சாத்தூர் சிவன் கோயில் தெப்பத்தை புனரமைக்க பக்தர்கள் கோரிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26மே 2023 04:05
சாத்துார்: சாத்தூர் சிவன் கோயில் தெப்பத்தை புணரமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாத்தூர் சிதம்பரேஸ்வரர் கோயில் சாத்தூர் பகுதி மக்களால் சிவன் கோயில் என அழைக்கப்படுகிறது. 600 ஆண்டுகள் பழமையான இந்த சிவன் கோயிலில் பழமையான தெப்பம் உள்ளது.
கற்களால் கட்டப்பட்ட தெப்பத்திற்கு மரியன் ஊரணியில் இருந்தும் சாத்தூர் வழிபாட்டில் இருந்தும் மழை நீர் வந்து சேரும் வகையில் அமைக்கப்பட்டு இருந்தது. காலப்போக்கில் மழை நீர் வரும் கால்வாய் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டிடங்கள் கட்டப்பட்டதால் தெப்பத்திற்கு தண்ணீர் வருவது தடைப்பட்டது. மேலும் தெப்பத்தை சுற்றி நகராட்சி நிர்வாகமே ஆக்கிரமிப்புகளை செய்து கடைகள் அலுவலகங்கள் கட்டப்பட்டு உள்ளன. இதனால் கோயிலுக்கு வரும் சிவ பக்தர்கள் தெப்பத்தை வலம் வந்து வணங்க முடியாத நிலை உள்ளது. தற்போது தெப்பத்தில் தேங்கியுள்ள மழை நீரில் பாசி படர்ந்து காணப்படுகிறது. மேலும் நகராட்சி காய்கனி கடைகளில் மீதமாகும் காய்கறிகள் குப்பைகள் தெப்பத்திற்குள் கொட்டப்படுவதால் தண்ணீர் கெட்டுப் போய் அழுகல் நாற்றம் வீசும் நிலை உள்ளது. தெப்பத்தின் வடக்கு மற்றும் தெற்கு படிக்கட்டு அமைந்துள்ள பகுதிகளில் நகராட்சி ஆக்கிரமித்து கட்டி உள்ள கட்டிடங்களை அகற்றி விட்டு மீண்டும் படித்துறை அமைக்க வேண்டும். சுற்றுச்சூழல் வளர்ந்துள்ள மரங்களை அகற்றவும் வெப்பத்தை சுகாதாரமாக பராமரிக்கவும் இந்து சமய அறநிலையத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.