பதிவு செய்த நாள்
02
ஜூன்
2023
10:06
இன்று வைகாசி விசாகத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் பக்தர்கள் குவிந்துள்ளனர். தமிழகத்தில் உள்ள அறுபடை வீடுகளான திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், திருத்தணி, பழநி, பழமுதிர்ச்சோலை, சுவாமிமலை கோயில்களில் பக்தர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் பால்குடம் எடுத்தும், வேல்குத்தியும், நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். காவடி எடுத்தும் பக்தர்கள் சென்று வருகின்றனர். முருகபெருமான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
குன்றத்தில் குவிந்த பக்தர்கள்; சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக பால்குட திருவிழா இன்று (ஜூலை 2) சிறப்பாக நடைபெற்று வருகிறது. கோயிலில் மே 24ல் சுவாமிகளுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கிய வைகாசி விசாக திருவிழாவில் தினம் இரவு ஏழு மணிக்கு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை வசந்த மண்டபத்தில் ஊஞ்சலில் எழுந்தருளி வசந்த உற்சவம் நடக்கிறது. இன்று காலை 4:30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு வள்ளி, தெய்வானை சமேத சண்முகர், மூலவர் கரத்திலுள்ள தங்க வேலுக்கு சிறப்பு பாலாபிஷேகம் முடிந்து சண்முகர், வள்ளி, தெய்வானை விசாக கொறடு மண்டபத்தில் எழுந்தருளினர். காலை 6:00 மணி முதல் பக்தர்கள் கொண்டு வரும் பால் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது. விழாவில் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.