பதிவு செய்த நாள்
06
ஜூன்
2023
11:06
வில்லிவாக்கம், வில்லிவாக்கம், ரயில்வே சுரங்கப்பாதை அருகில், ஸ்ரீமஹாமேரு ராகவேந்திரா கோவில் புதிதாக கட்டப்பட்டு உள்ளது. இக்கோவிலில் விநாயகர், கிருஷ்ணர், ராகவேந்திரர், மஹாமேரு, கால பைரவர், ராமர், சீதை, நவக்கிரகங்கள் உள்ளிட்ட, 18 சுவாமிகள் உள்ளன. இக்கோவிலில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா, கடந்த 2ம் தேதி துவங்கியது. முதல் மூன்று நாட்களும், வேத மந்திரங்கள் முழங்க, சிறப்பு யாகசாலை பூஜைகள் நடந்தன. கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், புதிய சிலை கண் திறத்தல், அஷ்டபந்தனம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் நடந்தன. இறுதி நாளான நேற்று காலை 9:30 மணிக்கு, கோபுர கலசங்களுக்கு கங்கை நீர் உள்ளிட்ட புனித நீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடந்தது. தொடர்ந்து, சுவாமி சிலைகளுக்கு கும்ப நீர் ஊற்றி பிரதிஷ்டை செய்யப்பட்டது. விழாவில், வில்லிவாக்கம் எம்.எல்.ஏ., வெற்றி அழகன், தமிழ் மாநில காங்., பொதுச் செயலர் ஜவகர் பாபு, அண்ணா நகர் மண்டல குழுத்தலைவர் கூ.பி.ஜெயின் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை, எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் பவுண்டேஷன் மற்றும் சிட்கோ நகர் நல்வாழ்வு சங்கத்தினர் செய்திருந்தனர்.