ராமனை விட்டுப் பிரிந்த சீதையை மீண்டும் அவரோடு சேர்த்து ராம பட்டாபிஷேகம் செய்ததில் ஆஞ்சநேயரின் பங்கு மகத்தானது. அனுமன் மட்டுமில்லாமல், வானரப்படையும் இலங்கை யுத்தத்தில் ராமனுக்கு துணை நின்று உதவின. தனக்கு உதவிய குரங்கு கூட்டத்திற்கு தன் நன்றியை தெரிவிக்கும் விதத்தில் தன்னுடைய அடுத்த அவதாரமான கிருஷ்ணாவதாரத்தில், குரங்கு கூட்டத்திற்கு விருந்தளித்தார் விஷ்ணு. பாலகிருஷ்ணராக கோகுலத்தில் வளர்ந்தபோது, வெண்ணெய் திருடி உண்பது அவரின் பொழுதுபோக்கு. வெண்ணெய் வாசனை காற்றில் பரவ, குரங்கு கூட்டம் ஓடி வந்து ஜன்னல் வழியாக கையை நீட்டும். கிருஷ்ணர் அவற்றுக்கும் வெண்ணெய் கொடுத்து மகிழ்ந்தார். சில குரங்குகள் அளவுக்கு அதிகமாக வெண்ணெய் இருந்ததால், சாப்பிட்டது போக மீதியை மகிழ்ச்சியுடன் தன் உடலெங்கும் பூசிக் கொண்டன. இதனால் தான், ஆஞ்சநேயருக்கும் உடலெங்கும் வெண்ணெய்காப்பு செய்து வழிபடும் வழக்கம் உண்டானது. குரங்குக்கு உணவிட்ட கிருஷ்ணரை ‘மர்காந் போக்ஷ்யன்’ என ‘பாகவதம்’ என்ற நுõலில் குறிப்பிடப் பட்டுள்ளது.