கதலி நரசிங்கப்பெருமாள் கோயிலில் கும்பாபிஷேக பாலாலய பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25மே 2023 04:05
ஆண்டிபட்டி: ஜம்புலிப்புத்தூர் கதலி நரசிங்கப்பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்திற்கான பாலாலய பூஜைகள் நடந்தது. ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் 800 ஆண்டுகளை கடந்த பழமையானது. இக்கோயில் கும்பாபிஷேகம் முடிந்து 17 ஆண்டுகள் ஆகிறது. இதனைத் தொடர்ந்து தற்போது கோயிலில் ரூ.25 லட்சம் மதிப்பில் உதயதாரர்கள் மூலம் புனரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. கோயில் சுற்றுச்சுவர் புதுப்பித்தல், தூண்கள் பலப்படுத்துதல், மெருகேற்றுதல், கோயில் முன் தகரக் கொட்டகை அமைத்தல், தட்டு ஓடு பதித்தல் ஆகிய பணிகள் தற்போது முடிந்துள்ளது. கும்பாபிஷேகத்தின் முதல் ஏற்பாடாக ஆகம விதிகளின்படி இன்று கோயில் வளாகத்தில் பாலாலய பூஜைகள் செயல் அலுவலர் ஹரிஷ் குமார், ஆய்வாளர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. பாலாலய பூஜையில் மூன்று இடங்களில் தீர்த்த குடங்கள் வைத்து யாகசாலை பூஜை செய்தனர். பலகைகளில் மூலவர் கதலி நரசிங்கப்பெருமாள், ஸ்ரீமன் நாராயணன், செங்கமலத்தாயார் மற்றும் பரிவார தெய்வங்களின் படங்கள் வரையப்பட்டு தனி அறையில் வைக்கப்பட்டது. பூஜிக்கப்பட்ட குடங்களில் தெய்வ சக்தியை நிலை நிறுத்தி தனி அறையில் வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மூலவர் மற்றும் பரிவார தெய்வங்கள் திரையிட்டு மூடப்பட்டது. மூலஸ்தானத்தில் இருந்து உற்சவ சுவாமிகள் பூஜிக்கப்பட்ட அறையில் கொண்டுவரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேகம் முடியும் வரை உற்சவ சுவாமிகளுக்கு மட்டுமே அபிஷேகம் ஆராதனைகள் நடைபெறும் என்றும் இன்னும் சில மாதத்தில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்து வருவதாகவும் கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.