பழநி: பழநி மலையில் பாறை உருண்டதால் மலைக்கோவிலுக்கு செல்லும் தண்ணீர் குழாய்கள் சேதமடைந்தன. பழநி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று (மே.18) இரவு பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனைத் தொடர்ந்து சுற்றுவட்டாரப்படை பகுதிகளில் உள்ள மரங்கள் வேரோடு சாய்ந்தன. பழநி மலைக் கோயில் அடிவாரத்தில் இருந்து 450 அடிக்கு மேல் உயரம் உள்ளது. இங்கு காற்றுடன் பெய்த மழையில் பாறை உருண்டு விழுந்தது. பாறை விழுந்த பகுதி பக்தர்கள் நடமாட்டம் இல்லாத, மலைக்கோவிலுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ள பக்தி ஆகும். உருண்ட பாறை குழாயில் மோதி 200 அடி உயரத்தில் நின்றது. இதனால் தண்ணீர் குழாய்கள் சேதம் அடைந்தன. சேதமடைந்த தண்ணீர் குழாய்களை திருக்கோயில் பொறியாளர்கள் ஊழியர்கள் இணைந்து உடனடியாக சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். உருண்டு விழுந்த பாறையை உடைத்து அப்புறப்படுத்த திட்டமிட்டுள்ளனர். பக்தர்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் பாறை உருண்டதால் சுவாமி தரிசனத்திற்கு எந்த இடையூறும் ஏற்படவில்லை.