பதிவு செய்த நாள்
27
செப்
2012
04:09
கதைச் சுருக்கம்: இவ்வாறு பகைவரை வென்றுயர்ந்த சீவகன் முருகனைப் போன்று வாகைசூடித் தன் அரண்மனையிற் புகுந்தான். கட்டியங்காரன் மனைவிமாருள் ஒருத்தி கணவன் பட்டமையுணர்ந்து ஆருயிர் நீத்தனள். ஏனை மகளிர் சீவகனைக் காண அஞ்சினர். அவர்க்கெல்லாம் சீவகன் அபயமளித்துப் பெருநிதி வழங்கினன். நீவிர் விரும்பியவிடத்தே சென்று விரும்பிய வண்ணம் வாழ்மின் என்று விடுத்தனன். போரில் இறந்ததொழிந்த மறவர் மக்கட்கு வரிசை பல வழங்கினன். பின்னர்ச் சீவகன் துயில் கொண்டான். மறுநாள் சீவகன் நீத்தெழுந்தவுடன் மங்கல நீராடி அணிகலன் அணிந்து அருகன் திருக்கோயிலை வழிபட்டனன். பின்னர் அரிமான் சுமந்த அரசுகட்டிலேறி அழகுற வீற்றிருந்தனன். தோழரும் உறவினரும் பிறரும் அரண்மனையில் வந்து குழுமினர். சீவகனுக்கு நன்முழுத்தத்தே மணிமுடி கவிக்க எண்ணினர். சுதஞ்சணன் என்னுந் தேவன் வானின்றிழிந்து வந்தனன். நன்முழுத்தத்தில் சீவகனுக்கு மணிமுடி சூட்டி வாழ்த்திச் சென்றான்.
கொற்ற வெண்குடை நிழற்ற அரியணைமிசை அரசுவீற்றிருந்த சீவகன், தன்னாட்டில் பதினாறாண்டு அரசிறை தவிர்த்தனன். இறைவன் கோயிலுக்கும் மறையோர்க்கும் கணி கட்கும் இறையிலியாக நன்னிலங்களை வழங்கினன். கட்டியங்காரனால் இன்னலுற்றோர்க்கெல்லாம் நிலமுதலிய ஈந்து இன்ப முறுவித்தான். நாட்டின்கண் பகையும் பசியுங் கெட்டன ; யாண்டும் மாந்தர் ஒருவனும் ஒருத்தியும் போன்று இன்புற்று வாழ்ந்தனர்.
2327. கண்ணாடி யன்ன கடிமார்பன் சிவந்து நீண்ட
கண்ணாடி வென்று களங்கண்டு நியம முற்றிக்
கண்ணாடி வண்டு பருகுங்கமழ் மாலை மூதூர்க்
கண்ணாடி யானை யவர்கைதொழச் சென்று புக்கான்.
பொருள் : கண்ணாடி அன்ன கடிமார்பன் - கண்ணாடி போன்ற வரைவினையுடைய மார்பனான சீவகன்; சிவந்து நீண்ட கண் ஆடி வென்று - சிவந்து நீண்ட கண்கள் எல்லோரிடமும் உலவி வென்றி கொண்டு; களம் கண்டு - போர்க்களத்தைப் பார்வையிட்டு; நியமம் முற்றி - களவேள்வி முதலியன முடித்து; கள்நாடி வண்டு பருகும் கமழ் மாலை - தேனையாராய்ந்து வண்டுகள் பருகும் மணங்கமழ் மாலை தூக்கப் பெற்ற; மூதூர்க்கண் ஆடு யானையவர் - பழம்பதியிலே வெற்றியையுடைய யானையையுடையவர்; கைதொழச் சென்று புக்கான் - கைகுவித்து வணங்கப் போய்ச் சேர்ந்தான்.
விளக்கம் : கண்ணாடி, தன்னைச் சேர்ந்தவர் செயலாலே இருக்கு மாறுபோல, இம் மார்பும் தன்னைச் சேர்ந்த மகளிர் செயலாயே இருத்தலின், கண்ணாடி அன்ன மார்பன் என்று இன்பச் சிறப்புக் கூறினார்; கையும் காலும் தூக்கத் தூக்கும் - ஆடிப்பாவை போல - மேவன செய்யும் தன் புதல்வன் தாய்க்கே என்றாற்போல; கண்ணாடிபோல முதுகு காட்டாத மார்பன் என்பாரும் உளர்; பகைவர் வீரத்தின் அழகை விளக்கும் மார்புமாம். ( 1 )
2328. கூடார் புலியு முழைக்கோளரி யேறு மன்ன
கூடார் மெலியக் கொலைவேனினைந் தானை யேத்திக்
கூடார மாலைக் குவிமென்முலைக் கோதை நல்லார்
கூடார மாட மயில்போலக் குழீயி னாரே.
பொருள் : கூடுஆர் புலியும் முழைக் கோளரி ஏறும் அன்ன - கூட்டிற் பொருந்திய புலியும் குகையில் விளங்கிய சிங்க வேறும் போன்ற; கூடார் மெலியக் கொலைவேல் நினைந்தானை ஏத்தி - பகைவர் தேயக் கொல்லுதற்குரிய வேலை ஏந்த எண்ணிய சீவகனைப் பாராட்டி; கூடு ஆரம் மாலைக் குவி மென்முலைக் கோதை நல்லார் - பொருந்திய முத்துமாலையை அணிந்த குவிந்த மென்முலையையும் கோதையையும் உடைய மகளிர்; கூடாரம் மாடம் மயில்போலக் குழீஇயினார் - கூடாங்களிலும் மாடங்களிலும் மயில்போலத் திரண்டனர்.
விளக்கம் : கூட்டுப் புலியும் முழைக் கோளரியும் போன்ற பகைவர் என்றது சூரபன்மனையும் ஒழிந்த அவுணரையும் என்றும், வேல் நினைந்தான் முருகன் என்றும், ஈண்டு அம் முருகனைப் போன்ற சீவகனைக் குறிப்பதாகவும் கூறுவர் நச்சினார்க்கினியர். இவ்வுவமை கட்டியங்காரன் முதலியோர்க்குத் தகாதென்றெண்ணி மேலும், முருகன் என்று சீவகனுக்கு ஒருபெயர் கூறினார், திருமால் போந்தான் (சீவக. 2369) என்று மேலும் கூறுவர் என்பர். கூடாரம் - கூடகாரம்; நெற்கூடுகள். ( 2 )
வேறு
2329. மாலைச் செற்றான் மக்களொ
டெல்லா முடனேயிம்
மாலைச் செற்றான் வைந்நுனை
யம்பின் னிவனென்பார்
மாலைக் கின்றே மாய்ந்தது
மாயாப் பழியென்பார்
மாலைக் கேற்ற வார்குழல்
வேய்த்தோண் மடநல்லார்.
பொருள் : மாலைச் செற்றான் மக்களொடு எல்லாம் - சச்சந்தனைக் கொன்ற கட்டியங்காரனையும் அவன் மக்களையும் எல்லோரையும்; உடனே இம்மாலை வைந்நுனை அம்பின் இவன் செற்றான் என்பார் - சேர இம்மாலைக் காலத்தே கூரிய முனையையுடைய அம்பினாலே இவன் கொன்றான் என்பார்; இன்றே மாலைக்கு மாயாப் பழி மாய்ந்தது என்பார். இன்றைக்கே குணமாலைக்கு இதுவரை மாயாத பழி மாய்ந்தது என்பார்; மாலைக்கு ஏற்ற வார்குழல் வேய்த்தோள் மடநல்லார் - மலர்மாலைக்குத் தகுந்த நீண்ட குழலையும் வேயனைய தோளையும் உடைய மங்கையர்.
விளக்கம் : நல்லார் என்பார் என்க. மால்; சச்சந்தன். குணமாலைக்குற்ற பழி சீவகன் அவளைத் தீண்டியதனால் - துன்பமுற்றான் என்பது. ( 3 )
2330. நாகந் நெற்றி நன்மணி சிந்தும் மருவிபோ
னாகந் நெற்றிந் நன்மணி யோடை நறவிம்மு
நாகந் நெற்றிந் நன்மலர் சிந்நி நளிர்செம்பொ
னாகந் நெற்றி மங்கைய ரொத்தார் மடநல்லார்.
பொருள் : நாகம் நெற்றி நன்மணி சிந்தும் அருவிபோல் - மலையின் உச்சியிலிருந்து அழகிய மணிகளைச் சிந்தி வீழும் அருவியைப்போல; நன்மணி ஓடை நாகம் நெற்றி - அழகிய மணிகளிழைத்த பட்டத்தையுடைய யானையின் நெற்றியிலே; நறவு விம்மும் நாகம் நெற்றி நன்மலர் சிந்தி - தேன் சொரியும் சுரபுன்னையின் உச்சியிலிருந்த அழகிய மலர்களைச் சிந்துவதால்; மடநல்லார் - மாடங்களின்மேல் நின்ற மங்கையர்; நளிர் செம்பொன் நாகம் நெற்றி மங்கையர் ஒத்தார் - விளங்கும் பொன்னிரைந்த சுவர்க்கத்திலிருந்து மலரைச் சொரிகின்ற மங்கையரைப் போன்றனர்.
விளக்கம் : நாகம் நான்கும் நிரலே, மலை, யானை, சுரபுன்னை, வானுலகம் என்க. ஓடை - முகபடாம். நற - தேன். நன்மலர் சிந்தி என்புழி செய்தெனெச்சத்தைச் செய என்னெச்சமாக்குக. ( 4 )
2331. கோடிக் கொடுங் கூம்புயர் நாவாய் நெடுமாடங்
கோடிப் பட்டிற் கொள்கொடி கூடப் புனைவாருங்
கோடித் தானைக் கொற்றவற் காண்பா னிழைமின்னக்
கோடிச் செம்பொற் கொம்பரின் முன்முன் றொழுவாரும்.
பொருள் : கோள் திக்கு ஓடும் கூம்பு உயர் நாவாய் - கோள்களாலே திக்குகளில் ஓடுகின்ற, கூம்பு உயர்ந்த மரக்கலம் தந்த; கோடிப் பட்டின் கொள்கொடி நெடுமாடம் கூடப் புனைவாரும் - புதிய பட்டினால் தைத்த கொடிகளை மாடங்களிலே சேரக் கட்டுவாரும்; கோடித்தானைக் கொற்றவற் காண்பான் - கோடிப் படையையுடைய அரசனைக் காண்பதற்கு; செம்பொன் கொம்பரின் கோடி இழை மின்ன - பொற்கொம்புபோல வளைந்து பூண்ஒளிர; முன்முன் தொழுவாரும் -முன்முன் வந்து தொழுவாருமாயினர்.
விளக்கம் : இருபது பட்டிற்குக் கோடி என்பதைப் பெயராக்கியும் உரைப்பர். கோடிக்கோடும் + கோள்திக்கு ஓடும் எனக் கண்ணழிக்க. கூம்பு பாய்மரம். நாவாய் - ஓடம். கோடித்தானை என்புழிக் கோடி - எண்ணுப் பெயர்; கொம்பரிற் கோடி என மாறுக, கோடி - வளைந்து.
