ஆழ்வார் திருநகரி; ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோயிலில் 9 கருட சேவை நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோயிலில் சுவாமி நம்மாழ்வார் அவதாரம் செய்த வைகாசி விசாக திருநட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் 15 நாட்கள் பிரம்மோற்ஸவம் நடைபெறும். இந்தாண்டு திருவிழா கடந்த மே 24ம் தேதி துவங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான நவதிருப்பதி பெருமாள்களின் 9 கருடசேவையும், மங்களாசாசனம் நடந்தது. மாலையில் ஒன்பது பெருமாளுக்கும், நம்மாழ்வார், மதுரகவிஆழ்வாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. கோஷ்டி சடாரி மரியாதை நடந்தது. இரவில் சுவாமி நம்மாழ்வார் ஹம்ச (அன்ன) வாகனத்திலும், மதுரகவி ஆழ்வார் பரங்கி நாற்காலியிலும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள குடைவரை பெருவாயிலில் நவதிருப்பதி பெருமாள்கள் ஒவ்வொருவராக கருடசேவையில் ஆழ்வாருக்கு காட்சி அளித்தனர். ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் , ஸ்ரீவைகுண்டம் - கள்ளர்பிரான், திருப்புளியங்குடி - காய்சினவேந்தர், நத்தம் - எம்இடர்கடிவான், இரட்டை திருப்பதி - தேவர்பிரான் மற்றும் அரவிந்தலோசனர் , பெருங்குளம் - மாயக்கூத்தர், தென்திருப்பேரை - நிகரில் முகில்வண்ணன், திருக்கோளூர் - வைத்தமாநிதி ஆகியோர் ஒவ்வொருவராக பெரிய திருவடியான கருடாழ்வார் மேல் எழுந்தருளி காட்சி கொடுத்தனர். திருக்குறுங்குடி ராமானுஜ ஜீயர் சுவாமிகள் மங்களாசாசனம் செய்தார். தொடர்ந்து 9 கருடவாகனங்களும் 8 வீதிகளில் வலம் வந்தன. நேற்று காலையில் நவ திருப்பதி பெருமாள் - நம்மாழ்வார் பிரியாவிடை நிகழ்ச்சி நடந்தது.