பழநி உண்டியலில் செலுத்திய நகையை திருப்பி கேட்ட பெண் பக்தர்; சொந்த செலவில் வழங்கிய அறங்காவலர் தலைவர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25மே 2023 03:05
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோவில் உண்டியலில் தவறுதலாக செலுத்திய தங்கச்செயினை பெண் பக்தர் திருப்பி கேட்க, அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன் சொந்த செலவில் புதிய நகை வாங்கி கொடுத்தார்.
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் பத்தியூர் கிழக்கு பகவதிபடி கார்திகா பள்ளி வீட்டைச் சேர்ந்தவர் சசிதரன் பிள்ளை மகள் சங்கீதா. இவர் பழநி முருகன் கோவிலுக்கு 2022 செப்., 19 வந்தார். கோவில் உண்டியலில் பக்தி பரவசத்தில் ஒன்றே முக்கால் சவரன் செயினை தவறுதலாக செலுத்தினார். இதை கோவில் நிர்வாகத்திடம் கடிதம் மூலம் தெரிவித்தார். இதையடுத்து கோவில் நிர்வாகம் கண்காணிப்பு கேமரா மூலம் அவர் நகையை உண்டியலில் செலுத்தியதை உறுதி செய்தது. உண்டியல் சட்டத்தின் படி உண்டியலில் செலுத்திய பொருட்களை திரும்ப வழங்க வழியில்லை. பக்தரின் ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு கோவில் அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன், சொந்த செலவில் 1 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் மதிப்பில் 17.460 கிராம் எடையுள்ள தங்க செயினை அவருக்கு வழங்கினார். கோவில் தலைமை அலுவலகத்தில் சங்கீதா வரவழைக்கப்பட்டு நகை வழங்கப்பட்டது.