பதிவு செய்த நாள்
12
மே
2023
09:05
சென்னை: தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகத்தால், சென்னையில் இருந்து திருப்பதிக்கு, 35 ஆண்டுகளுக்கும் மேல் சிறப்பு பஸ் இயக்கப்படுகிறது.
ஒரு நாள் சுற்றுலாவாக செல்லும் இந்த பஸ்சுக்கு முன்பதிவு செய்வோருக்கு, தமிழ் பேசும் வழிகாட்டி, உணவு, பொருள் பாதுகாப்பகம், சிறப்பு தரிசன டிக்கெட் உள்ளிட்ட வசதிகள் செய்யப்படும். மேலும் லட்டு பிரசாதம், முடி காணிக்கையில் முன்னுரிமை வழங்கப்படும். அந்த வகையில், சென்னை வாலாஜா சாலையில் உள்ள சுற்றுலா வளர்ச்சிக் கழக தலைமை அலுவலகம், கோயம்பேடு ரோகிணி திரையரங்கம், பூந்தமல்லி - திருப்பதி சாலை சந்திப்பு ஆகிய இடங்களில் இருந்து, அதிகாலையில் பயணியரை ஏற்றிச் செல்லும் வசதி ஏற்படுத்தப்பட்டது.
இதற்காக, சொகுசு ஏசி பஸ், ஏசி பஸ் மற்றும் சாதாரண பஸ்கள் பயன்படுத்தப் படுகின்றன. வால்வோ பஸ்சில் ஒருவருக்கு, 2,000 ரூபாய்; ஏசி பஸ்சில், 1,850 ரூபாய், ஏசி வசதியில்லாத பஸ்சில் ஒருவருக்கு, 1,700 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தேவஸ்தானம், தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துக்கு தினமும் 300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை வழங்கியது. மதுரை, கோவையிலிருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன; இதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து, சிறப்பு தரிசன டிக்கெட்டுகளின் எண்ணிக்கை 1,000 ஆக உயர்த்தப்பட்டது. தற்போது, கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், திருப்பதிக்கு வரும் மிக முக்கிய பிரமுகர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவர்களுக்கு சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை வழங்கும் வகையில், தமிழக சுற்றுலாத் துறைக்கு வழங்கப்பட்ட 1,000 டிக்கெட்டுகளுக்குப் பதிலாக, 400 டிக்கெட்டுகளை வழங்கி வருகிறது. இது, தற்காலிக குறைப்பு என்றும் விளக்கி உள்ளது. இதனால், தினமும் 400 பேர் மட்டுமே திருப்பதி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதால், இரண்டு வாரங்களுக்கு, முன்பதிவு நிறைவடைந்துள்ளது.