மணிமுத்தாறில் கஜேந்திர மோட்சம்; திருக்கோஷ்டியூர் வசந்த உற்ஸவம் நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜூன் 2023 01:06
திருக்கோஷ்டியூர்; திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயில் வசந்த உற்ஸவத்தை முன்னிட்டு கருவேல்குரிச்சி மணிமுத்தாறில் கஜேந்திர மோட்ச வைபவம் நடந்தது.
இக்கோவிலில் வைகாசியில் வசந்த உற்ஸவம் மூன்று நாட்கள் நடைபெறும். அப்போது ‛கஜேந்திர யானைக்கு பெருமாள் மோட்சம் அளித்த’ புராண நிகழ்வை சித்தரிக்கும் விதமாக மணிமுத்தாறில் ‛கஜேந்திர மோட்சம்’ வைபவம் நடக்கும். ஜூன்3ல் யாகசாலை பூஜைகள் நடந்து சுவாமிக்கு காப்புக் கட்டி உத்ஸவம் துவங்கியது.இரண்டாம் நாள் காலையில் பெருமாள், ஸ்ரீதேவி,பூதேவி, சக்கரத்தாழ்வார் கருவேல்குரிச்சி மணிமுத்தாற்றில் எழுந்தருளினர். தொடர்ந்து சக்கரத்தாழ்வாருக்கு ஆற்றில் தீர்த்தவாரி நடந்தது. பின்னர் மாலையில் பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து தங்கப்பல்லக்கில் கல்மண்டபத்தில் மூன்று முறை பத்தி உலாத்துதல் நடந்தது. இன்று காலை 6:00 மணிக்கு கருட வாகனத்தில் பெருமாள் மணிமுத்தாற்றில் எழுந்தருளினார். சிறப்பு பூஜைகள் நடந்து தீபாராதனை நடந்தது. யானைக்கு பெருமாள் கஜேந்திர மோட்சம் வழங்கினார். பட்டாச்சார்யர்கள் ஆற்றில் மோட்சம் தீபம் ஏற்றி, சொர்ணவல்லி யானைக்கு பூஜையை செய்தனர். பக்தர்கள் மீது யானை தண்ணீர் பீச்சி அடித்தபின் சுவாமியை யானை ‛சொர்ணவல்லி’ மூன்று முறை வலம் வந்து வணங்கியதுடன் கஜேந்திர மோட்சம் நிறைவடைந்தது. கருவேல்குரிச்சி கிராமத்தினர் திரளாக பங்கேற்று தரிசித்தனர். பின்னர் பெருமாள் ஆடும் பல்லக்கில் கோயில் புறப்பாடு துவங்கியது. கோயில் திரும்பிய பெருமாளுக்கு யாகசாலையிலிருந்து புறப்பாடான கலசங்களிலிருந்த புனித நீரால் அபிஷேகம் நடந்தது. பின்னர் ஏகாந்த அலங்காரத்தில் அருள்பாலித்த பெருமாளுக்கு தீபாராதனை நடந்தது.