2332. அம்புகை வல்லில் லார்கழன் மள்ளர் திறலேத்த
வம்புகைக் கொண்டா லாரிவற் கீண்டு நிகராவா
ரம்புகை யார்ந்த வந்துகி லல்குல் லவிர்கோதா
யம்புகைக் காணா மையனைக் கையிற் றொழுதென்பார்.
பொருள் : அம்பு உகை வல்வில் ஆர்கழல் மள்ளர் திறல் ஏத்த - அம்பைச் செலுத்தும் வலிய வில்லேந்திய, செறிந்த கழலையுடைய வீரர்கள் தன் ஆற்றலைப் புகழ; அம்பு கைக்கொண்டால் ஈண்டு இவற்கு நிகராவார் ஆர் - உலகைக் கைபற்றினால் இங்கு இவனுக்குச் சமமானவர் யார்; அம் புகை ஆர்ந்த அம் துகில் அல்குல் அவிர் கோதாய்! - அழகிய புகை ஊட்டப் பெற்ற துகிலை அணிந்த அல்குலையுடைய கோதையே!; ஐயனைக் கையால் தொழுது - சீவகனைக் கையால் தொழுததால்; அம்பு கைக் காணாம் என்பார் - வளையைக் கையில் காணோம் என்பார்.
விளக்கம் : இரண்டாம் அடியில் அம்பு என்பது நீர். அது நீர் சூழ்ந்த உலகிற்கு ஆகுபெயராயிற்று. உகை - உகைக்கின்ற; செலுத்துகின்ற மள்ளர் - வீரர். அம்புகை - அழகிய புகை. ஈற்றடியில் அம்பு - வளையல். ( 6 )
2333. மைத்துன நீண்ட மாமணி மாடம் மிசையேறி
மைத்துன நீண்ட வாட்டடங் கண்ணார் மலர்தூவ
மைத்துன மன்னர் மால்களி றேறிப் புடைசூழ
மைத்துன நீண்ட மாமணி வண்ண னவனொத்தான்.
பொருள் : மைதுன நீண்ட மாமணி மாடம் மிசை ஏறி - முகில் நெருங்க உயர்ந்த பெரிய மணிமாடங்களின்மேல் ஏறி ; வாள் மைத்து உன் நீண்ட தடங்கண்ணார் மலர் தூவ - வாள் ஒளி மழுங்கி நினைக்கும்படி நீண்ட பெரிய கண்களையுடைய மகளிர் மலர் சொரிய; மைத்துன மன்னர் மால்களிறு ஏறிப் புடைசூழ - மைத்துன வேந்தர்கள் பெரிய களிறுகளில் ஏறி அருகிற் சூழ; மை துன நீண்ட மாமணி வண்ணன் அவன் ஒத்தான் - கருமை பொருந்த உயர்ந்த நீலமணி வண்ணனைச் சீவகன் ஒத்தான்.
(விளக்கம்.) துன்ன என்பன துன என்றும், உன்ன என்பது உன என்றும் வந்தமை விகாரங்கள். மைத்தல் - ஒளி கெடுதல்; மைம் மைப்பினன்று குருடு (பழ. 188) என்றாற் போல. மணி வண்ணன் : திருமால். ( 7 )
வேறு
2334. ஊது வண்டரற் றும்முயர் தாமரைப்
போது பூங்கழு நீரொடு பூத்துடன்
வீதி மல்கின போன்மிளிர் வேற்கணு
மாத ரார்முகப் பூவு மலர்ந்தவே.
பொருள் : ஊது வண்டு அரற்றும் உயர் தாமரைப் போது - தாதை ஊதுகின்ற வண்டுகள் முரலும் உயர்ந்த தாமரை அரும்புகள்; பூங்கழுநீரொடு பூத்து - அழகிய கழுநீருடன் மலர்ந்து; உடன் வீதி மல்கினபோல் - சேர. தெருவெங்கும் நிறைந்தன போல; மாதரார் முகப்பூவும் மிளிர் வேல்கணும் மலர்ந்த - பெண்களின் முகப்பொலிவும் விளங்கும் வேலனைய கண்களும் பரந்தன.
விளக்கம் : தாதூதுவண்டென்க. கழுநீர் - ஒரு நீர்ப்பூ. முகப்பூ - முகப்பொலிவு. தாமரைப்பூ மகளிர் முகத்திற்கும் கழுநீர் கண்களுக்கும் உவமை. ( 8 )
2335. வீணை வித்தகன் வேந்தடு வீங்குதோள்
காணுங் காரிகை யார்கதிர் வெம்முலைப்
பூணு மாரமு மீன்றுபொன் பூத்தலர்ந்
தியாண ரூரம ராபதி போன்றதே.
பொருள் : வீணை வித்தகன் வேந்து அடுவீங்கு தோள் - யாழ் வல்லனாகிய சீவகனின், பகை மன்னரை வெல்லும் பருத்த தோள்களை; காணும் காரிகையார் கதிர் வெம்முலைப் பூணும் ஆரமும் ஈன்று - காணும் மகளிரையும் ஒளிவிடும் வெம்முலையில் அவர்கள் பூண்ட பூணையும் ஆரத்தையும் ஈன்று; பொன் பூத்து அலர்ந்து - வேய்ந்த பொன்னால் அழகுற்றுப் பரத்தலின் ; யாணரூர் அமராபதி போன்றது - புத்தழகு பெற்ற இராசமாபுரம் அமராவதியைப் போன்றது.
விளக்கம் : அமராவதி : வானவர் நாட்டின் தலைநகர். வீணை வித்தகன் என்றது சீவகனை. வேந்தடுதோள், வீங்குதோள் என இயைக்க. காரிகையார் - அழகியர். யாணர்ஊர் - புதுவருவாயினையுடைய இராசமாபுரம். ( 9 )
2336. தேம்பெய் கற்பகத் தாரவன் சேர்தலும்
பூம்பெய் கோதைப் புரிசைக் குழாநல
மோம்பு திங்க ளுலந்து சுடர்கண்ட
வாம்ப லாய்மலர்க் காடொத் தழிந்ததே.
பொருள் : தேன்பெய் கற்பகத் தாரவன் சேர்தலும் - தேன் சொரியும் கற்பக மாலையான் அரண்மனையை அடைந்தவுடன்; பூபெய் கோதைப் புரிசைக்குழாம் நலம் - மலர் பெய்த மாலை அணிந்த, மதிலிடத்திருந்த மகளிரின் அழகு; ஓம்பு திங்கள் உலந்து - இரவை ஓம்பிய திங்கள் மறைந்து; சுடர்கண்ட ஆம்பல் ஆய்மலர்க் காடு ஒத்து அழிந்தது - ஞாயிற்றைக் கண்ட ஆம்பலின் குவிந்த மலர்க் காட்டைப் போன்று கெட்டது.
விளக்கம் : தாரவன் : சீவகன், பூங்கோதை, பெய்கோதை எனத் தனித்தனி கூட்டுக. புரிசை - மதில், சுடர் - சிறப்பால் ஞாயிற்றை உணர்த்திற்று. ( 10 )
வேறு
2337. மாகம் முழக்கின் மணிநாகம் பதைப்ப வேபோ
லாகம் மறவ ரகன்கோயில்புக் கம்பொன் மாலைத்
தோகைம் மடவார் துவர்வாய் துடித் தஞ்ச வெம்பா
வேகம் முடைத்தாய் விழியாத்தொழித் தேகுகென்றார்.
பொருள் : மறவர் அகன் கோயில் புக்கு - அப்போது வீரர்கள் பெரிய அரண்மனையிலே நுழைந்து; மாகம் முழக்கின் மணிநாகம் பதைப்பவே போல் ஆக - முகில் முழக்கினால் மணியையுடைய பாம்புகள் துடிப்பன போல் ஆம்படி; அம் பொன் மாலைத் தோகை மடவார் துவர்வாய் துடித்து வெம்பா அஞ்ச - அழகிய பொன்மாலை அணிந்த மயிலனைய மங்கையர், தம் சிவந்த வாய் துடித்து வெம்பி நடுங்க; வேகம் உடைத்தாய் விழியா - விரைவுடனே விழித்துப் பார்த்து; தொழித்து ஏகுக என்றார் - சினந்து இவ்விடத்தினின்றும் ஏகுக என்றனர்.
விளக்கம் : அழாமற் பொருமுதலின் வாய்துடித்தது. மாகம் - முகிலுக்கு ஆகுபெயர்; மணிணையுடைய பாம்பென்க. ஆக மறவர், ஆகம்மறவர் என வண்ணத்தால் மகரவொற்று விரிந்து நின்றது, தோகை - மயில் : ஆகுபெயர். வெம்பா - வெம்பி. விழியா - விழித்து. ( 11 )
2338. செய்பாவை யன்னார் சிலம்பார்க்கு மென் சீற டியார்
செய்பூந் தவிசின் மிசையல்லது சேற லில்லார்
மையார்ந்த கண்ணீர் மணிப்பூண்முலை பாய விம்மா
வெய்தா மடவார் வெறுவெந்நிலத் தேகி னாரே.
பொருள் : செய் பாவை அன்னார் - செய்த பாவை போல் வார்; சிலம்பு ஆர்க்கும் மென் சீறடியார் - சிலம்புகள் ஒலிக்கும் மெல்லிய சிற்றடியார்; செய் பூந்தவிசின் மிசை அல்லது சேறல் இல்லார் - புனையப் பெற்ற மலரணையின் மேலன்றிச் சென்றறியாதவர் ஆகிய; மடவார் - பெண்கள்; மைஆர்ந்த கண்ணீர் மணிப் பூண்முலை பாய வெய்துஆ விம்மா - மை தோய்ந்த கண்களிலிருந்து பெருகும் நீர் மணிக்கலன் அணிந்த முலைகளிற் பாய வெய்தாக அழுது; வெறுவெந் நிலத்து ஏகினார் - வெறுமையான கொடிய தரையிலே நடந்து சென்றனர்.
விளக்கம் : செய்பாவை : வினைத்தொகை. சிற்பிகளாலியற்றப் பட்ட பாவை என்க; திருமகள் என்பர் நச்சினார்க்கினியர். விம்மா - விம்மி. ( 12 )
2339. நெருப்புற்ற போல நிலமோந்துழிச் செய்ய வாகிப்
பருக்கென்ற கோல மரற்பல்பழம் போன்று கொப்புள்
வருத்தம் மிழற்றிப் பசும்பொற்சிலம் போசை செய்யச்
செருக்கற்ற பஞ்சி மலர்ச்சீறடி நோவச் சென்றார்.
பொருள் : நிலம் மோந்துழி நெருப்பு உற்றபோலச் செய்ய ஆகி - (அப்போது) தரையிற் பதிந்தபோது நெருப்பை மிதித்தன போலச் சிவந்தன வாகுதலால்; செருக்கு அற்ற மலர் பஞ்சி சீறடி - வாடின இலவமலரைப்போன்ற பஞ்சியூட்டின சிற்றடிகளில்; பருக்கென்ற கோல மரல் பல் பழம் போன்று - பருத்துக் காட்டின அழகிய மரலின் பல பழங்களைப்போன்று; கொப்புள் வருத்த - கொப்புளங்கள் வருத்தலால்; மிழற்றிப் பசும்பொன் சிலம்பு ஓசை செய்ய - அவ்வருத்தத்தைக் கூறிப் பொற்சிலம்பு ஒலி செய்ய; நோவச் சென்றார் - அவ்வடி நோம்படி சென்றனர்.
