திருப்பாசேத்தியில் பண்டைய கால தான சூலக்கல் கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜூன் 2023 05:06
திருப்பாச்சேத்தி: திருப்பாச்சேத்தியில் முதன் முறையாக தான சூலக்கல் கண்டெடுக்கப்பட்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கோயில்களில் மூன்று கால பூஜை உள்ளிட்டவைகள் நடைபெற நிலங்கள் உள்ளிட்டவைகள் தானமாக வழங்கப்பட்டன. சிவன், காளி, அய்யனார் கோயில்களுக்கு நிலம் தேவதானம் என்ற பெயரில் சூலாயுதம் வடிவமைத்தும் ,பெருமாள் கோயில்களுக்கு திருவிளையாட்டம் என்ற பெயரில் சக்கரமும் கல்வெட்டுகளில் குறிப்பிடபட்டிருக்கும். திருப்பாச்சேத்தி அரசு பள்ளி அருகே கிழக்கு நோக்கிய நிலையில் ஒன்றரை அடி உயரமும், ஒன்றரை அடி அகலமும் கொண்ட பட்டிய கல்லில் புடைப்புசிற்பமாக சூலாயுதம் செதுக்கப்பட்டுள்ளது. இப்பகுதி மக்கள் இதனை தெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.
சோனைமுத்து, அய்யப்பன், செந்தில்வேல் கூறுகையில் : திருப்பாச்சேத்தியில் மருநோக்கும் பூங்குழலி உடனாய திருநோக்கிய அழகிய நாதர் சிவாலயம் அமைந்துள்ளது. பச்சை மரகத லிங்கமும் இக்கோயிலில் உண்டு, பாண்டிய மன்னர்களால் இந்த சிவாலய பராமரிப்பிற்கும், பூஜைக்கும் உதவ நிலங்கள் தானமாக வழங்கப்பட்டிருக்கலாம், அது சம்பந்தமான சூலக்கல் ஆக இது இருக்கலாம்,என்றனர்.