காஞ்சி மடாதிபதி கையால் திருப்பதி கங்கையம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06மே 2023 11:05
திருப்பதி,:திருப்பதியில், 1000 ஆண்டுகள் பழமையான கங்கை அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகத்தை காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் நேற்று செய்து வைத்தார்.
திருமலை ஏழுமலையானின் சகோதரியும் திருப்பதி நகர கிராம தேவதையான தாத்தய்யகுண்டா கங்கை அம்மன் கோயிலில், நேற்று காலை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
காலை, 6 மணி முதல் வேத பண்டிதர்கள் மந்திரங்கள் முழங்க பல்வேறு பூஜை நடந்தன. இதனை தொடர்ந்து காஞ்சி மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமி பங்கேற்று 20 கோடி ரூபாயில் கல்துாண்களால் புதுப்பிக்கப்பட்ட கோவில் சன்னதியில் கங்கை அம்மன் சிலை பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகத்தை நடத்தினார். யாக குண்டத்தில் வைக்கப்பட்ட புனித கலச நீர் மூலவர் சன்னதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட அம்மனுக்கும் கோவில் கோபுர கலசத்திலும் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற பக்தர்கள் மீதும் புனித நீர் தெளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ரோஜா, திருப்பதி எம்எல்ஏ பூமனா கருணாகர் ரெட்டி, துணை மேயர் அபினய்ரெட்டி மற்றும் திருப்பதி மட்டுமின்றி தமிழக, ஆந்திர எல்லையோரத்தில் உள்ள இருந்து வந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். கும்பாபிஷேகம் நிறைவடைந்த நிலையில், இம்மாதம் 9ம் தேதி காப்புக் கட்டி கங்கை அம்மன் கோயிலில் கோடை சித்திரை திருவிழா தொடங்குகிறது. இந்த திருவிழாவில் தினந்தோறும் பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப ஒவ்வொரு நாள் ஒவ்வொரு வேடம் அணிந்து கங்கை அம்மனை வழிபட உள்ளனர். இம்மாதம் 16ம் தேதி கங்கையம்மன் விஸ்வரூப தரிசனத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. திருமலை ஏழுமலையானுக்கு மலர் கைங்கரியம் செய்வதற்காக ராமானுஜரால் அனுப்பப்பட்ட அனந்தாழ்வாரால், 1000 ஆண்டுகளுக்கு முன்பு கங்கை அம்மன் கோவில் கட்டப்பட்டதாக புராணம் கூறுகிறது. சுமார், 400 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அவரது சகோதரியான திருப்பதி நகரில் உள்ள கிராம தேவதையான கங்கை அம்மனை தரிசித்த பின் ஏழுமலையானையும் அதன் பிறகு திருச்சானுார் பத்மாவதி தாயாரையும் தரிசித்து வந்தனர். பின்னர் அது காலப்போக்கில் காணாமல் போனது. மீண்டும் பழைய சம்பிரதாயத்தை தொடரும் விதமாக ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கங்கை அம்மனையும் தரிசனம் செய்து செல்ல தேவையான ஏற்பாடுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானமும் திருப்பதி மாநகராட்சி அதிகாரிகளும் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.