விளக்கம் : பருக்கென்ற எனவே கொப்புளித்தன ஆயின. நிலமோந்துழி - நிலத்திற் பட்டவிடத்து. நெருப்புற்றபோலச் செய்யவாகி என இயைக்க. மரலினது பழம் கொப்புளுக்குவமை, மரற்பழுத்தன்ன மறுகுநீர் மொக்குள் (பொருந, 45) என்றார் பிறரும். செருக்கற்ற என்றது வாடின என்றவாறு.
2340. பொற்பூண் சுமந்து பொருகோட்டை யழித்து வெம்போர்
கற்பா னெழுந்த முலையார்களங் கண்டு நீங்கி
நற்பூ ணணிந்த முலையார்நிலை கால்ச ரிந்து
நெற்றிந் நிறுத்து வடம்வைத்த முலையி னாரும்.
பொருள் : பொன் பூண் சுமந்து பொரு கோட்டை அழித்து - பொன் அணி சுமந்து (யானையின்) பொருதற்குரிய கொம்பைக் கெடுத்து; வெம்போர் கற்பான் எழுந்த முலையார் - கொடிய போரைக் கற்பனவாக எழுந்த முலையினாரும்; களம் கண்டு நீங்கி நற்பூண் அணிந்த முலையார் - போர்க்களத்திலே போர்செய்து நீங்கிப் பேரணி புனைந்த முலையாரும்; நிலைகால் சரிந்து நெற்றி நிறுத்து வடம் வைத்த முலையினாரும் - நிலை தளர்ந்து உச்சியிலே நிறுத்திய வடம் கிடந்த முலையாரும்,
விளக்கம் : அழித்தென்பது, எதிர்காலம் நோக்கிய இறந்த காலச் சொல்; அழித்துப் கற்பான் என்க. இப்பாட்டுக் குளகம்.
2341. செங்காற் குழவி தழீயினார்திங்கள் புக்க நீரா
ரங்கான் முலையி னரும்பால்வரப் பாயினாரும்
பைங்காசு முத்தும் பவழத்தொடு பைம்பொ னார்ந்த
பொங்கார் முலையார் திருமுற்ற நிறைந்து புக்கார்.
பொருள் : செங்கால் குழவி தழீஇயினார் -சிவந்த அடிகளையுடைய குழவிகளைத் தழுவியவரும்; திங்கள் புக்க நீரார் - திங்கள் கடந்த சூலுடையாரும்; அம் கான் முலையின் அரும்பால் வரப் பாயினாரும் - அழகிய மணமுடைய முலையிலே அரிய பால் வரும் படி சூல் முற்றியவருமாகிய; பைங்காசும் முத்தும் பவழத்தொடு பைம்பொன் ஆர்ந்த பொங்குஆர் முலையார் - புதிய காசும் முத்தும் பவழமும் பொன்னணியும் நிறைந்த பருத்த முலையுடைய மகளிர்; திருமுற்றம் நிறைந்து புக்கார் - முற்றத்தே நிறையச் சென்றனர்.
விளக்கம் : நிறைந்து - நிறைய. சீவகன், இவர் பெறும் புதல்வர் அரசகுல மன்மையின், தன் குலத்திற்குப் பகையன்மையுணர்ந்து, அருளால் தீங்கு செய்யாது அவரைப் போக விடுகின்றானென்று மேற் கூறுகின்றார். கட்டியங்காரன் அருளின்மையாற் பகையென்றும், பெண் கொலை புரிந்து குலத்தெடுங்கோறல் (சீவக.261) எண்ணினான் என்றும் ஆண்டுக் கூறினார். எதிர் வந்து பொருதலின், முன்பு அவன் புதல்வரைக் கொன்றான் என்க.
2342. பெய்யார் முகிலிற் பிறழ்பூங்கொடி மின்னின் மின்னா
நெய்யார்ந்த கூந்த னிழற்பொன்னரி மாலை சோரக்
கையார் வளையார் புலிகண்ணுறக் கண்டு சோரா
நையாத் துயரா நடுங்கும்பிணை மான்க ளொத்தார்.
பொருள் : பெய்ஆர் முகிலின் பிறழ் பூங்கொடி மின்னின் மின்னா - பெய்தல் நிறைந்த முகிலிலே பிறழும் அழகிய கொடி மின்போல மின்னி; நெய் ஆர்ந்த கூந்தல் நிழல் பொன் அரிமலை சோர - நெய்ப்புப் பொருந்திய கூந்தலிலிருந்து ஒளிவிடும் பொன்னரிமாலை சோரும்படி; கைஆர் வளையார் - கையிற் பொருந்திய வளையினாராகிய அம் மகளிர்; நையாத் துயராச் சோரா - நைந்து துயருற்றுச் சோர்ந்து; புலி கண்ணுறக் கண்டு நடுங்கும் - புலியைக் கண்ணிற்கண்டு நடுங்குகின்ற; பிணை மான்கள் ஒத்தார் - பெண்மான்களைப் போன்றனர்.
விளக்கம் : பெய் - பெய்தல். பூங்கொடிமின் - அழகிய கொடி மின்னல். மின்னா - மின்னி. பொன்னரிமாலை - ஒரு கூந்தலணி. வளையார் : மகளிர். சோரா - சோர்ந்து. நையா - நைந்து, துயரா - துயர்உற்று. பிணைமான் - பெண்மான். சீவகனுக்குப் புலியும் மகளிர்க்கு மானும் உவமைகள். ( 16 )
2343. வட்டம் மலர்த்தா ரவனாலருள் பெற்று வான்பொற்
பட்டம் மணிந்தா ளிவர்தங்களுள் யாவ னென்ன
மட்டா ரலங்க லவன்மக்களுந் தானு மாதோ
பட்டா ரமருட் பசும்பொன்முடி சூழ வென்றார்.
பொருள் : வட்டம் மலர்த்தாரவனால் அருள் பெற்று - வட்டமாகிய தாரை அணிந்த கட்டியங்காரனாலே அருளைப் பெற்று; வான் பொன் பட்டம் அணிந்தாள் - சிறந்த பட்டம் அணிந்தவள்; இவர் தங்களுள் யாவள் என்ன - இவர்களிலே எவள் என்று (சீவகன் தன் பணியாளரை) வினவ; (நீ கேட்டவளுக்குக் களத்தின் செய்தி கூறுகின்றவர்); மட்டுஆர் அலங்கலவன் மக்களும் தானும் - தேனார்ந்த மாலையவனின் மக்களும் தானுமாக; பசும்பொன் முடிசூழ அமருள் பட்டார் என்றார் - பசிய பொன்முடி சூழப் போரிலே பட்டனர் என்று கூறினர்.
விளக்கம் : அடுத்த செய்யுளும் இஃதும் ஒருதொடர். வட்டத்தார். மலர்த்தார் என இயைக்க. தாரவன் : கட்டியங்காரன். பட்டம் அணிந்தாள் - பட்டத்தரசி, என்று சீவகன் வினவ என்க. களத்தின் செய்தி அவட்குக் கூறுகின்றுவர் பட்டார் என்றார் என்க. ( 17 )
2344. மாலே றனையா னொடுமக்களுக் கஃதோ வென்னா
வேலேறு பெற்ற பிணையின்னனி மாழ்கி வீழ்ந்து
சேலேறு சின்னீ ரிடைச்செல்வன போன்று செங்கண்
மேலேறி மூழ்கிப் பிறழ்ந்தாழ்ந்த விறந்து பட்டாள்.
பொருள் : மால்ஏறு அனையானொடு மக்களுக்கு அஃதோ என்னா - மயங்கிய ஏறுபோன்றானுக்கும் அவன் மக்களுக்கும் அஃதோ நோர்ந்தது என்று; வேல் ஏறு பெற்ற பிணையின் நனி மாழ்கி வீழ்ந்து - வேலால் தாக்கப்பெற்ற பெண்மான்போல மிகவும் வருந்தி வீழ்ந்து; சேல் ஏறு சின்னீரிடைச் செல்வன போன்று - சேல்மீன் வற்றிய சின்னீரிலே (கடிதிற் செல்லாமல்) மெல்லச் செல்வனபோல; செங்கண் மேல் ஏறி மூழ்கிப் பிறழ்ந்து ஆழ்ந்த - சிவந்த கண்கள் மெல்ல மேலே ஏறி மறிந்து கீழ்மேலாய் வீழ்ந்தன; இறந்து பட்டாள் - உடனே அவளும் இறந்து விட்டாள்.
விளக்கம் : யாவள் என்று வினாவ இறந்து பட்டாள் என்று விடையிறுத்தனர். அஃதோ என்றது. மன்னர் தீ ஈண்டு தம் கிளையோடு எரித்திடும் (சீவக. 250) என்று அமைச்சர் கூற, அவன் கேளாதிருந்தமை தான் கேட்டிருத்தலின், அது பின்பு பயந்தபடியோ என்றான். மால் - பெருமையுமாம். ( 18 )
2345. ஐவா யரவி னவிராரழல் போன்று சீறி
வெய்யோ னுயிர்ப்பின் விடுத்தேனென் வெகுளி வெந்தீ
மையா ரணல மணிநாகங் கலுழன் வாய்ப்பட்
டுய்யா வெனநீ ருடன்றுள்ள முருகல் வேண்டா.
பொருள் : ஐவாய் அரவின் அவிர் ஆரழல் போன்று - ஐந்தலை நாகத்தின் விளங்கும் நிறைந்த நஞ்சுபோல; சீறி வெய்யோன் உயிர்ப்பின் என் வெகுளி வெந்தீ விடுத்தேன் - (யானும்) முதலிற் சீறிக் கட்டியங்காரன் இறந்த பின்னர் என் சீற்றமாகிய தீயையும் போகவிட்டேன்; மை ஆர் அணல மணி நாகம் கலுழன் வாய்ப் பட்டு உய்யா என - கருமை நிறைந்த கழுத்தையுடைய, மணியுடைய பாம்பு கலுழனின் வாய்ப்பட்டுப் பிழையாதன போன்று; நீர் உடன்று உள்ளம் உருக வேண்டா - (நாமும் இனி உய்ய மாட்டோம் என்று) நீர் வருந்தி மனம் உருகுதல் வேண்டா.
விளக்கம் : பாம்பினது நஞ்சு ஒன்றற்கு உயிருள்ளளவும் வெகுண்டு, அவ்வுயிர் போய பின்பு அவ் வெகுட்சி நீங்குமாறுபோல, யானும் கட்டியங்காரன் உயிர்போமளவும் வெகுண்டு, அவனுயீர் போய பின்னர் அவ் வெகுளியை விட்டேன் என்றாள்.
2346. மண்கேழ் மணியி னுழையுந்துகி னூலின் வாய்த்த
நுண்கேழ் நுசுப்பின் மடவீர்நம்மை நோவ செய்யே
னொண்கேழ்க் கழுநீ ரொளிமுத்த முமிழ்வ தேபோற்
பண்கேழ் மொழியீர் நெடுங்கண்பனி வீழ்த்தல் வேண்டா.
