கருடன், தன் தாய் வினதையின் துன்பம் தீர்வதற்காக தேவலோகம் சென்று இந்திரனிடம் அமிர்தகலசம் பெற்று திரும்பிக் கொண்டிருந்தான். அப்போது கருடனைக் கண்ட அசுரர்கள், கலசத்தைப் பறிக்கும் நோக்கத்துடன் சண்டைக்கு வந்தனர். அப்போது கலசத்திலிருந்த அமிர்தத் துளிகள் கீழே சிந்தின. நெல்லி மரங்கள் சூழ்ந்த அப்பகுதியில் விழுந்த அமிர்த துளியிலிருந்து சிவலிங்கம், அம்பிகை, தீர்த்தம் மூன்றும் உண்டாயின. கருடன் அசுரர்களை வென்றதோடு, அவ்விடத்தில் தோன்றிய இறைவனைப் பூஜித்துவிட்டு தன் பயணத்தைத் தொடர்ந்தார். பழையாறை எனப்படும் இத்தலம் பட்டீஸ்வரத்திற்கு அருகே 2கி.மீ., தூரத்தில் அமைந்துள்ளது. சுயம்பு லிங்கமான இப்பெருமான் சோமநாதர் என்ற திருநாமத்துடன் அழைக்கப் படுகிறார். அம்பிகை சோமகலாம்பிகை. தலவிருட்சமாக நெல்லிமரம் அமைந்துள்ளது. பிற்காலச் சோழர்காலத்தில் 2வது தலைநகரமாக இவ்வூர் விளங்கியது. ராஜராஜச்சோழனால் திருப்பணி செய்யபட்டதால் இக்கோயிலுக்கு அருண்மொழிதேவேச்சரம் என்ற பெயரும் உண்டு. நாயன்மார்களில் ஒருவரான அமர்நீதி நாயனார் அவதரித்த தலம் இது. தேவாரப்பதிகங்களில் இக்கோயில் பழையாறை வடதளி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.