பதிவு செய்த நாள்
01
ஜூன்
2023
10:06
மேட்டுப்பாளையம்: மிகவும் பழமையான குருந்தமலையில் குழந்தை வேலாயுத சுவாமி கோவிலில், கும்பாபிஷேக விழா நடந்தது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை அருகே, குருந்தமலையில் மிகவும் பழமை வாய்ந்த, குழந்தை வேலாயுத சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் மூலவர் குழந்தை வேலாயுத சுவாமி, ராஜ கம்பீர வினாயகர், கன்னிமூல விநாயகர், பஞ்சாகர கணபதி, ஆறுமுக வேலவர், விஸ்வநாதர் விசாலாட்சி அம்மன், ஆதிமூலவர், அகஸ்தியர், ராஜ நாகலிங்கம், பஞ்சலிங்கேஸ்வரர், கன்னிமார், இடும்பன், கடம்பன், வீரபாகு, ஆஞ்சநேயர் ஆகிய பரிவார் தெய்வங்களின் சன்னதிகள் உள்ளன. இக்கோவில் கும்பாபிஷேகம் செய்ய, சன்னதிகள், விமானங்கள், மண்டபங்கள், தீப ஸ்தம்பம், கொடிமரம், ராஜ கோபுரங்கள் ஆகியவற்றுக்கு வர்ணம் தீட்டி திருப்பணிகள் செய்யப்பட்டன. கும்பாபிஷேக விழா, கடந்த மாதம், 29ம் தேதி மங்கல இசை, கோ பூஜையுடன் உடன் முதல் கால யாக பூஜை துவங்கியது. இன்று காலை வரை ஆறு கால யாக பூஜைகள் நடைபெற்றன.
அதைத் தொடர்ந்து, 7:45 மணிக்கு யாகசாலையில் இருந்து, தீர்த்த குடங்களை மலை கோவிலுக்கும், அந்தந்த பரிவார் சுவாமிகளின், கோவிலின் கோபுரங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டன. பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுலம் வாழும் கலை மைய, வேத ஆகம சமஸ்கிருத மகா பாடசாலை முதல்வர் சுந்தரமூர்த்தி சிவாச்சாரியார் கொடியசைக்க, அனைத்து கோபுரங்களுக்கும் ஒரே நேரத்தில், புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அப்போது ட்ரோன் கேமராக்கள் வாயிலாக, பக்தர்கள் மீது புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து காலை, 8:30 லிருந்து, 8:45 மணிக்கு வரை, மூலவர் குழந்தை வேலாயுத சுவாமி, பிற மூலவர் சுவாமிகள் மீது தீர்த்தம் ஊற்றி, மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. கோவிலை சுற்றியும், மலை மீதும் ஏராளமான பக்தர்கள் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இவ்விழாவில் பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள், கூனம்பட்டி ஆதினம் ராஜசரவண மாணிக்கவாசக சுவாமிகள், பழனி சாது சுவாமிகள் சாதுசண்முக அடிகளார் ஆகியோர், ஒவ்வொரு நாளும் நடந்த யாக வேள்வி பூஜையில் பங்கேற்றனர். ஏராளமான சிவாச்சாரியார்கள் பங்கேற்று யாக வேள்வி பூஜை செய்தனர். விழாவில் எம்.எல்.ஏ., செல்வராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., சின்னராஜ், மாவட்ட அறங்காவலர் நியமன குழு உறுப்பினர் கவிதா கல்யாண சுந்தரம், சண்முகசுந்தரம் உள்பட உபயதாரர்கள், பக்தர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் லோகநாதன் மற்றும் சுற்றுப்பதி கிராமத்தைச் சேர்ந்த மிராசுதாரர்கள் ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.