகின் செல்வங்கட்கெல்லாம் காரணமாதல் பற்றிச் செல்வன் என்றார் எனினுமாம். கதிராகிய செல்வத்தையுடையன் எனினுமாம். உலகின் ஓம்பலும் காய்தலும் ஒருங்கேயுடைமைபற்றி அளியும் தெறலும் உடைய மன்னனுக்கு ஞாயிறு நல்ல உவமையாதல் காண்க. ஞாயிறு கடலிலே தோன்றியவுடன் கடற்பரப்பிலே தன் கதிரைப் பரப்பிப் பின்னர் மெல்ல விண்ணிலேறி உலகினைத் தன் ஒளியுள் அகப்படுத்திக்கொண்டாற் போன்று தவழ் கற்றதற் றொட்டுச் சிறந்த நாடுகளைத் தன் வலியுள் அடிப்படுத்திக் கொண்டென்க. தோள்: ஈண்டு வலிக்கு ஆகுபெயர் என்க. தவழ்கற்றல் - தவழ்தலைப் பயிறல்.

கரிகால் வளவன் தெறற் சிறப்பு

138-148 : நாடொறும் ...................... கரிகால்வளவன்

பொருள் : நாள்தொறும் வளர்ப்ப - அங்ஙனம் தோளிலே கொண்ட நாட்டினை நாள்தோறும் வளர்த்தல் காரணமாக, ஆளி நன்மான் அணங்குடைக் குருளை மீளி மொய்ம்பின் மிகுவலி செருக்கி - ஆளியாகிய நல்ல மானினது வருத்துதலையுடைய குருளையினது தலைமைசான்ற மிக்க வலிமை போன்ற வலிமையுடைமையாலே செருக்குக் கொண்டு, முலைக்கோள் விடாஅ மாத்திரை ஞெரேர் எனத் தலைக்கோள் வேட்டம் களிறு அட்டாங்கு - அவ்யாளி நன்மான் குருளை முலையுண்டலைக் கைவிடாத இளைய பருவத்தே கடுகப் பாய்ந்து முற்பட இரையைக் கொள்ளுதற்குக் காரணமான கன்னிவேட்டையிலேயே களிற்றியானையைக் கொன்றாற் போன்று, இரும்பனம் போந்தைத் தோடும் - கரிய பனையாகிய போந்தையின் மாலையும், கருஞ்சினை அரவாய் வேம்பின் அங்குழைத் தெரியலும்-கரிய கொம்பினையுடைய அரத்தின் வாய் போலும் வாயையுடைய வேம்பின் அழகிய தளிராற் செய்த மாலையினையும், ஓங்கு இருஞ்சென்னி மேம்பட மிலைந்த இருபெரு வேந்தரும் - நறிய மாலைகளில் மேலாதற்குக் காரணமான பெரிய தலையிலே ஏனையோர் சூடும் அடையாளப் பூக்களிற் சிறப்ப அவற்றைச் சூடிய சேரனும் பாண்டியனும், ஒருகளத்து அவிய ஒரே களத்திற் பட்டொழியும்படி, வெண்ணித் தாக்கிய - வெண்ணி என்கின்ற ஊரிலே பொருத, வெருவரு நோன் தாள் கண்ணார் கண்ணிக் கரிகால் வளவன் - அச்சந் தோன்றுகின்ற வலியையுடைய முயற்சியையும் கண்ணுக்கு அழகு நிறைந்த ஆத்தி மாலையினையும் உடைய கரிகாற் சோழனுடைய;

கருத்துரை : இவ்வாறு தன் தோளிலே கொண்ட நன்னாட்டினை வளர்த்தற் பொருட்டு யாளியினது குருளையின் தலைமை சான்ற வலிமை போன்ற வலியுடைமையாலே செருக்குக்கொண்டு அவ்வியாளிக்குருளை தன் தாயிடத்தே முலையுண்டலைக் கைவிடாத இளம் பருவத்திலேயே தனது கன்னிவேட்டையிற் கடுகப்பாய்ந்து களிற்றியானையைக் கொன்று வீழ்த்தினாற் போன்று கரிய பனந்தோட்டு மாலையும் வேப்பமாலையும் நிரலே சூடிய இரு பெரு முடிவேந்தராகிய சேரனையும் பாண்டியனையும் வெண்ணி என்னும் ஊரிடத்தே பொருது கொன்ற அச்சந்தரும் வலிய முயற்சியை உடையவனும், கண்ணுக்கினிய ஆத்திமாலை அணிந்தவனுமாகிய கரிகாற் சோழனுடைய என்பதாம்.

அகலவுரை : வளர்ப்ப - வளர்த்தற் பொருட்டு. நாட்டின் வளங்களைப் பெருக்குதலும், நாட்டின் அகலத்தை விரிவுறச் செய்தலும் ஆகிய இரண்டுசெயலும் தோன்ற வளர்ப்ப என்னும் சொற்பெய்துரைத்தார். ஆளி-அரிமா. அரிமாப்போன்ற வேறொரு விலங்கென எண்ணவும் இடமுளது. அணங்கு-வருத்தம். பிறவுயிரை வருத்துதலையுடைய குருளை என்றவாறு.

நாயே பன்றி புலிமுயல் நான்கும்
ஆயுங் காலைக் குருளை என்ப  (தொல்-மரபு-8)

என்னும் நூற்பாவின்கண், ஆயுங்காலை என்னும் விதப்பினால், ஆளிக்குக் குருளை கூறியதனை அமைத்துக் கொள்க. குருளை - குட்டி. மீளி-மீளிமை; மீட்குந் தன்மை: கூற்றுவன் என்பர் நச்சினார்க்கினியர். மொய்ம்பு - வலிமை. குருளையின் மொய்ம்பு போன்ற மொய்ம்பாலே செருக்கி என்க. முலைக்கோள் விடாமாத்திரை என்றது, பால்குடிக்கும் இளம்பருவத்திலேயே என்றவாறு. இதனால் கரிகாலனுக்குப் பால்மண மாறாத திருவாயினையுடைய பச்சிளம் பருவத்திலேயே பகைவர் பலர் தோன்றியவாறு குறிப்பான் உணர்த்தப்பட்டது. ஞெரேரென: விரைவுக் குறிப்பு. தலைக்கோள் வேட்டம் - கன்னி வேட்டை; முதல் வேட்டை என்க. குருளை களிறு என்ற வுவமைகள் நிரலே கரிகாலன் இளமையும் அவன் பகைவர்களின் சிறப்பும் கருதிய உவமைகள் இதனோடு,

முலைமுதல் துறந்த வன்றே மூரித்தா ளாளி யானைத்
தலைநிலம் புரள வெண்கோ டுண்டதே போன்று தன்கைச்
சிலையிடம் பிடித்த ஞான்றே தெவ்வரைச் செகுத்த நம்பி
நிலவுமிழ் குடையி னீழற் றுஞ்சுக வையம் என்பார்  (2554)

எனவரும் சீவக சிந்தாமணிச் செய்யுளையும்,

ஆளி நன்மான் அணங்குடை ஒருத்தல்
மீளி வேழத்து நெடுந்தகை புலம்ப
ஏந்தல்வெண் கோடு வாங்கிக் குருத்தருந்தும்  (381:1-3)

எனவரும் அகநானூற்றின் செய்யுளையும்,

வேண்டார் பெரியர் விறல்வேலோன் றானிளையன்
பூண்டான் பொழில்காவ லென்றுரையா - மீண்டு
மருளன்மின் கோள்கருது மால்வரை யாளிக்
குருளையும் கொல்களிற்றின் கோடு  (245)

எனவரும் புறப்பொருள் வெண்பாவினையும், ஒப்பு நோக்குக.

இரும்பணம் போந்தை கரிய பனையாகிய போந்தை : இருபெயரொட்டு. இதற்குக் கரிய பனங்குருத்தில் அலர்ந்த வலப்பக்கத்து ஓலை என்றும் அதனிடத்துப் போந்ததனாற் போந்தை என்றார் என்றும் நச்சினார்க்கினியர் கூறுவர். தோடு : மாலைக்கு ஆகுபெயர். கருஞ்சினை - கரிய கிளை. அரவாய் - அரத்தின்வாய் போன்ற வாய்: வேப்பிலையின் விளிம்பிற்கு இஃதுவமை என்க. அங்குழை - அழகிய தளிர். தெரியல் - மாலை. இம்மாலைகள், நிரலே சேரனுக்கும் பாண்டியனுக்கும் அடையாளப் பூமாலைகள் என்க பின்னர்க் கரிகாலனுக்கு ஆத்திமாலை கூறினமையும் காண்க.

வேந்திடை தெரிதல் வேண்டி யேந்துபுகழ்
போந்தை வேம்பே ஆரென வரூஉம்
மாபெருந் தானையர் மலைந்த பூவும்  (தொல்.புறத்-5)

என்றார் தொல்காப்பியனாரும். முடிவேந்தராகலின் இருபெரு வேந்தர் என்றார். இருபெரு வேந்தர் ஒரு களத்தவிய என்றதன்கண் முரண்தோன்றிச் செய்யுளின்ப மிகுதல் உணர்க. வெண்ணி-வெண்ணி என்னும் ஊர். நோன்றாள் - வலிய முயற்சி மிக்க இளம்பருவத்தே முடிவேந்தர் இருவரையும் ஒருகளத்தே வென்ற அருமை தோன்ற, வெருவரு நோன்றாள் என்றார். கண்ணி - ஆத்திமாலை. கரிகால் வளவன் என்றது இப் போருக்கு முன்னர் இவனைப் பகைவர் வஞ்சகத்தாற் சிறைசெய்தமையும், அதன்கண் தீயிட்டமையும் அதனால் இவன் கால் கரிந்து போனமையும், பின்னர் அப்பகைவரை அடர்த்தமையுமாகிய வரலாறுகளை உணர்த்தும் குறிப்பேதுவாய் நின்றதென்க. இங்ஙனம் இவன் சிறையிடப்பட்டமையும் மீண்டமையும்,

கொடுவரிக் குருளை கூட்டுள் வளர்ந்தாங்குப்
பிறர், பிணியகத் திருந்து பீடுகாழ் முற்றி,
அருங்கரை கவியக் குத்திக் குழிகொன்று
பெருங்கை யானை பிடிபுக் காங்கு
நுண்ணிதின் உணர நாடி நண்ணார்
செறிவுடைத் திண்காப் பேறி வாள்கழித்து
உருகெழு தாயம் ஊழின் எய்தி  (221-27)

எனவரும் பட்டினப் பாலையானும், இவன் கால் கரிந்தமையை,

முச்சக் கரமு மளப்பதற்கு நீட்டியகால்
இச்சக் கரமே அளந்ததால் - செய்ச்செய்
அரிகான்மேற் றேன்றொடுக்கும் ஆய்புனனீர் நாடன்
கரிகாலன் கானெருப் புற்று

என, இப்பாட்டின் இறுதியில் காணப்படும் வெண்பாவானும் அறிக. இனி, இத்தகைய வள்ளல்பாற் செல்வீராயின் அவ்வள்ளல் இன்னின்னவாறு உம்மை உபசரித்து இன்னின்ன பரிசில்களை வழங்குவன் என, மேலே 149-முதல் 177-வரை ஆற்றுப்படுத்துவோன் கூறுகின்றான்.

