பதிவு செய்த நாள்
16
மே
2023
12:05
சென்னை : சென்னையில், பெண் ஒருவர் வீட்டில் பதுக்கப்பட்டு இருந்த, பழங்கால, உலோக சிலைகள், தஞ்சாவூர் ஓவியங்கள், மரச்சிற்பங்கள் என, 14 வகையான பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சென்னை, ராஜா அண்ணாமலைபுரம், 7வது பிரதான சாலையில் வசிப்பவர் ஷோபா துரைராஜ். அவரது வீட்டில், கலைநயமிக்க, பழங்கால உலோக சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக, மாநில சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, டி.எஸ்.பி.,க்கள் முத்துராஜா மற்றும் மோகன் தலைமையிலான போலீசார், ஷோபாவின் துரைராஜ் வீட்டில் நேற்று சோதனை செய்தனர். அப்போது, வீட்டில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த, ராமர் உள்ளிட்ட நான்கு பழங்கால உலோக சிலைகள், தஞ்சாவூர் ஓவியங்கள், மரச்சிற்பங்கள் என, 14 வகையான கலை பொருட்களை பறிமுதல் செய்தனர். விசாரணையில், சமீபத்தில் இறந்த, சர்வதேச சிலை கடத்தல்காரர் தீனதயாளன் என்பவரிடம் இருந்து, 2008 --15ம் வரை வாங்கி உள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இந்த பொருட்களை வெளிநாடுகளுக்கு கடத்த இருந்தாரா என்பது குறித்து தொடர் விசாரணை நடக்கிறது.