பதிவு செய்த நாள்
11
மே
2023
07:05
மேட்டுப்பாளையம்: மாகாளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.
மேட்டுப்பாளையம் பாக்குக்கார வீதியில், மாகாளியம்மன் கோவில் உள்ளது. கோவில் விழா கடந்த மாதம், 25ம் தேதி பூச்சாட்டுடன் தொடங்கியது. 28ல் குத்து விளக்கு பூஜையும், இம்மாதம் இரண்டாம் தேதி, அக்கினி கம்பம் நடுதலும், எட்டாம் தேதி பேட்டை மகா மாரியம்மன் கோவில் இருந்து, தீர்த்தக்குடம் எடுத்தும் வரப்பட்டது. நேற்று முன்தினம் இரவு குண்டம் திறந்து, சிறப்பு பூஜை செய்து, அக்னி வளர்க்கப்பட்டது. நேற்று காலை பவானி ஆற்றில் இருந்து, அம்மன் சுவாமி அழைத்து வந்தனர். 8:30 மணிக்கு கோவில் தலைமை பூசாரி தட்சிணாமூர்த்தி குண்டத்திற்கு சிறப்பு பூஜை செய்து, பூப்பந்து, எலுமிச்சம்பழம் ஆகிவற்றை குண்டத்தில் உருட்டி விட்டு முதலில் இறங்கினார். அவரைத் தொடர்ந்து உதவி பூசாரிகள், சிறுவர், சிறுமியர், பெரியவர்கள் என, ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று அம்மன் திருவீதி உலாவும், நாளை (12ம் தேதி) அபிஷேக பூஜையும், 16ம் தேதி மறு பூஜையும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.