நவதிருப்பதிகளில் ஒன்றான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயிலில் நம்மாழ்வார் மங்களாசாசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29மே 2023 01:05
ஆழ்வார் திருநகரி: நவதிருப்பதிகளில் ஒன்றான ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் கோயிலில் சுவாமி நம்மாழ்வார் மங்களாசாசன வைபவம் கோலாகமாக நடந்தது.
ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோயிலில் சுவாமி நம்மாழ்வார் அவதார தினமான வைகாசி விசாக நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் பிரம்மோற்சவம் 15 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான சுவாமி நம்மாழ்வார் மங்களாசாசன வைபவம் நேற்று நடந்தது. இதைமுன்னிட்டு சுவாமி நம்மாழ்வார் சிறப்பு அலங்காரத்துடன் நவதிருப்பதி பெருமாள்களை மங்களாசாசனம் (வரவேற்க) செய்ய எழுந்தருளினார். நவதிருப்பதி பெருமாள்கள் கொடி ஆலவட்டம் பதாகைகள் திருச்சங்குகளுடன் யானைகள் முன்வர ஊர்வலமாக கோயிலின் முன் எழுந்தருளினர். சுவாமி நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்த அந்த அந்த பெருமாளுக்கான பாசுரங்களை பண் இசைத்துப்பாட பெருமாளிடமிருந்து வந்த பரிவட்டம் மாலை மற்றும் சடரி மரியாதைகளை சுவாமி நம்மாழ்வாருக்கு சாற்றப்பட்டது. நிறைவாக மதுரகவி ஆழ்வார் எழுந்தருள குரு சிஷ்ய பாவத்தில் மரியாதை பெறப்பட்டு மதுரகவி ஆழ்வார் சுவாமி நம்மாழ்வாரை பிரதஷ்ணமாக வர அனைவரும் கோயிலுக்குள் எழுந்தருளினார். தொடர்ந்து சுவாமி நம்மாழ்வார் வீதிஉலா கண்டருளினார். ஜீயர்கள் மற்றும் ஆச்சார்ய பெருமக்களின் பிரபந்தக் கோஷ்டி நடந்தது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி அஜித், தக்கார் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.