பதிவு செய்த நாள்
18
மே
2023
04:05
பழநி: பழநி மலைக்கோயிலில் போகர் ஜெயந்தி விழா போகர் சன்னதியில் சிறப்பாக நடைபெற்றது.
பழநி மலைக்கோயில், மூலவர் நவபாஷாண சிலையை போகர் சித்தர் உருவாக்கினார். போகர் சித்தரின் ஜீவசமாதி சன்னதி, மலைக்கோவிலில் உள்ளது. இங்கு போகர் சித்தர் வழிபட்ட தொன்மையான மரகதலிங்கம், புவனேஸ்வரி அம்மன் சிலைகள் உள்ளன. தினமும் இதற்கு பூஜைகள் நடை பெற்று வருகின்றன. ஆண்டுதோறும், போகர் ஜெயந்தி விழா வைகாசி மாதம், பரணி நட்சத்திரத்தை முன்னிட்டு பாரம்பரியமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு நீதிமன்ற உத்தரவின்படி, இவ்விழா இன்று (மே.18ல்) மலைக்கோயிலில் போகர் சன்னதியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. போகர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு உச்சிகால பூஜை நேரத்தில் போகர் சித்தர் வழிபட்ட, புவனேஸ்வரி அம்மன், மரகதலிங்கத்திற்கு பழங்கள் கங்கைநீர், பன்னீர், சந்தனம், விபூதி உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதன் பின் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை பூஜைகள் நடைபெற்றன. புலிப்பாணி ஆசிரமத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் புலிப்பாணி பாத்திர சுவாமிகள், ஜம்பு சுவாமிகள், ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், ஹிந்து தமிழர் கட்சி நிறுவனத் தலைவர் ராம ரவிக்குமார் ஜப்பான் நாட்டில் இருந்து வந்த பக்தர்கள் வெளி மாநில,மாவட்ட, உள்ளூர் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.