பொருள் : துகில் நுழையும் மண்கேழ் மணியின் - ஆடையினுள்ளே மறையும் தூய ஒளிபொருந்திய மணிபோன்ற; நூலின் வாய்த்த நுண்கேழ் நுசுப்பின் மடவீர்! - நூலினும் பொருந்திய நுண்ணிய நிறமுடைய இடையினைக்கொண்ட மங்கையரே! நும்மை நோவ செய்யேன் - யான் நும்மை வருந்துவன செய்யேன். ஒண்கேழ் கழுநீர் ஒளி முத்தம் உமிழ்வதேபோல் - (இனி) ஒள்ளிய நிறமுடைய கழுநீர்மலர் ஒளியையுடைய முத்துக்களைச் சொரிதல் போல; பண்கேழ் மொழியீர்! - இசைபோல விளங்கும் மொழியினீர்!; நெடுங்கண் பனி வீழ்த்தல் வேண்டா - நீண்ட கண்கள் பனித்துளியைச் சிந்துதல் வேண்டா.
விளக்கம் : மண் - மண்ணுதல்; கழுவுதல், கேழ் - ஒளி. ஆடை போர்த்து நின்றமையால் துகிலின் நுழையும் மண்கேழ் மணியின் மடவீர் என்றான். துகிலின் நுழையும் மணியின் மடவீர் என்க. நோவ : பலவறிசொல். கழுநீர் - கண்ணுக்கும், முத்தம் - கண்ணீர்த்துளிக்கும் உவமை. ( 20 )
2347. என்னுங்கட் குள்ள மிலங்கீர்வளைக் கையி னீரே
மன்னிங்கு வாழ்வு தருதும்மவற் றானும் வாழ்மின்
பொன்னிங்குக் கொண்டு புறம்போகியும் வாழ்மின்னென்றான்
வின்னுங்க வீங்கி விழுக்கந்தென நீண்ட தோளான்.
பொருள் : இலங்கு ஈர்வளைக் கையினீரே! - விளங்கும், அறுக்கப்பட்ட வளையணிந்த கையை உடையீர்; மன் இங்கு வாழ்வு தருதும் - நும் மன்னன் நுமக்குத் தந்த வாழ்வுக்குரிய பொருளை யாமும் இங்கு நல்குவோம்; அவற்றானும் வாழ்மின் - அவற்றைக்கொண்டு ஈண்டிருந்தும் உயிர் வாழ்மின்; பொன் இங்குக் கொண்டு புறம்போகியும் வாழ்மின் உங்கட்கு உள்ளம் என்? என்றான் - பொன்னை இங்கிருந்து கொண்டு சென்று சென்று வெளியில் நுமக்கேற்ற இடங்களிலும் வாழுங்கோள்; உங்கள் கருத்து என்ன? என்றான்; வில்நுங்க வீங்கி விழுக் கந்து என நீண்ட தோளான் - வில்லை வலிக்கப் பருத்துச் சிறந்த தூண் என்னுமாறு நீண்ட தோளையுடையான்.
விளக்கம் : வாழ்வு - வாழ்தற்குரிய பொருள். மன் என்றது கட்டியங்காரனை. இங்கு மன் வாழ்வு தருதும் என மாறுக. மன்தந்த பொருள் என்பது கருத்து. இங்குப் பொன்கொண்டு என மாறுக. (21)
2348. தீத்தும்மும் வேலான் றிருவாய்மொழி வான்மு ழக்கம்
வாய்த்தங்குக் கேட்டு மடமஞ்ஞைக் குழாத்தி னேகிக்
காய்த்தெங்கு சூழ்ந்த கரும்பார்தம் பதிகள் புக்கார்
சேய்ச்செந் தவிசி நெருப்பென்றெழுஞ் சீற டியார்.
பொருள் : தீத் தும்மும் வேலான் திருவாய் மொழி - தீயைச் சொரியும் வேலானுடைய அழகிய வாய்மொழியாகிய; வான் முழக்கம் அங்கு வாய்த்துக் கேட்டு - முகில் முழக்கத்தை அவ்விடத்தே வாய்ப்பக் கேட்டு; சேய்ச் செந்தவிசு நெருப்பென்று எழும் சீறடியார் - மிகச் சிவந்த இருக்கையையும் நெருப்பு என்று நீங்கும் சிற்றடியினார்; மடமஞ்ஞைக் குழாத்தின் ஏகி - இளமயிற் குழுவைப்போலச் சென்று; காய்த் தெங்கு சூழ்ந்த கரும்பு ஆர்தம் பதிகள் புக்கார் - காய்த்த தென்னை சூழ்ந்தனவும், கரும்பு நிறைந்தனவுமான தங்கள் நகரங்களை அடைந்தனர்.
விளக்கம் : மயில் மழைக்கு மகிழ்தலின் மயில்போல் என்றார். தும்மும் என்றது - காலும் என்பதுபட நின்றது. வேலான் : சீவகன். வாய்த்து - வாய்ப்ப. கேட்ட மஞ்ஞை என இயைப்பினுமாம் ( 22 )
2349. காதார் குழையுங் கடற்சங்கமுங் குங்கு மமும்
போதா ரலங்கற் பொறையும்பொறை யென்று நீக்கித்
தாதார் குவளைத் தடங்கண்முத் துருட்டி விம்மா
மாதார் மயிலன் னவர்சண்பகச் சாம்பலொத்தார்.
பொருள் : மாது ஆர் மயில் அன்னவர் - காதல் நிறைந்த மயிலைப்போன்றவர்; காதுஆர் குழையும் - காதிலணிந்த குழையையும்; கடல் சங்கமும் - கடலிற் கிடைத்த சங்கினால் ஆகிய அணியையும்; குங்குமமும் - குங்குமத்தையும்; போது ஆர் அலங்கல் பொறையும் - மலராலாகிய மாலைச் சுமையையும்; பொறை என்று நீக்கி - சுமை என்று களைந்துவிட்டு; தாது ஆர் குவளைத் தடங்கண் முத்து உருட்டி விம்மா - தேன் பொருந்திய குவளைபோன்ற தடங்கண்களினின்றும் முத்தனைய நீர்த்துளியை உருட்டி விம்மி; சண்பகச் சாம்பல் ஒத்தார் - சண்பகப்பூ வாடலைப் போன்றனர்.
விளக்கம் : கணவனை யிழத்தலின் இவற்றை நீங்கி, உணவைச் சுருக்கியவராய் நோன்பை மேற்கொண்டனர். ( 23 )
2350. ஆய்பொற் புரிசை யணியாரகன் கோயி லெல்லாங்
காய்பொற் கடிகைக் கதிர்க்கைவிளக் கேந்தி மள்ளர்
வேய்பொன் னறையும் பிறவும்விரைந் தாய்ந்த பின்றைச்
சேய்பொற் கமல மகள்கைதொழுச் சென்று புக்கான்.
பொருள் : மள்ளர் - வீரர்கள்; காய் பொன் கடிகைக் கதிர்க்கை விளக்கு ஏந்தி - காய்ந்த பொன் துண்டங்களாலாகிய ஒளிருங் கைவிளக்கை ஏந்தி; ஆய் பொன் புரிசை அணி ஆர் அகன் கோயில் - ஆராய்ந்த பொன் மதில் சூழ்ந்த அழகிய பரவிய அரண்மனையும்; மேய் பொன் அறையும் - மேவிய பொன்னறையும்; பிறவும் எல்லாம் - பிற இடங்களும் ஆகிய எல்லாவற்றையும்; விரைந்து ஆய்ந்த பின்றை - விரைவாக ஆராய்ந்து காவலிட்டபின்; பொன் கமல மகள் கைதொழச் சேய் சென்று புக்கான் - சிவந்த பொற்றாமரையில் வாழும் திருமகள் வணங்க முருகனனையான் அக் கோயிலுட் புகுந்தான்.
விளக்கம் : கடிகை - துணித்தது; என்றது பொன்போர்த்த மூங்கிற் குழாயை. புரிசைக் கோயில், அணியார் கோயில், அகன் கோயில் என இயைக்க. கடிகை - துண்டம். கடிகைக்கைவிளக்கு, கதிர்க் கைவிளக்கு என இயைக்க. பொன்னறை - கருவூலம். சேய் : உவமவாகுபெயர்; சீவகன். கமலமகள் - திருமகள். ( 24 )
2351. முலையீன்ற பெண்ணைத் திரடாமங்க
டாழ்ந்து முற்று
மலையீன்ற மஞ்சின் மணிப்பூம்புகை
மல்கி விம்மக்
கலையீன்ற சொல்லார் கமழ்பூவணைக்
காவல் கொண்டார்
கொலையீன்ற வேற்கண் ணவர்கூடிய
மார்பற் கன்றே.
பொருள் : முலை ஈன்ற பெண்ணைத் திரள் தாமங்கள் தாழ்ந்து - முலைபோலுங் காயை யீன்ற பனை போலுந் திரண்ட மாலைகள் தாழ; முற்றும் மலை ஈன்ற மஞ்சின் மணிப் பூம்புகை மல்கி விம்ம - மாடமெங்கும் மலை தந்த முகில்போல அழகிய புகை நிறைந்து புறம் போக; கொலை ஈன்ற வேல்கண்ணவர் கூடிய மார்பற்கு - கொலையை நல்கிய வேலனைய கண்ணவர் சேர்ந்த மார்பனாகிய சீவகனுக்கு; அன்றே - அப்பொழுதே; கலை ஈன்ற சொல்லார் கமழ் பூஅணை காவல் கொண்டார் - கலைகளை நல்கிய மொழி மகளிர் மணங்கமழும் மலரணைக் காவலை மேற்கொண்டனர்.
விளக்கம் : முலைபோன்ற காயையீன்ற பெண்ணை என்க. பெண்ணை - பனை; இது தாமத்திற்குவமை. முலை பனைக்குவமமன்மையின் அடுத்து வரலுவமம் அன்றென்க. மஞ்சின் - முகில்போல. ( 25 )
2352. போர்க்கோல நீக்கிப் புகழ்ப்பொன்னி
னெழுதப் பட்ட
வார்க்கோல மாலை முலையார்மண்
ணுறுப்ப வாடி
நீர்க்கோலஞ் செய்து நிழல்விட்டுமிழ்
மாலை மார்பன்
றார்க்கோல மான்றேர்த் தொகைமாமற்
றொழுது சொன்னான்.
பொருள் : நிழல் விட்டு உமிழ் மாலை மார்பன் - ஒளியை வீசிச் சொரியும் முத்த மாலை அணிந்த மார்பன்; போர்க் கோலம் நீக்கி - போர்க் கோலத்தைப் போக்கி; புகழ்ப் பொன்னின் எழுதப்பட்ட வார்க் கோல மாலை முலையார் - புகழும் பொன்னாலே எழுதப்பட்ட கச்சையும் கோலத்தையும் மாலையையும் உடைய முலையார்; மண்ணுறுப்ப ஆடி - நீராட்ட ஆடி; நீர்க்கோலஞ் செய்து - அதற்குத் தக்க கோலத்தைச் செய்து; தார்க்கோலம் - தூசிப் படையின் அழகையும்; மான் தேர்த் தொகை - குதிரை பூட்டிய தேர்த்திரளையும் உடைய; மாமன் தொழுது சொன்னான் - மாமனை வணங்கிக் கூறினான்.
