பதிவு செய்த நாள்
18
மே
2023
02:05
மேட்டுப்பாளையம்: கோட்டை கரிய மாரியம்மன் கோவில் விழாவில், பொழி எருது பிடித்து வரும் நிகழ்வு, விமரிசையாக நடந்தது.
காரமடை அருகே பெள்ளாதியில், கோட்டை கரிய மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் முப்பெரும் தேவியர்களான கரிய மாரியம்மன், லட்சுமி, சரஸ்வதி மற்றும் விநாயகர், முருகன், வைஷ்ணவி தேவி, துர்க்கை அம்மன், உற்சவமூர்த்தி அம்மன், சாமி பாதம், சிம்மவாகனம், சக்திவேல், காவல் தெய்வங்கள், நாகக்கன்னி, ஆதிசிவன், முரசு அடிக்கும் ஜாம்பவான், வீரபாகு மற்றும் அனைத்து தெய்வங்களுக்கும் காவல் தெய்வமாக விளங்கும் கோட்டை முனியப்பன் ஆகிய சுவாமிகளின் சன்னதிகள் உள்ளன. கோவிலில் உள்ள அம்மன், 33 கிராமங்களில் உள்ள, 130க்கும் மேற்பட்ட ஊர் மக்களின், வழிபடும் தெய்வமாக விளங்குகிறது. இக்கோவில் திருவிழா, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இத்திருவிழா இம்மாதம் ஒன்றாம் தேதி கணபதி ஹோமம் பூச்சாட்டுடன் துவங்கியது. ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு அபிஷேகம், அலங்கார பூஜை நடைபெற்றது. விழாவில் சக்தி கம்பம் நடுதல், அம்மன் அழைப்பு, பால்குடம், தீர்த்த குடம் எடுத்தல், பெண்கள் மாவிளக்கை ஊர்வலமாக எடுத்து வந்து, அம்மனுக்கு படைத்தல் ஆகிய நிகழ்வுகள் நடந்தன.
நேற்று முன்தினம் மதியம் பொழி எருது பிடித்து வரும் நிகழ்ச்சி நடந்தது. டி.ஜி.புதூர், திம்மம்பாளையம், ஜடையம்பாளையம், பெள்ளாதி உள்ளிட்ட, 33 கிராமங்களில் இருந்து, அலங்காரம் செய்த பொழி எருதுகளை, ஜமாப் மேளம் தாளத்துடன், ஊர் கவுடர்கள், பொதுமக்கள் ஊர்வலமாக கோவிலுக்கு பிடித்து வந்தனர். வரும் வழியில் இளைஞர்கள் எருதுகளுக்கு கோபம் வரச் செய்து, சீறிப்பாயச் செய்தனர். ஒவ்வொரு பொழி எருதுகளையும், கோவிலுக்கு அழைத்து வந்து, அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்த பின்பு, ஊர் மக்கள் மீண்டும் தங்கள் கிராமங்களுக்கு பிடித்து சென்றனர். இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை, தலைவர் தாசையன் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.