புலிப்பாணி ஆசிரம யாகத்தில் கலந்து கொண்ட வெளிநாட்டினர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18மே 2023 11:05
பழநி: பழநி, மலைக்கோயில், போகர் சன்னதியில் இன்று (மே.18) போகர் ஜெயந்தி விழா நடைபெற உள்ள நிலையில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பக்தர்கள் யாக பூஜையில் கலந்து கொண்டனர்.
பழநி, மலைக்கோயில் போகர் சன்னதியில் இன்று (மே.18) போகர் ஜெயந்தி விழா நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. போகர் ஜெயந்தி விழாவில், போகர் சன்னதியில் உள்ள மரகதலிங்கம், புவனேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் இன்று நடைபெறும். இந்நிலையில் நேற்று புலிப்பாணி ஆசிரமத்தில் சிறப்பு யாக பூஜை நடைபெற்றது. ஜப்பான் நாட்டில் இருந்து தாகயூகிஹோஷி என்கிற பாலகும்பகுருமணி தலைமையில் 18 பேர் கொண்ட குழுவினர் சிறப்பு யாக பூஜையில் பங்கேற்றனர். இவர்கள் சைவ மதத்தை ஏற்று தமிழர் சித்த வழிபாட்டை பின்பற்றுகின்றனர். இவர்கள் தங்கள் பெயர்களை தமிழில் மாற்றி வைத்துள்ளனர். யாகபூஜையில் வைக்கப்பட்ட புனித நீர் நிரப்பிய கலசங்களுக்கு, அலங்காரம், தீபாதாரணை நடந்தது. வேத மந்திரங்கள் ஓத யாக பூஜை நடைபெற்றது. இதில் பழநி போகர் ஆதீனம் புலிப்பாணி பாத்திர சுவாமிகள், ஹிந்து தமிழர் கட்சி நிறுவனர் ராம ரவிக்குமார் மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.