விளக்கம் : முன்னர் 2326 ஆஞ் செய்யுளிற் சீவகனை அரசர் நீராட்டியதாகப் பொருள்கூறிய நச்சினார்க்கினியர் ஈண்டுச் சீவகன் நீராடியதனைக், கள வேள்வி முடித்துக் களத்தினின்றும் வருதலின், பின்னும் மஞ்சனம் ஆடினான் என்பர். ( 26 )
2353. எண்கொண்ட ஞாட்பி னிரும்பெச்சிற்
படுத்த மார்பர்
புண்கொண்டு போற்றிப் புறஞ்செய்கெனப்
பொற்ப நோக்கிப்
பண்கொண்ட சொல்லார் தொழப்பாம்பணை
யண்ணல் போல
மண்கொண்ட வேலா னடிதைவர
வைகி னானே.
பொருள் : எண் கொண்ட ஞாட்பின் - நினைக்கத்தக்க இப்போரிலே; இரும்பு எச்சில் படுத்த மார்பர் - படைகளாலே புண் பட்ட மார்பினரின்; புண் போற்றிக்கொண்டு புறம் செய்க என - புண்ணைப் போற்றிக்கொண்டு காத்தருளுவீராக என்று கூறி; பொற்ப நோக்கி - (தானும் அவர்களை) அன்புடன் பார்த்து (வேண்டுவன செய்து) ; மண் கொண்ட வேலான் - நிலங்காவல் கொண்ட சீவகன்; பாம்பு அணை அண்ணல் போல - திருமாலைப் போல; பண்கொண்ட சொல்லார் தொழ - பண்போன்ற மொழி மகளிர் வணங்கவும்; அடி தைவர - அடிகளைத் தடவவும்; வைகினான் - துயில் கொண்டான்.
விளக்கம் : எண் கொண்ட ஞாட்பின் என்பதற்குத் தேவாசுரம், இராமாயணம், மாபாரதம்என்ற போரில் வீரர் புண்படுமாறுபோல என அப் போர்களோடு எண்ணுதல் கொண்ட போரில் என்று ஆசிரியர் கூற்றாகவும் கூறலாமென்றும் நச்சினார்க்கினியர் பொருள் கூறுவர். பலர் புண்களையும் அறிந்து பரிகரித்தாற்கோவிந்தனைக் கூறினான். செய்க: வேண்டிக் கோடற்கண் வந்த வியங்கோள். முன்னர், மண் கருதும் வேலான் (சீவக. 1225) என்றதற்கேற்ப, ஈண்டு, மண்கொண்ட வேலான் என்றார். ( 27 )
வேறு
2354. வாள்க ளாலே துகைப்புண்டு
வரைபுண் கூர்ந்த போல்வேழ
நீள்கால் விசைய நேமித்தே
ரிமைத்தார் நிலத்திற் காண்கலாத்
தாள்வல் புரவி பண்ணவிழ்த்த
யானை யாவித் தாங்கன்ன
கோள்வா யெஃக மிடம்படுத்த
கொழும்புண் மார்ப ரயாவுயிர்த்தார்.
பொருள் : வாள்களாலே துகைப்பு உண்டு வரைபுண் கூர்ந்த போல் வேழம் - வாள்களாலே வெட்டுண்டதனால், மலை புண் மிகுந்தது போன்ற யானையும்; நீள் கால் விசைய நேமித்தேர் - பெருங் காற்றைப் போலும் விரைந்து செல்லும் உருளுடைய தேரும்; இமைத்தார் நிலத்தில் காண்கலாத் தாள் வல் புரவி - கண்ணை இமைத்தவர் பின்பு நிலத்திற் காணவியலாத வலிய கால்களையுடைய புரவியும்; பண் அவிழ்த்த யானை ஆவித்தாங்கு அன்ன கோள்வாய்எஃகம் இடம்படுத்த - பண்ணவிழ்த்த யானை கொட்டாவி கொண்டாற் போன்றதாம்படி, கொலை வல்ல வாள் பிளந்த; கொழும் புண் மார்பர் - பெரும் புண்களையுடைய மார்பரும்; அயா வுயிர்த்தார் - இளைப்பாறினார்.
விளக்கம் : அஃறிணையும் உயர்திணையும் எண்ணிச் சிறப்பினால் அயாவுயிர்த்தார் என உயர்திணை முடிபைப் பெற்றன. ( 28 )
2355. கொழுவாய் விழுப்புண் குரைப்பொலியுங்
கூந்தன் மகளிர் குழைசிதறி
யழுவா ரழுகைக் குரலொலியு
மதிர்கண் முரசின் முழக்கொலியுங்
குழவாய்ச் சங்கின் குரலொலியுங்
கொலைவல் யானைச் செவிப்புடையு
மெழுவார் யாழு மேத்தொலியு
மிறைவன் கேளாத் துயிலேற்றான்.
பொருள் : கொழுவாய் விழுப்புண் குரைப் பொலியும் - அழகிய இடும்பை தரும் புண்வாய் காற்றைப் புறப்பட விடும் ஒலியையும்; கூந்தல் மகளிர் குழை சிதறி அழுவார் அழுகைக் குரல் ஒலியும் - இறந்தவர்க்குக் கூந்தலையுடைய மகளிர் குழையை வீசிவிட்டு அழுவாருடைய அழுகைக் குரலிற் பிறந்த ஒலியையும்; அதிர்கண் முரசின் முழக்கு ஒலியும் - அதிரும் கண்ணையுடைய முரசு முழக்குதலால் உண்டாம் ஒலியையும்; குழுவாய்ச் சங்கின் குரல் ஒலியும் திரண்ட வாயையுடைய சங்கின் முழக்கால் எழுந்த ஒலியையும்; கொலை வல்யானைச் செவிப் புடையும் - நொந்த யானையின் காதடிப்பினால், எழும் ஒலியையும்; எழுவார் யாழும் - யாழிசைப்பாரின் யாழொலியையும்; ஏதது ஒலியும் - வாழ்த்தும் ஒலியையும்; இறைவன் கேளாத் துயில் ஏற்றான் - அரசன் கேட்டவாறு துயில் நீங்கினான்.
விளக்கம் : விழுப்புண் - முகத்திலும் மார்பிலும் பட்டபுண் - இடும்பை தரும்புண் என்பர் நச்சினார்க்கினியர். விழுமம் - இடும்பை. குரைப்பொளி: இருபெயரொட்டு. அழுவார் : வினையாலணையும் பெயர். குழுவாய்ச் சங்கென்புழி, குழு - திரட்சி, செவிப்புடை - காதடித்தலால் எழும் ஒலி. எழுவார் . எழுப்புவோர். இறைவன் : சீவகன். ( 29 )
2356. தொடித்தோண் மகளி ரொருசாரார்
துயரக் கடலு ளவர்நீந்த
வடிக்கண் மகளி ரொருசாரார்
வரம்பி லின்பக் கடனீந்தப்
பொடித்தான் கதிரோன் றிரைநெற்றிப்
புகழ்முப் பழநீர்ப் பளிங்களைஇக்
கடிப்பூ மாலை யவரேந்தக்
கமழ்தா மரைக்கண் கழீஇயினான்.
பொருள் : ஒரு சாரார் தொடித் தோள் மகளிர் அவர் துயரக் கடலுள் நீந்த - பட்டவருடைய மகளிராகிய தொடியணிந்த தோளையுடைய அவர்கள் துயரக் கடலிலே நீந்தவும்; ஒரு சாரார் வடிக்கண் மகளிர் வரம்பில் இன்பக் கடல் நீந்த - வென்று மீண்டவருடைய மகளிராகிய மாவடுவனைய கண்களை யுடையவர் எல்லையில்லாத இன்பக் கடலிலே நீந்தவும்; திரை நெற்றிக் கதிரோன் பொடித்தான் - கடலின் முகட்டிலே கதிரவன் தோன்றினான்; புகழ் முப்பழநீர்ப் பளிங்கு அளைஇ - புகழ் பெற்ற முப்பழங்கள் ஊறின நீரிலே கருப்பூரத்தைக் கலந்து; கடிப்பூ மாலையவர் ஏந்தக் கமழ் தாமரைக்கண் கழீஇயினான் - மணமலாமாலை மகளிர் ஏந்தத் தாமரை மலரனைய தன் கண்களைச் சீவகன் கழுவிக் கொண்டான்.
விளக்கம் : ஒரு சாராராகிய மகளிர் துயரக் கடலுள் நீத்த ஒரு சாராராகிய மகளிர் இன்பக் கடல் நீக்க என இயைக்க. தோற்றோரும் வென்றோருமாகிய இருசாராருள் ஒருசாரார் என்க. பொடித்தான் - தோன்றினான். முப்பழம் - கடு, நெல்லி, தான்றி என்பன. பளிங்கு - கருப்பூரம். ( 30 )
2357. முனைவற் றொழுது முடிதுளக்கி
முகந்து செம்பொன் கொளவீசி
நினைய லாகா நெடுவாழ்க்கை
வென்றிக் கோல விளக்காகப்
புனையப் பட்ட வஞ்சனத்தைப்
புகழ வெழுதிப் புனைபூணான்
கனைவண் டார்க்கு மலங்கலுங்
கலனு மேற்பத் தாங்கினான்.
பொருள் : நினையல் ஆகா நெடு வாழ்க்கை - பிறராற் கருதற்கரிய பெருஞ் செல்வத்திற்கும்; வென்றிக் கோலம் - வெற்றிக் கோலத்திற்கும்; விளக்காக - விளக்க மாகும்படி; முனைவன் தொழுது - அருகனை அஞ்சலி செய்து; முடிதுளக்கி - தலைதாழ்த்து; செம்பொன் முகந்து கொள வீசி - சிறந்த பொன்னை யாவரும் வாரிக் கொள்ளுமாறு கொடுத்து; புனையப்பட்ட அஞ்சனத்தைப் புகழ எழுதி - கை செய்த மையைப் புகழுமாறு கண்ணில் எழுதி; கனை வண்டு ஆர்க்கும் அலங்கலும் கலனும் - வண்டுகள் முரலும் மாலையும் அணிகளும்; புனை பூணான் ஏற்பத் தாங்கினான் - புனைந்த பூணான் பொருந்தத் தாங்கினான்.
விளக்கம் : முனைவன் என்றது அருகக்கடவுளை. பிறராற் பெறலாமென்று நினையலாகா என்றவாறு. கண்டோர் புகழ எழுதி என்க. கனை வண்டு - மிக்கவண்டு. அலங்கல் - மாலை. ( 31 )
2358. முறிந்த கோல முகிழ்முலையார்
பரவ மொய்யார் மணிச்செப்பி
லுறைந்த வெண்பட் டுடுத்தொளிசேர்
பஞ்ச வாசங் கவுட்கொண்டு
செறிந்த கமுநீர்ப் பூப்பிடித்துச்
சேக்கை மரீஇய சிங்கம்போ
லறிந்தார் தமக்கு மநங்கனா
யண்ணல் செம்மாந் திருந்தானே.
