சோழவந்தான்; சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் ஸ்ரீ பூர்ணபுஷ்கலாம்பாள் சமேத பூவலிங்க அய்யனார் கோயிலில் கோபுர கலசங்கள் திருடு போயின. இரிடியம் திருட்டு கும்பல் மீண்டும் கைவரிசையா என போலீசார் விசாரனையில் ஈடுபட்டுள்ளனர்.
இக்கிராம மக்களின் காவல் தெய்வமாக விளங்கும் இக்கோயிலின் புனரமைப்பு பணிகள் முடிந்து கடந்த 2014ல் கும்பாபிஷேகம் நடந்தது. தற்போது கோயிலின் சாலக்கோபுரத்திலும், தனி சன்னதியில் உள்ள விநாயகரின் விமான கோபுரத்திலும் உள்ள கலசங்கள் திருடு போயுள்ளது. பூசாரி பிச்சைக்கண்ணு கூறியதாவது: இக்கோயிலில் நான் கடந்த மே.7ல் இரவு பூஜை செய்து முடித்து விட்டு வீட்டிற்கு சென்றுவிட்டேன். மறுநாள் வேலை காரணமாக வெளியில் சென்றேன். இதையடுத்து நேற்று முன்தினம் மாலை சுவாமிக்கு பூஜை செய்து முடித்து விட்டு விநாயகருக்கு பூஜை செய்ய வரும்போது தான் கோபுரத்தின் கலசம் காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தேன். மேலும் கோயிலின் அனைத்து பக்கங்களிலும் சென்று வேறேதும் காணாமல் போயுள்ளதா என பார்த்தேன். அப்போது சாலக்கோபுரத்தில் இருந்த மூன்று கலசத்தில் 1 கலசத்தை காணவில்லை. மற்றொரு கலசம் வளைந்த நிலையில் இருந்தது. இதுகுறித்து கிராமத்தாரிடம் தெரிவித்தேன். அவர்களின் ஒப்புதலோடு காடுபட்டி போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளேன் என்றார். எஸ். ஐ., குபேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு கலசத்தை திருடியவர்களை தேடிவருகின்றனர். பழமை வாய்ந்த இக்கோயிலை குறிவைத்து மீண்டும் இரிடியம் கும்பல் கலசங்களை திருடி கைவரிசை காட்டியுள்ளதா? என ஆன்மீகவாதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.