கரிகாலன் விருந்தோம்பற் சிறப்பு; உடையும் உண்டியும்

149-158 : தாணிழல் ................. கைகவிபருகி

பொருள் : தாள் நிழல் மருங்கின் அணுகுபு குறுகி - திருவடி நீழலிடத்தே அணுகி நின்று, தொழுது முன்னிற்குவிர் ஆயின் -வணங்கி நும் வறுமைதோன்ற முன்னே நிற்பீராயின், பழுதின்று ஈற்று ஆ விருப்பிற் போற்றுபு நோக்கி - நும்மிடி நும்பால் இல்லையாம்படி கன்றீன்ற ஆன் அதனை நோக்கும் விருப்பம் போன்ற விருப்பத்தோடே நும்மைப் பேணிப் பார்த்து, நுங்கையது கேளா அளவை - நும்மிடத்துள்ள கலையைத் தான் கேட்டற்கு முன்பே, ஒய்யெனப் பாசி வேரின் மாசொடு குறைந்த துன்னற் சிதாஅர் நீக்கி - விரைந்து கொட்டைப் பாசியினது வேர்போலே அழுக்கோடே குறைந்த தையலையுடைய துணிகளைப் போக்கி, தூய கொட்டைக் கரைய பட்டுடை நல்கி - தூயவாகிய திரளமுடித்த முடிகளைக் கரையிலேயுடைய பட்டாகிய உடைகளைத் தந்து, பெறல் அருங் கலத்தில் பெட்டாங்கு உண்க என - பெறுதற்கரிய பொற்கலத்தே விரும்பியபடியே உண்பாயாக என்று இன்சொலியம்பி, பூக் கமழ் தேறல் வாக்குபு தரத்தர வைகல் வைகல் கை கவி பருகி-தீம்பூ மணக்கின்ற கள்தெளிவை மேன் மேலே வார்த்துத் தருந்தோறும் நாள்தோறும் அமையும் அமையும் எனக் கையை மறித்துத் தடுத்துண்டு;

கருத்துரை : (கரிகாற் சோழனுடைய) திருவடி நீழலை அணுகி நும் வறுமை தோன்ற முன்னிற்பீராயின், அதுகாறும் நும்மைப்பற்றி நின்ற வறுமை நும்பால் இல்லையாம்படி ஆன் அதன் கன்றை விரும்பிப் பார்ப்பது போன்று நும்மை ஆர்வத்தோடே நோக்கி, நுமது கலையினைத் தான் கேட்டற்கு முன்னரே விரைந்து, கொட்டைப் பாசியின் வேர் போன்று அழுக்கோடே குறைந்துபோன தையலையுடைய நும் துணியைப் போக்கிக் கரையிடத்தே கொட்டைகள் முடியப்பெற்ற தூய பட்டுடையைக் கொடுத்து உடுக்கச் செய்து, மேலும் பெறுதற்கரிய பொற்கலத்திலே நீயிர் விரும்பிய வெல்லாம் உண்பீர் உண்பீர் என வேண்டி, பூமணங் கமழ்கின்ற கள்தெளிவை மேன்மேலும் வார்த்துத் தருதலாலே அமையும் அமையும் எனக் கையான் மறித்து அதனைப் பருகி என்பதாம்.

அகலவுரை : அடைந்தார் தம் வெம்மையை அகற்றி அருள் கூர்ந்து இன்பஞ்செய்தலின், அவ் வள்ளலின் தாள் நிழல் என்றார். அணுகுபு குறுகி - எய்தச்சென்று. பழுது - குற்றம்: ஈண்டு ஆகுபெயராய் வறுமையைக் குறித்துநின்றது. என்னை? எவ்வகைக் குற்றத்திற்கும் தான் காரணமாய் நின்று இம்மை மறுமைகளை ஒருசேரக் கெடுத்தலின் என்க.

இன்மை யெனவொரு பாவி மறுமையும்
இம்மையு மின்றி வரும்

என வள்ளுவனார் வறுமையைப் பாவி என்றலும் அதற்குப் பரிமேலழகனார், இருமையும் கெடுத்தற் கொடுமைபற்றிப் பாவி என்றார். கொடியானைப் பாவி என்னும் வழக்குண்மையின், என விளக்கிச் சேறலும் காண்க. இன்று-இல்லையாம்படி என்க அவ்வருட்பார்வை பட்ட மாத்திரையானே தாம் எய்தி நிற்கும் வறுமைத்துயர் மறந்து நெஞ்சினில் இன்பம் ஊறுதல் உண்மையின் நோக்கினையே ஏதுவாக்கினார். இனி, விருந்தோம்புவார்க்கு இன்றியமையாத மெய்யன்பும் இனிய நோக்கும் இன்முகமும் நன்குடையன் என்பார், ஈற்றாவின் நோக்கினை உவமை எடுத்தோதி அனைத்தும் பெறவைத்தார். என்னை? ஆசிரியர் வள்ளுவனாரும் விருந்தோம்புவார்க்கு இப்பண்புகள் இன்றியமையாதன வெனல் கருதி அன்புடைமை அதிகாரத்தை அடுத்து விருந்தோம்பல் அதிகாரத்தையும் அதனை அடுத்து இனியவை கூறல் அதிகாரத்தையும் நிரல்பட வைத்தமை உணர்க. மற்று அவ்வின் சொல்லும் இனிய நோக்கமுடைய வழியே இன்புறுத்தற் பாலதென்பார்,

முகத்தான் அமர்ந்தினிது நோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்  (குறள் - 93)

என, இனிய நோக்கினை விதந்தோதலும் காண்க. மற்று நாலடியினும்,

இரவலர் கன்றாக ஈவோர்ஆ வாக
விரகிற் சுரப்பதாம் வண்மை - விரகின்றி
வல்லவ ரூன்ற வடியாபோல் வாய்வைத்துக்
கொல்லச் சுரப்பதாங் கீழ்  (279)

என வண்மைக்குரிய விருப்பத்திற்கு ஈற்றாவையே உவமை எடுத்தோதுதல் காண்க. அவ்வள்ளலின் வண்மை அவனது இயற்கைப்பண்பே ஆதலன்றி ஒரு சிறிதும் குறியெதிர்ப்பை நீரது அன்றென்பான், நுங்கையது கேளா அளவை என்றான். கையது - அவர்பால் உளதாகிய ஆடல்பாடல் முதலிய கலைகள். கையகத்துள்ள யாழ் எனினுமாம். வண்மையுள்ளம் படைத்த சான்றோர்கள் இரவலரைக் காண்புழி இளங்கன்றை ஊட்ட விரையும் ஆன்போல விரைதலை,

வென்றிப் பல்புகழ் விறலோ டேத்திச்
சென்றது நொடியவும் விடாஅன்  (544-5)

என, மலைபடுகடாத்தினும்,

கடனறி மரபிற் கைதொழூஉப் பழிச்சி
நின்னிலை தெரியா அளவை  (463-4)

எனப் பெரும்பாணாற்றுப் படையினும்,

நீசில மொழியா அளவை  (235)

எனச் சிறுபாணாற்றுப் படையினும்,

குறித்தது மொழியா அளவையின் 

என முருகாற்றுப்படையினும் மறவாமே பிற சான்றோரும் கூறுதல் அறிக. மேன்மேலும் தருதலால் கைகவித்தல் வேண்டிற்று. கைகவி-கைகவித்தலைச் செய்தென்க. போதும் போதும் எனக் கையாற் றடுத்து என்றவாறு. ஒருநாட்போலும் விருப்பினன் என்பார், வைகல் வைகல் என்றார். வைகல் - நாள். இனி, அணிகலன் யானை தேர் குதிரை முதலிய ஏனைப் பரிசிற் பொருள்களின் சிறப்புக் கூறுகின்றார்.

பெறற்கரும் பரிசில்

159-173 : எரியகைந்தன்ன ................ தங்கலோ விலனே

பொருள் : எரி அகைந்தன்ன ஏடு இல் தாமரை - நெருப்புத் தழைத்தாற்போன்ற ஒருவன் செய்ததன்றித் தனக்கென இதழில்லாத தாமரையை சுரி இரும் பித்தை பொலியச் சூட்டி - கடைகுழன்ற கரிய மயிரிலே பொலிவுபெறச் சூட்டி, நூலின் வலவா நுணங்கு அரில் மாலை வால் ஒளி முத்தமொடு பாடினி அணிய - நூலாற்கட்டாத நுண்மையினையும் பிணக்கத்தையும் உடைய பொன்னரிமாலையை வெள்ளிதாகிய ஒளியையுடைய முத்தத்தோடே பாடினி சூடத்தந்து; கோட்டிற் செய்த கொடுஞ்சி நெடுந்தேர் - யானைக்கொம்பாற் செய்த தாமரை முகையினையுடைய நெடிய தேரிலே, ஊட்டு உளைதுயல்வர ஓரி நுடங்கப் பால்புரை புரவி நால்கு உடன்பூட்டி - சாதிலிங்கம் ஊட்டின தலையாட்டம் பொங்கக் கழுத்தின் மயிர் அசையப் பாலையொத்த நிறத்தினையுடைய குதிரைகள் நான்கினைச் சேரக்கட்டி, காலின் ஏழு அடி பின்சென்று - தன் காலாலே ஏழு அடி பின்னே வந்து, கோலின் தாறு களைந்து - ஓட்டுங் கோலிடத்தே தாற்று முள்ளை அகற்றி, ஏறு என்று ஏற்றி-இவ்வாறு ஏறுவாயாக எனக்காட்டி ஏறச்செய்து, வீறுபெறு பேர்யாழ் முறையுளிக் கழிப்பி - ஏனை யாழ்களின் வீறுபெற்ற யாழ்ப்பாணர்க்குக் கொடுக்கு முறைகளை நினக்குத் தந்துவிட்டு, நீர் வாய்த் தண்பனை தழீஇய தளரா இருக்கை நன்பல்லூர நாட்டொடு - நீரை எப்பொழுதும் தன்னிடத்தே யுடைத்தாகிய தண்ணிய மருதநிலஞ் சூழ்ந்த அசையாத குடியிருப்பினையுடைய நன்றான பல ஊர்களையுடைய நாடுகளுடனே, நன்பல் வெரூஉப்பறை நுவலும்-நன்றாகிய பல அச்சத்தை அறிவிக்கும் பறைகள் முழங்கும்படியாக, வெருவரு செலவின் - அஞ்சுதற்குக் காரணமான ஓட்டத்தினையுடைய, பரூஉ பெருதடக்கை வெகுளி வேழம் - பருத்த பெரிய வளைவினை யுடைய கையினையும் சினத்தையும் உடைய யானைகளை, தரவு இடைத் தங்கள் ஓவிலனே - தருதற்றொழிலிடத்தே நிலை பெறுதலை ஒழிதலிலன்;

