நாச்சியாபுரம்: திருப்புத்தூர் அருகே நடுவிக்கோட்டை மேலையூரில் உலகநாயகி அம்மன் கோயில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு பால்குடம் மற்றும் முளைப்பாரி திருவிழா நடந்தது.
திருவிழா மே 30 ல் காப்புக்காட்டி துவங்கியது. தினசரி காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து ஜூன் 6 ல் பால்குடவிழாவில் அஞ்சாத கண்ட விநாயகர் கோயிலிருந்து பக்தர்கள் பால் குடம் எடுத்து உலகநாயகி அம்மன் கோயில் வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு பாலாபிேஷகம் நடந்தது. பின்னர் மகா தீபாராதனை நடந்தது. மாலையில் ஊர் திடலில் மதுக்குடம் மற்றும் முளைப்பாரி வைத்து கும்மி கொட்டும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று அதிகாலை சவுக்கையில் இருந்து பெண்கள் முளைப்பாரி மற்றும் மது குடங்களை எடுத்து ஊர்வலமாக சென்று உலகநாயகி அம்மனுக்கு செலுத்தி பூச்சொரிந்து வழிபட்டனர். நடுவிக்கோட்டை மேலையூர், கீழையூர், கூத்தகுடி, மேல்குடி, பட்டமங்கலம், கண்டரமாணிக்கம் உள்ளிட்ட கிராமத்தினர் திரளாக ப ங்கேற்றனர். ஏற்பாட்டினை நடுவிக்கோட்டை மேலையூர் கிராமத்தினர் செய்தனர்.