பதிவு செய்த நாள்
11
மே
2023
03:05
சின்னாளபட்டி; பிள்ளையார்நத்தம் மகாமுத்து மாரியம்மன் கோயில் விழாவில், ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.
ஆத்தூர் ஒன்றியம் பிள்ளையார் நத்தம் மகா முத்துமாரியம்மன் கோயில் திருவிழா, பூச்சொரிதலுடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியாக, குடகனாற்றில் தீர்த்தம் எடுத்தல் நேற்று முன்தினம் நடந்தது. நேற்று மாலை பக்தர்கள் பூக்குழி இறங்குதல் நடந்தது. முன்னதாக கோயில் அருகே குண்டம் வளர்த்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. பின்னர் விநாயகர் கோயிலில் இருந்து, அக்னி சட்டி எடுத்து வந்த பக்தர்கள், குண்டம் அருகே சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டனர். தலைமை பூசாரியைத் தொடர்ந்து வரிசையாக பக்தர்கள், பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். சிலர் கைக்குழந்தையுடனும், அக்னி சட்டியுடனும், 10 அடி நீள அலகு குத்திய நிலையிலும் பூக்குழி இறங்கினர். நிர்வாக குழுவினர் உலகநாதன், முருகேசன், கிரஷர் பாலு, ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் மகேஸ்வரி, தி.மு.க., கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகேசன், ஊராட்சி தலைவர் உலகநாதன் பங்கேற்றனர்.