கருத்துரை : நெருப்புத் தழைத்தாற்போன்ற செயற்கையானன்றி இயற்கையால் தனக்கு இதழற்ற பொற்றாமரை மலரைக் கடைகுழன்ற கரிய மயிரிடத்தே அழகுறச் சூட்டி, நூலாற் கட்டாத நுண்மையினையும் பிணக்கத்தையும் உடைய பொன்னரிமாலையை வெள்ளிய முத்தமாலை பாடினி சூடத் தந்து, யானைக்கொம்பாற் செய்த கொடிஞ்சியையுடைய நெடிய தேரிடத்தே, அரக்கூட்டப்பட்ட தலையாட்டமசையவும் பிடரிமயிர் அசையவும் பால்போன்ற வெண்ணிறமைந்த நான்கு குதிரைகளை ஒருங்கே கட்டித் தன் காலாலே ஏழடி பின்னே வந்து ஓட்டுங்கோலின் கண் தாற்றுமுள்ளே அகற்றி, இங்ஙனம் ஏறுக எனக் காட்டி நும்மைத் தேரிலேற்றிப் பின்னரும் யாழ்ப்பாணர்க்குக் கொடுக்கும் முறைமைகளையும் தந்துவிட்டு, நீர்வளமிக்க மருதநிலஞ் சூழ்ந்த அசையாத குடியிருப்பினையுடைய நன்றாகிய பல ஊர்களையுடைய நாடுகளுடனே அச்சந்தரும் பறைமுழக்கிச் செல்லும் செலவினையுடைய பரிய பெரிய வளைந்த கையினையும் வெகுளியையுமுடைய நல்ல பல யானைகளையும் தருதற் றொழிலிலே நிலைபெறுதலை ஒழிதலிலன் என்பதாம்.

அகலவுரை : எரி - நெருப்பு. அகைதல் - தழைத்தல். ஏடு-இதழ் ஏடில் தாமரை என்றது, செயற்கையானன்றி இயற்கையானே தனக்கு இதழில்லாத பொன்னாற் செய்த தாமரைப்பூ என்றவாறு. சுரியிரும் பித்தை-கடைகுழன்ற கரிய மயிர். பித்தை - ஆண்மயிர். பெண்டிர் தலைமயிரினைக் கூந்தல் என்ப. பித்தை பொலியச் சூட்டி என்றதனாற் பொருநனுக்குச் சூட்டி என்பது போந்தது, சுரியிரும் பித்தை சூழ்ந்து புறந்தாழ்ந்த விரி பூமாழை (மணி 22: 149-50) என்றார் மணிமேகலையினும். பொருநர், பாணர் முதலியோர்க்குப் பொன்மலர் சூட்டுதல் உண்மையை,

அழல்புரிந்த அடர்த்தாமரை
ஐதடர்ந்த நூற்பெய்து
புனைவினைப் பொலிந்த பொலனறுந் தெரியல்
பாறுமயி ரிருந்தலை பொலியச் சூடிப்
பாண்முற் றுகநின் நாண்மகிழ் இருக்கை  (புறம் - 29:1-5)

என்றும்,

நீயவற் கண்ட பின்றைப் பூவின்
ஆடும்வண் டிமிராத் தாமரை
சூடா யாதல் அதனினும் இலையே  (புறம் - 69: 19-21)

என்றும்,

இன்றொடை நல்லிசை யாழ்ப்பாண எம்மைப்போற்
கன்றுடை வேழத்த கான்கடந்து - சென்றடையிற்
காமரு சாயலாள் கேள்வன் கயமலராத்
தாமரை சென்னி தரும்  (புறப் -வெ-மா.216)

என்றும் வருவனவற்றால் அறிக.

பொன்னாலியற்றப்பட்ட மாலையாகலின் நூலின் வலவாமாலை, என்றார். வலவா-புனையாத. நுணங்கு-நுணுகிய தொழிற்றிறமமைந்த என்க. அரில்-பிணக்கம்; பின்னுதல். வாலொளி வெண்மை நிறத்தில் சுடர். பாடினி - பாணத்தி. கோடு - யானை மருப்பு. கொடுஞ்சி -தாமரை மொட்டின் வடிவமாகச் செய்து தேரின் முன்புறத்தே நடப்படும் ஓர் உறுப்பு. அத்தாமரை யானைக்கோட்டாற் செய்ததென்றவாறு; கோட்டினிற்புரி கொடிஞ்சியந் திண்டேர், என்றார் பிறரும். ஊட்டு உளை - அரக்கூட்டப்பட்ட தலையாட்டம் என்னும் குதிரை அணிகலன். துயல்வருதல் - அசைதல். ஓரி - பிடரிமயிர். குதிரைகளில் முழுதும் வெண்ணிறமைந்த குதிரைகளே உயர்ந்தன என்பவாகலின் பால்புரை புரவி என்றார். புரை : உவம உருபு. நால்கு-நான்கு என்னும் எண்ணுப் பெயர்த் திரிசொல். வளைகண் டன்ன வாலுளைப் புரவி துணைபுணர் தொழில் நால்குடன் பூட்டி என்றார் பெரும்பாணாற்றுப்படையினும் நால்குப் பண்ணினர் நால்வரும் ஏறினர் (1774) எனச் சிந்தாமணியினும் வருதல் காண்க. நான்கு குதிரைகளும் ஒத்த உயரினத்து வெண்புரவிகளே என்பார் நால்கு உடன் பூட்டி என்றார்.

காலின் ஏழடி சென்று என்றது, உயர்குடிப் பிறந்தோர் நண்பர் பெரியோர் முதலியோரை வரவேற்கும்போதும் வழிவிடும்போதும் நிரலே ஏழடி எதிர்சென்று வரவேற்றலும், ஏழடி பின்சென்று வழிவிடுதலும் ஆகிய மரபினைக் குறித்து நின்றது. இங்ஙனம் செய்தல் தம்மோ டொத்தாராக வாதல் உயர்ந்தாராக வாதல் கருதிய வழியன்றி நிகழ்தல் மரபன்று. எனவே, கரிகால்வளவன் முடியராசனாக விருந்தும் கலைவாணராகிய நம்மனோரைத் தன்னோடொத்தவராகவே மதித்துப் போற்றும் பெருந்தன்மையுடையன் என்பதனைப் பொருநன் இதனால் விளக்கினான் என்க. இங்ஙனம் ஏழடி செல்லும் மரபுண்மையை,

தழுமா வலிமைந் தவெனத் தளரா
எழுமே ழடியூக் கிநடந்து செலா  (சிந்தா.1384)

என்னும் சிந்தாமணியானும் இச்செய்யுட்கு ஏழடி செல்வது மரபு என நச்சினார்க்கினியர் விளக்கிச் சேறலானும் அறிக.

மறவர் முதலியோர் செலுத்தும் அளவு விரைவாகச் செலுத்தப்படின், இப்பயிற்சியற்ற கலைவாணர் அவ்வேகத்தைப் பொறார் ஆகலின், குதிரைகள் மெல்லவே செல்லவேண்டும் என்று கருதித் தாற்றுக் கோலிற் றூண்டிச்செலுத்தற்குரிய தாற்றுமுள்ளே அகற்றுவன் என்பது கருத்து. பொருநன் குதிரைபூட்டிச் சமைந்து நின்ற தேரில் முன்னர் ஏறிப்பயின்றவன் அல்லனாகலின், இங்ஙனம் ஏறுக எனப் பயிற்றி என்பார், ஏறென்றேற்றி என்றார். தண்பனை-தண்ணிய மருதநிலம். தளரா இருக்கை ஆண்டு வாழும் குடிகள் வற்கடமுதலியவற்றாற் றளராமைக்குக் காரணமான வளமிக்க குடியிருப்பென்க. ஊர-ஊரினையுடையவாகிய. யானைகள் செல்லும்பொழுது அவற்றின் வருகையை அறிந்து மக்கள் ஒதுங்கவேண்டிப் பறையறைதல் வழக்கம். அப் பறையோசை யானையின் வருகையை நினைவூட்டி அச்சந் தோற்றுவித்தலால் வெரூஉப் பறை நுவலும் என்றார். வெரூஉப் பறை நுவலும் வெருவரு செலவு எனச் செலவிற்கு அடையாக்குக. இதனை, நிறையழி கொல்யானை நீர்க்குவிட்டாங்குப் பறையறைந்தல்லது செல்லற்க (56; 32-3) என வரும் கலியானும் அறிக. தரஇடைத் தங்கலோ இலன் எனக் கண்ணழித்து வழங்குதற்கு இடையே தாழ்தல் இலனாவான் எனினுமாம்.

இதுவுமது

173-177 : வரவிடை ................ விடுக்குவனல்லன்

பொருள் : வரவிடை பெற்றவை பிறர் பிறர்க்கு ஆர்த்தி - இங்ஙனம் நுமக்குப் பொருள்வருவாய் தோன்றியவிடத்து நீயிரும் பெற்ற பொருளை நீயிர் வேண்டியவாறே பிறர்க்குப் பிறர்க்குக் கொடுத்து, தெற்றெனச் செலவு கடைகூட்டுதிராயின்-விரைய அவனிடத்தினின்றும் போகின்ற போக்கை முடிவு போக்குவீராயின், பல புலந்து - அது பொறாமற் பலகாலம் புலந்து, நில்லா வுலகத்து நிலைமை தூக்கிச் செல்கென விடுக்குவனல்லன் - புணர்ந்ததொன்று பிரிதல் திண்ணம் புணர்ந்தவாறே யாதொன்றும் நிலைத்துநில்லாது என்னும் இவ்வுலகியலை ஆராய்ந்து பார்த்து நீயிர் செல்வீராக என விடையீந்து நும்மை விரைய விடுவானல்லன்:

கருத்துரை : இவ்வாறாக அவ்வள்ளல் ஈந்த பொருளை நீயிரும் பிறர்க்கீந்து அவனிடத்தினின்றும் பிரிந்துபோகும் நும் செலவினை முடிவுபோக்குவீராயின் அப் பிரிவினைப் பொறாதவனாய்ப் பலகாலும் வருந்திப் புணர்ந்தது புணர்ந்தவாறே நில்லாதென்னும் இவ்வுலகியலைத் தெளிந்து ஆறுதல்கொண்டு நும்மை விரைந்து போக்குவானும் அல்லன் என்பதாம்.