பொருள் : முறிந்த கோலம் முகிழ் முலையார் பரவ - தளிர்த்த கோலத்தை யுடைய முகிழ்த்த முலையார் வணங்க; மொய்ஆர் மணிச் செப்பில் - மணிகள் இழைத்த செப்பில்; உறைந்த வெண்பட்டு உடுத்து - இருந்த வெண்பட்டை அணிந்து; ஒளிசேர் பஞ்ச வாசம் கவுள் கொண்டு - ஒளி பொருந்திய ஐந்து முகவாசத்தையும் கவுளிலடக்கி; செறிந்த கழுநீர்ப் பூப்பிடித்து - இதழ் நெருங்கிய கழுநீர் மலரைக் கையில் ஏந்தி; அறிந்தார் தமக்கும் அநங்கனாய் - (இக் கோலத்தாலே) அறிந்தவர்களுக்கும் காமனாகத் தோற்றி; சேக்கை மெரீஇய சிங்கம்போல் - (ஆண்மையினாலே) சேக்கையைப் பொருந்திய சிங்கம் போல; அண்ணல் செம்மாந்து இருந்தான் - சீவகன் வீறுடன் அச் சேக்கையிலே இருந்தான்.
விளக்கம் : முலையார் மெலிய என்றும் பாடம். இது மற்றை நாளிலே சமய மண்டபமிருந்த காட்சி. ( 32 )
2359. வார்மீ தாடி வடஞ்சூடிப்
பொற்பார்ந் திருந்த வனமுலையா
ரேர்மீ தாடிச் சாந்தெழுதி
யிலங்கு முந்நீர் வலம்புரிபோற்
கார்மீ தாடிக் கலம்பொழியுங்
கடகத் தடக்கைக் கழலோனைப்
போர்மீ தாடிப் புறங்கண்ட
புலால்வேன் மன்னர் புடைசூழ்ந்தார்.
பொருள் : வார் மீது ஆடி - கச்சை அறுத்து; வடம்சூடி - முத்துமாலை அணிந்து; பொற்பு ஆர்ந்திருந்த வனமுலையார் - பொலிவு நிறைந்திருந்த ஒப்பனையுடைய முலையார்; ஏர்மீது ஆடிச் சாந்தெழுதி - அழகு மேலாகச் சாந்தையும் எழுதி; இலங்கும் முந்நீர் வலம்புரிபோல் - விளங்கும் பாற்கடலிலிருந்தெழுந்த சங்கநிதிபோல; கார்மீது ஆடிக் கலம்பொழியும் - காரை வென்று கலன்களைப் பொழிகிற; கடகத் தடக்கைக் கழலோனை - கடகமணிந்த தடக்கையையும் கழலையும் உடையவனை; போர்மீது ஆடிப் புறம் கண்ட புலால் வேல் மன்னர் புடை சூழ்ந்தார் - போரை வென்று பகைவரைப் புறங்கண்ட புலவு நாறும் வேலணிந்த மன்னர் சூழ்ந்தனர்.
(விளக்கம்.) வார் - கச்சு. வடம் - முத்துவடம். பொற்பு - பொலிவு. கார்மீதாடி - மேகத்தை வென்று. கலம் - அணிகலன். கழலோன்: சீவகன். ( 33 )
வேறு
2360. தொல்லை நால்வகைத் தோழருந்
தூமணி நெடுந்தேர்
மல்லற் றம்பியு மாமனு
மதுவிரி கமழ்தார்ச்
செல்வன் றாதையுஞ் செழுநக
ரொடுவள நாடும்
வல்லைத் தொக்கது வளங்கெழு
கோயிலு ளொருங்கே.
பொருள் : தொல்லை நால்வகைத் தோழரும் - பழைமையான நான்கு தோழர்களும்; தூமணிநெடுந்தேர் மல்லல் தம்பியும் - தூய மணிகள் இழைத்த பெரிய தேரையுடைய வளமிகு தம்பியும்; மாமனும் - கோவிந்தனும்; கமழ்தார்ச் செல்வன் தாதையும் - மணமிகுந்தாரணிந்த சீவகனுக்குத் தந்தையான கந்துக்கடனும்; செழுநகரொடு வளநாடும் - பழைய ஊரும் வள நாடும்; வளம் கெழு கோயிலுள் - செல்வம் நிறைந்த அரண்மனையிலே; ஒருங்கே வல்லை தொக்கது ஒன்று சேர விரைந்து கூடின.
விளக்கம் : நந்தட்டன் சிறந்தமையிற் கூறினாரென்பர் நச்சினார்க்கினியர். பின்னரும் நபுல விபுலரைப் பேசாது விட்டதனால் அவர்கள் போரில் இறந்திருத்தல் வேண்டும். திணை விராய் எண்ணி அஃறிணையினால் முடிந்தது. தொக்கது என்பதனாற் பன்மையொருமை மயக்கமுமாம். ( 34 )
2361. துளங்கு வெண்மதி யுகுந்தவெண்
கதிர்தொகுத் ததுபோல்
விளங்கு வெள்ளியம் பெருமலை
யொழியலந் தெழிலார்
வளங்கொண் மாநகர் மழகதிர்
குழீஇயின போலக்
களங்கொண் டீண்டினர் கதிர்முடி
விஞ்சையர் பொலிந்தே.
பொருள் : துளங்கு வெண்மதி உகுத்த வெண்கதிர் தொகுத்ததுபோல் - அசைவினையுடைய வெண்மதி சொரிந்த வெண் கதிரைக் குவித்த தன்மை போல; விளங்கு வெள்ளிஅம் பெருமலை ஒழிய வந்து - விளங்கும் பெரிய வெள்ளி மலையை விட்டுவந்து; எழில் ஆர் வளங்கொள் மாநகர் மழகதிர் குழீஇயின போல - அழகிய வளமிகும் இராசமா புரத்திலே இளங்கதிர் திரண்டாற் போல; பொலிந்து கதிர்முடி விஞ்சையர் களம் கொண்டு ஈண்டினர் - பொலிவுற்று, ஒளிவீசும் முடீயணிந்த விஞ்சையர் யாவரும் இடங்கொண்டு திரண்டனர்.
விளக்கம் : ஒழிய என்பதற்குக், கலுழவேகன் தங்க என்று பொருள் கூறுவர் நச்சினார்க்கினியர். ( 35 )
2362. எண்ண மென்னினி யெழின்முடி
யணிவது துணிமின்
கண்ண னாரொடு கடிகையும்
வருகென வரலும்
பண்ணி னார்முடி பழிச்சிய
மணிபொனிற் குயிற்றி
யண்ண லாய்கதி ரலமவரப்
புலமக ணகவே.
பொருள் : இனி எண்ணம் என் ? - இனியும் நினைவுகூர்தல் ஏன் ?; எழில் முடி அணிவது துணிமின் - அழகிய முடியை அணிவதை நினைமின் (என்று முன் வந்தோர் அமைச்சரை நோக்கிக் கூற அவர்கள்); கண்ணனாரொடு கடிகையும் - புரோகிதருடன் முழுத்தம் வைப்பவனும்; அண்ணல் ஆய்கதிர் அலம் வரப்புலமகள் நக - தலைமைபெற்ற சிறந்த கதிர்கள் அசையவும் நாமகன் மகிழவும்; பழிச்சிய மணிபொனில் குயிற்றி - புகழ்ந்த மணிகளைப் பொன்னிலே அழுத்தி; முடி பண்ணினார் - மடியமைத்த வரும்; வருக என வரலும் - வருக என்றவுடன் அவர்களும் வரவும்;
விளக்கம் : இப் பாட்டுக் குளகம். இனி யென்றார் காலங்கழிக்குமது தகாது என்றற்கு. என்றதனாலே புரோகிதன் முதலாகத் துறைதோறும் அழைக்க வேண்டுவாரை அழைத்ததும், அங்குரார்ப்பணம் அதிவாசம் முதலியசடங்குகள் யாவும் நடத்தி முழுத்தம் பார்த்திருந்ததுவும் தோன்றக் கூறினார். முடியமைத்தற்குரிய நூல்கள் எல்லாம் முற்ற முடித்தலின், நாமகள் மகிழ என்றார். புலமகள் நகப் புண்ணினாரும் என்க. ( 36 )
2363. விரியு மாலையன் விளங்கொளி
முடியினன் றுளங்கித்
திருவின் மால்வரைக் குலவிய
தனையதோர் தேந்தா
ரகுலி போல்வதோ ராரமு
மார்பிடைத் துயல
வெரியும் வார்குழை யிமையவ
னொருவன்வந் திழிந்தான்.
பொருள் : திருவில் துளங்கி மால்வரைக் குலவியது அனையது ஓர் தேன் தார் - வானவில் அசைந்து பெரிய மலை ஒன்றிலே விளங்கிய தன்மை போல்வதொரு தேன்சொரியும் தாரும்; அருவி போல்வது ஓர் ஆரமும்-(அம் மலைமிசை) அருவி போல்வதாகிய ஒரு முத்துவடமும்; மார்பிடைத் துயல - மார்பிலே அசைய; விளங்கு ஒளி விரியும் மாலையன் - விளங்கும் ஒளி பரவும் இயல்பினனாய்; முடியினன் - முடியினனாய்; எரியும் வார்குழை இமையவன் ஒருவன் வந்து இழிந்தான் - ஒளிவிடும் நீண்ட குழையணிந்த வானவன் ஒருவன் வந்து இறங்கினான்.
விளக்கம் : வந்தவன் சுதஞ்சணன், திருவில் - வானவில் இமையவன் - தேவன்; என்றது சுதஞ்சணனை, இழிந்தான் - இறங்கினன்.
( 37 )
2364. கொம்மை யார்ந்தன கொடிபட
வெழுதின குவிந்த
வம்மை யார்ந்தன வழகிய
மணிவட முடைய
வெம்மை செய்வன விழுத்தகு
முலைத்திட முடைய
பொம்மெ லோதியர் பொழிமின்னுக்
கொடியென விழிந்தார்.
பொருள் : கொம்மை ஆர்ந்தன் - பெருமை நிறைந்தன கொடிபட, எழுதின - கொடியமைய எழுதப்பட்டன; குவிந்த - குவிந்தன; அம்மை ஆர்ந்தன - அழகிய கருமை நிறைந்தன அழகிய மணிவடம் உடைய - அழகிய முத்துவடம் உடையன ; வெம்மை செய்வன - விருப்பூட்டுவனவாகிய; முலைத்தடம் உடைய - முலைகளையுடைய; பொம்மெல் ஓதியர் - பொங்கிமெத்தென்ற கூந்தலையுடையர்; பொழிமின்னுக்கொடி என இழிந்தார் - ஒளியைப் பெய்யும் மின்னொழுங்கென இறங்கினர்.
விளக்கம் : கொம்மை - பெருமை; வட்டமுமாம். கொடி - தொய்யிற் கொடி. அம்மை - அழகிய மை. வெம்மை - விருப்பம், இவர்கள் - சுதஞ்சணன் மனைவிமார் என்க. ( 38 )
2365. மையல் யானையின் படுமதங்
கெடப்பகட் டரசன்
செய்த மும்மதம் போற்றிசை
திசைதொறுங் கமழுந்
தெய்வ வாசத்துத் திருநகர்
வாசங்கொண் டொழிய
வெய்யர் தோன்றினர் விசும்பிடைச்
சிறப்பொடும் பொலிந்தே.
பொருள் : மையல் யானையின் படுமதம் கெட - மயக்கம் பொருந்திய யானையின் மதம் கெடுமாறு; பகட்டரசன் செய்த மும்மதம் போல் - களிற்று வேந்தன் உண்டாக்கின மதம்போல ; திசை திசைதொறும் கமழும் தெய்வ வாசத்து - எல்லாத் திசையினும் சென்று மணக்கின்ற தெய்வ மணத்தாலே; திருநகர் வாசம் கொண்டு ஒழிய - அவ்வழகிய நகரின் மணம் அடங்க; விசும்பிடைச் சிறப்பொடும் பொலிந்து - வானிலே சிறப்பொடும் பொலிவுற்று; வெய்யர் தோன்றினர் - விரைந்து தோன்றினர்.
