சஷ்டி விரதம் என்றாலே குழந்தையில்லாத பெண்களுக்கு கர்ப்ப பாக்கியம் கொடுக்கிற ஒரு விஷயமாகப் பார்க்கப்படுகிறது. இது ஆண்களுக்கும் உரிய விரதம் தான். குறிப்பாக, சஷ்டியின் ஆறுநாட்களும் ஒரு காலத்தில் நாகராஜருக்கு பூஜை செய்து வந்துள்ளனர். தமிழகத்திலேயே இது நடந்துள்ளது. ஆந்திரமக்கள் சுப்பிரமணியருக்கும், பாம்புகளின் தலைவனான நாகராஜருக்கும் ஒரே பெயர் தான் சூட்டியுள்ளனர். நாகராஜாவை ‘சுப்பிரமணியர்’ என்றே கருதினர் அதனால் தான் இவர்கள் இருவரையுமே ‘சுப்பராயுடு’ என்று அழைத்தனர். அரசமரமும், வேப்பமரமும் இணைந்திருக்கும் இடங்களில் அவற்றிற்கு திருமணம் செய்து வைக்கின்றனர். இலையுதிர் காலத்தில் இந்த இரண்டு மரங்களின் இலையும் உதிர்ந்து விடும். இந்த காலத்தில் வெயில், மழை, பனி ஆகியவற்றின் தாக்கம் குறைந்தே இருக்கும். இயற்கையன்னையே சூரியனுக்கு இப்படி ஒரு வசதியை உருவாக்கிக் கொடுக்கிறாள். அப்போது, சூரியன் தன் இளங்கதிர்களை எவ்வித இடைஞ்சலுமின்றி விநாயகர், நாகராஜர் மீது பரப்பி தன் வணக்கத்தை தெரிவிப்பதாக ஐதீகம். இதனால் தான், அரசமரத்துக்கும், வேப்பமரத்துக்கும் திருமணம் செய்து வைத்து இயற்கையன்னைக்கு நன்றி தெரிவித்தனர். இது ஒன்றும் மூடநம்பிக்கையல்ல!