அகலவுரை : வள்ளல்களைப்போன்றே பரிசில் வாழ்க்கைப் பண்புடைக் கலைவாணரும் என்னானும் ஒன்று தங் கையுறப் பெற்றக்காற் பின்னாவதென்று பிடித்திராதே வழங்கும் பெருந்தன்மையுடையராகலின், நீயிரும் பெற்றவை பிறர் பிறர்க்கார்த்தி என்றான். பிறர்க்கார்த்துதல் கூறவே தமர்க்கார்த்துதல் கூறவேண்டாவாயிற்று. இப் பண்புடைமை பரிசிலர்க்குண்மையை,

வள்ளியோர்ப் படர்ந்து புள்ளிற் போகி
நெடிய என்னாது சுரம்பல கடந்து
வடியா நாவின் வல்லாங்குப் பாடிப்
பெற்றது மகிழ்ந்து சுற்றம் அருத்தி
ஓம்பாது உண்டு கூம்பாது வீசி
வரிசைக்கு வருந்துமிப் பரிசில் வாழ்க்கை  (புறம்-47)

என்பதனானும்,

நின்னயந் துறைநர்க்கும் நீநயந் துறைநர்க்கும்
பன்மாண் கற்பினின் கிளைமுத லோர்க்கும்
கடும்பின் கடும்பசி தீர யாழநின்
நெடுங்குறி எதிர்ப்பை நல்கி யோர்க்கும்
இன்னோர்க் கென்னாது என்னொடுஞ் சூழாது
வல்லாங்கு வாழ்தும் என்னாது நீயும்
எல்லோர்க்கும் கொடுமதி மனைகிழ வோயே  (புறம்-163)

என்பதனானும் உணர்க.

தெற்றென - விரைவாக. செலவுகடைக்கூட்டுதல் - போதற்கு உறுதிகொள்ளல். புலந்து - வருந்தி. நில்லாவுலகத்து நிலைமையாவது, புணர்ந்தவர் பிரிவர் என்னும் இயல்பு. இதனை ஆராயின் பிரிவதனால் ஆற்றாமை கொள்ளல் வேண்டா அன்றே. கரிகாலன் அங்ஙனம் தூக்கி ஆற்றாது ஆற்றாமைமிக்கு நீயிர் செல்க என்றான் என்றவாறு. இதற்கு நச்சினார்க்கினியர் செல்வமும் யாக்கையும் முதலியன நிலை நில்லாத உலகத்துப் புகழைச் சீர்தூக்கி என்று உரை கூறினர். நிலைமை ஆகுபெயர் எனவும், நில்லாவுலத்து நிலைமை தூக்கிப் பலபுலந்து செல்கென விடுக்குவனல்லன் என்பாரும் உளர் என்றும் கூறியுள்ளார். கரிகாற்பெருவளத்தானை எய்தினோர் அவனைப் பிரிதலே பெரிதும் அருமை என்பது கருத்து. இனி இத் தொடர்ப் பொருளை :

தொழுது முன்னிற்குவராயின் நோக்கி நீக்கி உண்கெனத் தரத்தரப் பருகிச் சூட்டி அணியப் பூட்டிப் பின் சென்று களைந்து ஏற்றிக்கழிப்பி நாட்டொடு வேழம் தரவிடைத் தங்கல் ஓவிலன்; பின்னரும், ஆர்த்திக் கடைக்கூட்டுதிராயின் புலந்து தூக்கி விடுக்குவன் அல்லன் என இயைபு காண்க. இனி அத்தகையான் யாரெனில் காவிரிபுரக்கும் நாடு கிழவோன் என. மேலே அக் கரிகால்வளவன் காவிரிநாட்டைச் சிறப்பித்து ஓதுகின்றார் என்க. 177 - முதல் 248 - வரையில் ஒரு தொடர்.

கரிகாலன் காவிரிசூழ் நாடு

177-186 : ஒல்லென ............... ஓம்பவும்

பொருள் : ஒல்லெனத் திரை பிறழிய இரும் பவுவத்துக் கரை சூழ்ந்த அகன் கிடக்கை - ஒல் என்னும் ஓசையுண்டாகத் திரைமுரிந்த கரிய கடலின் கரைகளாற் சூழப்பட்ட அகன்ற நிலப்பரப்பின்கண்ணே, மா மாவின் வயின் வயின் - ஒரு மாநிலத்தில் ஒருமாநிலத்தில் திடர்தோறும் திடர்தோறும், தாழ் தாழைத் தண் தண்டலை - தாழ்ந்த தெங்கினையுடைய குளிர்ந்த மரச்சோலைகளிடத்தே, நெல்கூடு கெழீஇய குடிவயினான்-நெற்கூடு பொருந்தின வளமிக்க குடிமக்களிடத்தில், செஞ்சோற்ற பலிமாந்திய கருங்காக்கை - உதிரத்தாற் சிவந்த சோற்றையுடையவாகிய பலியை விழுங்கின கரிய காக்கை, கவவு முனையின் மனை நொச்சி நிழலாங்கண் - உணவை வெறுத்ததாயின் மனையைச் சூழ்ந்த நொச்சியின் நிழலிடத்துக் கிடந்த, ஈற்று யாமைதன் பார்ப்பு ஓம்பவும் - ஈற்றுத் தொழிலையுடைத்தாகிய யாமையினுடைய பார்ப்பைத் தான் பின்பு பசித்த காலத்தில் தின்பதாய்ப் பாதுகாத்து வைப்பவும்;

கருத்துரை : ஒல்லென்னும் ஓசையுண்டாக அலைகள் புரளுகின்ற கரிய கடற்கரைகளாற் சூழப்பட்ட அகன்ற நிலப்பரப்பின்கண்ணே ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள திடர்தோறும் தெங்கஞ் சோலையிடத்தே நெற்கூடுகள் பொருந்திய வளமிக்க குடிமக்களிடத்தே அவரிடம் குருதியாற் சிவந்த சோற்றையுடைய பலியை விழுங்கிய காக்கை அப் பலியை வெறுத்ததாயின், மனையைச் சூழ்ந்த நொச்சியின் நிழலிலே கிடந்த ஆமைப்பார்ப்பினைப் பின்பு பசியுண்டாம்போது தின்னக் கருதிப் பாதுகாவா நிற்பவும் என்பதாம்.

அகலவுரை : இதுமுதல் திணைமயக்கம் கூறப்படுகின்றது. ஈண்டு மருதநிலத்துக் காக்கை நெய்தனிலத்து யாமைப்பார்ப்பைத் தின்னுமென்றல் திணைமயக்கம் கூறியபடியாம். சோணாட்டின் தென்றிசையினும் கீழ்த்திசையினும் கடற்கரை சூழ்ந்திருத்தலால் அந்நாட்டினைக் கடற்கரை சூழ்ந்த நாடு என்றார். பிறழிய - முரிந்த இரும்பவுவம் - கரியகடல்; பெரிய கடலுமாம். அகன் கிடக்கை-அகன்ற நிலப்பரப்பு. ஒவ்வொரு மாஅளவிற்றாகிய நிலந்தோறும் என்பார், மாமாவின் என்றார். மாநிலத்தின் அயலே உள்ள திடர்தோறும் நெற்கூடு பொருந்தியதென்றலால் சோணாட்டு மருதநிலத்தின் நெல்விளைவு மிகுதி விதந்தோதப்பட்டது. மா- நூறுகுழி கொண்ட நிலப்பரப்பு. (வேலி 20- மா கொண்டது) நெல் என்பதனைக் கூடு என்பதனோடு இயைத்துக் கொள்க.

கவவு - அகத்தீடு; ஈண்டு உணவு என்னும் பொருட்டாய் நின்றது. கவவகத்திடுமே (உரி-59) என்பர் தொல்காப்பியனார். செஞ்சோற்ற கருங்காக்கை என்பதன்கண் முரண் தோன்றிச் செய்யுளின்பம் மிகுதலுணர்க. காக்கைக்குச் சோற்றுப்பலி ஈதல் இற்றைக்கும் காணப்பட்ட வழக்கமாம். இதனை வெண்ணெல் வெஞ்சோறு எழுகலத் தேந்தினும் சிறிதென் றோழி ............... விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே (குறுந் - 210 : 3-6) என்றும், வரக்கரைந்தா, லுணங்கலஞ் சாதுண்ண லாமொண் ணிணப் பலி யோக்குவன்மாக், குணங்களஞ் சாற்பொலி யுந் நலசேட்டைக் குலக்கொடியே (திருச்சிற் - 235) என்றும் பிற சான்றோர் கூறுமாற்றானும் அறிக. நெற்கூடு கெழீஇய குடி என்றது. மருதநிலத்துக்குடி என்றும், மனைநொச்சி நிழல் என்றது, நெய்தனிலமாகவும் கொள்க. பார்ப்பு - இளமைப்பெயர்.

அவற்றுட்,

பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற் றிளமை  (தொல்-மர-4)
தவழ்பவை தாமு மவற்றோ ரன்ன  (தொல்-மர-5)

என்றோதுபவாகலின், யாமைப் பார்ப்பென்றார். யாமைப் பார்ப்பினன்ன காமம் காதலர் கையற விடினே (குறுந்-152) என்றார் பிறரும். கவவு முனையின் ஓம்பும் என்றமையாற் பின்பு பசித்துழித்தின்னும் பொருட்டு ஓம்பும் என்று கூறப்பட்டது.