விளக்கம் : சிறப்பென்றார் சீவகன் மணிமுடி விழாவிற்குச் சிறப்புறக் கொண்டு வந்த பொருள்களை. மையல் - மயக்கம். படுமதம் : வினைத்தொகை. பகட்டரசன் - யானைகட்குத் தலைவனாகிய களிறு. இதனை யூதநாதன் என்ப. வெய்யர் - விரைந்தனராய் : முற்றெச்சம். ( 39 )
2366. வெருவி மாநகர் மாந்தர்கள் வியந்துகை விதிர்ப்பப்
பருதி போல்வன பாற்கட னூற்றெட்டுக் குடத்தாற்
பொருவில் பூமழை பொன்மழை யொடுசொரிந் தாட்டி
யெரிபொ னீண்முடி கவித்தனன் பலித்திரற் றொழுதே.
பொருள் : மாநகர் மாந்தர்கள் வெருவி வியந்து கைவிதிர்ப்ப - பெருநகரிலுள்ள மக்கள் அஞ்சி வியந்து கைவிதிர்க்கும்படி; பொருஇல் பூமழை பொன் மழையொடு சொரிந்து - ஒப்பற்ற மலர்மழையைப் பொன்மழையுடன் சொரிய; பருதி போல்வன நூற்றெட்டுக் குடத்தால் ஞாயிறு போன்றனவாகிய நூற்றெட்டுக் குடங்களால்; பாற்கடல் சொரிந்து ஆட்டி - பாற்கடலிலே முகந்து ஆட்டி; பவித்திரன் தொழுது - தூய்வனாகிய சீவகனை வணங்கி; எரிபொன் நீளமுடி கலித்தனன் - ஒளிவிடும் நீண்ட பொன்முடியைக் கவித்தான்.
விளக்கம் : பவித்திரன் என்றார் நெஞ்சின் தூய்மை தோன்ற. சீவகன் மந்திரமோதி நாய்ப்பிறப்பை நீக்கிய ஆசிரியனாதலின் சுதஞ்சணன் தொழுதான். ( 40 )
2367. தேவ துந்துபி தேவர்கட் கோகையுய்த் துரைப்பா
னாவி யம்புகை யணிகிளர் சுண்ணமோ டெழுந்த
நாவி னேத்தின ரரம்பையர் நரம்பொலி யுளர்ந்த
காவன் மன்னருங் கடிகையுங் கடவது நிறைத்தார்.
பொருள் : ஆவி அம்புகை அணிகிளர் சுண்ணமோடு - ஓமப் புகையொடும் அழகு விளங்கும் சுண்ணத்தோடும்; தேவர்கட்கு ஓகை உய்த்து உரைப்பான் - வானவர்கட்கு இம் மகிழ்ச்சியைக் கொண்டு சென்று கூறுவதற்கு; தேவதுந்துபி எழுந்த - தெய்வ வாச்சியங்கள் எழுந்தன; அரம்பையர் நாவின் ஏத்தினர் - வான மங்கையர் நாவினாற் போற்றினர்; நரம்பு ஒலி உளர்ந்த - நரம்பொலி பாட்டுடன் வாசிக்கப்பட்டன; காவல் மன்னரும் கடிகையும் கடவது நிறைத்தார் - காவலுடைய வேந்தரும் கடிகை வரும் தம் கடமையை நிரப்பினர்.
விளக்கம் : ஆவி : அவியென்பதன் விகாரம் மன்னர் கைக் காணிக்கை இட்டு வணங்கினார். கடிகையர் மங்கலம் பாடினர். நாவின் ஏத்துநர் பாடமாயின், ஏத்துநராகிய அரம்பைய ரென்க. ( 41 )
2368. திருவ மாமணிக் காம்பொடு
திரள்வடந் திளைக்கு
முருவ வெண்மதி யிதுவென
வெண்குடை யோங்கிப்
பரவை மாநில மளித்தது
களிக்கயன் மழைக்கட்
பொருவில் பூமகட் புணர்ந்தன
னிமையவ னெழுந்தான்.
பொருள் : திருவ மாமணிக் காம்பொடு திரள்வடம் திளைக்கும் உருவ வெண்மதி இது என - அழகிய பெரிய மணிக்காம்புடன் திரண்ட முத்துவடமும் பயின்ற உருவினையுடைய வெண்திங்கள் இது வென்னுமாறு; வெண்குடை ஓங்கி - வெண்கொற்றக்குடை உயர்ந்து; பரவை மாநிலம் அளித்தது - கடல் சூழ்ந்த பெருநிலத்தைக் காத்தது; களிக்கயல் மழைக்கண் பொருஇல் பூமகள் புணர்ந்தனன் - மகிழ்ந்த கயல்போலும் மழைக்கண்களையுடைய ஒப்பற்ற நிலமகளைச் சீவகன் தழுவினான்; இமையவன் எழுந்தான் - சுதஞ்சணனும் தன்னுலகு செல்லப் போயினான்.
விளக்கம் : திருவ : அ : அசை. காம்பும் வடமும் திளைக்கும் மதி : இல்பொருளுவமை. குடையும் முடிபுனை மங்கலப் பொருள்களில் ஒன்று. ( 42 )
வேறு
2369. மின்னுங் கடற்றிரையின் மாமணிக்கை
வெண்கவரி விரிந்து வீசப்
பொன்னங் குடைநிழற்றப் பொன்மயமா
முழைக்கலங்கள் பொலிந்து தோன்ற
மன்னர் முடியிறைஞ்சி மாமணியங்
கழலேந்தி யடியீ டேத்தச்
சின்ன மலர்க்கோதைத் தீஞ்சொலார்
போற்றிசைப்பத் திருமால் போந்தான்.
பொருள் : மின்னும் கடல் திரையின் மாமணிக்கை வெண்கவரி விரிந்து வீச - ஒளிரும் பாற்கடலலைபோல மணிகளிழைத்த கைப்பிடியையுடைய வெண்கவரி பரவி வீச; பொன் அம்குடை நிழற்ற - அழகிய பொற்குடை நிழல் செய்ய; பொன்மயம் ஆம் உழைக்கலங்கள் பொலிந்து தோன்ற - பொன்னாலாகிய உழைக்கலங்கள் விளக்கித் தோன்ற; மன்னர் முடி இறைஞ்சி மாமணி அம் கழல் ஏந்தி அடியீடு ஏத்த - அரசர்கள் முடியைத் தாழ்த்தி மணிக்கழலையேந்தி அடியிடுதலை ஏத்த; சின்ன மலர்கோதைத் தீஞ்சொலார் போற்றிசைப்ப - விடு பூவையும் கோதையையும் அணிந்த இனிய மொழியார் போற்றிக் கூற; திருமால் போந்தான் - சீவகன் (நன்னிலம் மிதிக்கப்) போந்தன்.
விளக்கம் : பொன்னங்குடை : பொன் அழகுமாம் இது உலாக் குடையாதலிற் பொற்குடை என்றலே தகவுடைத்து. காத்தல் தொழிலாலும் வடிவாலும் திருமால் என்றே கூறினார். அடுத்து இரண்டு உலா அரசர்க்காகாமையின் மணத்திற்குப் பின் உலாக் கூறுவார் ஈண்டு கன்னிலம்மிதித்தற்கு மண்டபத்தே புகுந்தமைதோன்ற, அடியீடேத்த என்றார். ( 43 )
2370. மந்தார மாமாலை மேற்றொடர்ந்து
தழுவவராத் தாம மல்கி
யந்தோவென் றஞ்சிறைவண் டேக்கறவின்
புகைபோய்க் கழுமி யாய்பொற்
செந்தா மரைமகளே யல்லதுபெண்
சாராத திருவின் மிக்க
சிந்தா மணியேய்ந்த சித்திரமா
மண்டபத்துச் செல்வன் புக்கான்.
பொருள் : மந்தார மாமாலை மேல் தொடர்ந்து - மந்தார மலர்மாலை மேலே தொடுக்கப் பெற்று; தழுவ வராத் தாமம் மல்கி - தழுவவியலாத மாலைகள் நிறைந்து; அந்தோ என்று அம் சிறை வண்டு ஏக்கற - அந்தோ! என்று அழகிய சிறகிசனையுடைய வண்டு (தேனையுண்ணப் பெறாமல்) ஏக்கம் அடையும் படி; இன் புகைபோய்க் கழுமி - இனிய புகை சென்று பொருந்தி; ஆய்பொன் செந்தாமரை மகளே அல்லது - ஆய்ந்த பொன்னாலாகிய செந்தாமரையிலுள்ள திருமகள் அல்லாமல்; பெண் சாராத - வேறு பெண் சாராத; திருவின் மிக்க - செல்வத்தாற் சிறந்த; சிந்தாமணி ஏய்ந்த - சிந்தாமணியின் தன்மை பொருந்திய; சித்திரமா மண்டபத்துச் செல்வன் புக்கான் - ஓவியம் எழுதிய மண்டபத்திலே சீவகன் புகுந்தான்;
விளக்கம் : தழுவ வாராத் தாமங்களில் தேனையுண்ண முடியாமல் வண்டுகள் ஏக்கற்றன. திருவல்லது பெண்சாராத எனவே சமய மண்டபமாம். மேல் நினைத்தன நல்குவான் சீவகனென்பதைக் கொண்டு, சிந்தாமணி ஏய்ந்த என்றார். ( 44 )
2371. பைங்க ணுளையெருத்திற் பன்மணி
வாளெயிற்றுப் பவள நாவிற்
சிங்கா சனத்தின்மேற் சிங்கம்போற்
றேர்மன்னர் முடிகள் சூழ
மங்குன் மணிநிற வண்ணன்போல்
வார்குழைகடிருவில் வீசச்
செங்கட் கமழ்பைந்தார்ச் செஞ்சுடர்போற்
றேர்மன்ன னிருந்தா னன்றே.
பொருள் : சிங்கம்போல் தேர் மன்னர் முடிகள் சூழ - சிங்கம் போன்ற தேர் வேந்தரின் முடிகள் சூழ; வார்குழைகள் திருவில் வீச - நீண்ட குழைகள் அழகிய ஒளியை வீச; மங்குல் மணிநிற வண்ணன் போல் - முகிலைப் போலும் நீலமணியைப் போலும் நிறமுடைய திருமால் போலும்; செங்கண் கமழ் பைந்தார்ச் செஞ்சுடர் போல் - செங்கண்களையும் மணமுறும் பைந்தாரையும் உடைய செஞ்ஞாயிறு போலும்; பைங்கண் உளை எருத்தின் பன்மணி வாள் எயிற்றுப் பவள நாவின் - பைங்கண்களையும் உளையையுடைய கழுத்தையும் பலமணிகளாலான கூரிய பற்களையும் பவள நாவையும் உடைய; சிங்காசனத்தின்மேல் தேர்மன்னன் இருந்தான் - சிங்கம் சுமந்த அணையின் மேல் தேரையுடைய சீவக மன்னன் அமர்ந்தான்.
