எமனேஸ்வரம் வைகாசி வசந்த விழாவில் அவதார சேவையில் வரதராஜ பெருமாள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஜூன் 2023 06:06
பரமக்குடி; பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி வசந்த உற்சவ விழாவில் பெருமாள் அவதார சேவையில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இக்கோயிலில் ஜூன் 4 அதிகாலை கள்ளழகர் திருக்கோலத்தில் பெருமாள் பூ பல்லக்கில் வைகை ஆற்றில் இறங்கினார். தொடர்ந்து அன்று காலை 11:00 மணி முதல் பெருமாள் குதிரை வாகனத்தில் பல்வேறு திருக்கண்களில் சேவை சாதித்தார். நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு சேஷ வாகனத்தில் அமர்ந்து, பெருமாள் மண்டூக மகரிஷிக்கு காட்சி அளித்தார். பின்னர் இரவு 11:00 மணி தொடங்கி மச்ச, கூர்ம, ராம, கிருஷ்ண மற்றும் மோகினி அவதாரங்களில் பெருமாள் அருள்பாலித்தார். தொடர்ந்து நேற்று மாலை 6:00 மணிக்கு கருட வாகனத்தில் அருள் பாலித்த நிலையில், இன்று அனுமன் வாகனத்தில் பெருமாள் எழுந்தருளுகிறார். மேலும் நாளை இரவு 7:00 மணிக்கு ஆண்டாள் சூடி கலைந்த மாலையுடன், கள்ளழகர் திருக்கோலத்தில் பெருமாள் பூ பல்லக்கில், இரவு முழுவதும் வீதி உலா வருகிறார். ஜூன் 9 காலை 9:00 மணிக்கு மீண்டும் திருக்கோயிலை அடைகிறார். அன்று இரவு கண்ணாடி சேவை நடக்கிறது. ஏற்பாடுகளை எமனேஸ்வரம் சவுராஷ்டிரா சபையினர் செய்துள்ளனர்.