பதிவு செய்த நாள்
17
மே
2023
11:05
சிவகாசி; சிவகாசியில் 16 ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட சிவன் கோயிலில் கும்பாபிஷேக திருப்பணி தீவிரமாக நடந்து வருகிறது.
சிவகாசி நகரின் மையப்பகுதில் அமைந்துள்ளது காசி விசுவநாதர் ஆலயம். கோயிலின் மூலவர் சிவன் விசுவநாதராகவும், அன்னை பார்வதி விசாலாட்சியாகவும் அருள்புரிகின்றனர். கோயிலின் நுழைவாயிலில் இருந்து கொடிமரம் அமைந்துள்ள மண்டபம் வரை துரண்களாலான மண்டபம் உள்ளது. லிங்க வடிவிலான காசி விசுவநாதரின் சிலை கருவறையின் நடுவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோயில் 16 ம் நுாற்றாண்டில் வாழ்ந்த பாண்டிய அரசன் அரிகேசரி பராக்கிரமப் பாண்டியனால் கட்டப்பட்டது. வாரவழிபாட்டு சங்கம், ஆன்மீக பேரவை முயற்சியால் 1966 செப். 4 , தொடர்ந்து 1996 பின்னர் 2011 ல் கும்பாபிஷேகம் நடந்தது. 2020 ல் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்த இருந்த நிலையில் கொரோனா பாதிப்பால் கும்பாபிஷேக பணி தொடங்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில் இந்த ஆண்டு கும்பாபிஷேம் நடத்த கோயில் நிர்வாகத்தினர், திருப்பணி குழுவினர் முடிவு செய்தனர் அதனை தொடர்ந்து கும்பாபிஷேக பணிகள் ஏப். 24 ல் மபாலஸ்தாபனம் பூஜைகளுடன் தொடங்கியது. சுவாமி சன்னதி, அம்பாள் சன்னதி ஆகிய பகுதியில் பொருத்தப்பட்டுள்ள ஓடுகளை பழுதுபார்த்து புதுப்பிக்கவும், சுவாமி, அம்பாள் சன்னதி, மூலவர் விமானம் ஆகியவற்றில் பஞ்சவர்ணம் பூசுதல், திருக்கல்யாண மண்டபம் சிமெண்டு கூரைகளை அகற்றிவிட்டு கான்கிரீட் கட்டடம் அமைப்பது, அன்னதானம் கூடம் கட்டுதல், இதே போன்று கோயில் கோபுரம் மற்றும் சுற்றுச்சுவர்களை பராமரித்து புதிய வர்ணம் பூசுதல், பழுதடைந்த மின் விளக்குகளை மாற்றி புதிய மின் விளக்குகள் பொருத்துதல், சுவாமி, அம்பாள் சன்னதி வாசல்களில் பித்தளை தகடுகள் பதிக்கும் பணி, அன்னதான மண்டபம் எதிரில் உள்ள காலி இடத்தில் கழிப்பறை கட்டுதல், தெப்பக்குளம் பராமரிப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. பத்து சமுதாயம் மண்டகப்படியினர், பக்தர்கள் , நன்கொடையாளர்கள் உதவியுடன் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை திருப்பணி குழு வைரம் உள்ளிட்ட குழுவினர் கண்காணித்து உரிய ஆலோசனை வழங்கி வருகிறார்கள்.
பழமை மாறாமல் திருப்பணி; திருப்பணிக்குழு வைரம் கூறுகையில், கோயிலில் திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கோயில் முழுவதும் உள்ள கல்துரண்களில் அடித்துள்ள வண்ண பெயிண்ட்டுகளை நவீன வாட்டர் வாஷ் டெக்னாலஜி முறையில் அழிக்கப்பட்டு வருகின்றது. ஆரம்ப காலகட்டங்களில் கோபில் தூண்கள் எப்படி இருந்ததோ அதே போன்று பெயிண்டிங் இல்லாமல் காட்சியளிக்கும் வகையில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றது. மேலும் கோவிலின் உள்பகுதியில் சுமார் 25 ஆயிரம் சதுரஅடிக்கு கருங்கல் தளம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றது என்றார்.