செங்கோட்டை : செங்கோட்டை வண்டிமலைச்சி அம்மன் குண்டாறு தெப்பத்தில் இறங்கும் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
செங்கோட்டையில் வண்டிமலைச்சி அம்மன் கோயில் கொடைவிழா 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா காரணமாக கொடைவிழா நடத்தப்படாத நிலையில், 5 ஆண்டுகளுக்கு பின் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கான கால்நாட்டு வைபவம் கடந்த 9ம் தேதி நடந்தது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தன. கடந்த 15ம்தேதி மாலை குடியழைப்பு, அம்மன் புஷ்ப வாகனத்தில் எழுந்தருளல் நடந்தது. 16ம்தேதி பால்குடம் ஊர்வலம், மதியம் அபிஷேகம், மாலை அம்மன் அழைத்து வரும் வைபவம் நடந்தது. 17ம்தேதி பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து நேற்று மாலை குண்டாற்று தெப்பத்தில் அம்மன் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக மேளதாளத்துடன் அம்மன் கோயிலில் இருந்து ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். முக்கிய வீதிகளின் வழியாக அம்மன் அழைத்து வரப்பட்ட வைபவத்தில் திரளான பக்தர்கள் சுவாமி, அம்மன், சிவன் வேடம் அணிந்து வந்தனர். நிகழ்ச்சியை முன்னிட்டு தென்காசி எஸ்.பி., ஆலோசனையின்படி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஏற்பாடுகளை செங்கோட்டை நகர தேவர் சமுதாயத்தினர் செய்திருந்தனர்.