சர்ப்பங்களின் தலைவனான கார்கோடகன் நிசாசர முனிவரைக் கண்டு தனக்கு பிரம்மஞானத்திற்கு வழிகாட்டும் படி வேண்டினான். முனிவரும் சர்ப்பராஜனிடம், புண்ணிய தீர்த்தமான தாமிரபரணிநதியில் நீராடி மகாவிஷ்ணுவை வழிபாடு செய்யும்படி உபதேசித்தார். கார்கோடகனும் தன் இருப்பிடமான விந்தியமலையிலிருந்து தாமிரபரணிக்கரையை அடைந்து தவம் செய்யத் தொடங்கினான். சர்ப்பராஜனின் பக்திக்கு கட்டுப்பட்ட விஷ்ணுவும் காட்சியளித்து பிரம்மஞானத்தை வழங்கினார். அந்நாகத்தின் பெயராலேயே ‘கோடகநல்லூர்’ எனப்படும் இத்தலம் திருநெல்வேலிக்கு அருகில் அமைந்துள்ளது. பெரியபிரான் என்னும் பெயரில் இப்பெருமாள் தேவியரோடு காட்சியளிக்கிறார். இவருக்கு வடமொழியில் ‘பிருகன்மாதவன்’ என்பது பெயராகும். இவரை வழிபட்டால் சர்ப்பகிரகங்களான ராகுகேது ஆகிய இருவராலும் ஏற்படும் தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம்.