விளக்கம் : மங்குல் - திசை என்பர் நச்சினார்க்கினியர். உளை - பிடரிமயிர். சிங்கம் மன்னர்கட்குவமை; மணிநிறவண்ணன்; திருமால். செஞ்சுடர் - ஞாயிறு. எனவே தந்தையைப்போலிருந்தான் என்றார் நச்சினார்க்கினியர். ( 45 )
வேறு
2372. வார்பிணி முரச நாண
வானதிர் முழக்க மேய்ப்பத்
தார்பிணி தாம மார்பன்
றம்பியை முகத்து ணோக்கி
யூர்பிணி கோட்டஞ் சீப்பித்
துறாதவ னாண்ட நாட்டைப்
பார்பிணி கறையி னீங்கப்
படாமுர சறைவி யென்றான்.
பொருள் : தார்பிணி தாம மார்பன் தம்பியை முகத்துள் நோக்கி - மாலை பிணித்த ஒளியுறு மார்பன் நந்தட்டன் முகத்தைப் பார்த்து, வார்பிணி முரசம் நாண வான் அதிர் முழக்கம் ஏய்ப்ப - வாராற் கட்டப்பட்ட முரசம் வெள்கவும், முகில் அதிரும் முழக்கம் போலவும்; ஊர்பிணி கோட்டம் சீப்பித்து - ஊரிலுள்ளாரைப் பிணித்த சிறைக்கோட்டங்களை இடிப்பித்து; உறாதவன் ஆண்ட நாட்டைப் பார்பிணி கறையின் நீங்க - நம் பகைவன் ஆண்ட நாட்டினை உலகைப் பிணிக்கும் இறையிலிருந்து விலக; படாமுரசு அறைவி என்றான் - ஓய்விலாத முரசை அறையச் செய்க என்றான்.
விளக்கம் : முகத்துள் : உள் உருபு மயக்கம். பாரிற்குக் கட்டின கடமையினின்றும் நீங்க என்றது ஆறில் ஒன்னையும் தவிர என்றவாறு. இது கடமை கொள்ளாமை என்னும் பொருட்டாய் நாட்டை, என்னும் இரண்டாவதற்கு முடிபு ஆயிற்று. ஐ : அசை எனினுமாம். ( 46 )
2373. கடவுள ரிடனுங் காசில்
கணிபெறு நிலனுங் காமர்
தடவளர் முழங்குஞ் செந்தீ
நான்மறை யாளர் தங்க
ளிடவிய நிலத்தோ டெல்லா
மிழந்தவர்க் கிரட்டி யாக
வுடனவை விடுமி னென்றா
னொளிநிலா வுமிழும் பூணான்.
பொருள் : ஒளிநிலா உமிழும் பூணான் - ஒளி நிலவைச் சொரியும் பூணினான்; கடவுளர் இடனும் - கடவுளருக்கு இறையிலியாக விட்ட நிலனும்; காசு இல் கணிபெறு நிலனும் - குற்றம் அற்ற கணிகள் பெற்ற நிலமும்; காமர் தடவளர் முழங்கும் செந்தீ நான்மறையாளர் தங்கள் இடவிய நிலத்தோடு - விருப்பூட்டும் ஓமகுண்டத்திலே வளர்ந்து ஒலிக்கும் செந்தீயையுடைய மறைவல்லாருக்களித்த இடம் பரவிய நிலத்துடன்; எல்லாம் - மற்றுமுள்ள இறையிலி நிலங்களையும்; இழந்தவர்க்கு இரட்டியாக - முன் அவனால் இழந்தவர்களுக்கு இருபங்காக; அவை உடன் விடுமின் என்றான் - அவற்றை உடனே விடுமின் என்று மந்திரிகளை நோக்கிக் கூறினான்.
விளக்கம் : இவை இறையிலி நிலங்கள், தட என்பது தூபமுட்டி எனினும் ஈண்டு வேள்விக் குண்டத்தை உண்த்திதுகின்றது. இறையிலி நிலங்களை முன்போல விடுமின் எனவும், இழந்தவர்க்கு இரட்டியாக விடுமின் எனவும் இருமுறை கூட்டிக் கூறுக. (47)
2374. என்றலுந் தொழுது சென்னி
நிலனுறீஇ யெழுந்து போகி
வென்றதிர் முரசம் யானை
வீங்கெருத் தேற்றிப் பைம்பொற்
குன்றுகண் டனைய கோலக்
கொடிநெடு மாட மூதூர்ச்
சென்றிசை முழங்கச் செல்வன்
றிருமுர சறைவிக் கின்றான்.
பொருள் : என்றாலும் - என்று சீவகன் கூறியவுடன் செல்வன் தொழுது சென்னி நிலன் உறீஇ எழுந்து போகி - நந்தட்டன் சீவகனைத் தொழுது முடி நிலமுற வணங்கி எழுந்து சென்று; வென்று அதிர் முரசம் யானை வீங்கு எருத்து ஏற்றி - வென்று முழங்கும் முரசை யானையின் பருத்த பிடரிலே. அமைத்து; பைம்பொன் குன்று கண்டனைய கோலம் - புதிய பொன்னாலாகிய மலையைக் கண்டாற் போன்ற அழகினையுடைய; கொடி நெடுமாடம் - கொடியுடைய நீண்ட மாடங்களையுடைய; மூதூர் சென்று - மூதூரிலே போய்; இசை முழங்கத் திருமுரசு அறைவிக்கின்றான் - புகழ் முழங்க அழகிய முரசை (வள்ளுவனைக் கொண்டு) அறைவிக்கின்றவன்.
விளக்கம் : நிலன் உறீஇ - நிலத்தைப் பொருந்தும்படி வணங்கி என்க. வீங்கெருத்து - பருத்த பிடரி. பொன்குன்றம் மாடத்திற்குவமை. அறைவிக்கின்றான் : வினையாலணையும் பெயர். இதுமுதல் மூன்று செய்யுள் ஒருதொடர். ( 48 )
2375. ஒன்றுடைப் பதிளை யாண்டைக்
குறுகட னிறைவன் விட்டா
னின்றுளீ ருலகத் தென்று
முடனுளீ ராகி வாழ்மின்
பொன்றுக பசியு நோயும்
பொருந்தலில் பகையு மென்ன
மன்றல மறுகு தோறு
மணிமுர சார்ந்த தன்றே.
பொருள் : பசியும் நோயும் பொருந்தல் இல் பகையும் பொன்றுக! - பசியும் பிணியும் பொருத்தமில்லாத பகையும் ஒழிக!; இன்று உளீர் உலகத்து என்றும் உடன் உளீராகி வாழ்மின்! - இப்போதுள்ள நீவிர் எப்போதும் உலகத்தில் உடனிருப்பீராகி வாழ்மின்!; ஒன்றுடைப் பதினையாண்டைக்கு உறு கடன் இறைவன் விட்டான் - பதினாறாண்டுகட்கு உரிய கடனை இறைவன் நீக்கிவிட்டான்; என்ன - என்று; அன்றே மன்றல் மறுகு தோறும் மணிமுரசு ஆர்த்தது - அப்போதே மணமுடைய தெருக்கள்தோறும் அழகிய முரசு ஒலித்தது.
விளக்கம் : ஒன்றுடைப் பதினையாண்டு என்றது பதினாறாண்டு என்றவாறு. கடன் - அரசிறைப் பொருள். பசியும் நோயும் பொன்றுக என மாறுக. என்ன - என்று வள்ளுவன் கூறி முழக்க முரசு ஆர்த்தது என்க. ( 49 )
2376. நோக்கொழிந் தொடுங்கி னீர்க்கு
நோய்கொளச் சாம்பி னீர்க்கும்
பூக்குழன் மகளிர்க் கொண்டான்
புறக்கணித் திடப்பட் டீர்க்கும்
கோத்தரு நிதியம் வாழக்
கொற்றவ னகரோ டென்ன
வீக்குவார் முரசங் கொட்டி
விழுநக ரறைவித் தானே.
பொருள் : நோக்கு ஒழிந்து ஒடுங்கினீர்க்கும் - பார்வை யிழந்து மெலிந்திருக்கும்; நோய்கொளச் சாம்பினீர்க்கும் - நோய் கொண்டதால் மனமிடிந்தீர்க்கும்; பூக்குழல் மகளிர்க் கொண்டான் புறக்கணித்திடப் பட்டீர்க்கும் - பூவையணிந்த குழலையுடைய பரத்தையரிடத்து வேட்கையாலே கணவனாற் புறக்கணித்திடப் பட்டீர்க்கும் ; வாழ நகரோடு கோத்தரு நிதியம் கொற்றவன் (தரும்) என்ன - வாழ்வதற்கு மனையுடன் இடையறாத செல்வத்தையும் அரசன் நல்குவான் என்று; விழுநகர் வீக்குவார் முரசம் கொட்டி அறைவித்தான் - சிறந்த நகரிலே, கட்டப்பட்ட வாரையுடைய முரசினைக் கொட்டி அறைவித்தான்.
விளக்கம் : கோ - பசுவுமாம். கொற்றவன் தரும் என ஒருசொல் வருவிக்க. அல்லது கோத்தரும் என்பதிலுள்ள தரும் என்பதைச் சேர்க்க. கோத்லைத் தரும் நிதியம் என்பது கோத்தரு நிதியம், என விகாரப்பட்டது. அரசன் கூறாதன தான் கூறினானல்லன்; அவன் அரசாட்சி பெற்றாற் செய்யும் அறங்களாகத் தனக்கு முற்கூறியவற்றைப் பின் தான் சாற்றுவித்தான் என்க. ( 50 )
2377. திருமக னருளப் பெற்றுத்
திருநிலத் துறையு மாந்த
ரொருவனுக் கொருத்தி போல
வுளமகிழ்ந் தொளியின் வைகிப்
பருவரு பகையு நோயும்
பசியுங்கெட் டொழிய விப்பாற்
பெருவிறல் வேந்தர் வேந்தற்
குற்றது பேச லுற்றேன்.
பொருள் : திருமகன் அருளப் பெற்று - (இவ்வாறு) அரசன் அருளப் பெறுதலின்; திருநிலத்து உறையும் மாந்தர் - அவனுடைய அழகிய நாட்டிலே வாழும் மக்கள்; ஒருவனுக்கு ஒருத்திபோல உளம் மகிழ்ந்து - ஒருவனுக்கு ஒருத்திபோல மனங்களித்து; ஒளியின் வைகி - புகழுடன் தங்குதலால்; பருவரு பகையும் நோயும் பசியும் கெட்டு ஒழிய - துன்புறுத்தும் பகையும் பிணியும் பசியும் கெட்டு விலக (அரசாளும் நாளிலே) இப்பால் - இனி; பெருவிறல் வேந்தர் வேந்தற்கு உற்றது பேசலுற்றேன் - பேராற்றலையுடைய மன்னர் மன்னனான சீவகனுக்கு நிகழ்ந்ததை இயம்பத் தொடங்கினேன்.
விளக்கம் : திருமகன் : சீவகன், அன்பான் ஒத்த ஒருவனும் ஒருத்தியும் கூடிய வழி உளமகிழ்ந்திருத்தல் போன்று மகிழ்ந்து என்றவாறு. வைகி - வைக. ஒளி - புகழ். வேந்தர் வேந்தன் : சீவகன். ( 51 )
பூமகள் இலம்பகம் முற்றிற்று.