187-188 : இளையோர் ............... செலவும்

பொருள் : இளையோர் வண்டல் அயரவும் - அக்கூடுகெழீ இய குடிவயின் வாழும் மருதநிலத்து மகளிர் நெய்தனிலத்து மணற்குன்றிலே வண்டலிழைத்து விளையாடவும், முதியோர் அவைபுகு பொழுதில் தம் பகைமுரண் செலவும் - முதுமக்கள் நீதிவேண்டி அறவோர் அவைக்களம்புக்க துணையானே அவருளத்தே கிடந்த பகைக்குக் காரணமான மாறுபாடு அகன்று பகைத்தற்குரியாரிடத்தே அன்பு கொள்ளா நிற்பவும்;

கருத்துரை : மருதநிலத்து மகளிர் நெய்தனிலத்து மணற்குன்றிலே விளையாடவும், முதியோர் நீதிவேண்டி அறமன்றம் ஏறியபொழுதே தம்முளத்தே மாறுபாடு அகலவும் என்பதாம்.

அகலவுரை : இளையோர் என்றது, மருதநிலத்து மகளிரை என்க. ஈண்டு முதியோருடைய மாறுபாடு அறமன்றம் ஏறியவுடன் அகலும் என்றது, கரிகாலன் உரைமுடிபு காட்டிய வரலாற்றைக் கருதிற்றென்க. அது வருமாறு : கரிகாற்பெருவளத்தான் இளைஞனா யிருந்த போது மிகவும் சிக்கலான வழக்கினைக் கொணர்ந்தார் சிலர், இவ்விளைஞனோ இவ்வரிய வழக்கினை ஆராய்ந்து அறங்கூறமாட்டுவன் என ஐயுற்றார் என்றும், அவர் அங்ஙனம் ஐயுறுதலைக் குறிப்பான் உணர்ந்து கொண்ட மன்னன் நீயிர் நாளை வாருங்கள், நுங்கள் வழக்கை அறிவுசான்ற முதியோர்களால் ஆராய்ந்து முடிவுகூறச் செய்குவன் எனப் போக்கி மறுநாள் அவ்வாறே அவ்வழக்காளர் வந்தபொழுது தானே நரைத்த மயிர் முதலியவற்றான் முதியோர்போன்று வேடம் புனைந்து கொண்டு அறங்கூறவையத்திருந்து அவ்வழக்கை ஆராய்ந்து முடிவு கூறினன் என்றும்; அம்முடிவு மிகவும் நீதியோடு பொருந்தியிருத்தலைக் கண்டு அவ்வழக்காளரும் பிறரும் மகிழ்ந்தனர் என்றும் கூறுப. இதனை,

இளமை நாணி முதுமை எய்தி
உரைமுடிபு காட்டிய உரவோன் மருக  (4:107-8)

எனவரும் மணிமேகலையானும்,

உரைமுடிவு காணா னிளமையோ னென்ற
நரைமுது மக்க ளுவப்ப - நரைமுடித்துச்
சொல்லான் முறைசெய்தான் சோழன் குலவிச்சை
கல்லாமற் பாகம் படும்

எனவரும் பழமொழியானும், உணர்க.

வழக்கு மாறுபட்டு வந்தோர்க்கு அவ்வழக்கு வீடறுப்பன் என்றவாறு என்றனர் ஆசிரியர் நச்சினார்க்கினியரும்.

189-192 : முடக்காஞ்சி ................ மாந்தி

பொருள் : முடக்காஞ்சிச் செம்மருதின் மடக்கண்ண மயில் - வளைவையுடைய காஞ்சிமரத்தினும் செவ்விய மருதமரத்தினும் இருந்த மடப்பம் பொருந்திய கண்ணையுடைய மயில்கள்; பைம்பாகற் பழம் துணரிய செஞ்சுளைய கனி மாந்தி-பசிய பாகற் பழத்தையும் கொத்தாகக் காய்த்துள்ள சிவந்த சுளையையுடைய பலாப்பழத்தையும் தின்று, ஆல - ஆரவாரியா நிற்பவும் :

கருத்துரை : காஞ்சி மரத்தினும் மருத மரத்தினும் இருந்த மயில்கள் பசிய பாகற்பழத்தையும் சுளையுடைய பலாப்பழத்தையும் தின்று ஆரவாரியா நிற்ப என்பதாம்.

அகலவுரை : ஈண்டுக் குறிஞ்சிநிலப் பறவையாகிய மயில், மருதநிலத்துக் காஞ்சிமரத்தினும் மருதமரத்தினும் இருந்ததென்றல் திணை மயக்கமாம். முடம்-வளைவு. பைம்பாகற் பழம்-பசிய பாகற்பழம். துணரிய - கொத்தாகவுள்ள. சுளைய கனி என்றது பலாப்பழம் என்றவாறு. மயில் பாகற்கனி யுண்ணுதலை, பாகலார்கைப் பறைக்கட் பீலித்தோகை (அகம். 15:4-5) என்றும், பைங்கொடிப் பாகற் செங்கனி நசைஇக், கான மஞ்ஞைக் கமஞ்சூன் மாப்பெடை, யயிரியாற் றடை கரை வயரி னரலும், (அகம்: 177: 9-11) என்றும் பிறர் கூறுமாற்றானும் அறிக. இனி, பைம்பாகல் என்றதனைப் பசிய பலாமரம் என்றே கொண்டு, பசிய பலாமரத்தின் பழங்கள் கொத்தாயுள்ளவற்றில் சிவந்த சுளையுடையனவாய்க் கனிந்தவற்றைத் தின்று எனினுமாம். ஆல என்பதனை, மாந்தி என்பதன் பின்னாக இயைத்துக்கொள்ளுக.

193-207 : அறைக்கரும்பின் .................. சேப்பவும்

பொருள் : அறைக் கரும்பின் - அறுத்தலைச் செய்யும் கரும்புக் கழனிகளிடத்தும், அரிநெல்லின் - அரிதலைச்செய்யும் நெற்கழனிகளிடத்தும் தொழில் செய்கின்ற, இனக்களமர்-திரண்ட உழவருடைய, இசைபெருக-பண்ணொலி மிகுதலாலே அவ்விடத்தின் அகன்றுபோய், வறள் அடும்பின் இவர் பகன்றைத் தளிர்ப் புன்கின் தாழ்காவின் நனைஞாழலொடு மரம் குழீஇய அவண் முனையின் அகன்று மாறி - நீரற்ற இடத்தில் எழுந்த அடும்பினையும் படர்கின்ற பகன்றையினையும் தளிரையுடத்தாகிய புன்கினையும் தாழ்ந்த சோலைகளையுமுடையவாய் அரும்பின் ஞாழலோடே ஏனைமரங்களும் திரண்ட அந்நாட்டை அடைந்து அவ்விடத்தையும் வெறுத்தனவாயின் அவ்விடத்தை விட்டகன்று மாறிப்போய், அவிழ்தளவின் அகன்தோன்றி நகுமுல்லை உகு தேறு வீப்பொற்கொன்றை மணிக்காயா நற்புறவின் நடைமுனையின் - மலர்கின்ற செம்முல்லையினையும் பரந்த காந்தள் மலரினையும் பொன்னிறம்போன்ற நிறமுடைய கொன்றை மலரினையும் மணிபோன்ற காயா மலரினையும் உடைய நல்ல முல்லைக் காட்டிலே சென்றும் அம்முல்லை நில ஒழுக்கத்தையும் வெறுத்தனவாயின் பின்பு, சுறவழங்கும் இருள் பவுவத்து இறவருந்திய இன நாரை - சுறாமீன் திரியும் கரிய கடலிடத்தே சென்று இறவினைத் தின்ற திரண்ட நாரைகள், பூம்புன்னைச் சினைச் சேப்பின் - அக் கடற்கரையிடத்தே பூக்களையுடைய புன்னையின் கொம்புகளிலே தங்கின், ஓங்கு திரை ஒலிவெரீ இத் தீம்பெண்ணை மடற்சேப்பவும் - ஆண்டு எழுந்து மறியும் உயர்ந்த அலையின் ஆரவாரத்திற்கு வெருவி இனிய பனையினது மடலிலே தங்கவும்;

கருத்துரை : நாரைகள் மருதநிலத்தே கரும்பறுப்போரும் நெல்லரிவோருமாகிய திரண்ட உழவரின் பாட்டொலி வெருவி அவ்விடத்தின் அகன்றுபோய் அடும்பு பகன்றை முதலியன படர்ந்ததும், புன்கினையுடையதும், ஞாழலையுடையதும், ஏனைமரங்கள் குழீஇயதுமாகிய இடத்தை எய்தியும், அவ்விடம் வெறுத்துழி தளவு முதலியன உடைய முலைக்காட்டினை எய்தியும், அவ்விடத்தையும் வெறுத்துழி, கரிய கடலிலே சென்று மீனைத் தின்று வந்து கடற்கரையிலே உள்ள பூத்த புன்னைமரச் சினைகளிலே தங்காநிற்ப, அவ்விடத்தே எழும் அலைகளின் ஆரவாரத்தை அஞ்சிப் பின்னரும் ஆண்டுள்ள உயரிய பனைமரங்களிலே சென்று தங்கா நிற்பவும் என்பதாம்.

அகலவுரை : அறை - அறுத்தலையுடைய. அரி - அரிதலையுடைய. கரும்பு நெல் என்பன அவற்றையுடைய நிலங்கட்கு ஆகுபெயர் என்க. நெல்லரிவோர் அந்நிலங்களின் உறையும் பறவை முதலியன அகலுதற் பொருட்டுப் பறையறைவர் என்பதனை, வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇ (348: 1 எனவரும் புறப்பாட்டானும், வெண்ணலரிநர் பின்றைத் ததும்பும் தண்ணுமை வெரீஇய தடந்தாணாரை என்றும், வெண்ணெ லரிநர் மடிவாய்த் தண்ணுமை - படுபுள்ளோப்பும் (40 : 13 - 204: 10 - 11) என்றும் வரும், அகப்பாட்டானும் வெண்ணெ லரிநர் தண்ணுமை வெரீஇ 471) என வரும் மலைபடுகடாத்தானும் உணர்க. இனக்களமர் என்றதற்கு ஓரினச்சுற்றத்தாராகிய உழவர் எனினுமாம். நீர்வறண்ட மணலிடத்தே படரும் அடும்பு என்றார். வறளடும்பு என்றார். இவர்தல்-படர்தல். தாழ்கா - தழைத்துத் தாழ்ந்த சோலை. நனை-தளிர். அவண் - அவ்விடம். முனையின் - வெறுத்தால்.

