வீரட்டேஸ்வரர் கோயிலில் திருப்பணியை துவக்க வேண்டும்; பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜூன் 2023 12:06
மயிலாடுதுறை ; மயிலாடுதுறை அருகே 1000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த வழுவூர் வீரட்டேஸ்வரர் ஆலயத்தில் இரண்டு முறை பாலாலயம் செய்யப்பட்டும் திருப்பணி செய்யப்படாததை கண்டித்து வழுவூர் வீரட்டேஸ்வரர் கோயிலில் திருப்பணியை துவக்கக் கோரி பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவபிரானுடைய வீரச்செயல்கள் விளங்கிய இடங்களிலுள்ள திருத்தலங்கள் வீரட்டத்தலங்கள் என்று போற்றப்படுகிறது. தமிழகத்தில் எட்டு இடங்களில் அட்ட வீரட்டேஸ்வரர் கோயில்கள் அமைந்துள்ளன. அவற்றில் ஒன்று மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா வழுவூர் கிராமத்தில் அமைந்துள்ள வீரட்டேஸ்வரர் ஆலயம் ஆகும். சமயக் குரவர்களால் பாடப்பட்ட இக்கோயில் 1000 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. இக்கோயிலில் கடந்த 2012-ஆம் ஆண்டு குடமுழுக்கு நடத்துவதற்காக பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணி தொடங்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் பணிகளை தொடராமல் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு மீண்டும் பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணி செய்வதற்கு இந்துசமய அறநிலையத்துறை சார்பில் ரூ.36 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு கோயில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது. நிதிப் பற்றாக்குறையால் பணிகள் பாதியிலேயே கிடப்பில் போடப்பட்டுள்ளது. கோயில் திருப்பணியை விரைந்து முடித்து கும்பாபிஷேகம் நடத்த வலியுறுத்தி இந்து மகா சபா அமைப்பின் ஆலய பாதுகாப்பு பிரிவு மாநில தலைவர் ராம.நிரஞ்சன் தலைமையில் பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் கோயிலின் உள்ளே இன்று திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பணிக்கான செலவை முழுமையாக அரசே ஏற்று பணியை துவங்க நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் தொடர்ந்து வருகிறது.