கடலுார் மாவட்டம் திருநாரையூரில் சவுந்தர்யேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு இருக்கும் பொள்ளாப்பிள்ளையாருக்கு தினமும் பூஜை செய்தவர் நம்பியாண்டார் நம்பியின் தந்தை. இவர் பிரசாதத்தை விநியோகித்த பிறகே வீடு திரும்புவார். பிரசாதம் எங்கே? என தன் மகன் நம்பி கேட்டால், ‘பிள்ளையார் சாப்பிட்டுவிட்டார்’ என சொல்லி வந்தார். ஒருநாள் இவர் வெளியூர் போகும் சூழல் ஏற்பட்டது. இதனால் நம்பி அன்று பூஜை செய்தான். இதுநாள் வரை தான் கேட்டு வந்த கதை அவனது மனதில் ஓடியது. அதன் விளைவு பிள்ளையாரிடம் பிரசாதத்தை சாப்பிடும்படி மன்றாடினான் நம்பி. ‘அப்பா கொடுத்தால் சாப்பிடுகிறார். நாம் கொடுத்தால் சாப்பிடவில்லையே. ஏதோ தவறு செய்துவிட்டோம்’ என அழுதது அந்தக் குழந்தை. அப்போது தும்பிக்கை நாதன் தன் மீது நம்பிக்கை வைத்த பக்தனின் பிரசாதத்தை சாப்பிட ஆரம்பித்தார். மகிழ்ச்சியுடன் வீடு திரும்பிய நம்பி, இந்த அற்புதத்தை எல்லோரிடமும் கூறினான். ஆனால் யாரும் நம்பவில்லை. மறுநாள் மீண்டும் இந்த அற்புதம் நடந்தது. இதை மறைந்திருந்து கவனித்த அவனது தந்தை மெய்சிலிர்த்தார். தன்னை ஆட்கொண்ட பொள்ளாப் பிள்ளையார் மீது, ‘திருவிரட்டை மணிமாலை’ என்னும் பிரபந்தத்தைப் பாடினார் நம்பியாண்டார் நம்பி.