அவிழ்தளவு -மலர்ந்த செம்முல்லை. நகுமுல்லை-மலர்ந்த முல்லை: வினைத்தொகை. தேறு - தேற்றாமரம். வீ - மலர் தோன்றி - காந்தள். நற்புறவு - நல்ல முல்லைக்காடு. நடை - ஒழுக்கம்; அடையெனக் கண்ணழித்துச் சேர்தல் எனினுமாம். சுறா, என்பது கடைகுறுகிச் சுற என நின்றது குறியதன் கீழ் ஆக்குறுகலும் என்பதோத்தாகலான். சுறாமீன் என்க. இறவு - இறால் மீன். இனநாரை - கூட்டமான நாரைகள். பெண்ணை - பனை. சேப்பவும்-தங்கவும். இதனானும் திணைமயக்கமே கூறப்படுதலறிக.

208-213 : கோட்டெங்கின் ................ பலபெயர

பொருள் : கோள் தெங்கின் குலைவாழை - குலைகொண்ட தெங்கினையும் குலையினையுடைய வாழையினையும், கொழுங்காந்தள் மலர் நாகத்து - கொழுவிய காந்தளினையும் மலர்ந்த சுரபுன்னையினையும், துடிக்குடிஞைக் குடிப்பாகத்து - துடியோசைபோலும் ஓசையினை உடைய பேராந்தையினையுமுடைய குடியிருப்பை உடைத்தாகிய பாக்கத்திலே, யாழ்வண்டின் கொளைக்கேற்பக் கலவம் விரித்த மடமஞ்ஞை - யாழோசைபோலும் வண்டினது பாட்டைக் கேட்டு அதற்குப் பொருந்தத் தோகையை விரித்த மடப்பத்தையுடைய மயில், நிலவு எக்கர்ப் பல பெயர - நிலவு போலும் இடுமணலிலே பலபகுதிப்பட ஆடா நிற்பவும்;

கருத்துரை : குலைமிக்க தெங்கினையும் குலையையுடைய வாழையினையும், கொழுத்த காந்தளினையும் மலர்ந்த சுரபுன்னையையும் துடிபோன்று முழங்கும் பேராந்தையினையும் உடைய சேரிகளையுடைய நெய்தனிலத் தூர்களிலே யாழிசைபோன்று பாடும் வண்டுகளின் இன்னிசை கேட்டு அவ்விசைக்குப் பொருந்தும்படி எக்கர் மணலின் மேலே மயில்கள் தோகையை விரித்து ஆடாநிற்பவும் என்பதாம்.

அகலவுரை : குறிஞ்சிநிலப்பறவையாகிய மயில், நெய்தனிலத்தே எக்கர் மணலில் ஆடும் என்றது, திணைமயக்கம் கூறியவாறாம். கோள் - குலை. கோட்டெங்கிற் குழைவாழை (19) என இவ்வடி பட்டினப் பாலையினும் வருதல் காண்க. கோள்தெங்கு, குலைவாழை. கொழுங்காந்தள், மலர்நாகம் என்பன. அம் மரங்களின் செழிப்புடைமையை விளக்குதலறிக.

குடிஞை - பேராந்தை. இதன் ஒலி துடியின் ஒலிபோன்றிருக்கும் என்பதனை, விரலூன்று படுகண் ஆகுளி கடுப்பக் குடிஞை இரட்டும் நெடுமலை (மலைபடு - 140-41) எனவும், உருமிடி மகுளியிற் பொருள் தெரிந் திசைக்கும், கடுங்குரற் குடிஞை நெடும்பெருங் குன்றம் (அகம் - 19:4-5) எனவும், குடிஞைத் துடிமருள் தீங்குரல் (புறம் 370 : 6) எனவும் பிற சான்றோர் கூறுமாற்றானும் உணர்க. பாக்கம் - மருவூர்ப்பாக்கம் எனினுமாம். கொளை - பாட்டு. கலவம்-தோகை. மஞ்ஞை - மயில். எக்கர் - இடுமணல். நிலவு : மணலுக்கு நிறவுவமை. நிலவுக் குவித்தன்ன மோட்டுமணல் அடைகரை (நற் - 159:4) நிலவுத் தவழ் மணற்கோடு (நற் -163:5) நிலவுக் கானல் (மதுரைக்கா - 114) நிலவடைந்த இருள்போல வலையுணங்கு மணல் முன்றில் (பட்டின - 82-3) எனப் பிறரும் கூறுதல் காண்க. பல-பலப்பல பகுதிப்பட. பெயர-ஆட.

214-215 : தேன் ............. மறுகவும்

பொருள் : தேன் நெய்யோடு கிழங்கு மாறியோர் - தேனாகிய நெய்யோடே கிழங்கையும் விற்றவர்கள், மீன் நெய்யொடு நறவு மறுகவும் - மீனினது நெய்யோடே நறவையும் பண்டமாற்றாகக் கொண்டுபோகா நிற்பவும்.

கருத்துரை : தேனையும் கிழங்கையும் விற்றோர் அவற்றின் விலையாக மீன் நெய்யையும் நறவையும் கொண்டு போகவும் என்பதாம்.

அகலவுரை : தேனெய் : இருபெயரொட்டுப் பண்புத் தொகை; தேனாகிய நெய் என்க. தேனும் கிழங்கும் என்றதனால், இவர்கள் குறிஞ்சிநில மாக்கள் ஆதலும், மீனெய் என்றதனால் அந்நிலம் நெய்தல் என்பதும் போந்து இதன் கண்ணும் திணை மயக்கம் கூறியதறிக. மீன் நெய் - மீனின் நிணத்தை உருக்கிச் செய்த நெய். மாறியோர் - விற்றவர் பண்டைத் தமிழகத்தே ஒருபொருட்கு மற்றொரு பொருளைப் பண்டமாற்றுச் செய்தலே பெரும்பான்மை வழக்கமாகும். இவ்வழக்கமுண்மையை,

குறுநெறிக் கொண்ட கூந்தல் ஆய்மகள்
அளைவிலை யுணவிற் கிளைமுத லருத்தி
நெய்விலைக் கட்டிப் பசும்பொன் கொள்ளாள்
எருமை நல்லான் கருநாகு பெறூஉம்

எனவரும் பெரும்பாணாற்றுப் படையானும் உணர்க. மறுநல் - செல்லல்.

216-217 : தீங்கரும்போடு ............... மறுகவும்

பொருள் : தீங்கரும்போடு அவல் வகுத்தோர் - இனிய கரும்போடே அவலைக் கூறுபடுத்தி விற்றோர், மான் குறையொடு மதுமறுகவும் - மானினது தசையோடே கள்ளையும் பண்டமாற்றாகக் கொண்டு போகவும்.

கருத்துரை : இனிய கரும்பையும் அவலையும் விற்றோர் அவற்றிற்கு மாற்றாக மான் தசையையும் கள்ளையும் கொண்டுபோகவும் என்பதாம்.

அகலவுரை : கரும்பும் அவலும் விற்றோர் மருதநிலத்து மாக்களும் மான் தசையும் கள்ளும் குறிஞ்சி நிலப் பொருளும் ஆதலின் இதன்கண்ணும் திணைமயக்கம் வந்தமை காண்க. அவல் விற்போர் அதனைக் கூறுபடுத்தி விற்பாராகலின் வகுத்தோர் என்றார். வகுத்தல் : ஆகு பெயர் என்க. குறை - தசை. வாளாற் குறைக்கப்படுதலின் குறை என்பது பெயராயிற்று.

218-221 : குறிஞ்சி ......... நுவல

பொருள் : குறிஞ்சி பரதவர் பாட - குறிஞ்சிப் பண்ணைப் பரதவர் பாடவும், நெய்தல் நறும்பூங் கண்ணி குறவர் சூட - நெய்தல் என்னும் நறிய பூவாற் புனைந்த கண்ணியைக் குறவர்கள் சூடிக்கொள்ளவும், கானவர் மருதம் பாட - முல்லை நிலத்து மாக்கள் மருதப்பண்ணைப் பாடவும், அகவர் நீல நிறமுல்லைப் பல்திணை நுவல - உழவர்கள் நீல நிறமுடைய முல்லைக்கொடி படர்ந்த பலவாகிய காட்டுநிலத்தைக் கொண்டாடவும்;

கருத்துரை : பரதவர் குறிஞ்சிப் பண்பாடவும், நெய்தற்பூங்கண்ணியைக் குறவர் சூட்டிக்கொள்ளவும், ஆயர்கள் மருதப்பண் பாடவும், உழவர் முல்லை நிலத்தினைப் புகழவும் என்பதாம்.

அகலவுரை : குறிஞ்சி - குறிஞ்சிப் பண். இது குறிஞ்சி நிலத்திற்குரிய பண். இதனை நெய்தனிலமாக்களாகிய பரதவர் பாடினர் என்றலும், நெய்தல் நிலத்திற்குரிய பூவினைக் குறவர்கள் சூடினர் என்றலும், முல்லை நிலமாக்கள் மருதநிலப் பண்ணைப் பாடினர் என்றலும் உழவர் முல்லை நிலத்தைப் புகழ்ந்தனர் என்றலும் இதன்கண் திணைமயக்கம் ஆதல் அறிக.

கானவர் - முல்லைநிலமாக்கள்; ஆயர்கள். மருதம் - மருதப்பண். அகவர் - உழவர். நீல்நிறம் - நீலநிறம்; இஃது முல்லைக்கொடியின் நிறம் என்க. இனி முல்லை என்பதற்கு முல்லை நிலம் எனப் பொருள் கொண்டு முல்லை நிலம் காடு நிறைந்ததாகலின் நீனிறக்காடெனக் கொள்ளலுமாம்.

222-225 : கானக்கோழி ................. வரையிறுப்ப

பொருள் : கானக்கோழி - முல்லை நிலத்துக் காட்டுக் கோழிகள், கதிர் குத்த - மருதநிலத்து நெற்கதிரைத் தின்னவும், மனைக்கோழி தினைக்கவர - மருதநிலத்தின் மனையிற் கோழிகள் குறிஞ்சிநிலத்துத் தினையைத் தின்னவும், வரைமந்தி கழி மூழ்க - மலையிடத்திற்குரிய மந்திகள் கழியிலே மூழ்கவும், கழிநாரை வரையிறுப்ப - கழியிற்றிரியும் நாரைகள் மலையிலே கிடக்கவும்;

கருத்துரை : காட்டுக்கோழிகள் மருதநிலத்து நெற்கதிரைத் தின்னவும், மருதநிலத்து மனைக்கோழிகள் தினையைத் தின்னவும், மலையிடத்து மந்திகள் உப்பங்கழிகளிலே மூழ்கவும், கழியிற்றிரியும் நாரைகள் மலையிலே கிடப்பவும் என்பதாம்.

