தருமபுர ஆதீன பட்டன பிரவேச நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு; போலீசார் குவிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜூன் 2023 02:06
மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுர ஆதீன கர்த்தர் இன்று இரவு பட்டனபிரவேசம் மேற்கொள்ளும் நிகழ்ச்சிக்கு பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதால் 360க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்ப்பட்டது.
மயிலாடுதுறையில் 16 ஆம் நூற்றாண்டை சேர்ந்த தொன்மை வாய்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடம் உள்ளது. சைவத்தையும், தமிழையும் வளர்க்கும் ஆதீனத்தில் ஆண்டுதோறும் ஆதீனத்தில் உள்ள ஞானபுரீஸ்வரர் ஆலய வைகாசி பெருவிழா ஆதீன குருமுதல்வர் குருபூஜைவிழா, ஆதீனகர்த்தர் பட்டணபிரவேசவிழா வைகாசி மாதம் 11 நாட்கள் கொண்டாடப்படும். இதில் 11ம் திருநாள் திருவிழாவாக ஆதீனகர்த்தர் பட்டணபிரவேசம் செய்யும் நிகழ்ச்சி பாரம்பரியமாக நடப்பது வழக்கம். இதில் குருமகா சன்னிதானத்தை சிவிகை பல்லக்கில் அமரவைத்து பக்தர்கள் தோளில் சுமந்து சென்று ஆதீன திருடத்தின் நான்கு வீதிகளில் சுற்றி பட்டணபிரவேசம் நிகழ்ச்சி நடத்துவது வழக்கம்.
மனிதனை மனிதன் தூக்கிசெல்லும் பல்லக்கு நிகழ்ச்சிக்கு தடைவிதிக்க வேண்டுமென்று திராவிடர் கழகம் உள்ளிட்ட சில அமைப்புகளின் எதிர்ப்பால் கடந்த வருடம் பல்லக்குதூக்கும் (பட்டணபிரவேசம்) நிகழ்ச்சிக்கு தமிழக அரசு தடைவிதித்தது. மதவழிபாட்டு முறைகளுக்கு அரசு தடைவிதித்ததற்கு இந்து அமைப்பினர், பக்தர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானமும் கொண்டுவரப்பட்டது. பல்வேறு ஆதீனங்கள் முதல்வரை சந்தித்து கோரிக்கை வைத்த நிலையில் பல்லக்குதூக்கும் நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்ட தடை விலக்கப்பட்டு தருமபுர ஆதீனகர்த்தரின் பட்டணபிரவேச நிகழ்ச்சி கோலாகலமாக கடந்த ஆண்டு நடைபெற்றது. இந்நிலையில் இந்த ஆண்டு தருமபுரம் ஆதீனத்தில் உள்ள ஞானபுரீஸ்வரர் கோயில் பெருவிழா கடந்த 31-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் சிகர நிகழ்வான பட்டணப்பிரவேசம் விழா இன்று இரவு 10 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது. பட்டணப் பிரவேச நிகழ்வில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை அப்பகுதி பொதுமக்கள் பல்லக்கில் அமர்த்தி தூக்கிச் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து மயிலாடுதுறையில் திராவிடர் விடுதலைக் கழகம், திராவிடர் கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள், தமிழர் உரிமை இயக்கம், தமிழர் தேசிய முன்னணி, தமிழ் மண் தன்னுரிமை இயக்கம் ஆகிய கட்சி மற்றும் இயக்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இதனை முன்னிட்டு தருமபுர ஆதீன மடத்தை சுற்றி 360க்கும் மேற்பட்டட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.