திருவிழாக்களுக்கு குழு அமைத்தால் நடவடிக்கை: ஹிந்து சமய அறநிலையத்துறை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஜூன் 2023 03:06
மதுரை: கோவில்களின் விழாக்களை தனிநபர் அல்லது தனிப்பட்ட அமைப்பு கொண்டாட குழுக்கள் அமைக்கப்படக் கூடாது. சட்டத்திற்கு முரணாக திருவிழாக்குழு அமைத்தால், கோவில் செயல் அலுவலரை பொறுப்பாக்கி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும், என, அவமதிப்பு வழக்கில் அறநிலையத்துறை கமிஷனர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்தார்.
மதுரை மாவட்டம், அலங்காநல்லுார் வெள்ளைகங்கை, முருகன் தாக்கல் செய்த பொது நல மனுவில் கூறியுள்ளதாவது: அலங்காநல்லுாரில் முனியாண்டி சுவாமி வகையறா கோவில் உள்ளது. இங்கு பங்குனி திருவிழா ஏப்ரலில் நடந்தது. குழு அமைத்து விழா நடத்த ஹிந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டது. குழுவில் ஆளும்கட்சியினர் இடம் பெற்றனர். சிலரை முன்னிலைப்படுத்தும் வகையில் குழு அமைக்கப்பட்டது. இதில் விதிமீறல் உள்ளது. குழு அமைத்தது ஏற்கனவே உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு எதிரானது. குழுவிற்கு தடை விதிக்க வேண்டும். மூன்றாம் நபரின் தலையீடு இல்லாமல் கோவில் செயல் அலுவலர் தலைமையில் விழா நடத்த மதுரை ஹிந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறி இருந்தனர்.
நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு நேற்று மீண்டும் இந்த வழக்கை விசாரித்தது. அறநிலையத்துறை கமிஷனர் முரளீதரன், இணை கமிஷனர் செல்லத்துரை ஆஜராகி தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: திருவிழாக் குழு அமைக்க ஹிந்து அறநிலையத்துறை சட்டத்தில் வழிவகை இல்லை. அவ்விதமான குழுவிற்கு எவ்வித சட்டப்பூர்வ அங்கீகாரமும் இல்லை. திருவிழாக்களை கோவில்களின் நிர்வாகத்தினரால் மட்டுமே நடத்த வேண்டும். தனி நபர் அல்லது தனிப்பட்ட அமைப்பு கொண்டாட திருவிழாக் குழுக்கள் அமைக்கப்படக் கூடாது. சட்டத்திற்கு முரணாக திருவிழாக் குழு அமைத்தால் அதற்கு அந்தந்த கோவில்களின் செயல் அலுவலர், நிர்வாகியை பொறுப்பாக்கி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இது அனைத்து செயல் அலுவலர்களுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதை பதிவு செய்த நீதிபதிகள், அரசு தகுந்த நடவடிக்கை எடுத்துள்ளது. இதில் மேலும் உத்தரவு பிறப்பிக்கத் தேவையில்லை. வழக்கு முடிக்கப்படுகிறது என உத்தரவிட்டனர்.