அகலவுரை : கானக்கோழி - காட்டில் வாழும் கோழிகள்; கானாங்கோழி என்னும் கம்புட் கோழியையும் கானக்கோழி என்பதுண்டு. அது ஒருவகை நீர்ப்பறவை. இங்குக் கூறியது காட்டில் வாழும் கோழி என்னும் பொருட்டு குத்தல் - கொத்துதல்; தின்னல் என்னும் பொருட்டு. மனைக்கோழி மருதநிலத்து மனைக்கட் கோழி என்க. வரை-மலை. மந்தி - குரங்கு. கழி - கடற்கரையருகிலுள்ள நீண்ட நீரோடைகள். இறுப்ப - தங்காநிற்ப.

177-முதல், 225-வரையில் உள்ள அடிகள் திணை மயக்கம் கூறியன. இவ்வாறு திணைமயக்கங் கூறுதல் ஒரு நிலத்தின் வாழ் உயிர்க்கு மற்றொரு நிலத்தின் வாழ் உயிர்கள் உதவியாக அமைந்தன என்னற் பொருட்டென்க. எனவே நானிலக் கருப்பொருளும் நானில மாந்தர்க்கும் பயன்றரும்படி அமைந்தன என்றவாறு. இனி நானிலங்களும் ஒன்றற்கொன்று அணித்தாக அமைந்துள்ளன என்பதை அறிவித்தற் பொருட்டெனினுமாம். ஈண்டு நானிலமும் ஒன்றனோடு ஒன்று ஒன்றிப் பொருந்துமாறு இனிதின் வாழ்ந்தமைக்குக் கரிகாலன் செங்கோன்மையை ஏதுவாக்குதல் அறிக.

226-231 : தண்வைப்பின் ............... குருசில்

பொருள் : தண்வைப்பின் நால்நாடு குழீஇ - இவ்வாறு ஒன்றனோடொன்று பொருந்துமாறு குளிர்ந்த வைப்புக்களையுடைய நான்கு வகை நிலக் கூறுபாடுகளையுடைய நாடுகள் திரண்டு, மண்மருங்கினான் மறுவின்றி ஒருகுடையான் ஒன்று கூற-இம் மண்ணுலகத்தே குற்றமில்லாமல் தனது ஒருகுடையினாலே தன் ஆணை ஒன்றனையே உலகம் கூறும்படியாகவும், பெரிது ஆண்ட பெருங்கேண்மை-நெடுங்காலம் உலகையாண்ட - பெரிய நட்பையும், அறனொடு புணர்ந்த திறன் அறி செங்கோல் - அறத்தோடு பொருந்திச் செல்லும் வழியை உலகம் அறிதற்குக் காரணமான செங்கோலையும் உடைய, அன்னோன் - அக் கரிகாற் பெருவளத்தான், வாழி-இனிதே வாழ்வானாக, வென்வேற் குருசில் - வெல்கின்ற வேற்படையையுடைய தலைவன்;

கருத்துரை : குளிர்ந்த வைப்புக்களையுடைய நானிலங்களும் ஒருசேரத் திரண்டு இம் மண்ணுலகத்தே குற்றமறத் தன் ஒரு குடையாலே தன் ஆணையையே உலகம் கூறும்படியாக நெடுங்காலம் உலகை ஆண்ட பெரிய நட்பையும் அறத்தோடு பொருந்திச் செல்லும் நெறியை உலகம் அறிதற்குக் காரணமான செங்கோலையும் உடைய அக் கரிகாலன் ஆகிய வெல்கின்ற வேலையுடைய தலைவன் வாழ்வானாக என்பதாம்.

அகலவுரை : மண்மருங்கினான்-மண்ணுலகத்தே: வேற்றுமை மயக்கம். மறு-குற்றம். செங்கோன்மையிற் பிறழாதவாறு என்றபடி. ஒருகுடையான் ஆண்ட என்றது. இவ்வுலகம் முழுதும் பொதுநீக்கி ஆண்ட என்றவாறு. இக் கரிகாற் பெருவளத்தான் வடாஅது இமயம் வரை வென்றடிப் படுத்தி ஆண்ட செய்தியைச் சிலப்பதிகாரத்தே,

இருநில மருங்கிற் பொருநரைப் பெறாஅச்
செருவெங் காதலிற் றிருமா வளவன்
வாளுங் குடையும் மயிர்க்கண் முரசும்
நாளொடு பெயர்த்து நண்ணார்ப் பெறுகவிம்
மண்ணக மருங்கின்என் வலிகெழு தோள்எனப்
புண்ணியத் திசைமுகம் போகிய அந்நாள்
அசைவி லூக்கத்து நசைபிறக் கொழியப்
பகைவிலக் கியதிப் பயங்கெழு மலையென
இமையவர் உறையும் சிமையப் பிடர்த்தலைக்
கொடுவரி ஒற்றிக் கொள்கையிற் பெயர்வோற்கு   (சிலப். 5: 89-98)

என இளங்கோவடிகளார் இயம்புமாற்றானும் உணர்க. குடிதழீஇக் கோலோச்சிய மன்னன் என்பார், பெருங்கேண்மை என்றார். உலகத்தை அறநெறிச் செலுத்தலே செங்கோலரசன் தலையாய கடனாகலின், அறனொடு புணர்ந்த திறனறி செங்கோல் என்றார். அறன்-ஈண்டு அரசற்கு ஆன்றோர் வகுத்த அறம் என்க. செங்கோலையுடைய கரிகாலன் என்று நினைத்தவழி அவன் தனக்குச் செய்த நன்றி நினைவுக்கு வருதலின், செய்ந்நன்றி பேணுவான் அன்னோன் வாழி என அம்மன்னனை வாழ்த்தினான் என்க. வாழி: ஈண்டுப் படர்க்கைக்கண் வந்த வியங்கோள் வினைமுற்று; ய என்னும் இறுதி கெட்டு நின்றது. வென் வேல் - வெல்கின்ற வேல்-குருசில்-தலைமையுடையோன்.

காவிரிச் சிறப்பு

232-239 : மன்னர் ................ ஒழுகி

பொருள் : மன்னர் நடுங்கத் தோன்றி - தன் பகையரசர் நடுங்கும்படி விளங்கி, பன்மாண் எல்லைதரு நன் பல்கதிர் பரப்ப-பல்வேறு மாண்புகளையுடைய பகற்பொழுதைத் தருகின்ற ஞாயிறு பலவாகிய கதிர்களைப் பரப்புகையினாலே, குல்லை கரியவும் - கஞ்சங்குல்லை தீயவும், கோடு எரி நைப்பவும் -மரங்களினுடைய கொம்புகளை நெருப்புத் தின்னவும், அருவி மாமலை நிழத்தவும்-அருவி பாய்தலைப் பெரிய மலைகள் தவிர்ப்பவும், மற்றக் கருவி வானம் கடல் கோள் மறப்பவும்-இவை ஒழிந்த தொகுதியை உடைய முகில் கடலிடத்தே நீர் முகத்தலை மறந்தொழியவும், பெருவறனாகிய பண்பில் காலையும்- பெரிய வற்கடம் உண்டாகிய நற்குணமில்லாத காலத்தும், நறையும் நரந்தமும் அகிலும் ஆரமும் துறைதுறைதோறும் பொறை உயிர்த்து ஒழுகி -நறைக் கொடியும் நரந்தம் புல்லும் அகிலும் சந்தனமும் துறைதோறும் துறைதோறும் தனக்குச் சுமையாயவற்றை ஒதுக்கி இளைப்பாற நடந்து;

கருத்துரை : தன் பகையரசர் நடுங்கும்படி விளங்கி, பலமாட்சிமைப்பட்ட பகலைச் செய்யும் ஞாயிறு கதிர்களைப் பரப்புதலாலே கஞ்சங்குல்லை தீய்ந்து போகவும் மரங்களின் கொம்புகளைத் தீயுண்ணவும், மலைகளில் அருவிகள் இல்லையாகவும் முகில்கள் கடல்நீரை முகத்தலை மறந்தொழியவும், பெரிய வற்கடம் உண்டான நற்குணமில்லாத காலத்தும் நறைக் கொடியும் நரந்தம்புல்லும் அகிலும் சந்தனமுமாகிய சுமைகளைச் சுமந்து கொணர்ந்து அவையிற்றை நீர்த்துறை தோறும் போகட்டு இளைப்பாறி இயங்கி என்பதாம்.

அகலவுரை : தோன்றி என்னும் எச்சம், நாடு கிழவோன் என, என்றதன்கண் கிழவனாயிருத்தல் வினையைக் கொண்டு முடியும். பன்மாண் என்பது முதல் உள்ள அடிகள் காவிரிக்கு அடையாக வந்தன. பன்மாண் என்பதனைத் தருநனுக்கு ஏற்றிக் கூறுக. எல்லை-பகல். தருநன் - தருகின்றவன். எனவே, ஞாயிறு என்றவாறு. எல்லை தருநன் பல்கதிர்ப்பரப்பி என்றது, கோடைக்காலம் நீடி என்றவாறு. குல்லை-கஞ்சங்குல்லை என்னும் செடி (கஞ்சாச் செடி). இச்செடி கொடிய வெயிலையும் தாங்கும் நீர்மையது. அது தீய்ந்ததெனவே ஏனைப் புற்பூண்டுகள் அழிந்தமை கூறவேண்டாவாயிற்று. கோடு-மரக்கொம்புகள். நைத்தல்-சுட்டழித்தல். பரந்துபடு கூரெரிநைப்ப மரந்தீயுற்ற (நற்-177-12) என்றார் பிறரும் நிழத்தல்-அழித்தல்: ஈண்டு இல்லையாக்குதல் என்னும் பொருட்டு. கருவி இடி மின் முதலிய தொகுதிகள். பண்பு-நற்குணம். இதுகாறும் வற்கடத்தின் இயல்பு கூறி இங்ஙனம் உலகில் வற்கடம் நிகழும்போது இவ்வாறு காவிரிநாடு புரக்கும் என மேலே கூறுகின்றார். இங்ஙனமே, காவிரிப் பேரியாற்றின் சிறப்பினை,

வசையில் புகழ் வயங்கு வெண்மீன்
திசைதிரிந்து தெற்கேகினும்
தற்பாடிய தளியுணவிற்
புட்டேம்பப் புயன்மாறி
வான்பொய்ப்பினுந் தான்பொய்யா
மலைத்தலைய கடற் காவிரி
புனல்பரந்து பொன்கொழிக்கும்

எனப்பட்டினப்பாலையினும்,

கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும்
விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும்
காவிரிப் புதுநீர்க் கடுவரல் வாய்த்தலை

எனச் சிலப்பதிகாரத்தும்,

கோணிலை திரிந்து கோடை நீடினும்
தானிலை திரியாத் தண்டமிழ்ப் பாவை 

என, மணிமேகலையினும் பிற சான்றோரும் கூறுதல் காண்க. நறை-மணமுடைய ஒருவகைக் கொடி. நரந்தம் மணமுடைய ஒருவகைப் புல். ஆரம்-சந்தனம். நறுவீ நாகமும் அகிலும் ஆரமும் துறையாடு மகளிர்க்குத் தோட்புணை யாகிய, பொருபுனல் தரூஉம் போக்கரு மரபின் (116-8) என்றார் சிறுபாணாற்றுப்படையினும். பொறை-சுமை. இவையிற்றைக் காவிரிநீர் மிகுதியாகச் சுமந்து வருதல் தோன்றப் பொறையுயிர்த்து என்றார். துறைதோறும் இத்தகைய மணப் பொருள்களைக் கொணர்ந்து காவிரிநீர் ஒதுக்கும் என்க. புனலாடு மகளிர்க்கு இவையிற்றைப் பரிசிலாகக் காவிரித்தாய் கொணர்ந்து நல்கினாள் என்க.

