பதிவு செய்த நாள்
16
மே
2023
01:05
வேலுார்; குடியாத்தத்தில் நடந்த கங்கையம்மன் சிரசு ஊர்வலத்தை, லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர். விழாவில் பாதுகாப்பிற்கு வந்த பெண் காவலர் அருள் வந்து ஆடிய வீடியோ இணைய தளத்தில் வைரலாகி வருகிறது.
விஷ்ணுவின் அம்சமான பரசுராமன், தன் தாயின் தலையை வெட்டி, மீண்டும் உயிர்பித்த புராண கதையை நினைவு கூறும் வகையில், வேலுார் மாவட்டம், குடியாத்தம் கோபாலபுரம், கவுண்டன்ய மகாநதி கரையிலுள்ள கங்கையம்மன் கோவிலில், ஆண்டுதோறும் சிரசு திருவிழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நேற்று காலை, 6:00 மணிக்கு தரணம்பேட்டையில் உள்ள முத்தியாலம்மன் கோவிலில் இருந்து கங்கையம்மன் சிரசு, பம்பை, உடுக்கை, சிலம்பாட்டம், புலி ஆட்டத்தோடு, லட்சக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில், அம்மன் சிரசு ஊர்வலம் நடந்தது. சிரசு ஊர்வலம் நடந்த தரணம்பேட்டை முதல், கோபாலபுரம் வரை வீதிகளில், ஆந்திரா, கர்நாடகா, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள், கங்கை அம்மன் சிரசுவை வழிபட்டனர். பின், ஊர்வலமாக சென்ற சிரசு, கங்கையம்மன் கோவிலில் அலங்கரித்த சண்டாளச்சி உடலில் பொருத்தப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பூஜை, கண் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. நேற்று மாலை, கவுண்டன்ய மகாநதி ஆற்றில் வாண வேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. பாதுகாப்பு பணியில், வேலுார் டி.ஐ.ஜி., முத்துசாமி, மாவட்ட எஸ்.பி., ராஜேஷ் கண்ணன் ஆகியோர் தலைமையில், 1,700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோயில் விழாவிற்கு பாதுகாப்பிற்கு வந்த பெண் காவலர் ஒருவருக்கு, அங்கு அடிக்கப்பட்ட உடுக்கை சத்தம் கேட்டு அருள் வந்துவிட்டது. உணர்ச்சி வசப்பட்டு ஆடும் அவரை மற்ற போலீசார் பிடித்தனர். இந்த வீடியோ தற்போது இணைய தளத்தில் வைரலாகி வருகிறது.