நூன் முடிவு

240-248 : நுரைத்தலை ............... நாடுகிழவோனே

பொருள் : நுரைத் தலைக் குரைப் புனல் வரைப்பு அகம் புகுதொறும் - நுரையைத் தலையிலேயுடைய ஆரவாரத்தையுடைய நீர் குளத்திலுங் கோட்டகத்திலும் புகுந்தோறும், புனல் ஆடும் மகளிர் கதுமெனக் குடைய - நீராடும் மகளிர் கடுகக் குடைந்து விளையாட, கூனிக்குயத்தின் வாய்நெல் அரிந்து சூடு கோடு ஆகப் பிறக்கி-குனிந்து நின்று அரிவாளின் வாயாலே நெல்லையறுத்துச் சூட்டை மலையாக அடுக்கி, நாள்தொறும் குன்று எனக் குவைஇய குன்றாகக் குப்பை-நாள்தோறும் கடா விட்டு மேரு வென்னும்படி திரட்டின தொலையாத நெற்பொலி, கடுந்தெற்று மூடையின் இடங்கெடக் கிடக்கும்-நெருங்கத் தெற்றின மூடையின் வெற்றிடம் இல்லையாம்படி யாண்டும் கிடத்தற்குக் காரணமான செந்நெல் விளையாநின்ற, சிறைகொள் வேலி-வரம்பு கட்டின ஒரு வேலி அளவிற்றாகிய நிலம், ஆயிரம் விளையுட்டாக-ஓராயிரக்கலம் என்னும் அளவிற்றாகிய நெல்லை விளைவதாம்படி, காவிரி புரக்கும் நாடுகிழவோன் - காவிரியாற்றாலே பாதுகாக்கப்படும் நாடு தனக்கே உரித்தாம் தன்மையுடையோன்.

கருத்துரை : நுரையினையுடையதும் ஆரவாரத்தையுடையதுமாகிய நீள் குளத்திலும் கோட்டகத்தினும் புகுந்தோறும் நீராடுகின்ற மகளிர் கடுகக் குடைந்துவிளையாடாநிற்ப, களமர் மிகவளைந்து நின்று அரிவாள் வாயாலே நெற்கதிரினை அறுத்துச் சூட்டினை மலையாக அடுக்கி நாள்தோறும் மேருவென்னும்படி குவித்ததொலையாத நெற்பொலி நன்கு தைத்த மூடைகளிலே குதிர் முதலியவற்றில் இடமில்லாமையாலே யாண்டும் கிடவாநின்ற செந்நெல்விளைகின்ற வரம்பு கட்டப்பட்ட ஒருவேலி நிலம் ஆயிரங்கல நெல் விளைவதாம்படி காவிரியாற்றாலே பாதுகாக்கப்படுகின்ற நாடுமுழுதும் தனக்கே உரித்தாம் தன்மையுடையோன் என்பதாம்.

அகலவுரை : வறனாகிய காலையும் புனல் ஒழுகிப் புகுந்தோறும் மகளிர் குடையக் கூனியரிந்து பிறக்கிக் குவைஇய குப்பை மூடையின் குதிர் முதலியவற்றில் இடமின்மையாலே யாண்டும் கிடக்கும் நெல்லை விளைகின்ற ஒரு வேலி ஆயிரம் விளையுட்டாகக் காவிரிபுரக்கும் நாடு என்க.

குரைப் புனல் - ஆரவாரத்தையுடைய புனல் என்க. காவிரிப் புனலின் ஆரவாரத்தை,

உழவ ரோதை மதகோதை உடைநீ ரோதை தண்பதங்கொள்
விழவ ரோதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி (சிலப்-7: ஆற்றுவரி-4)

என்றும்,

காவிரிப் புதுநீர்க் கடுவரல் வாய்த்தலை
ஓவிறந் தொலிக்கும் ஒலி  (சிலப்-10:108.9)

என்றும் ஆசிரியர் இளங்கோவடிகளார் கூறுமாற்றானும் அறிக. கதும் என-கடுக சூடு-கதிர்க்குவியல். கோடு-மலை. ஆக: உவம உருபுப் பொருளைத் தந்து நின்றது. பிறக்கி - அடுக்கி. குவைஇய-குவித்த. குன்றா-குறையாத. இடங்கெடக் கடந் தெற்றிமூடையிற் கிடக்கும் என்றதற்கு உழவர் மனைகளிலே வைத்தற்கு இடம் போதாமையானே மூடையாகவே யாண்டும் கிடக்கும் எனப் பொருள் கோடல் சிறப்பாம். நெல்விளைகின்ற வேலிநிலம் ஆயிரக்கலம் விளைவதாம்படி என்க. விளையுட்டு - விளைவுடையது. புரத்தல்-உயிர்களை ஓம்புதல். காவிரி புரத்தற்குக் காரணம் அவனது செங்கோலே ஆதலின் இதனானும் கரிகாலனையே சிறப்பித்தவாறு காண்க. ஆசிரியர் இளங்கோவடிகளாரும்,

வாழி யவன்றன் வளநாடு மகவாய் வளர்க்குந் தாயாகி
ஊழி யுய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவேரி
ஊழி யுய்க்கும் பேருதவி ஒழியா தொழுகல் உயிரோம்பும்
ஆழி யாள்வான் பகல்வெய்யோன் அருளே வாழி காவேரி  (சிலப்.கானல்.27)

என்றோதுதல் காண்க. வேலி-ஒரு நீட்டலளவை. ஆயிரம் : கலத்திற்கு ஆகுபெயர். ஒருவேலி ஆயிரங் கலம் விளையும் என்பதைச் சோணாட்டில் இற்றை நாளினும் சில உழவர்கள் விளைவித்துக் காட்டுகின்றனர். வேலி யாயிரம் விளைக நின் வயலே (புறம் 341:21) என்றார் பிறரும். இச்சிறப்பினைப் பிற்றைநாட்புலவரும், வாலிதாம் முளை ஒருபுறம் வளர் செறு வொருசார், பாலினெல்லொருசார் ஒரு சாரரிப் பறம்பு, சாலி வேலையோர் சாரிவை தலைமயக் குறலால், வேலியாயிரம் விளையுளென் பதுமிதன் மேற்றே (சீகாழித். திருநக-9) எனப் போற்றிக் கூறலுங் காண்க.

இனி, 177 ஒல்லென என்பது முதல் 248-கிழவோனே என்னும் துணையும் தொடர்ந்த இத் தொடர்ப் பொருளை, பார்ப்போம்பவும். அயரவும், செலவும், மயிலாலவும், நாரை மடற் சேப்பவும், மஞ்ஞை பல பெயரவும், மாறியோர் மறுகவும் வகுத்தோர் மறுகவும், பரதவர் பாடவும், குறவர் சூடவும், கானவர் பாடவும், அகவர் நுவலவும், கானக் கோழி குத்தவும், மனைக்கோழி தினை கவரவும், மந்தி மூழ்கவும், நாரை இறுப்பவும், நானாடு குழீஇ மறுவின்றி ஒன்று கூற ஆண்ட செங்கோல் அன்னான் வாழி; வென்வேற் குரிசில்; அவன் யாரெனில்? காவிரி புரக்கும் நாடு கிழவோன் எனக் கூட்டுக.

இனி, இப்பாட்டு முழுதும் தொடர்ந்த பொருளை : பொருந! கோடியர் தலைவ! அறிந! மேம்படுந! கிழவ! கடவுட் கழிப்பிய பின்றை நெறிதிரிந் தொராது ஆற்றெதிர்படுதலும் நோற்றதன் பயனே; போற்றிக் கேண்மதி! நின் இரும்பே ரொக்கலொடு பசியொரால் வேண்டின், நீடின்று எழுமதி! யானும், இன்மைதீர வந்தனன்; இளையோன் சிறுவனும் குரிசிலுமாகிய கரிகால் வளவன் தாணிழல் மருங்கிற் குறுகி முன்னிற்குவிராயின், நாட்டொடு வேழம் தரத் தங்கலோவிலன் (அவன் யாரெனில்) மன்னர் நடுங்கத் தோன்றி நாடுகிழவோன் என அணுகக் கொண்டு காண்க.

வெண்பா

ஏரியும், ஏற்றத் தினானும், பிறர் நாட்டு
வாரி சுரக்கும் வளன் எல்லாம்  தேரின்,
அரிகாலின் கீழ் கூஉம் அந் நெல்லே சாலும்
கரிகாலன் காவிரி சூழ் நாடு.   1

அரிமா சுமந்த அமளி மேலானைத்
திருமாவளவன் எனத் தேறேன்;  திரு மார்பின்
மான மால் என்றே தொழுதேன்; தொழுத கைப்
போனவா பெய்த வளை!  2

முச் சக்கரமும் அளப்பதற்கு நீட்டிய கால்
இச் சக்கரமே அளந்ததால்செய்ச் செய்
அரிகால்மேல் தேன் தொடுக்கும் ஆய் புனல் நீர்நாடன்
கரிகாலன் கால் நெருப்பு உற்று.  3

சோழன் கரிகாற் பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடிய பொருநராற்றுப்படைக்குப் பெருமழைப்புலவர், பொ.வே.சோமசுந்தரனார் எழுதிய உரை முற்றிற்று.

 
மேலும் பொருநராற்றுப்படை »
temple news
பொருநராற்றுப்படை என்னும் ஆற்றுப்படை நூல் கரிகால் வளவன் எனப்படும் சோழ மன்னனைப் பாட்டுடைத்தலைவனாகக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar